- Joined
- Jul 10, 2024
- Messages
- 498

தாழ் திறவாய் ததுளனே! : 16
ஜில்லென்ற காற்று வஞ்சியின் தேகத்தை தழுவி சென்றது. ஆனால், பைந்தொடியோ சிலிர்க்காமலே அமர்ந்திருந்தாள் எதையோ பறிகொடுத்தவள் கணக்காய்.
''தூங்காமே இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?!''
கட்டியவன் குரல் திடுக்கிட வைத்தாலும், அவன் பக்கம் தலை திருப்பிடா மனைவியோ,
''தூக்கம் வரலே!''
''தூக்கம் வரலையா, இல்லே எதெது, எங்கெங்க இருக்கின்னு பார்த்து, உங்க சித்தப்பாக்கு ஆட்டைய போட ஐடியா கொடுக்கலாம்னு பிளான் பண்ணிக்கிட்டு இருக்கியா?!''
கணவனின் நறுக்கென்ற குத்தலில், சுருக்கென்று சினம் கொண்ட பத்தினியோ,
''தேவை இல்லாமே பேசாதீங்க! உங்க வேலையே பார்த்துக்கிட்டு போங்க!''
''நான் போறது இருக்கட்டும்! நீ வந்து படு முதல்லே! திருட்டு கும்பல் உளவாளியே இப்படியெல்லாம் விட்டுட்டு போக முடியாது! எந்த நேரத்துலே கைவரிசையே காட்டுவீங்கன்னே தெரியாது!''
திருமதியை வார்த்தைகளால் சாகடித்தான் முதலிரவு என்றும் பாரா நாயகன் அவன்.
''போதும் நிறுத்தறீங்களா?!''
பொங்கி எழுந்தவளோ,
''இப்போ என்ன உங்களுக்கு நான் தூங்கணும்?! அவ்ளோதானே?!''
சொன்ன வேகத்தோடு சென்று பஞ்சணையில் சரிந்தவள்,
''நாளைக்கே ஆளே கூப்பிட்டு, பாத்ரூமலையும், டாய்லட்லையும் கேமரா பிக்ஸ் பண்ணிடுங்க! அப்பறம், அதை திருடிட்டேன், இதை திருடிட்டேன்னு சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது பாருங்க!''
புது மனைவியின் காட்டத்தில் துளியும் அசராதவன்,
''இப்படியெல்லாம் பேசிட்டா, நான் உன்னே நம்பிடுவேன்னு நினைச்சியா?! அதுக்கு வேறாளே பாரு! முதல்லே, இந்த ரூம்லே, உனக்கான இடம் எங்கன்னு தெரிஞ்சிக்கோ! உன்னே படுக்கத்தான் சொன்னேன்! என் கட்டில்லே வந்து படுன்னு சொல்லலே!''
பால்கனி கதவை இழுத்து சாத்தி, மஞ்சம் நோக்கி நடந்து வந்தவனோ வாசுரையின் நெஞ்சை நெருஞ்சியாய் தைக்க, ரணத்தில் தவித்த தளிரியளோ, தாமதிக்காது தலையணையை தூக்கி பளிங்கு தரையில் போட்டு படுத்தாள்.
ஆனால், மங்கலநாண் பூட்டிய ஆளானோ, அடங்குவதாய் தெரியவில்லை. மெத்தையின் விரிப்பை மொத்தமாய் உருவி, தரை கொண்ட தாமரையின் மீது போட்டு,
''உன்னையே படுக்க வேண்டான்னு சொல்லிட்டேன்! இதுலே, நீ படுத்த பெட் ஷீட்டை வேறே நான் யூஸ் பண்ணணுமா?! நீயே போர்த்திக்கிட்டு படு!''
சொன்னவன் மெல்லணையின் மீதிருந்த வெறும் வெள்ளை வர்ணத்திலான கவர் மேல் படுத்துறங்க ஆரம்பித்தான்.
ஒருக்களித்து படுத்துக்கிடந்த காரிகையின் கண்ணோரமோ கண்ணீர் சத்தமின்றி வழிந்திறங்கியது.
மூடிய விழிகளுக்குள்ளோ திருமதி சுவாகையின் புருஷனான விராகனை நாயகி முதன் முதலில் சந்தித்த சம்பவம் உயிரோட்டம் கொண்டது.
''ஹாய் சார்! சித்த டாக்டர் சுவாகை! போன வாரம் பேப்பர்லே உங்களுக்கு இருக்கற பிரச்சனையை பத்தி படிச்சேன்! கண்டிப்பா உடனே உங்களே பார்த்தாகணும், இந்த மருந்தை கொடுத்தாகணும்னு முடிவு பண்ணிட்டேன்!''
என்ற முற்றிழையோ அடிகளை முன்னெடுத்து வைத்தவளாய், அவளின் கைப்பையை துழாவி கையிலெடுத்து மேஜையின் மீது வைத்தாள், போத்தல் ஒன்றை, ராகன் முன்னிலையில்.
ஹீரோவோ அவள் சொன்ன விஷயத்தை கேட்ட மாத்திரத்திலேயே முகத்தை இஞ்சி தின்ன குரங்காட்டம் உர்ரென்று மாற்றினான்.
''எந்த ஆம்பளைக்கும் உங்க நிலைமை வரக்கூடாது சார்! அதுவும் வாழ்க்கையோட அடிநாதமே அடிவாங்கிருந்தா, வாழறதே வேஸ்ட்!''
என்ற சுவாகையோ தொடர்ந்து பேசி, நாற்காலியை இழுத்தமர, ராகனோ பற்களை உள்ளுக்குள் கடித்துக் கொண்டவனாய் அவளை முறைத்தான்.
ஆனால், அந்திகை அவளோ ஆணவனின் முக பாவனைகளை உள்வாங்காது,
''மூணு மாசம் ஆராய்ச்சி பண்ணி, ரெடி பண்ண மூலிகை தைலம் சார் இது! தினம் ரெண்டு தடவை தடவினாலே போதும்! உங்க பிரச்சனையெல்லாம் சரியாகிடும்!''
என்றிட, ஆவேசத்தை அடக்கி முஷ்டி கையை வாயோடு சேர்த்து வைத்து அனல் மூச்சு கொண்டான் ராகன்.
''ஒரு பழமொழி இருக்கு சார்! நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்னு!''
என்ற மங்கையோ கழுத்தை கொக்காட்டம் முன்னோக்கி தள்ளி ரகசிய தொனிக் கொண்டவளாய்,
''வல்கரா பேசறேன்னு நினைச்சுக்காதீங்க சார்! பொண்ணுங்க சொர்கத்துலே பறக்கற மாதிரி ஃபீல் பண்ணுவாங்க! சத்தியமா உங்களுக்கொரு ஆம்பளையா பெருமையா இருக்கும் சார்! ஒரு தடவை யூஸ் பண்ணி பாருங்க! அப்பறம் தெரியும்! அவ்ளோ பவர் நம்ப தைலத்துக்கு!''
என்றவள் கொடுத்த பில்டாப்பில், அதுவரை பொறுமைக் கொண்டிருந்த ராகனோ பொங்கல் பானை கணக்காய் பொங்கி வெடித்தான் கடுங்கோபம் கொண்டவனாய்.
''ஏய்! வாய மூட்றி! நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன், வந்ததிலிருந்தே ஓவரா பேசிக்கிட்டு இருக்கே!''
என்றவன் மேஜையை ஓங்கி அடித்த அதிரடியில் ஆயிலையின் அடிப்பாதம் வரை வெலவெலத்து போனது.
''நான் கேட்டேனா உன்கிட்ட எனக்கு பிரச்சனை இருக்கு மருந்து கொடுன்னு!''
என்றவனோ மேஜை மீதிருந்த போத்தலை கையால் தட்டி விட,
''சார்.. பேப்பர்லே..''
''என்னடி பேப்பர்லே?! ஹான், என்ன பேப்பர்லே?! நீ பார்த்தியா, எனக்கு நிக்க மாட்டுது, உட்கார மாட்டுதுன்னு! அந்த பைத்திக்கார முண்டம்தான் கண்டதையும் சொல்லி என் பேரே கெடுத்து வெச்சுருக்கான்னா, இப்போ நீ வேறே வந்து மடச்சி மாதிரி லேகியம் வித்து என்னே நாறடிக்கறியா?!''
என்றவன் எழுந்து நின்ற ஆவேசத்தில், பேயறைந்தவள் கணக்காய் அவனை பேந்த விழித்து பார்த்தாள் ஏந்திழையவள்.
சொடக்கு போட்ட ராகனோ,
''ஏய்! எழுந்திரி! கிளம்பு! போய் அந்த கிறுக்கிக்கிட்டே சொல்லு! நான் இதுக்கெல்லாம் அசர்ரே ஆள் இல்லன்னு! மூலிகை தைலம், முடிச்சவிக்கி தைலம்னு என்னே மொத்தமா முடிச்சு விட அவே போடற எந்த வலையிலையும் நான் சிக்க மாட்டேன்!''
''சார் நீங்க என்ன தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க! நீங்க நினைக்கறே மாதிரி யார் சொல்லியும் நான் உங்களே பார்க்க வரலே! உங்களே ஏமாத்தறே எண்ணமும் எனக்கில்லே! சத்தியமாவே நான் ஒரு சித்த வைத்திய டாக்டர்! தயவு செஞ்சு வாடி போடியே நிறுத்திட்டு, மரியாதையா பேசுங்க!''
அழுத்தமாய் கூறிய கோற்றொடியோ, கையிலிருந்த போத்தலை ராகனின் முன் நீட்டி,
''இந்த தைலத்துலே யூஸ் பண்ணிருக்கறே ஒவ்வொரு மூலிகையும் தாம்பத்தியத்துக்கு பேர் போனது! நிறைய ஹெல்த் பெனிபிட்ஸ் இருக்கு! எந்த கலப்பும் கிடையாது! முழுக்க முழுக்க கையாலையே பறிச்சு, ஆஞ்சி, வெயில்லே காய வெச்சு, அம்மியிலே அரைச்சு, ஒவ்வொரு மூலிகையோட போர்ஷனையும் பதமா சேர்த்து, காத்து படாமே தூசி படாமே, பார்த்து பார்த்து உருவாக்கினது!''
என்ற சுவாகையின் குளமாகிய திட்டியில் ஒன்றோ கண்ணீரை பொலபொலக்க விட,
''ஏய்! நீ சொல்ற ஏமாத்து கதையெல்லாம் கேட்க நான் ஒன்னும் கிறுக்கன் இல்லே! வெளிய போடி!''
என்றவன் அலற, கண் கொண்ட நீரை புறங்கையால் விருட்டென துடைத்துக் கொண்ட நேரிழையோ,
''நீங்க நினைக்கறே மாதிரி இது ஒன்னும் ஏமாத்து தைலம் இல்லே! எதுவும் தெரியாமே, என்னோட உழைப்பை கொச்சைப்படுத்தாதீங்க! அப்பறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்!''
''நீ மட்டும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி, வாய்க்கு வந்ததெல்லாம் பேசி, என்னே பொட்டன்னு நாசூக்கா சொல்லலாம்?! பத்துகாசுக்கு பிரயோஜனம் இல்லாத உன் தைலத்தை பத்தி மட்டும் நான் பேசக்கூடாதா?!''
என்றவனோ சிவந்த அம்பகங்களோடு அவனை இமைக்காது பார்த்த பகினியை நெருங்கி கேட்க,
''நான் உங்களுக்காக வந்தேன்! நீங்க நல்லாருக்கணுங்கற எண்ணத்துலே வந்தேன்! ஆனா, நீங்க இவ்ளோ மோசமானவரா இருப்பீங்கன்னு நான் கனவுலே கூட நினைக்கலே!''
ஆதங்க தொனியில் பெண்டு அவள் கூற, நூலிடை இடைவெளியில் அவளை இமைக்காது வெறித்திருந்தவனுக்கோ குப்பென வியர்த்தது திடிரென்று.
அம்பகங்கள் ரெண்டும் மங்கலாக, தலையை சிலிர்ப்பி தள்ளாடியவனின் தேகமோ கனல் காடாய் மாறியது.
''சார், என்னாச்சு சார்?!''
ராகனின் அசௌகரியம் உணர்ந்தவளோ, அப்போது கூட சினத்தை ஓரந்தள்ளி கனிவாய் அவனுக்கு உதவிட முன் வந்தாள், கரிசனையோடு.
ஆனால், முயலுக்கு மூன்று கால் என்பவனோ அவள் கைகளை தட்டி விட்டு,
''என்னடி செண்டிமெண்ட்டா பேசி நடிச்சு, என் வாயே புடிங்கி, வீடியோ பண்ண சொன்னாளா அந்த கேடுகெட்டவே?!''
என்றப்படி, கண்ணாடி மேஜையின் விளிம்பில் முதுகொட்டி நின்ற தெரியிழையை இருக்கரங்களுக்குள் தடுமாறியவனாய் சிறைப்பிடிக்க, ஆணவனின் இதயமோ துடிப்பை அதிகப்படுத்தி கபாலத்தை ஆட்டிப் படைத்தது.
''உங்களுக்கு உடம்புலே பிரச்சனை இல்லே! மூளையிலே! அதான், ஏதேதோ உளறிக்கிட்டு இருக்கீங்க! இதுக்கு மேலையும் இங்க நிக்க, நான் ஒன்னும் தன்மானம் இல்லாதவே இல்லே! நகருங்க!''
என்ற நறுதுதலோ பீறிட்ட அழுகையிலான கதத்தை அடக்கிக் கொண்டவளாய் தலை குனிந்து ராகன் விலக காத்திருக்க,
''அப்போ, காசுக்காக மானத்தை விக்கறவளோ?!''
என்றவன் வீசிய வார்த்தையில் நொடியில் செத்தவளாய், மரண வலி கொண்டு அவனை ஏறெடுத்து பார்த்தாள் சுவாகை அவள்.
தாழ் திறந்திடுவான் ததுளன்!
Author: KD
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 16
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 16
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.