What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

உள்ளங்கை கதகதப்பு

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
323
என்னை அவ்வளவு ரசித்தான் விஷ்ணு. அவன் பெயர் அதுதான். போனில் யாரோ சொல்ல என் காதில் துள்ளிதமாய் விழுந்தது.

சீக்கிரமாகவே வந்து சேர்வதாய் சொல்லி கிளம்பினான் அவன். அவனோடு பயணிக்கையில் ஏனோ அவ்வளவு பத்திரமாய் உணர்ந்தேன் நான்.

பேருந்து இருக்கையில் கூட யாரும் என்னை உரசிடாதப்படி இடத்தை ஜன்னலோரம் மாற்றி உள்புகும் காற்றுக்கு கூட வேலி போட்டான்.

குண்டங்குழியுமான ரோட்டில் பஸ்காரனோ குருடனை போல் டயரை ஏற்றி இறக்க, விஷ்ணுவின் கைகளோ ஆசுவாசமாய் எனை பற்றிக்கொண்டது.

சிவப்பிலான என் மேனியோ ஆணவன் கொண்ட அழுத்தமற்ற மென்மையில் மேலும் நாணி சிவந்தது.

நாங்கள் இருவரும் வீடு வந்து சேர இரவு பத்துக்கும் மேலானது. என் புகழ் பாடவே அவனுக்கு நள்ளிரவு வரை நேரம் சரியாய் இருந்தது.

எனை பிரிய மனமின்றி தனியே போய் படுத்தான் உத்தமன் அவன். நானோ உறங்கும் அவனை எதிர் அறையிலிருந்தப்படியே இமைக்காது ரசித்தேன் இரவு என்னவோ எங்களுக்கானது என்பது போல்.

விடிந்தது.

தடபுடலான செயல்களும் பேச்சுகளும் விஷேஷம் என்பதை உறுதிப்படுத்தியது.

கண் விழித்த நானோ அவனையே தேடினேன். விஷ்ணுவின் குரல் கேட்கா எனக்கோ இன்றைய பொழுது இனிமையற்றதாகவே தோன்றியது.

உம்மென்று கிடந்தேன். முகத்தை தூக்கி திருப்பி வைத்துக் கொண்டு. நானிருந்த அறை வந்தவர்களோ எனை பார்த்து ஒன்றும் சிரித்து நட்பெல்லாம் பாராட்டிடவில்லை.

வெறுமனே கடமைக்கு ஒரு எட்டு பார்த்து விலகி போயினர். நானும் ஒன்றும் எதற்கும் குறைந்தவள் இல்லையே. ஆகவே, வாயை வெட்டியிழுத்து சிலிர்ப்பிக் கொண்டேன்.

அந்தி சாய்ந்தது.

அறையிலிருந்த நான் வெளிவரும் சமயம் வந்தது.

வீடோ ஆரவாரத்தில் கூட்டம் கூடி நின்றது.

விழா கோலம் பூண்ட நிலை எனை புல்லரிக்க வைத்தது.

இருந்தும், என் நெஞ்சம் ஏனோ விஷ்ணுவையே தேடியது.

ஏங்கி காத்திருந்த என் செவிகளில் திடீரென ஒப்பாரியும் ஓலமும் கேட்டது.

திடுக்கிட்ட நான் பதறிப்போக, நேற்று நான் பார்த்து ரசித்த விஷ்ணு பாடையில் வீடு வந்து சேர்ந்தான்.

அவனின் ஈரம் பூத்த உள்ளங்கைகள் கொடுத்த கதகதப்பு கூட இன்னும் என்னில் அடங்காதிருக்க, பொறுமையற்ற பொறுப்பற்றவனோ எமனின் கயிறுக்கு கபாலத்தை அடமானம் கொடுத்திருந்தான்.

சில்லாய் சிதறிய என்னுள்ளமோ அசைவற்று கிடந்தவனை கண்டு அடித்துக் கொண்டு துடிக்க, சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் அரங்கேறிட ஆரம்பித்தன.

நிறைமாத கர்ப்பிணியான வள்ளியின் கைகளிலோ எனை அணிவிக்க தொடங்கினர் ஊர்க்கார பெண்கள்.

பொஞ்சாதியின் கையில் வளைகாப்பு கொண்டாடிட யாரை போட்டு அழகு பார்த்திட, கடை கடையாய் அலைந்து திரிந்து, அவள் விருப்பப்படியே அடர் சிவப்பில் வாங்கி வந்தானோ, அதுவாகிய நானே இப்போது விதவை அவள் கரத்தில் உதிரங்களின் ஊடே உதிர்ந்து உடைந்து தரை விழுந்தேன் நொறுங்கி இரக்கமற்றவர்கள் நொறுக்க.

பொலபொலத்த வள்ளியின் கண்ணீர் துளிகள் என் மேனியில் சூடாய் துளிர்க்க, குமுறிய என் அழுகையோ யாருக்கும் கேட்டிடாமலே போனது.

விஷ்ணுவின் பூத உடம்பின் மீது சிதறிக் கிடந்த என் யாக்கைகளின் சில பாகங்களில் நானும் அவனோடு கலந்து விட்டதாய் நிம்மதி பெருமூச்சு கொண்ட நான் மூச்சை மொத்தமாய் நிறுத்திக் கொண்டேன்.

என் பெயர் கண்ணாடி வளையல். சிவப்பு கண்ணாடி வளையல்.

முற்றும்.
 

Author: KD
Article Title: உள்ளங்கை கதகதப்பு
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top