அவள் ஒளியை
அவள் பிரகாசத்தை
அவள் பெண்ணம்சத்தை
மரியாதை செய்யும் ஆண்மனத்தினைக் காட்டிலும்
எவன் வாள்கொண்டு கீறுவானோ
எவன் பிரியத்தின் குருதியைப் பருகுவானோ
அவனிடமே அன்புக்கு இரந்து நிற்பதுவே
காலங்களாய்
பெண் கொண்ட சாபம்
உன்னோடு நேரம் போக்க
உன் அண்மையில் இருக்க
உன் தோளுரச
உன் பாதம் பற்ற
உன் விரிந்த நெற்றியில் அன்பின் முத்தம் பகிர
உன்னுடல் வெப்பம் உணர
உன் பெண்மையின் நடுக்கம் காண
நீ பூசிக்கொள்ளும் வெட்கம் தொட
உன்னோடு சேர்ந்து நிலா பார்க்க
மழையில் நனைய
பயணம் செல்ல
இலக்கற்ற பாதையில் முடிவே இன்றி நடந்து...
நிறைய காதல்களும்
நிறைய காமங்களும்
எளிதில் எட்டும் நிலைதனில்
எனக்கு உன்னை மட்டும்தான் பிடித்திருக்கிறது என்பதற்கு
நான் அத்தனை யோக்கியன் என்றர்த்தமல்ல
எனக்கும்
என் மீத வாழ்விற்கும்
நீ போதும் என்றர்த்தம்!