- Joined
- Jul 10, 2024
- Messages
- 415
அத்தியாயம் 23
நிகழ்காலம்
வேதாவின் படுக்கையறை
வேதா இல்லாத அறையில் புரண்டு படுத்த அட்சராவிற்கோ ராத்திரிதான் தூக்கம் வரவில்லை என்றால் மதியமும் ஏதும் வேலைக்காகிடவில்லை.
ஆகவே, அவன் வருவதற்குள் அறையை கொஞ்சம் சுத்தம் செய்யலாம் என்றெண்ணி அதற்கான பணியில் ஈடுப்பட தொடங்கினாள் வஞ்சியவள்.
நாற்காலி போட்டு ஏறி நின்றவள் காற்றாடியை துடைக்க, பிடிமானத்திற்காய் பக்கமிருந்த அலமாரி விளிம்புகளை அவ்வப்போது பற்றிக்கொண்டாள்.
அப்படியான சமயத்தில் அங்கிருந்த பெட்டி ஒன்று அம்மணியின் கவனத்தை ஈர்த்தது. அதுவும் அதன் ஓரத்தில் எழுதியிருந்த எழுத்துகளை கண்ட காரிகைக்கோ ஒருக்கால் அது நிலாவிற்கு சொந்தமானதாக இருக்குமோ என்றே தோன்றியது.
ஆனால், அது ஏன் வேதாவின் அறையில் இருக்க வேண்டும் என்ற கேள்வியும் அவளிடத்தில் எழாமல் இல்லை.
அதுவே வேறு ஒரு சந்தேகத்தையும் கிளப்பிட, அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு இழுத்தாள் அப்பெட்டியை அவள் நோக்கி அந்திகையவள்.
எக்கி அதற்குள்ளிருந்து ஒன்றிரெண்டு அட்டைகளை வெளியில் எடுத்தாள் அட்சரா. கைகளை நிரம்பியிருந்த அவைகளோ, என்றைக்கோ அச்சிடப்பட்டிருந்த திருமண அழைப்பிதழ்கள்.
முன் பக்கத்திலோ மணமகன் இடத்தில் வேதரஞ்சகன் என்றும் மணமகள் இடத்தில் அட்சரா என்றும் எழுதியிருந்தது.
அதை கண்ட மாத்திரத்திலேயே ஒரு நொடி ஆடிப்போய் நின்றாள் ஆயிழையவள். கோதையின் நயனங்களிலோ கண்ணீர் ததும்பி ரஞ்சகன் என்ற எழுத்தில் துளிர்த்தன.
பேடையின் விரல்களோ மணவாளனின் பெயரான வேதரஞ்சகனை தொட்டுரசியது. உள்ளம் கணக்க அம்பகங்களை துடைத்துக் கொண்டவள் ஓடோடி போனாள் வேதாவின் தாய் நோக்கி.
மறதியில் கிடப்பவள், கல்யாண பத்திரிகையோடு வந்து நிற்க, செய்வதறியாது தவித்தார் அம்பிகா.
''சொல்லுங்க ஆன்ட்டி?! இதுக்கு என்ன அர்த்தம்?!''
அட்சரா அழுகையோடு கேட்க, கைகளை பிசைந்தார் மகனை பெற்றவர்.
''பிளீஸ் ஆன்ட்டி! சொல்லுங்க?! வேதா என்னோட ஹஸ்பண்டா?! அவர் முழுப்பேர் வேதரஞ்சகனா?! சொல்லுங்க ஆன்ட்டி?! சொல்லுங்க?! பிளீஸ்!''
என்ற ஏந்திழையோ உயிரே போகும் படி அலறி துடித்து தரையில் மண்டியிட, அதற்கு மேல் மங்கையவளை தண்டித்திட விரும்பாது உண்மையை போட்டுடைத்தார் அம்பிகா.
''ஆமாமா! என் மகன் வேதரஞ்சகன்தான் உன் புருஷன்! நீ அவனோட மனைவிதான்! உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி ஏறக்குறைய ஒரு வருஷத்துக்கு மேலாகுது!''
''அப்பறம் ஏன் ஆன்ட்டி இது எதையுமே என்கிட்ட சொல்லாமே மறைச்சீங்க?!''
என்றவள் தொடுத்த வினாவிற்கு வதுகையின் மாமியாரோ மௌனியாய் இருக்க,
''சொல்லுங்க ஆன்ட்டி?! ஏன் மறைச்சீங்க?! ஏன், என்னே யாரோ மாதிரி நடத்தனீங்க?! வேதா கூட ஏன் என்கிட்ட அன்னியமானவர் மாதிரி நடந்துக்கிட்டாரு?! சொல்லுங்க ஆன்ட்டி?!''
''வேதாதான் எதையுமே உன்கிட்ட சொல்ல வேணான்னு சொல்லிட்டான்மா!''
''ஏன் ஆன்ட்டி?!''
''உன் ரஞ்சகன்கிட்டையே கேளு! அவன் வந்த பிறகு!''
என்ற அம்பிகாவோ சாமர்த்தியமாக பதில் சொல்லி நகர்ந்தார் அங்கிருந்து.
அவரை பொறுத்தமட்டில் இதற்கு முன்னாடி மருமகள் எப்படியோ. ஆனால், இப்போதோ அவள் புதிதாய் பிறப்பெடுத்திருக்கும் அட்சரா.
ஆதலால், எதுவாகினும் மகன் வந்து தெளிவுப்படுத்துவதே சிறப்பாய் இருக்குமென்று முன்னாடி நடந்த எதையும் சொல்லிடாமலே விட்டுவிட்டார் அவர்.
*********************************
நிகழ்காலம்
போலீஸ் ஸ்டேஷன்
''என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க வேதா, போலீசுக்கு வேறே வேலை இல்லன்னா?!''
இன்ஸ்பெக்ட்டர் அன்பு முன்னாடி இருக்கையில் அமர்ந்திருந்தவனை வார்த்தைகளால் துளைக்க,
''இல்லே சார்! அப்படியெல்லாம் இல்லே! சோரி! நான் நிஜமாவே மறந்துட்டேன்!''
''மனைவியை காணோம்னு ஸ்டேஷன்லே கம்பளைண்ட் பண்ணிருக்கீங்க! அவுங்களே பத்தின தகவலை உங்கக்கிட்ட உடனே சொல்றதுக்கான ஒரே வழி போன்தான்! அப்படிப்பட்ட நம்பரை இப்போதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி மாத்தியிருக்கீங்க! ஆனா, அதை ஸ்டேஷன்லே கொடுக்க மறந்துட்டேன்னு சொல்றீங்க! இதெல்லாம் நம்பறே மாதிரியா இருக்கு?!''
''உண்மையாவே எனக்கு மறதி ஜாஸ்தி சார்! நான் அடிக்கடி இப்படித்தான் சில விஷயங்களை மறந்திடுவேன்! இதைக்கூட வேணுமுன்னே மறக்கலே சார்! கொடுக்க நினைச்சு வேலை பிசிலே அப்படியே மறந்துட்டேன்!''
''சரி, பத்து வருஷத்துக்கு மேலே யூஸ் பண்ண நம்பரே இப்போ மாத்த என்ன காரணம்?!''
''வீட்டு ஓட்டு மேலே நின்னு வேலை பார்க்கும் போது போன் பாக்கெட்டிலிருந்து தவறி கீழே விழுந்துடுச்சு சார்!''
''எங்க விழுந்துச்சு?!''
''அந்த வீடு ஒரு பிரைவேட் லோட் ஏரியா சார்! அந்த வீட்டுக்கு பின்னாடி முழுக்கவும் புதர்தான்! அங்கதான் விழுந்துடுச்சு!''
என்றவனை சந்தேகங்குறையாது கழுகாய் நோக்கினான் இன்ஸ்பெக்ட்டர் அன்பு.
''பழைய நம்பர் கேட்டேன் சார்! கிடைக்கலை! அதான், புது நம்பர் எடுக்க வேண்டியதா போச்சு!''
''விழுந்த நம்பருக்கு பதிலா புது நம்பர் வாங்கியாச்சு! அப்பறம் எதுக்கு மறுபடியும் இன்னோர் புது நம்பர் வாங்கி இருக்கீங்க?! அதுவும் சரியா முதல் நம்பர் வாங்கின மூணாவது நாளிலே?!''
அன்பு தொடர்ந்து குடைய,
''எனக்கு ஒரு கிளாஸ் தண்ணி கிடைக்குமா சார்?!''
என்ற வேதாவோ பயத்தில் சூடேறி நடுங்கிய உடம்பை சமாளிக்க முடியாது திணறினான்.
*********************************
நிகழ்காலம்
நந்தமூரி சாமியார் ஆசிரமம்
''பீட்டர் இந்த முறை நம்ப டீலிங்கை நாமே ஆசிரமத்துலையே வெச்சுக்கலாம்!''
''யோவ் கிழவா! என்ன விளையாடறியா?! நட்டுகிட்டு கழண்டி போச்சா என்ன?!''
''நான் ரொம்ப நல்லா யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன் பீட்டர்!''
''என்ன, காமெடி பண்றியா?! முதல்லே ப்ரைவேட் ஜெட்னு சொன்னே?! இப்போ, உன் இடம் சொல்றே?! என்னதான்நினைச்சுக்கிட்டு இருக்கே நீ?!''
''பீட்டர், நம்ப டீலிங்கை பத்தி எப்படியோ போலீசுக்கு தெரிஞ்சிடுச்சு! கையும் களவுமா நம்பளோட சேர்த்து எல்லா டைமண்ட்ஸையும் கைப்பற்ற அவுங்க ஒரு பக்கா பிளான் போட்டுக்கிட்டு இருக்கறதா எனக்கு தகவல் வந்தது!''
''ஏய்! என்ன பூச்சு காமிக்கறீங்களா?! நீயும் உன் நாட்டு போலீசும்?! என்னே பார்த்தா எப்படி இருக்கு?!''
''கோபப்படாமே, பொறுமையா ஒரு ஐஞ்சு நிமிஷம் நான் சொல்றதை கேளு பீட்டர்!''
''சொல்லு! ஆனா, என்னே சாந்தமாக்கற மாதிரி எதையாவது சொல்லு! ஸ்ட்ரெஸ் ஏத்தாதே!''
''போலீசாலே எங்க வேணும்னாலும் சுலபமா நுழைஞ்சிட முடியும் பீட்டர்! சாமியார் மடங்களை தவிர!''
என்ற நந்தமூரி சாமியாரோ அடுத்தடுத்த திட்டங்களை மறுமுனையில் இருப்பவனுக்கு விளக்கி சொல்லிட ஆரம்பித்தார்.
யார் நெருங்க யார் நொறுங்க...
Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 23
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 23
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.