What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
327
அத்தியாயம் 67

ஆறு மாதங்கள் கடந்திருந்த வேளையில் ப்ரீதனுக்கு பைக் ஆக்சிடெண்ட் என்று அவன் மம்மி போட்ட குண்டில் அலறியடித்துக் கொண்டு வந்திருந்தாள் விசா.

பையனுக்கு கூட இப்போதைக்கு ஒரு வயதாகி பல் முளைத்திட ஆரம்பித்திருந்தது. ஆறு மாத கைக்குழந்தையாக இருக்கையில் விசாவோடு சேர்த்து ப்ரீதனின் அன்பையும் மொத்தமாய் வாரியெடுத்துக் கொண்ட சின்ன கள்ளனவன்.

வந்ததும் வராததுமாய் பையனை கீழ் தளத்தில் ப்ரீதனின் தாய் கையில் ஒப்படைத்த புண்ணியவதி மேல் மாடி நோக்கினாள் பேபி சீட்டர் அறை விரைய.

உதடுகள் இணைய நெருங்கிய தருணத்தில் வஞ்சியவள் வாய் மொழிந்த பெயரோ ப்ரீதனை ஒரு கணத்தில் நிறுத்தியது. ஆணவனின் நெஞ்சத்தையோ குத்தி கிழித்த தருணத்தில் முன்னோக்கியவனின் முகம் பின்னோக்கியது.

குளமாகாத கண்கள் மனசை ரணமாக்கியது. மையல் கொண்டு மூடியிருந்த விலோசனங்களை திறந்தவன் மெதுவாய் பிரித்தெடுத்தான் பாவையவளின் முகத்தை தாங்கியிருந்த அவனின் இடக்கை உள்ளங்கையை.

ஆணவன் கொண்ட வேதனையின் தாக்கத்தினை சுவற்றிலிருந்த அவனின் வலக்கை உள்ளகையின் அழுத்தம் உணர்ந்தது.

ப்ரீதன் மட்டுமல்ல நங்கையவளுமே நயனங்களை திறந்துதான் இருந்தாள். அதிர்ச்சி அவனுக்கு மட்டுமல்ல அருணியவளுக்குமே. அதிர்த்திருந்தாலும் காளையவன் காயத்தினை காட்டிக்கொள்ளவில்லை.

ஆனால், தவறிழைத்தவளோ குற்ற உணர்ச்சியில் குளிர்ந்த நீரிலும் அனல் புழுவாய் துடித்தாள்.

''வெளிய போ.. விசா..''

விலகியவன் திரும்பிக் கொண்டு சொன்னான் குரலில் எவ்வித ஏற்ற இறக்கமின்றி.

''ப்.. ரீ.. ப்ரீ..''

வேண்டாத பெயரை கூடிடும் நேரம் பார்த்து ஒப்புவித்த தாரகையோ முகம் பார்க்காதவனின் மன்னிப்பை வேண்டி நின்றாள்.

''வெளிய போ விசா..''

மீண்டும் சொன்னான் பேபி சீட்டரவன் சொல்லால் அடித்த சுந்தரியின் முகம் பார்க்க விருப்பமின்றி.

''ப்ரீதன்.. நான்..''

''வெளிய போ விசா!''

என்றவனின் முதல் முறையிலான கணீரென்ற அலறலில் ஆடிப்போய் விட்டாள் விசா.

அதுவும் அவனின் அம்பகங்கள் ரெண்டும் சிவந்திருக்க வஞ்சியவளின் பக்கம் திரும்பி கையை நீட்டி சத்தம் போட்டவனின் காட்சி எத்தனை தடவை வேண்டாமென்றாலும் அத்தனை முறையும் வதனியவளின் திட்டிகள் முன் வந்துதான் போனது.

சம்பவத்தை நினைத்து பார்த்தப்படி அதற்கான பிராய்ச்சித்தத்தை யோசித்தவளின் கவனம் தடைப்பட்டது பெண் குரலொன்றால்.

''விசா..''

என்றழைத்து நுழைந்தார் ப்ரீதனின் அறைக்குள் பேபி சீட்டரின் மம்மி. மடந்தையவள் வந்தாள் அங்குதான் தங்கிடணும் என்று ஏற்கனவே பேசி வைத்ததுதான்.

விளையாட்டாய் விறலியவள் கேட்க, ஆமோதித்தவனோ சொன்னதை போலவே அவளுக்கு விட்டுக் கொடுத்திருந்தான் அவனின் அறையை. பெட்ஷிட் மாற்றி சில பல மாறுதல்கள் செய்தாயிற்று வருங்கால சீமாட்டியாய் அவளை நினைத்து.

''பையன் தூங்கிட்டான்..''

என்ற ப்ரீதனின் அன்னையோ பையனை மஞ்சத்தில் படுக்க போட்டு தொடர்ந்தார் அக்கறையான பேச்சுகளை.

''எப்படி இளைச்சு போய்டே பாரு.. முன்னே பார்த்ததுக்கும் இப்போ பார்க்கறதுக்கு எவ்ளோ வித்தியாசம்.. நல்லா சாப்படறியா இல்லையா நீ!''

வீடியோ அழைப்புகள் செய்த நல்ல காரியங்களே இவையனைத்தும்.

ப்ரீதன் கியூபாவில் விசாவை சந்தித்த அன்றே அவளை பற்றிய விடயங்களை அவன் அம்மாவிடம் ஒப்புவித்து விட்டான். குடும்பமே ஒரே துறையில் இருக்க மகனின் நல்ல மனதை அறிந்த தாயோ மகனவன் அபலையவளுக்கு உதவுவதை தடுக்கவில்லை.

யாருமற்றவளுக்கு குழந்தையை கவனிக்கவும் பெதும்பை அவளுக்கு வேண்டியதை செய்துக் கொடுக்கவும் ஆட்களை மகன் நியமித்து கொடுத்தது வரைக்கும் தாயவர் அறிவார்.

விசாவும் முதல் சில வாரங்களில் கொஞ்சம் சிரமப்பட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும் அவ்வப்போது பையனை தனியே சமாளிக்க.

என்னதான் குட்டியவனை பார்த்திட ஆளிருந்தாலும் மங்கையவளும் அதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்வது அவசரத்துக்கு உதவிடும் என்ற எண்ணத்தில் பழகிக் கொள்ள ஆரம்பித்தவள் பின் அப்பணியை விரும்பியே கற்றுக்கொண்டாள்.

ப்ரீதனின் நட்பென்னவோ நாயகியவளுக்குள்ளும் சேவை மனப்பான்மையை விதைத்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

கைத்தொழிலுக்கு ஏதுவான படிப்பை ஆணவனின் வழிகாட்டலில் ஆன்லைன் மூலமாக வீட்டிலிருந்தப்படியே படித்து முடித்திருந்தாள் விசா.

முடிந்தளவுக்கு குறுகிய கால படிப்புகளையே தேர்தெடுத்து அவளை மேம்படுத்திக் கொண்டாள் காரிகையவள்.

அவளின் ஆர்வத்தில் நம்பிக்கை கொண்ட ப்ரீதனோ கரீபியனின் பஹாமாஸ் நாட்டில் புதியதோர் சிறார் பராமரிப்பு கிளையை திறந்து, அதற்கு விசாவையே தலைவியாக்கினான்.

மற்ற பெண்களிடம் இல்லாத நெருக்கமும் கலகலப்பும் ஏனோ மகனுக்கு விசாவிடம் இருப்பதை உணர்ந்த தாயோ புதல்வனே வாய் திறக்கும் வரை காத்திருந்தார்.

ஒருவேளை இருவருக்கும் இடையிலிருக்கும் வயசு வித்தியாசம் கூட அவனின் வாய் திறவா தயகத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் கூட ஒருபக்கம் அவ்வப்போது தாயவரின் மூளைக்குள் எட்டி பார்த்துக் கொண்டுதான் இருந்தது.

அவருக்கு தெரியும் ப்ரீதனின் மனசில் கோமகளவளை கரம் பிடிக்கும் ஆசை நிரம்பவே உள்ளதென்று. அதுவும் அவன் விசாவின் மகனை பார்த்துக் கொள்ளும் விதமே ஆணவனின் விருப்பத்தை பச்சையாக பறைசாற்றிடும் நிதர்சமான ஆதாரம் எனலாம்.

''ஐயோ ஆன்ட்டி எப்போதுமே உங்க மகன்தான் இப்படியெல்லாம் பேசி என்ன கொல்லுவாரு.. இப்போ நீங்களா..''

என்றவள் போர்வையை மகன் மீது போர்த்தி விட்டு நக்கலடிக்க, நுழைந்தான் ஒருக்களித்திருந்த கதவை திறந்த ப்ரீதன் அறைக்குள்ளே.

''சரி நீங்க பேசிக்கிட்டு இருங்க.. ஆன்ட்டி இதோ வந்துடறேன்..''

என்ற தாயோ மகனுக்கு வழிவிட்டு வெளியேறினார் அறையிலிருந்து.

''ப்ரீதன்.. சோரி.. நான் ஏதோ..''

என்ற பேதையோ போதை போட்டவளாட்டம் தடுமாற,

''இல்லே.. விசா.. நான்தான் மன்னிப்பு கேட்கணும்.. உன் மனசுலே யார் இருக்காங்கன்னு தெரிஞ்சிக்காமே நான்தான் எல்லை மீறி நடந்துக்கிட்டேன்.. என்ன மன்னிச்சிடு..''

என்றவனோ தேடி வந்த கோப்பை அலச,

''இல்லே ப்ரீதன்.. பழசை மறந்த நான்.. மனச மாத்திக்க மறந்துட்டேன்..''

என்றவளோ முகம் கவிழ்ந்து சொல்ல,

''இட்ஸ் ஓகே விசாகா.. உங்க மனசு.. எப்போ தோணுதோ அப்போ மாத்திக்கோங்க.. இதிலென்ன இருக்கு..''

''விசாகாவா..''

என்றவளோ ப்ரீதனின் முதுகை வெறிக்க,

''அதானே உங்க பேரு..''

''ஓஹ்.. இப்போ இப்படியா.. ஓகே..''

என்றவளோ அசிங்கப்பட்ட முகத்தை வேறு பக்கமாய் திருப்பிக் கொள்ள, கோப்பை கையிலிறுக்கியவனோ அறையிலிருந்து வெளியேறிட முற்பட்டான்.

''ஆர்ஹ்ஹ்.. ப்ரீதன்..''

சண்டையை சமாதானமாக்கிட முயற்சித்தாள் மாயோள் அவள்.

''எதுவா இருந்தாலும் அம்மாக்கிட்ட கேட்டுக்கோங்க விசாகா..''

என்றவனோ வாடிய அலரவளின் முகத்தை திரும்பி பார்த்திடாமலே படியில் தடதடவென இறங்கி கீழ் தளம் நோக்கினான்.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 67
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top