What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
443
அத்தியாயம் 79

மணி சரியாக பதினொன்று நாற்பது.

இன்ஸ்டாகிராம் லைஃபில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த சின்ன டிக்கியோ,

''மிஸ்ட்டர் அவிரன் சிங், சரியா பனிரெண்டு மணிக்கு ரூமுக்கு வரவும்! உங்களுக்கான பிறந்தநாள் பரிசு காத்திருக்கிறது!''

என்று வேள்விகளுக்கு மத்தியில் திடிரென்று சொல்லி நமட்டு சிரிப்பொன்றை லைஃபில் கொள்ள, வதனியின் வதனமோ நாணி சிவந்தது மனம் இளகியிருக்க.

அலரின் விஷமமான அறிவிப்பில் குவிந்த வினாக்களில் ஒன்று, எப்போது மோவியனுக்கு தம்பி பாப்பா தங்கச்சி பாப்பா என்றிட, சிரிப்பை அடக்க முடியாது சிரித்திட ஆரம்பித்தாள் நிழலிகா வாய் பொத்தி.

அவளின் எண்ண ஓட்டங்களோ மோவியனின் பிறப்பை நோக்கி ஓடியது.

என்னதான் தம்பதிகள் இருவரும் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தாலும் அவர்களின் படுக்கையென்னவனோ வெவ்வேறான அறைகளிலேயே இருந்தது.

ரேக்கா எவ்வளவோ கேட்டும் சரியான பதிலை மகனும் சரி, மகள் போல் அன்பை பொழிந்த மருமகளும் சரி சொல்லிடவே இல்லை.

பஞ்சாபி பேத்தி பேரனை கட்டிக்கொள்ளவில்லையே என்று கோபங்கொண்ட குர்ஜஸ் தாத்தா கூட சினத்தை தூரப்போட்டு பேச்சு வார்த்தைக் கொள்ள, அப்போதும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

சரனுக்கோ புரிந்தும் புரியாமலும் இருந்தது. ஆகவே, அவன் பெரிதாய் எதையும் கேட்டு அண்ணன் அண்ணி இருவரையும் சங்கடப்படுத்திடவில்லை.

விரன் பட்டையும் கொட்டையுமாய் சுற்ற பார்ப்பவர்கள் என்னவோ ஜிம்காரன் சாமியாராகி விட்டான் என்று நினைத்து விட்டனர். மாதங்கள் கடக்க விரனின் குடும்பம் கூட அதையே ஏற்றுக் கொண்டது.

ஆனால், சம்பந்தப்பட்ட இரு ஜீவன்களுக்கு நன்றாகவே தெரியும் அதெல்லாம் சும்மா வெளியுலக பேச்சுக்கு மட்டுமே என்று.

இப்படியான ஒரு நாளில், வரவேற்பறையில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் சின்ன டிக்கி. பக்கத்தில் அமர்ந்திருந்த விரனோ அம்மணியின் வீங்கிப்போயிருந்த பாதங்களை மென்மையாய் பிடித்து விட்டுக் கொண்டிருந்தான்.

இதையெல்லாம் எவ்வித சங்கோஜமும் கொள்ளாது சிறப்பாகவே செய்தான் ஆணவன். அவன் உதிரம் தாங்கும் உயிரை கையில் வைத்து தாங்கினான் என்றெல்லாம் சொல்லிட முடியாது. இருந்தும், ஓரளவு நன்றாகவே பார்த்துக் கொண்டான்.

விலகியிருந்த காரணம் என்னவோ குழந்தைக்கான நெருக்கத்தில் அத்து மீறிடுவானோ என்ற பயமே அவிரன் சிங்கிற்கு.

அப்படி ஏதாவது ஆகி, எங்கே நிழலிகா அவனை விட்டு போயிடுவாளோ பிள்ளையோடு தனியே, என்ற எண்ணமே விரனை பல நேரங்களில் சின்ன டிக்கியிடமிருந்து எட்டி நிறுத்தியது.

வடிவேலுவின் காமெடியை பார்த்து சத்தமாய் சிரித்துக் கொண்டிருந்த காரிகைக்கு திடிரென்று இடுப்பு வலி வர, பற்றியிருக்கினாள் பாவையவள் விரனின் முழங்கையை.

பதறியவன் காரணம் வினவி துடித்தவளை கையிலேந்த, ஓடி வந்த ரேக்காவோ மகனோடு காரில் மருத்துவமனைக்கு விரைந்தார்.

ஆப்ரேஷன் தியேட்டரில் ரணங்கொண்டு கதறி அலறிய மலரவளின் நிலை காண முடியாத விரனோ வாந்தியெடுத்து அறையை நாசம் செய்தான்.

டாக்டர் தொடங்கி நர்ஸ் வரை எல்லாம் விழுந்து சிரித்து அவனை படுத்தி எடுக்க, பதினெட்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பெற்றெடுத்தாள் திருமதி நிழலிகா அவிரன் சிங் செக்க சிவப்பாய் அப்பனை உரித்து வைத்தாற்போன்ற ஆணழகன் ஒருவனை.

தந்தையாகிய விரனோ கையில் மகனை ஏந்திய நொடி அவன் வாழ்க்கை முழுமையானதாக உணர்ந்தான்.

செத்து பிழைத்து கிடந்தவளை பார்வைகளால் காதல் கொண்டு தழுவிய விரனோ அவர்களின் விரோதத்தை மீறி பதித்தான் ஏந்திழையின் நுதலில் அழுத்தமான இதழ் முத்தம் ஒன்றை.

மொத்த குடும்பமும் பிஞ்சு குழந்தையின் மேல் நம்பிக்கை வைக்க, எல்லாம் பொய்த்தே போனது.

மௌனம் மட்டுமே இருவரின் பாஷையாகி போக, மகனின் பிறப்பு கூட தள்ளி நிற்கும் தம்பதிகளை ஒன்றிணைக்கவில்லை.

சோஷியல் மீடியா என்னவோ ஜோடிகளின் புது வரவைக் கொண்டாடித்தான் தீர்த்தது. உள்ளதை உள்ளப்படி காணாத சமூக ஊடகத்திற்கு விரன் மற்றும் நிழலிகா இருவரும் எப்போதுமே ஐடியல் கப்பல்ஸ்தான்.

தாயாகியவள் அவளின் கடைப் பொறுப்பை சில மாதங்களுக்கு ஒத்தி வைத்து பிள்ளையோடு அதிக நேரம் செலவு செய்தாள். ஒற்றை மகளை பெத்தவரோ பேரனே கதியென்று மகளைக் கட்டிக்கொடுத்த வீட்டிலேயே தஞ்சம் கொண்டார்.

சரன் வீக்கெண்ட்ஸ் ஆரம்பித்தால் போதும் சிட்டாய் பறந்து வந்தான் வீட்டுக்கு. தாத்தா கூட கொள்ளுப்பேரனை கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சி தீர்த்தார்.

மோவியன் என்ற பெயரை விரன்தான் சூஸ் செய்தான். பலப்பெயர்களில் இதை அவன் தேர்தெடுக்க சொன்ன காரணம்தான் அல்டி. பேசாத சின்ன டிக்கி கூட அன்றைக்குத்தான் முதல் முறை ரொம்ப நாட்களுக்கு பிறகு சிரித்தாள் எனலாம் சத்தம் போட்டு.

பிறந்த குட்டி எப்போதுமே ஒருவித பால் வாசம் கொண்டிருக்க, நறுமணத்தை குறிக்கும் மோவியன் என்று பெயரை சூட்டிட சொல்லி அனைவரையும் சம்மதிக்க வைத்தான் விரன்.

மகனுக்கு முப்பது முடிந்தது. ஒரு வயது பிறந்தநாளும் முடிந்தது.

ஜஸ்மின் ஒவ்வொரு முறையும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி நிழலிகா அழைக்க எந்த விஷேசத்திற்கும் வராமலேயே சாதித்தாள்.

நதானியேலோ பெல்ஜியம் நாட்டில் நடிகன் அதிமகிழனை திருமணம் செய்துக் கொண்டான் தேவாலயம் ஒன்றில் கடவுள் சாட்சியாய்.

பைசெக்ஸுவல் என்ற ஒற்றை வார்த்தையில் நாராசமாய் போன நால்வரில், இருவர் வாழ்க்கை மட்டும் முன்னேறி போயிருக்க, மற்ற இருவர் என்னவோ நின்ற இடத்திலேயே நின்றுக் கொண்டிருக்கின்றனர் இன்னமும் எவ்வித மாற்றமும் கொள்ளாது.

பாவம் இனி வாழ்க்கையே சூனியம் என்று உச்சுக்கொட்டிட வைத்த ஜஸ்மினோ, இன்றைக்கு சிங்கள் மதராய் கலக்கிக் கொண்டிருக்கிறாள்.

ரொம்ப ரொம்ப பாவம் என்று நினைத்த நதானியேலோ, ஜோராய் அவனைப் போன்றொரு நடிகனை கல்யாணங்கட்டிக்கொண்டு வாழ்க்கையை சீரும் சிறப்புமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.

ஆனால், குடும்பமாய் சேர்ந்து வாழ வேண்டிய நிழலிகா அவிரன் சிங் தம்பதிகள் மட்டும் இணையா துருவமாகவே இருக்கின்றனர்.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 79
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top