- Joined
- Jul 10, 2024
- Messages
- 496

தாழ் திறவாய் ததுளனே! : 13
''நீங்க என்ன சொன்னாலும் என்னாலே இதுக்கு சம்மதிக்க முடியாது சித்தப்பா! தயவு செஞ்சு என்னே கட்டாயப்படுத்தாதீங்க! பிளீஸ்!''
கெஞ்சலை ஆவேசமாய் ஒப்புவித்தாள் சுவாகை.
''அப்போ, நீயும் என்னே தடுக்காதே! நான் எப்படியோ போய் சாகறேன்!''
முருங்கை மரம் ஏறினார் சித்தப்பா, மீண்டும் கட்டில் மீது ஏறியவராய்.
''ஐயோ, சித்தப்பா ஏன் இப்படி என்னே டார்ச்சர் பண்றீங்க?! உங்களே கெஞ்சி கேட்கறேன்! கீழே இறங்குங்கே! பிளீஸ்!''
அவர் கரம் பற்றி இழுத்து பெரியவரின் போலி சாகசத்தை தகர்த்தாள் அம்மணியவள்.
''நீதான் சுவா, என் கஷ்டத்தை புரிஞ்சிக்காமே உன்னே பத்தி மட்டுமே யோசிச்சு சுயநிலமா வாழ நினைக்கறே!''
சித்தப்பா அவர் பங்கிற்கு பேசி, வஞ்சியை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கினார்.
''ஏன் சித்தப்பா, இப்படியெல்லாம் பேசுறீங்க?! என்னதான் நான் கை நிறைய சம்பாரிக்கட்டியும், நீங்க கேட்டு நான் என்னைக்காவது பணமில்லன்னு சொல்லிருக்கேனா?! எனக்கு சாப்பிட காசு இல்லாட்டியும், பட்டினியா இருந்து, உங்களுக்கு குடிக்க காசு கொடுத்தது இல்லையா?!''
தொனியில் ஆதங்கமும், அம்பகங்களில் கண்ணீரும் முட்டி நிற்க, அழுகையை அடக்கிக்கொண்டவளாய் அந்திகை அவள் வேதனைக் கொள்ள,
''இது எல்லாமே உன் கடமை சுவா! உன்னே வளர்த்ததுக்கான கூலி! இதுக்கு மேலையும் அஞ்சு பத்துன்னு நீ கொடுக்கறதை வெச்சு என்னாலே காலத்தை ஓட்ட முடியாது! அதே மாதிரி, கடன் கொடுத்தவனுங்கக்கிட்டருந்த இனி ஓடி ஒளியவும் முடியாது! ஒழுங்கு மரியாதையா நான் சொல்றதை கேட்டு நடக்கற வழியே பாரு!''
கூச்சல் கொண்டார் சித்தப்பா.
''நானா உங்களே பணத்தை திருட சொன்னேன்?! நீங்க பண்ண காரியத்துக்கு நான் எப்படி சித்தப்பா பலியாக முடியும்?!''
எப்படியான பதில் கிடைக்குமென்று அறிந்தும், முட்டாள்தனமாய் நியாயம் தர்மம் பேசினாள் பேதையவள், சித்தப்பாவிடம்.
''அப்போ, நான் செத்தாலும் என் மூஞ்சிலையே முழிக்காதே! போ, இங்கிருந்து! உன்னே மாதிரி ஒரு நன்றிக்கெட்ட ஜென்மத்தை வளர்த்த பாவத்துக்காகத்தான் உன் சித்தி சீக்கிரமாவே போய் சேர்ந்துட்டா போலே!
கடுமையான வார்த்தைகளால் சுவாகையை அர்ச்சித்த சித்தப்பா, அதே வேகத்தோடு அவளை அறையிலிருந்து பிடித்து வெளியில் தள்ளினார்.
விராகனின் ஆபிசுக்கு கிளீனிங் வேலைக்கு சென்றிருந்த பரந்தாமன், அவரின் கைவரிசையை அங்கு காட்டினார்.
தெரிந்தவர் மூலம் ராகனின் அலுவலகத்திற்கு, ஜன்னல்களை துடைத்து தூய்மைப்படுத்தும் வேலைக்கு ஒரு நாள் பணியாளராக சென்றிருந்தார் அவர்.
ஜன்னல்களை அவரோடு சேர்ந்து மற்றொரு இந்தோனேசிய தொழிலாளியும் கிளினீங் க்ரேடல் (cleaning cradle) மூலம் காலையிலேயே சுத்தம் செய்திட தொடங்கியிருந்தனர்.
அவரோடு சேர்ந்து கடமையாயற்றிய வெளிநாட்டு பணியாளனுக்கோ வெயில் மண்டையை பிளக்க, மயக்கம் வந்தது.
தடுமாறி விழப்போனவனால் வேலையை பாதியிலேயே நிறுத்த சொல்லி டீம் லீடர் கட்டளை பிறப்பித்தார். ஆனால், பரந்தாமனோ அதற்கு அவசியமில்லை என்றுக் கூறி தனியொரு ஆளாய் அப்பணியைத் தொடர்ந்தார்.
லஞ்ச் டைம் வர, அவரோ பசிக்கவில்லை என்றுக் கூறி உழைக்கும் கரமாய் மாறிப்போனார்.
மற்றவர்களோ அவரவர் வயிற்றை நிறைக்க அங்கிருந்து நகர்ந்தனர்.
முன்னாடியே ராகன் மேஜையின் மீது பணக்கட்டுகளை பரப்பி போட்டதை பார்த்திருந்த பெருசோ, நாயகன் அறையை சாத்தி கிளம்பும் வரை பொறுமையாய் காத்திருந்தார்.
அவன் தலை மறைந்த நொடி, நாயகனின் அறை கொண்ட கண்ணாடி ஜன்னல்களை திறந்து உள் நுழைந்தார் பரந்தாமன்.
கேமராவின் கண்ணில் சிக்கிடாதப்படி பணத்தை களவாடியவர் அங்கிருந்து தப்பித்தார் யாரும் அறியா வண்ணம்.
திருடிய காசோடு வீடு திரும்பியவர் உடனடியாக சுவாகையை கிளம்பிட பணித்தார் அவரோடு வேறிடம் செல்ல.
வளர்த்த மகள் அவளோ முடியாதென்று வீம்பு பிடிக்க, நன்றிக்கடன் பேசி அவளை நோகடித்து ஒருவழியாய் புது இடத்தில் குடிப்பெயர்ந்தார்.
அதே சமயம், ஒட்டு மொத்த கட்டிடத்தின் சி.சி.டிவி கேமராக்களையும் அலசி ஆராய்ந்து ஒரு வாரியாய் கண்டுபிடித்திருந்தான் ராகனின் பி.ஏ. சுரேஷ் பணத்தை அடித்து போன களவாணி யாரென்று.
கொஞ்சமும் தாமதிக்காது தகவலை முதலாளியின் காதில் போட்டவன், சில அடியாட்கள் மூலம் பரந்தாமனை ஹீரோவின் அலுவலகத்திற்கு இழுத்து வரவும் செய்தான்.
தவறிழைத்த பெருசோ என்ன செய்வதென்று தெரியாது கைகளை பிசைந்து நின்றார் ஆத்திரத்தில் அனல் பார்வை கொண்டவனை நோக்கி.
''என் பணம் எங்கே?!''
''என்ன மன்னிச்சிடுங்க சார்! தெரியாமே பண்ணிட்டேன்!''
கேட்ட வினாவிற்கு பதில் சொல்லாது, பரந்தாமனோ மேஜையின் விளிம்போரம் அமர்ந்திருந்தவனிடம் மன்னிப்பு வேண்ட,
''என் பணம் எங்கே?!''
அலறியவனோ ஓங்கி ஒரு அடி அடித்தான் மேஜையை. தூக்கி வாரிப்போட்டது பெருசுக்கு.
''என் பணம் எங்கே?!''
மீண்டும் அழுத்தமாய் சிவந்த கண்களின் ஊடே ராகன் புருவங்கள் குறுக்க,
''செலவாகிடுச்சு சார்! நான் எப்படியாவது திருப்பி கொடுத்திடறேன்! எனக்கு கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்க சார்!''
சரணடைந்தவராய் மன்றாடினார் பரந்தாமன்.
''என் பணத்தை அடிச்சது மட்டுமில்லாமே, உனக்கு நான் டைம் வேறே கொடுக்கணுமா?!''
எட்டி உதைத்தான் காஃபி டேபிளை பெரியவரை நோக்கி டென்ஷன் பார்ட்டி ராகன்.
''சத்தியமா என்கிட்ட பணமில்லே சார்! எனக்கு ஒரு வாரம் மட்டும் கொடுங்க! நான் எப்படியாவது உங்க பணத்தை புரட்டி கொடுத்துடறேன்!''
''ஏய்! திருடன் உனக்கு பேசற அருகதையே கிடையாதே! எனக்கு என் பணம் இப்போ வேணும்! புரிஞ்சுதா?!''
''சார், உங்க கால்லே வேணும்னாலும் விழறேன் சார்! அவ்ளோ பெரிய தொகை என்கிட்ட இப்போ இல்லே சார்! நம்புங்க சார்!''
கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினார் பரந்தாமன், சின்னவனிடம்.
''பணத்தை கொண்டு வந்து கொடுக்கறியா, இல்லே களி தின்ன போறியா?!''
''ஐயோ! சார்! வேணாம் சார்! பொண்ணுக்காக அப்படி பண்ணிட்டேன் சார்! இனிமேல் அந்த தப்பை பண்ண மாட்டேன் சார்! நான் ஜெயிலுக்கு போயிட்டா, என் பொண்ணு அனாதையாகிடுவா சார்!''
தப்பிக்க கதையளந்த பெருசோ, கூடுதலாய் ராகனின் மனசை கரைக்க, ஓடோடி போய் அவன் கால்களை கட்டிக்கொண்டார்.
''உன் சொந்தக்கதை சோகக்கதை சொல்ல வேறாளே பாரு!''
பொங்கியவனோ, உதறித்தள்ளினான் பரந்தாமன் கொண்ட பிடியை. அவரோ, பின்னோக்கி போய் விழுந்தார் தரையில்.
தப்பே செய்திருந்தாலும், அவரின் வயசுக்கு மரியாதையை கொடுத்திட மனம் பதைத்தது சுரேஷுக்கு.
ஆகவே, அவருக்கு உதவிட நெருங்கினான். ஆனால், ராகnoநோ நல்லெண்ணம் கொண்டவனை முறைக்க, குனிந்த தலையோடு விலகி நின்றுக் கொண்டான் பி.ஏ. அவன்.
''இருந்தா நான் ஏன் சார் திருட போறேன்?! இல்லே சார்! என் பொண்ணே காப்பாத்தே எனக்கு வேறே வழி தெரியலே சார்! வயசுக்கு வந்த பொண்ணு சார்! கட்டிக் கொடுக்கணும் சார்! குறையோட எப்படி சார் கல்யாணம் காட்சி பண்ண முடியும்?!''
விடாது, பொய்யுரைத்தார் பெரியவர், தப்பிக்க வேறெந்த காரணம் அதைவிட தோதாய் இருக்காது என்றெண்ணி.
''என்னயா பிரச்சனை உன் பொண்ணுக்கு?!''
பரந்தாமன் பாடிய பொய் புராணம் என்னவோ ராகனுக்கு வேறொரு யோசனையைக் கொடுத்தது.
இருப்பினும், வெளிப்படையாய் காட்டிக்கொள்ளாமல் அதிகாரமாகவே அதட்டினான்.
''குழந்தை பெத்துக்கறதுலே ஏதோ பிரச்சனை சார்! அது என்னன்னு கூட எனக்கு சரியா சொல்லத் தெரியலே சார்! என் பெண்ணுக்குத்தான் எல்லாமே தெரியும்!''
திடிரென்று அவன் கேட்க, சாமர்த்தியமாக பதில் சொல்லி தப்பித்தார் பெருசு.
''என்ன வயசு உன் பொண்ணுக்கு?!''
''இருபத்தி எட்டு சார்!''
''மெடிக்கல் ரிப்போர்ட் எடுத்திட்டு வா! நாளைக்கு!''
பரந்தாமனுக்கோ தலையில் குண்டு விழுந்தது போலானது, ஆணவன் இவ்வளவு நேரமாய் அவர் சொன்ன பொய்க்கு நாளைக்கே ஆதாரம் கேட்க.
''தப்பிக்க நினைச்சே, தூக்கிட்டு வந்தவனுங்க, வீசிட்டு போயிடுவானுங்க! உசுரில்லாமே! ஜாக்கிரதை!''
எச்சரிக்கை செய்தவனோ சுரேஷிடம் கண்ணை காட்டினான், பெருசை அங்கிருந்த அப்புறப்படுத்திட.
தாழ் திறந்துவிடுவான் ததுளன்!
Author: KD
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 13
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 13
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.