- Joined
- Jul 10, 2024
- Messages
- 483
அத்தியாயம் நூற்றி பத்தொன்பது
ஒருவழியாய் வெளிநாடு போக சம்மதித்திருந்த கீத்துவோ கிளம்பும்முன் அவள் தாயோடு உறங்க விரும்பினாள்.
ஆகவே, அமரா அவர்களைத் தனியே விட்டு அவளுக்கென்ற அறையில் தஞ்சம் கொண்டாள்.
கீத்து பேக்கிங்ஸ் எல்லாம் முடிய குஞ்சரியின் அறைக்கு சென்றாள்.
“சீனியர்!” என்றழைத்த மகளோ கதவை லாக் செய்தாள் அறைக்குள் நுழைந்து.
மஞ்சத்தில் மல்லாக்க படுத்து ரீசன் கைப்பட எழுதிய டைரியை படித்துக் கொண்டிருந்த குஞ்சரியோ, கையேட்டை நகர்த்தி கண் முன் நின்றவளைப் பார்த்து ஒரு கணம் அதிர்ந்து நழுவவிட்டாள், பாவ கணக்கின் குறிப்பேட்டைக் கைகளிலிருந்து.
எப்போதாவது படிக்க தோன்றினால், இல்லை இல்லை, ரீசனின் உள்ளங்கை கதகதப்புக்கு என்றைக்காவது ஏங்கி தவித்தால், இப்படித்தான் அவனின் கையெழுத்துகளில் முகத்தைப் புதைத்து ஆளானவன் கையையே மடியாய் நினைத்து தூங்கிடுவாள்.
முறுவல் கொண்ட கீத்துவோ உதடு மடக்கி நெருங்கினாள் குஞ்சரியை.
நயனங்கள் உதிர்த்த அருவியைக் கையால் துடைத்துக்கொண்ட குஞ்சரியோ, போர்வையை நகர்த்தி இடம் ஒதுக்கினாள் லேடி ரீசன் அமர்ந்திட.
“எப்படி இருக்கேன் சீனியர்?”
என்றவளின் கேள்வியில் முகத்தை ஓரமாய் திருப்பிக் கொண்டவளோ, கண்ணீர் கடல் கொண்டாள் சத்தமின்றி வாய் பொத்தி.
இருந்தும் ஓரக்கண்ணால் பார்த்தாள் குஞ்சரியவள், மகள் கீத்து ரவுண்ட் நெக் ஷேர்ட்டுக்கு வெளியே சிவப்பு கருப்பிலான கட்டம் போட்ட லாங் ஸ்லீவ்வை முழங்கை வரை மடக்கி விடும் காட்சியை.
உள்ளம் பதைக்க பழைய எண்ணங்களெல்லாம் தீயாய் கொழுந்துவிட்டு எரிந்து, வேடிக்கைக் கொண்டது காரிகையின் நினைவுகளுக்குள்.
குஞ்சரியின் ஜாடை பார்வையை உணர்ந்த கீத்துவோ, குறும்பு சிரிப்பை உதடுகள் மடக்கி ஒளித்துக் கொண்டாள். அவளுக்கு தெரியும் பெற்றவள் மகளவளை சைட்டடிக்கிறாள் என்று.
பின்னே ரீசனின் ஸ்டைலில் உடை உடுத்தியிருந்தால் பார்க்கத்தானே செய்வாள் குடும்பம் நடத்தியவள்.
“குஞ்சரி!”
என்ற கீத்துவின் ஹஸ்கி வாய்ஸில் பட்டென திரும்பிய குஞ்சரியோ, இமைக்காது வெறித்தாள் கண்முன் கட்டிலின் மீது ஒருகையால் இடையை இறுக்கியபடி அமர்ந்திருந்த கீத்துவை.
கண்ணடித்தாள் மகளவள் குஞ்சரியைப் பார்த்து ரீசனைப் போலவே.
“எப்படி இருக்கு குஞ்சரி, இந்த ஹேர் ஸ்டைல்? புடிச்சிருக்கா?”
என்றவளை டக்கென இழுத்து அழுத்தமாய் கட்டிக்கொண்டாள் தாயவள்.
“ஓஹ்! ஓஹ்! ஓஹ்! பார்த்து சீனியர்! எழும்ப உடைச்சிடாதீங்க.”
என்றவளோ அம்மாவின் அணைப்பில் குஞ்சரியின் முதுகை தடவிக் கொடுத்தாள் குறும்பு சிரிப்பு சத்தம் கொள்ள.
“ஐ மிஸ் யூ சோ மச் ரீசன்! சோ சோ மச்! சோ மச் ரீசன்!”
என்ற குஞ்சரியோ அறுவை சிகிச்சைக்குப் பின்னாடி அன்றைக்குத்தான் தொண்டைத் தண்ணி வற்றிட கதறினாள்.
“அடடடடடா! என்ன குஞ்சரி இது? எத்தனை தடவை சொல்லிருக்கேன்...”
என்ற கீத்துவோ அம்மாவின் கன்னங்களைப் புறவிரல்கள் கொண்டு ரீசனைப் போலவே மென்மையாய் துடைக்க, அவளின் கையைத் தட்டிவிட்ட குஞ்சரியோ மொச்சியெடுத்து விட்டாள் கீத்துவின் முகத்தை.
“சீனியர்! பொறுமை! பொறுமை! நான் கீர்த்திகா தீனரீசன். தீனரீசனில்லே...”
என்றவள் சிரிக்க, முத்தத்தை நிறுத்திய குஞ்சரியோ கையிலேந்திய மகளின் முகத்தை கண்ணீரோடு உற்று நோக்கினாள்.
அதுவும் அந்த கண்கள், கண்ணிமைகள், குழி விழும் கன்னங்கள், கூரிய மூக்கு, அடர்த்தியான புருவங்கள் என்று எல்லாமே குஞ்சரியை நிலைக்குத்திட வைத்தது.
எவ்வளவு முறை அவைகளைத் தொட்டுரசி காதல் கொண்டிருப்பாள். எத்தனைமுறை ரசித்திருப்பாள்! நயனங்கள் மூடி வெட்கிருப்பாள்.
கொஞ்சி விளையாடுகையில் எப்பாடுபட்டாவது கேசத்தை அழுத்தமாய் பற்றியிருப்பாள். பயத்தில் ஆணவன் அம்பகங்கள் நோக்கி அச்சம் தவிர்த்திருப்பாள். ஆளனின் கண்ணிமைகளில் கோதையின் திட்டிகளை ஒற்றி அனல் மூச்சு கொள்ள உரசியிருப்பாள்.
அஸ்தியாகி போனவன், ஆறடி உயரத்தில் கண்முன் நிற்க, கண்டாள் விலோசனங்கள் வியந்து லயித்திருக்க, குஞ்சரியவள் ரத்த வெள்ளத்தில் எமனுக்கு வாரிக்கொடுத்தவன் சிங்கப்பல் தெரிய சிரித்திருக்க.
கீத்து யாருக்கும் சொல்லாமல் ஏன் யாரிடமும் ஒரு வார்த்தைகூட கேட்காது நெஞ்சு வரையிலான சிகையை சலூனுக்கு சீதனமாக்கியிருந்தாள்.
ஏற்கனவே அவளுக்கு அச்சுப் பிசகாத ரீசனின் ஜாடை. இப்போதோ சின்னவளவள் குழலைப் போலீஸ்கட்டு வேறு வெட்டிவர, கண் முன்னே சவக்குழிக்குப் போனவனைத் தூக்கி வந்து நிறுத்தியிருந்தாள் மவராசி.
“கேம் அப்போ ரொம்ப கஷ்டமா இருக்குது சீனியர். அதான், முடியே வெட்டி கேன்சர் செண்டருக்கு டொனேட் (donate) பண்ணிட்டேன்.”
என்ற மகளும் தாயும் ஒரே கட்டிலில் அமர்ந்திருக்க, சப்பளமிட்டிருந்த கீத்துவோ அவளின் விரல்களை ஒவ்வொன்றாய் தொட்டுத் தடவிப் பார்த்த குஞ்சரியின் கவனத்தை ஈர்த்தாள்.
“அது ஒன்னுமில்லே சீனியர், பாசிங் பண்ணும்போது அடிப்பட்டிருச்சு. பிளாஸ்ட்டர் போட்டிருக்கேன், நல்லாயிடும்.”
கீத்துவின் பேச்செல்லாம்கூட அப்படியே ரீசனை ஒத்திருந்தது.
குஞ்சரியோ மகளின் விரல்களைப் பற்றி பிடித்து உதட்டில் ஒத்திக் கொண்டாள். அவைகள் ரீசனின் நீட்டமான விரல்களை அவளுக்கு நினைவூட்டியது.
“கோவமேதும் இல்லையே?”
என்ற கீத்துவோ அம்மாவின் வாய்தாடையை விரல்களால் பிடித்து மேல் தூக்க,
“தேங்க் யூ!” என்றாள் குஞ்சரி பதிலோடு மகளின் கன்னத்தை வருடி.
“நான் அதை கேட்கலே சீனியர்?” என்ற கீத்துவோ மெதுவாய் குஞ்சரியின் இருப்பக்க கன்னங்களையும் பிடித்தாட்டிட, அவளின் கையை மென்மையாய் விலக்கினாள் தாயவள்.
“ஆறு மாசமாகும் குஞ்சரி. அது வரைக்கும் தாங்கறே மாதிரி ஏதாவது...”
என்ற கீத்து இழுத்த இழுப்பில், மகளின் முகத்தைக் கரங்களுக்குள் அடக்கிய குஞ்சரியோ, அவளின் நிடலத்தில் முத்தம் பதித்தாள்.
“இதுலே என்ன இருக்கு? நான் இதை கேட்கலே...”
என்ற கீத்துவின் புருவங்கள் சுருங்க, எழுந்த செல்லமான ஊடல் கொண்ட கோபம்கூட போனவனையே மறுபடியும் நினைவுறுத்தியது வஞ்சியவளுக்கு.
ஏக்கங்கள் எங்கே மானினியவளை கொன்றிடுமோ என்ற உட்குவில் ரீசனின் ஊடையவளோ ஏதும் பேசாது போர்வையை இழுத்தாள் துயில் கொள்ளும் சாக்கில்.
“நான் தூங்க வைக்கிறேன் சீனியர்.”
என்ற கீத்துவோ மஞ்சத்தில் மல்லாக்க படுத்து குஞ்சரியை நெஞ்சில் சாய்த்துக்கொண்டு கண்கள் மூடினாள் வலக்கை ரீசனைப் போலவே தலைக்கு மேலிருக்க.
தவிர்க்கவும் முடியாது, தோள் சாய்க்கவும் முடியாது தள்ளாடினாள் தாயவள். காண்பது நிஜமல்ல என்பது குஞ்சரிக்கு தெரியும். நாடகம் ஒரு நாள் தேவைகள் மாறிட கலையும் என்பதையும் அறிவாள்.
இருந்தும் இன்றைய நாளை தவறவிட ரீசனின் குஞ்சரிக்கு மனமில்லை. முழுதாய் ஒரு முடிவை ஆழ்ந்து யோசித்து எடுக்கும் முன்னே நித்திரைக் கொண்டாள் யுவதியவள்.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு ரீசனின் நெஞ்சில் சாய்ந்தது போன்றதொரு உணர்வில் நிம்மதியான உறக்கம் கொண்டாள் தேவகுஞ்சரியவள்.
மறுநாள் விடிய கனடாவிற்கு கிளம்ப தயாரான கீத்துவோ, அம்பாள் பாட்டி அர்ச்சனையிலிருந்து தப்பித்துக் குஞ்சரியின் அறைக்குப் போனாள்.
வேறென்னே, லேடி ரீசன் யாருக்கும் தெரியாமல் செய்த தகிடு தத்தம் எல்லாரையும் அதிர்ச்சிப்படுத்தியிருந்தது. பெண்ணுக்கு அழகே குழல் எனும் தமிழ் சமூகத்தில், போலீஸ்கட் வெட்டிக்கொண்டு வந்திருப்பவளைக் காய்ச்சியெடுத்து விட்டார் பாட்டி.
அதையெல்லாம் அப்பனைப் போலவே இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்ட கீத்துவோ, ஓடோடி வந்தாள் குஞ்சரியைத் தேடி.
“கிளம்பறேன் சீனியர்.” என்ற கீத்துவோ கதவோரமே நிற்க கனத்த மனதோடு,
“யாரையும் அடிக்காமே விளையாடணும், சாப்பிடும்போது வீடியோ கால் பண்ணா போதும். கவனம் அங்க இருக்கணும்.” குஞ்சரி வார்த்தைகளை மெதுவாய் உதிர்க்க,
“இதை கேட்கத்தான் வந்தேனா?” என்றாள் குனிந்த தலை நிமிராத கீத்து
“அதுக்கு தலையே தூக்கணும்.” என்ற குஞ்சரியை ஏறெடுத்த கீத்துவை, கைகள் நீட்டி அழைத்தாள் தாயவள் சிரித்த முகத்தோடு.
“ஐ லவ் யூ சீனியர்!” என்ற கீத்துவோ ஒடோடி சென்று கட்டிக்கொண்டாள் பெற்றவளை.
“சீனியர் இல்லே மம்மி!” என்ற குஞ்சரியின் தலை வருடலில்,
“எனக்கு எப்போதுமே நீங்க சீனியர்தான் குஞ்சரி! நான் எப்போதுமே உங்க ஜூனியர்தான்!”
என்ற லேடி ரீசனின் கொஞ்சமான தலைமுடியைக் கைகளால் கலைத்துப் புன்னகைத்தாள் தேவகுஞ்சரியவள் ரீசனைக் கீத்துவில் கண்டு.
லேடி பீஸ்டின் பிக் பாஸ் நான்❤️
Author: KD
Article Title: அத்தியாயம்: 119
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம்: 119
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.