What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
382
WhatsApp Image 2024-10-16 at 4.30.53 PM.jpeg

அத்தியாயம் 20

நிகழ்காலம்


இன்ஸ்பெக்ட்டர் அன்பின் போலீஸ் ஸ்டேஷன்

நண்பனான இன்ஸ்பெக்ட்டர் அன்பை சந்திக்க அவன் ஸ்டேஷனுக்கே வந்திருந்தான் இன்ஸ்பெக்ட்டர் கதிர்காமன்.

அவன் ஸ்டேஷன் ஆட்களால் நடந்திருந்த தவறை விளக்கி சொல்லிட ஆரம்பித்தான் ஆணவன் தோழனிடம்.

அதாவது, பெரியவர் அவரின் மகளை காணாது கேஸ் கொடுக்க ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார்.

அதே நேரம், வேதாவும் அவன் மனைவி தொலைந்து விட்டாள் என்று வழக்கு கொடுக்க காவல் நிலையம் வந்திருக்கிறான்.

பெரியவரின் கதையைக் கேட்டு அறிக்கை எழுதிய ரைட்டர் அதில் அட்சரா என்று தெளிவாக எழுதி கோப்பை ஓரம் வைத்திருக்கிறார்.

அந்நேரம் பார்த்து இன்ஸ்பெக்ட்டர் ஸ்டேஷனுக்குள் நுழைய, ரைட்டரோ விருட்டென காதிலிருந்த மெஷினை கழட்டி இழுப்பறையில் ஒளித்திருக்கிறார்.

அதாவது, கொஞ்ச நாட்களாகவே அவருக்கு காது சரியாக கேட்டிடவில்லை. இதை இன்ஸ்பெக்ட்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்ட்டர் இருவர் மட்டுமே ஸ்டேஷனில் அறிந்திருக்கவில்லை.

வருட கடைசியில் பணி ஓய்வு பெற போகிறவர் என்ற காரணத்தாலேயே ரைட்டர் மீது மற்ற போலீஸ்காரர்கள் இரக்கம் காட்டி இருக்கின்றனர்.

ஆனால், அதுவே வேதாவின் வாழ்க்கையில் திருவிளையாடல் நடத்திட காரணமாகி போனது.

செவியில் மெஷின் இல்லாத காரணத்தால் வேதா சொன்ன அட்சரா என்ற பெயர், அவருக்கு அக்ஷரா என்று கேட்டிருக்கிறது.

வேதாவும் பதற்றத்தில் துணைவியின் பெயரில் கொண்ட குளறுபடியை கவனிக்காதே விட்டிருக்கிறான், விபரங்களை சரிப்பார்த்த பின்பும்.

அதே வேளை, மேஜை மீதிருந்த அட்சரா மற்றும் அக்ஷர என்ற இரு ஃபயில்களும் தரை விழுந்து எல்லாம் கலந்து போயிருக்கின்றன.

இதனால்தான், வேதாவின் பொஞ்சாதியின்பால் கொண்ட தேடல் தோல்வியில் முடிந்திருக்கிறது, என்றுக் கூறி வருத்தம் கொண்டான் கதிர்காமன்.


***********************************


நிகழ்காலம்

நந்தமூரி சாமியார் ஆசிரமம்


''இனி உனக்கு நல்லுறக்கமும் நிம்மதியும் கிடைக்குமாக! எல்லாம் வல்ல ஈஸ்வரன் உனக்கு துணையாய் நின்று அருள் புரிவானாக!''

என்ற நந்தமூரி சாமியாரோ உள்ளங்கையை அட்சராவின் உச்சந்தலையில் பதித்து ஆசிர்வதித்தார்.

பேடையின் நடு மண்டையில் வைக்கப்பட்டிருந்த வெற்றிலையில் ஒரு கரண்டி தீர்த்தம் ஊற்றப்பட்டது. அதுவோ வழிந்திறங்கியது நாயகியின் முகத்தில்.

''கண்ணே திறந்து பாருமா!''

என்ற சாமியோ மாதங்கி அவளின் நெற்றியில் திருநீறு வைக்க,

''சாமி, யாரோ நாலஞ்சு பேர் துரத்திக்கிட்டு வர மாதிரி அடிக்கடி கனவு வருதுன்னு சொல்றா!''

அட்சரா கொண்டிருக்கும் அச்சத்தை புட்டு வைத்தார் அம்பிகா சாமியாரிடம்.

''மனசுக்கு இதம் தர மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்துமா! கனவுகளில் பலது நமக்கு காரணமே இல்லாமல்தான் வரும்! அதையெல்லாம் அலச ஆரம்பிச்சா இருக்கற தூக்கத்தையும் கெடுத்துக்கிட்டு அலைய வேண்டியதுதான்!''

என்ற சாமியோ அம்பிகா கொடுக்க முனைந்த தட்சணையை தட்டில் வைத்திட கையால் சைகை கொண்டு பணித்தார்.

''ரொம்ப நன்றி சாமி! போயிட்டு வறோம்!''

''நல்லப்படியா போயிட்டு வாங்க! பரமேஸ்வரன் உங்களை காப்பானாக!''

என்ற சாமியோ வந்தவர்களுக்கு விடை கொடுத்து வழியனுப்பினார்.


***********************************

நிகழ்காலம்

தங்கும் விடுதி


அட்சராவின் குறுஞ்செய்தியைக் கண்ட வேதாவோ, மஞ்சத்தில் புரண்டு அவளுக்கு என்ன பதில் அனுப்பிடலாம் என்ற யோசனையோடே கண்ணயர்ந்து போனான்.

காலை விடிய, அலைபேசியை எடுத்து பார்த்தவனுக்கோ மீண்டும் அந்திகையிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி நள்ளிரவை தாண்டி வந்திருந்தது.

''தூங்கிட்டிங்களா வேதா?!''

என்ற மெசேஜை பார்த்தவனோ, இதழோரம் முறுவல் கொண்டு, அவனுக்கான மாத்திரைகளை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.

''குட் மோர்னிங்! சோரி, தூங்கிட்டேன்!''

என்று நேரிழை அவளுக்கு பதில் அனுப்பிய வேதா, ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பி அவன் பணியாட்களை கூட்டிக்கொண்டு வேலை பார்க்கும் இடம் நோக்கினான்.

நான்கு நாட்கள் கடந்திருந்தன, அட்சராவின் கதகதப்பான முழங்கை பற்றல் இன்றி ஆணவன் உறங்கி.

மலைக்கோவில் சாமியார் நந்தமூரியை சந்தித்து வீடு திரும்பிய மறுநாளே வேதா புதிதாய் கிடைத்திருக்கும் ப்ரொஜெக் ஒன்றில் வேலைப் பார்த்திட வெளி மாநிலம் கிளம்பி வந்திருந்தான்.

அனுப்பி வைத்திருந்தாள் பகினி அவள் நேற்றைய இரவே,

''வெள்ளிக்கிழமை முடியும் போது, உங்க முகம் பார்க்க ஆசைப்படறேன் வேதா! குட் நைட்!''

என்று.

அதனாலேயே, ஆடவனின் மனமோ எப்போது மிச்ச மீதி பணிகள் முடியும், ஆரணங்கு கேட்டப்படி அவள் முன் போய் நிற்கலாம் என்று துடித்தது.

மதிய உணவு உண்டவன் அலைபேசியில் கடந்த வாரம் அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட படத்தை போனின் முன்பக்க தொடுதிரையில் செட் செய்து, அதை பார்த்தவாறே சாப்பிட ஆரம்பித்தான்.

கடந்த வாரம் நந்தமூரி சாமியாரை தரிசனம் செய்ய மலை கோவிலுக்கு சென்று விட்டு அன்றைய இரவு பக்கமிருந்த தங்கும் விடுதி ஒன்றில் மூவரும் தங்கிக் கொண்டனர்.

அம்பிகா மற்றும் அட்சராவிற்கு ஒரு அறையும், வேதாவிற்கு தனி அறையும் பதிவு செய்து டின்னர் முடிய அவரவர் அறைக்கு சென்றனர்.

ஆனால், எப்போதும் வேதாவின் கைப்பற்றியே தூங்கி பழகிய பாவைக்கோ, அவனின்றி கண்கள் மூட மறுத்தன. ஆகவே, பூனையாட்டம் அறையை விட்டு வெளியில் வந்தவளாய் நேராய் அவன் அறை நோக்கினாள் கள்ளியவள்.

அரை உறக்கம் கொண்ட ஆடவனோ கதவு தட்டும் சத்தம் கேட்டு அதை திறக்க, வெளியில் நிற்கும் வதுகையை பார்த்து அதிர்ச்சிக் கொண்டான், நட்டு நடு இரவில்.

''என்னாச்சு அட்சரா?! இங்க என்ன பண்றீங்க?!''

''தூங்க முடியலே வேதா! நான் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன்!''

''கண்ணே மூடி படுங்க அட்சரா! எல்லாம் வரும்!''

''நான் தூக்கம் வரலன்னு சொல்லலே வேதா! தூங்க முடியலன்னு சொல்றேன்! புரியுதா உங்களுக்கு?!''

என்ற பேதையின் பார்வைகளோ முன்னிருப்பவனை ஆழமாய் விழுங்க,

''அம்மாக்கு தெரிஞ்சா சங்கடப்படுவாங்க அட்சரா! வாங்க, நான் உங்களே ரூமுலே கொண்டு போய் விடறேன்!''

''பரவாலே! நானே போயிக்கிறேன்!''

என்ற பொற்றொடியோ சோகமாய் திரும்பிய வேகத்தில் மீண்டும் சட்டென திரும்பி பட்டென வேதாவை கட்டிக்கொண்டாள்.

''அட்ச்..!''

என்றவன் அதிர்ந்து, அவள் பெயர் முழுதாய் சொல்ல முனைய, வதூ அவளின் பிடியோ இறுகியது வேதாவின் இதயம் அதன் வேகத்தை கூட்ட.

''சோரி!''

என்றவளோ சில நொடிகள் கடக்க அவனை விட்டு விலகி,

''இனி இப்படி உங்க தூக்கத்தை கெடுக்க மாட்டேன்! போயிட்டு வறேன்! பாய்!''

என்றவளோ அதிர்ந்து நிற்பவனுக்கு குழந்தை பாவனையில் டாட்டா காட்டி போக, வேதாவின் நெஞ்சமோ இனி தூக்கத்திற்கு சுவாஹாத்தான் என்று கூப்பாடு போட்டது.

யார் நெருங்க யார் நொறுங்க...
 

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 20
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top