- Joined
- Jul 10, 2024
- Messages
- 491
அத்தியாயம் 1
நிகழ்காலம்
வேதாவின் படுக்கையறை
கதிரவன் முகத்தில் முத்தமிடவும், செவியில் முருகன் தேனாய் பாயவும் துயில் கலைந்தாள் பாவையவள்.
அம்பகங்கள் கசக்கி எழுந்தமர்ந்தாள் அந்திகை அவள். சுற்றி முற்றி பார்த்தாள் அவள் அவ்வறையை.
பரிட்சியமற்ற புது அறை அவளுக்கு அது. இருப்பினும், பாதுகாப்பாய் உணர்ந்தாள் செவத்தக்காரியவள்.
நாலாப்புறமும் காலியான வெள்ளை சுவர்கள். பேருக்கு இரு அலமாரிகள்.
ட்ரஸிங் டேபிள் ஒன்று ஒரு ஓரமாய் இருக்க, ஆண்களுக்கான பொருட்கள் அதன் மீது நேர்த்தியாய் அடுக்கப்பட்டிருந்தன.
மஞ்சத்தில் அமர்ந்தாற்படி பார்த்தால், கண்ணாடியில் முகம் தெரியும் கேணத்தில் போடப்பட்டிருந்தது அக்கட்டில்.
அளவான பொருட்களோடு எளிமையாக இருந்தது அவ்வறை. மெதுவாய் பஞ்சணையிலிருந்து கீழிறங்கினாள் கோதையவள்.
தலைவிரிக்கோலம் கொண்டிருந்தாள். அதை அவள் உணரவில்லை.
குளியல் அறைக்குள்ளோ ஷவர் சத்தம் கேட்டது. அதை அவள் காதில் வாங்கிடவில்லை.
மெதுவாய் அவ்வறையிலிருந்து வெளியேறி அடிகளை முன்னோக்கி வைத்தாள் வஞ்சியவள்.
**********************************
நிகழ்காலம்
வேதாவின் இல்லம்
பரபரப்பான காலை வேளையில், கூட்டு குடும்பத்தினரோ ஆளுக்கு ஒரு கடமையில் மூழ்கியிருந்தனர்.
வேலைக்கார பெண் சரசோ, முன் வாசல் கழுவி கோலம் போட, வாலி நிறைய தண்ணீரை தூக்கி கொண்டு வரவேற்பறை கடந்தாள்.
அடுத்த நொடியிலேயே வாலியை பொத்தென தரை போட்டு,
''அம்மா!''
என்று அலறினாள்.
அப்பெரிய இல்லம் மொத்தமும் ஆடிப்போனது ஒரு நொடி.
அடுப்படி தொடங்கி தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்த இளங்கன்னி வரைக்கும் எல்லோரும் ஓடோடி வந்து ஆஜராகினர் நடுவீட்டில்.
சரசு கொட்டிய நீரோ பளிங்கு தரையில் பரவி பல்லிளித்தது.
மாடிப்படியில் தோய்ந்த விழிகள் கொண்டு பேந்த நின்றிருந்த மங்கையோ முன்னிருப்பவர்களை யாரோ போல் பார்த்து நின்றாள்.
வீட்டிலிருந்த பெண்களோ கண்களை அகல விரித்து அதிர்ச்சிக் கொண்டு நின்றனர்.
நீண்ட பாவாடையும், சாதாரண டி- ஷர்ட் ஒன்றும் அணிந்திருந்த அணங்கோ பிச்சைக்காரிக்கு டஃப் (tough) கொடுக்கும் கோலத்தில் வீற்றிருக்க,
''அட்சரா! எப்படிம்மா இருக்கே?!''
என்ற பூரிப்போடு பேதையவள் முகத்தை கரங்களால் பற்றி குசலம் விசாரித்தார் அவ்வீட்டின் மூத்த குலவிளக்கு அம்பிகா.
சம்பந்தப்பட்ட காரிகையோ நடப்பதேதும் புரியாது அவரையே வெறித்தாள்.
''எங்கமா இருந்தே இத்தனை நாளா?! உன்னே காணாமே நாங்கெல்லாம் எவ்ளோ தவிச்சு போயிட்டோம் தெரியுமா?!''
என்றவரின் அடுத்த வாக்கியத்தில், அக்குடும்பத்திற்கும் குழப்பங்கொண்டு நிற்கும் அவளுக்கும், ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்பதை மட்டும் பேடு அவளால் உணர முடிந்தது.
''என்ன அண்ணி நீங்க, அவளே நிக்க வெச்சு கொஞ்சி குலாவிக்கிட்டு இருக்கீங்க! கழுத்தை புடுச்சு வெளியே துரத்தி விடுங்க இந்த கேடுகெட்டவளே!''
புகைந்த வயிற்றின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து உமிழ்ந்தார் அவ்வீட்டின் ஒற்றை மகராசி.
''அமலா!''
என்ற அண்ணியின் அதட்டலில் அசராத நாத்தனாரோ,
''இப்போ நீங்களா அவளே விரட்டி விட போறீங்களா இல்லே, நானே அவளே வெளக்கமாத்தாலே ரெண்டு போட்டு துரத்தவா?!''
என்று கொதிப்பு அடங்காது எகிற, தாயின் கையை இறுக பற்றிக் கொண்டு நின்றாள் நாயகியின் இடத்தை நிரப்ப விரும்பும் மாதவி.
**********************************
நிகழ்காலம்
வேதாவின் படுக்கையறை
குளியல் அறையிலிருந்து வெளியில் வந்தான் நாயகன் அவன்.
இடையில் டவல் இருக்க, மற்றொன்றால் தலையை துவட்டி கொண்டு கால்களை சாக்கில் துடைத்தப்படி கபாலத்தை மேல் தூக்கினான்.
படுக்கை காலியாய் கிடந்தது. போர்வை ஓரம் ஒதுங்கி இருந்தது. மெத்தையில் இருக்க வேண்டிய வாசுரையோ அங்கு இல்லாமல் இருந்தாள்.
உள்ளம் பதைக்க ஒன்னும் பதியுமாய் உடலை துவட்டியவன், டவலைத் தூக்கி தலையணை மீது போட்டான்.
அலமாரியைத் திறந்து பேண்ட் மற்றும் ஷேர்ட் ஒன்றை எடுத்து அவசர அவசரமாய் அணிந்து அறையிலிருந்து வெளியேறினான்.
**********************************
நிகழ்காலம்
வேதாவின் இல்லம்
''என்னடி இன்னும் குத்துக்கல்லு மாதிரி அங்கையே நின்னுக்கிட்டு இருக்கே?! ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாது?! போடி இங்கிருந்து வெளியே!''
மீண்டும் கரகோஷம் கொண்டார் அமலா.
''இப்போதான் நாங்கெல்லாம் நடந்ததை மறந்துட்டு பழையப்படி கொஞ்சம் சந்தோஷமா இருக்க ஆரம்பிச்சிருக்கோம்! அது உனக்கு பொறுக்கலையா?! எதுக்கு இப்போ திரும்பவும் வந்து எங்க நிம்மதியெல்லாம் கெடுக்க பார்க்கறே?!''
மாதவியும் அவள் பங்கிற்கு தேளாய் கொட்டினாள்.
''பைத்தியமா உங்க ரெண்டு பேருக்கும்?! வாயே மூடிக்கிட்டு சும்மா இருக்க மாட்டிங்க?!''
பொறுமையின் சிகரமான அம்பிகா பொங்கி வெடித்தார், மாதங்கள் கடந்து வீடு வந்து சேர்ந்திருக்கும் வஞ்சினியை அம்மாவும் மகளும் வசைப்பாட.
ஒன்றும் புரியாது நின்ற நங்கையோ கடுஞ்சொற்களின் வீரியம் தாளாது தேம்பி விசும்பினாள்.
அம்மணியின் விலோசனங்களிலோ கண்ணீர் பெருக்கெடுத்திட ஆரம்பித்தது.
பொலபொலத்த அழுகையோடு அவள் நிலைக்குத்தி நிற்க,
''அட்சரா!''
என்றழைத்த நாயகனோ, குடுகுடுவென இறங்கி வந்தான் மேலிருந்து மாடிப்படியில்.
ஆணவனோ காரிகை அவளை நோக்கி வர, மற்றவர்கள் மட்டும்தான் குரல் கேட்ட திசை திரும்பி அவனை பார்த்தனர்.
ஆனால், பெயருக்கு சொந்தமான மாதங்கியோ அழுகையில் ஆர்ப்பரித்து தலை கவிழ்ந்தே கிடந்தாள் தனி உலகில் சஞ்சரித்து.
''நீங்க வாங்க!''
என்றவனோ உரிமையாய் கோமகள் கரம் பற்ற, அவனை ஏறெடுத்து நோக்கினாள் இளம்பிடியாள் அவள்.
''வேதா! என்ன காரியம் பண்ணிக்கிட்டு இருக்க நீ?!''
அத்தை மருமகனையும் விடுவதாய் தெரியவில்லை.
''அத்தை தயவு செஞ்சு கொஞ்சம் பொறுமையா இருங்க! நான் வந்து எல்லாத்தையும் சொல்றேன்!''
''நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம் மாமா! முதல்லே இவளே இந்த வீட்டுலிருந்து வெளியேத்துங்க!''
மாதவியின் கட்டளையில் கடுப்பான ஆளானோ,
''மாதவி, இது உனக்கு தேவை இல்லாத விஷயம்! இதுலே நீ தலையிடாதே!''
என்றவளை எச்சரிக்க,
''நீ அட்சராவே கூட்டிக்கிட்டு ரூமுக்கு போ வேதா!''
என்ற அம்பிகாவோ மகனுக்கு சப்போர்ட் செய்து, அவன் அங்கிருந்து நகர வழி வகுத்தார்.
சரசோ நடக்கின்ற கூத்தையெல்லாம் வேடிக்கை பார்த்தப்படி நீர் கொண்ட ஈரத்தரை மொத்தத்தையும் துடைத்து முடித்தாள்.
யார் நெருங்க யார் நொறுங்க..
Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 1
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 1
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.