- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 17
கடந்த காலம்
அட்சராவின் அலுவலக அறை
பூரிப்பு குறையாது வேலையும் செய்யாது முகநூலில் உலா வந்தாள் பெண்டு அவள்.
புருஷனின் பெயரை போட்டு அவன் கணக்கை தேடி பார்க்க, பொட்டல் காடாய் கிடந்தது ஆணவனின் ப்ரொபைல்.
ஏனோ மனம் வேதாவோடு கதைக்க எண்ண அப்போதுதான் அம்மணிக்கு ஞாபகமே வந்தது வீட்டுக்காரனின் மொபைல் நம்பர் கூட அவளிடத்தில் இல்லையென்று.
யாரிடம் கேட்டு வாங்குவது என்ற யோசனையில் இறுதியில் அண்ணன் இந்தரிடமே சரணடைந்தாள் பாவையவள்.
''ஒரு வருஷம் ஆகப்போகுது! வேதாவோட நம்பர் உனக்கு மனப்பாடம் கூட ஆகலையா?!''
வார்த்தைகளால் கடித்தான் மூத்தவன் அவன்.
''ஆயிரத்தெட்டு வேலையிலே இது ஒரு வேலையா எனக்கு?! கொடுக்க முடிஞ்சா கொடு! இல்லாட்டி விடு!''
என்ற தங்கையோ பொரிந்து தள்ளினாள் வழக்கம் போல் குணம் மாறாது.
''சரி, சரி, கத்தாதே! வாட்ஸ் ஆப் பண்றேன்!''
''சீக்கிரம் பண்ணு! ஆஹான், அப்பறம் இதைப்போய் உன் பொண்டாட்டி, நம்ப அம்மான்னு எல்லார்கிட்டையும் சொல்லிக்கிட்டு இருக்காதே! புரிஞ்சுதா?! நான் நம்பர் கேட்டது நமக்குள்ளையே இருக்கட்டும்!''
நாசூக்காய் எச்சரிக்கையும் விடுத்தாள், எங்கே இதுவும் ஒரு பேசு பொருளாகி நாயகியின் தலையை உருட்டிடுமோ என்று பயந்து.
''அம்மா தாயே! உன் புருஷனே போன் பண்ணி கேட்டாலும் சொல்ல மாட்டேன் போதுமா?!''
என்ற இந்தரோ ஒரே கும்பிடில் அழைப்பைத் துண்டித்தான் காண்டோடு.
அண்ணனை கண்டுக்காத மங்கையோ, அவன் அனுப்பிய வேதாவின் எண்ணை உடனடியாக அலைபேசியில் சேமித்தாள்.
அதுவும் அவளுக்கு மிகப்பிடித்த ஆளனின் முழுநீள பெயரின் பிற்பாதியை கொண்டு. பின், அவனுக்கு வாட்ஸ் ஆப் அனுப்பினாள் தங்கிலீஷில் இப்படி.
''என்ன ப்ரொபைல் அது?! இண்ட்ரஸ்ட்டிங்கா ஒன்னுமே இல்லே!''
வராத எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்திருக்க, வேதாவின் வதனமோ தவுசண்ட் வாட்ஸ் கணக்காய் பிரகாசித்தது.
தாமதிக்காதவன் பதிலை குரல் பதிவாகவே அனுப்பினான் இப்படி.
''லாகின் ஐடியும், பாஸ்வர்டும் வேணும்னா கொடுக்கறேன்! நீங்களே போய் ப்ரொபைலை சுவாரசியமாக்கிட்டு வாங்க!''
அவன் குரலை கேட்ட சுந்தரிக்கோ மேனியில் இனம் புரியா நாணம் வந்து ஒட்டிக் கொண்டது. சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவளுக்கோ எப்போதடா இரவாகும் என்றிருந்தது.
ஆடவன் அவனுக்கு முகத்தை மூடி சிரிக்கும் மலரொன்றின் படத்தை அனுப்பிய முற்றிழையோ அன்றைய பொழுதை சோம்பலாகவே கழித்திட ஆரம்பித்தாள்.
**************************************************
கடந்த காலம்
வேதாவின் இல்லம்
என்றைக்கும் இல்லாது இன்றைக்கு மதியம் ஆறுக்கே வீடு திரும்பியிருந்தாள் அட்சரா. எல்லாம் வேதாவை பார்த்திட வேண்டிய ஆர்வமே.
எப்படியும் வந்திருந்த சொந்தங்கள் கிளம்பி இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு வந்த காரிகைக்கோ பிபி எகிறி நின்றது வேண்டாதவர்களை வரவேற்பறையில் கண்ட நொடி.
கொதித்தவள் அலறினாள்.
''நீங்க ரெண்டு பேரும் ஏன் இன்னும் கிளம்பாமே இங்கையே இருக்கீங்க?!''
''நாங்க ஏன் கிளம்பணும்?!''
மாதவி இம்முறை அமோகமாய் எதிர்வாதம் வைக்க,
''அதானே?! நாங்க ஏன் கிளம்பணும்?! இது என் அண்ணன் வீடு! இன்னைக்கு மட்டும் இல்லே ஒரு மாசம், ஏன் ஒரு வருஷம் கூட நானும் என் பொண்ணும் இங்கையே இருப்போம்! ஏன்னு கேட்க யாருக்கு உரிமை இருக்கு?!''
என்ற அமலாவோ சரிக்கு சமமாய் நின்றார் சின்னவளோடு மல்லுக்கட்ட.
''அட்சரா, நீ எப்போமா வந்தே?!''
என்ற வாசகத்தோடு மூச்சு வாங்க அரக்க பறக்க வந்து சேர்ந்திருந்தார் பின் வாசலில் பூ பறித்துக் கொண்டிருந்த அம்பிகா ஹோல் நோக்கி, உள்ளுக்குள் கலவரம் வெடிக்க.
''நான் வந்தது இருக்கட்டும்! ஏன், இவுங்க இன்னும் இங்கிருந்து போகலே?! பங்க்ஷன் முடிஞ்ச மறுநாளே இவுங்க ரெண்டு பேர் முகத்தையும் நான் இங்க பார்க்க கூடாதுன்னு சொன்னேனே இல்லையா?! அப்போ மட்டும் சரின்னு சொன்னீங்க?! இப்போ எங்க போச்சு அந்த சரியெல்லாம்?!''
கதத்தில் மாமியாரை பிடித்துக் கொண்டாள் பாந்தமாய் வந்தவள் பஜாரியாய் மாறி.
''இல்லமா, ட்ரெய்ன் டிக்கெட் எதுவும் கிடைக்கலே! அதான், இன்னும் ரெண்டு மூணு நாள் இங்கையே இருந்திட்டு அப்பறமா ஏற்பாடு பண்ணி அனுப்பி வைக்கறதா மாமா சொன்னாரு!''
''ட்ரெயின் டிக்கெட் இல்லன்னா என்னே?! ரெண்டு பேரையும் புடிச்சு பஸ்லே அனுப்பி வைக்க வேண்டியதுதானே?!''
''எம்மா பணக்காரி! அதெல்லாம் நீ பேசாதம்மா! நாங்க எதுலே, எப்போ, எப்படி போகனுங்கறதை நாங்க முடிவு பண்ணிக்கறோம், சரியா?! நீ ஒழுங்கா குடும்பம் நடத்தி, எங்க வீட்டு பொண்ணு எப்படி கட்டுனே மூணே மாசத்துலே உங்க குடும்ப வம்சத்தை பெருக்கினாளோ, அதே மாதிரி நீயும் உண்டாகி இந்த வீட்டு பேரே காப்பாத்தறே வழியே பாரு! அதை விட்டுபுட்டு, எப்போ பார்த்தாலும் இப்படி தையா தக்கான்னு குதிச்சிக்கிட்டு கிடக்காதே! அப்பறம், அங்க ஒன்னும் தங்காமத்தான் போகும்!''
என்ற அமலாவோ தலையை சுத்தி மூக்கை தொட்டு நேரிழையின் முகத்தை இறுக்கமாக்க,
''அமலா! என்ன பேசறே நீ?! பேசாமே இரு!''
என்று நாத்தனாரை கடிந்துக் கொண்ட அம்பிகாவோ,
''அட்சரா, நீ முதல்லே ரூமுக்கு போ மா!''
என்றவள் கரம் பற்ற, அவர் பிடியை உதறிய கோமகளோ,
''நேத்து பங்க்ஷன்லையும் இப்படித்தான் பேசினாங்க! இப்பவும் இப்படித்தான் பேசறாங்க! எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு! சொல்லிட்டேன்! அம்மா வீட்டிலிருந்து நான் திரும்பி வரும் போது இந்த மூஞ்சுகளே நான் இங்க பார்க்க கூடாது!''
என்றவளோ கராறாய் சொல்லி அங்கிருந்து கார் நோக்கி நடையைக் கட்டினாள்.
************************************
கடந்த காலம்
அட்சராவின் படுக்கையறை
மணி இரவு பத்தாகியும் வேதாவின் போனுக்கு கோல் ரீச் ஆகிடவே இல்லை.
ஒரு முறைக்கு பல முறை அழைத்து, அதுவே முப்பது முறையாகி போனது.
போனை கையில் வைத்து தட்டிக்கொண்டே நைட்டியில் அறைக்குள் குட்டி போட்ட பூனையாய் குறுக்கும் நெடுக்கும் நடந்தாள் மாதங்கியவள்.
அம்மணியின் தாபமோ, நேற்றைய முதல் முத்தத்தில் தொடர்ந்த மென்மையான சில்மிஷங்களை எண்ணி மேனியை கனலாக்கி ஏங்கின ஆணவனின் தொடுதலுக்காய்.
விரல் நகங்களை பதற்றத்திற்கு தீனியாக்கியவள், வேறு வழியில்லாது, முதலில் சிலிர்ப்பிக் கொண்டு வந்த மாமியாருக்கே போனை போட்டாள்.
''சொல்லுமா?!''
''வேதா வந்துட்டாரா?!''
''இன்னும் இல்லையே!''
''எப்போ வருவாரு?!''
''தெரியலையேமா! இந்நேரத்துக்கு வந்துருக்கணும்! ஒருவேளை அவசரமா யாராவது ஏதாவது செய்ய சொல்லி கூப்பிட்டிருப்பாங்க! அதனாலே, அங்க போயிருப்பான்!''
''போன் எடுக்கலையே?! நான் நிறைய தடவை ட்ரை பண்ணேன்!''
சுந்தரியின் கவலை குரலில் தெரிந்தது.
''அவன் போறே எல்லா இடமும் கவரேஜ் இருக்கும்னு சொல்ல முடியாது அட்சரா! கண்டிப்பா வேலை முடிச்சிட்டு கோல் பண்ணுவான்! நீ படுத்து தூங்கு!''
''உங்கக்கிட்ட கூட சொல்லலையா?!''
''இல்லமா, சில சமயம்தான் சொல்லுவான்! மத்தப்படி அவன் வேலைக்குத்தான் போயிருக்கான்னு லேட்டானா எனக்கே தெரிஞ்சிடும்!''
''எவ்ளோ லேட்டா இதுக்கு முன்னாடி வந்திருக்காரு?!''
மருமகள் விடாது துருவிட,
''நீ முக்கியமா அவன்கிட்ட ஏதாவது பேசணுமா?!''
''இல்லே, இல்லே! அப்படியெல்லாம் ஒன்னுமில்லே!''
''சரி, அப்போ ஏதாவது சொல்லணுமா அவன்கிட்ட?! சொல்லுமா?! நான் அவன் வந்ததும் சொல்றேன்!''
''அவர் வந்த உடனே, வீட்டுக்கு வர சொல்லுங்க!''
''இப்பவே மணி பத்தரை ஆகுதுமா!''
''ஒன்னு, ரெண்டே ஆனாலும், அவரை நான் பார்த்தே ஆகணும்! வர சொல்லுங்க!''
என்ற அந்திகையோ அதற்கு மேல் பேச்சை வளர்க்காது, மாமியாரின் ரிசீவரை கழட்டி விட்டாள்.
யார் நெருங்கயார் நொறுங்க...
Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 17
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 17
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.