What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
509
அத்தியாயம் 47

தீனவானனின் மனதை அடித்து நொறுக்கிய மதங்கியோ ரொம்பவே சாதாரண குடும்பத்தை சேர்ந்த சுந்தரியாவாள். வீட்டின் மூன்றாவது பெண் வாரிசான அவளுக்கு இரு அண்ணன்மார்கள். இருவரும் கல்யாணம் கட்டி கேனடா போயாயிற்று.

ஐயர் குடும்பத்து அலரவளின் பெயரோ மயிலினி. ஒற்றை தாமரையவளை நல்ல ஆம்படையான் ஒருவனின் கையில் பிடித்துக் கொடுக்க காத்திருந்தனர் அவளின் பெற்றோர்.

வரன்கள் சில நங்கையவள் படிக்கின்ற காலத்திலேயே வர நல்ல வசதி வளம் கொண்ட படித்த மாப்பிள்ளையாகினும் அண்ணன்கள் இருவரும் சேர்ந்தே வேண்டாமென்றனர் தங்கை படித்து பட்டம் வாங்கி ஒரு வேலையில் முதலில் அமர்ந்திடணும் என்ற எண்ணத்தில்.

சகோதரர்கள் துணை நிற்க மயிலினியோ பட்டப்படிப்பை நிம்மதியாக தொடர்ந்தாள். பேதை அவளோ வாழ்நாள் அமைதி. கேள்விக்கு மட்டும் ஆமாம் இல்லை எனும் ரகம். அனாவசியமற்ற பேச்சுகளை தவிர்ப்பவள்.

வெள்ளி, செவ்வாய் போக மற்ற சுபகரமான நாட்களான வரலெட்சுமி பூஜை தொடங்கி, நவராத்திரி கொலு முதற்கொண்டு விரதம் இருந்து தெய்வத்தை அனுகிரகிப்பவள்.

தம்பியின் அலசலில் மயிலினியை பற்றி ஓரளவுக்கு தெரிந்துக் கொண்டான் தீனவானன். பெண்டு அவளிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற குழப்பம் மேலோங்க கடவுளே அவனுக்கு சமயம் பார்த்து உதவினார்.

குனிந்த தலை நிமிரா குத்து விளக்கவள் வெள்ளிக்கிழமையன்று இளஞ்சிவப்பு நிற பருத்தி சேலையில் அலைமகளின் கமலாவாய் உலா வர, பின்னாடியே வால் பிடித்து போனான் தீனவானன் எப்படியாவது அவளிடம் பேசிட துடித்து.

போதாத காலம் மழை வந்து ஆணவனின் திட்டத்தை கெடுத்தது. அன்ன நடை போட்டு நடப்பவள் மாரியின் திருவிளையாடலால் அசுர வேகம் கொண்டாள். சாலையை கடக்கையில் தொப்பையாகியும் போனாள்.

ஏசி கொண்ட ரயிலில் ஏற, குளிரோ உச்சி முதல் பாதம் வரை தேகத்தை கிடுகிடுக்க வைத்தது. நடுங்கிய மானினியவள் பேக்கில் குளிர் அங்கியை தேட அதுவோ கிளாஸ் ரூம்பிலேயே விட்டுவரப்பட்ட சங்கதி ஞாபகம் வந்து மறதியை மனுதுக்குள் ரெண்டடி போட வைத்தது.

பகவானை நினைத்தாற்படி சூடு தேடியவளோ ஜன்னலோரம் பல்லியாய் ஒட்டிக்கிடக்க, தூரத்திலிருந்து அவளையே இமைக்காது ரசித்தான் தீனவானன். இருவரும் இறங்க வேண்டிய இடம் இன்னும் வெகுதூரம் போகணும் என்றறிவான் அவன்.

அதற்குள் பலர் ஏறி இறங்கிடுவார்கள் என்பதையும் அறிவான். கண்டிப்பாய் அமர்ந்திட இடம் கிடைக்கும். அதுவரைக்கும் அரிவையவள் குளிரை பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று சிந்தித்தவனாய் கையிலிருந்த ஜாக்கெட்டை இறுக்கியப்படி அவளையே பார்த்தான்.

அதற்குள் ரயில் நின்று திபுதிபுவென ஆட்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே ஏறினர் புக்கிட் பிந்தாங் ஸ்டேஷனில். அங்கு எப்போதுமே இப்படித்தான். திருவிழா கூட்ட கணக்காய் கூட்டம் அல்லும், பந்திக்கு முந்துவது போல.

ஆளாளுக்கு இடித்து பிடித்து நின்றனர். மயிலினி மறைந்தாள் தீனவானனின் விலோசனங்களிலிருந்து. எட்டி பார்த்து தேடியவனின் திட்டிகளோ ஒருவழியாய் கண்டது கோதையவளை.

ஆனால், காளையவன் நிம்மதி கொள்ளும் முன் திட்டிகளோ கண்ட காட்சியில் வெகுண்டெழுந்தது.

''யூ பாஸ்ட்டர்ட்! மூவ் அவெய் பிரேம் மை கேர்ள்! ஐ டெல் யூ மூவ் அவெய்!''

மூச்சு விட கூட திணற வேண்டிய நிலைக்கொண்ட அம்மானிட சந்தைக்குள் சத்தம் போட்டு சினத்தை வெளிப்படுத்தினான் ஆணவன்.

வாட்ட சாட்டமான இளைஞனின் கோபக்குரலுக்கு சுற்றியிருந்தோர் புரியாது விழித்தனர்.

''யூ இடியட்! ஐ டெல் யூ டூ ஸ்டாப்! ப்ளாடி பாஸ்ட்டர்ட் டோண்ட் டச் மை கேர்ள்!''

மறுமுறை கத்தியவனோ தூணை ஒரு அடி அடித்து ஆத்திரத்தை வெளிப்படுத்திய அதே நேரம் கையை நீட்டியே வசைப்பாடினான் மயிலினி நின்ற இடம் நோக்கி.

சகுணம் நன்றாய் இருக்க நெக்ஸ்ட் ஸ்டேஷனில் ரயில் நிற்க, கூட்டம் தளர்ந்தது. வேக வேகமாய் மயிலினியின் பக்கம் ஓடிய தீனவானனோ டிமிக்கி கொடுக்க பார்த்த வெளிநாட்டு ஆடவனை கையும் களவுமாய் பிடித்தான். கன்னம் பழுக்க வைத்தான்.

மொழி புரியாதவனோ செயலுக்கான தண்டனையின் போது கூச்சல் கொண்டான். தீனவானனோ எதையும் கண்டுக்கொள்ளாது அவனை வெளுப்பதிலேயே குறியாய் இருந்தான்.

அவனோடு சேர்ந்து இன்னும் சிலர் ஆண்கள் பெண்கள் என்று பாலினம் பாராது அவ்வெளிநாட்டுக்காரனை நயப்புடைத்தனர். நல்லவேளை ரயில் ஊழியர் வந்து சண்டையை நிறுத்தி முறைப்படி செய்ய வேண்டிய விடயங்களை தீனவானனிடம் சொல்லிக் கிளம்பினார் மயிலினியிடம் சில்மிஷம் செய்தவனை இழுத்துக் கொண்டு.

முகத்தை மூடி ஓரமாய் நின்றவாக்கில் கதறிக்கொண்டிருந்தவளோ படக்கென்று விழிகள் விரித்தாள் தீனவானன் அவள் கரம் பற்றி கீழிறக்க.

''நெக்ஸ்ட் ஸ்டேஷன்லே இறங்கி கம்பளைண்ட் கொடுத்திட்டு அப்பறமா வீட்டுக்கு போகலாம்..''

ஆணவனின் கூற்றில் வெளிறிய முகம் கொண்டவளோ வேண்டாமென்று தலையாட்டினாள்.

''என்னங்க வேணாங்கறீங்க! அவன் என்ன பண்..''

முடிக்கவில்லை தீனவானன். இல்லை முடியவில்லை அவனால் அசிங்கத்தை நினைத்துப் பார்க்க மீண்டுமொருமுறை தன்னவள் கண்டவனின் தொடுதலில் புழுவாய் துடித்த நொடியை.

மழையில் நனைந்திருந்த மயிலினியோ நெற்கதிராய் விளைந்திருக்க, காம வெறிக்கொண்ட வெளிநாட்டு வெட்டுக்கிளியோ பயிரை மேய முனைந்தது.

தவிர்க்க பார்த்தவளோ விலகி போக எத்தனிக்க, அடைத்துக் கொண்டு நின்ற மனித மிருகங்களோ கொஞ்சமும் நகராது சிலையாய் கொலு கொண்டனர்.

தோற்றவளோ கண்ணீர் கொண்டு இறைவனை பிராத்திக்க கேட்டதே சிவனின் ருத்ரதாண்டவ வார்த்தையாய் தீனவானனின் குரல்.

அலரவளின் பின்னாளில் நின்றப்படி அணங்கவளின் அங்கங்களை தொட்டுரசி குளிர்காய்ந்தவனோ ஆடிப்போய் பின்வாங்கினான் அச்சங்கொண்டு.

அந்த நொடி உணர்ந்தாள் மயிலினி, நிஜமாகவே அரசன் அன்றே கொள்வான் என்று.

''பிளீஸ் மயிலினி.. ஒரு கம்பளைண்ட் அவ்ளோதான்.. பத்திரமா வீட்டுக்கு போயிடலாம்.. பயப்படாதீங்க இதுனாலே எந்த பிரச்சனையும் வராது..''

பாதிக்கப்பட்டவளின் நிலை உணர்ந்து சொன்னான் ஆணவன். அப்போதும் அருணியின் பதிலென்னவோ வேண்டாம் என்ற தலையாட்டலே.

கடுப்பு வந்தது தீனவானனுக்கு. ஆனால், அவளிடத்தில் காட்டிட விரும்பவில்லை. ஆகவே, தூணை இறுக்கி பிடித்தபடி திரும்பி நின்றுக் கொண்டான்.

மயிலினியோ மெதுவாய் அவனை நெருங்கினாள் அவர்கள் நின்றிருந்த கோச்சிலிருந்த பலர் ஒரே ஸ்டேஷனில் மொத்தமாய் இறங்க.

தீனவானனின் கையிலிருந்த அங்கி மெதுவாய் இழுக்கப்பட்டது. சட்டென திரும்பியவனின் முகத்தை ஏறெடுக்காத நாயகியோ ஆணவனின் அங்கியை அணிந்துக் கொண்டாள்.

பெண்ணவளின் விழிகளோ நாணி தரை நோக்கியது. தீனவானனின் மிழிகளோ ஆம்பல் அவளை நோக்கியது.

தூணை பற்றியிருந்த இருவரின் விரல்களோ மெது மெதுவாய் ஒட்டி உறவாட ஆரம்பித்தது.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 47
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top