அத்தியாயம் 55
வான் நட்சத்திரங்களை எப்படிக் கணக்கிட முடியாதோ, அதே போலத்தான் ஒருவர் மீது மற்றொருவர் வைக்கின்ற பாசமும்.
இனம் புரியா அன்பொன்றை ஞாழல், ஜூனியர் போலீஸ்காரனின் மீது வைக்க அதற்குக் காதல் என்று பெயர் சூட்டி அழகு பார்த்தது விதி.
எமனின் பாசக்கயிற்றிலிருந்து மனசிஜனைக் காப்பாற்றிய படாஸ், இன்றைக்கு ஔகத்தின் மூலமாய் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து அழகு பார்த்தான்.
''ஞாழல், இந்தப் போலீஸ்காரனைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?''
என்ற சிஜனோ முட்டிக்கால்களில் கைகளைத் தொங்கப் போட்டப்படி மனதின் ஆசையைப் போட்டுடைக்க,
''இன்னொரு தடவ சாக ரெடியா?!''
என்றவளின் சீரியஸான கிண்டலில் விழிகள் பிதுங்கினாலும் சிரிப்புதான் வந்தது சிஜனுக்கு.
''நான் விருப்பப்பட்டு பண்ண கல்யாணம், நினைச்சுப் பார்க்காத மரணம், என்னை விரும்பற பொண்ணு யாருன்னு, எனக்கு தெள்ளத்தெளிவாப் புரிய வெச்சிடுச்சு ஞாழல். இதுக்கு மேலயும் டைம் வேஸ்ட் பண்ண நான் விரும்பல.''
என்றவனோ ஏந்திழையின் வதனம் நோக்க,
''எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க சிஜன்.''
என்றவளோ செத்துப் பிழைத்தவனின் பார்வைகளில் புதுவிதக் கிளர்ச்சியை உணர்ந்தவளாய் தலை குனிந்து கொண்டாள் தேகம் செல்லரிக்க.
''டக்குன்னு ஓகே சொல்லிடுவ, நாளைக்கே கல்யாணம் பண்ணி, நாளாநாளைக்கே ஹனிமூன் போய்டுவோம்னுல நினைச்சேன்?!''
என்றவனோ தரையில் விரல்களால் கோலம் போட்டு நக்கலடிக்க,
''கொஞ்சம் பொறுயா! நீ உசுரோட வந்ததையே என்னால இன்னும் முழுசா நம்ப முடியல! இதுல, கல்யாணம், புள்ளகுட்டின்னு அடிவயிறக் கலக்க வெச்சிட்டு!''
என்றவளோ அவள் பங்கிற்கு உண்மையை வேடிக்கையாய் சொல்ல,
''உன் பயம், சந்தேகமெல்லாம் போக என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. ட்ரை பண்ணுவோமா ஞாழல்?!''
என்ற சிஜனோ சில்மிஷ எண்ணத்தை மிழிகளில் கடை பரப்பி, புருவங்களை உயர்த்தியபடி உதடு மடக்கி சத்தமில்லா சிரிப்பொன்று கொள்ள,
''உடம்பு முழுக்க காஜி!''
என்றவளோ நறுக்கென்று வைத்தாள் ஒரு கிள்ளு போலீஸ்காரனின் புறங்கையில்.
''ஆஹ்ஹ்!''
என்ற சிஜனோ, ஒரு மார்க்கமாய் சிணுங்க,
''பேருக்கேத்த மாதிரி பர்போமன்ஸா?!''
என்றவளின் ஜாடைப் பார்வையோடு சேர்ந்து சிஜனும் சிரித்தான் சத்தமாய்.
ஒருக்கால் அன்றைக்கு மட்டும் ஜூனியர் போலீஸ்காரனவன் படாஸின் உயிரைக் காத்திடாமல் இருந்திருந்தால், இன்றைக்கு ஞாழல் அவன் படத்துக்கு ஊதுபத்திதான் ஏற்றி ஒப்பாரி வைத்திருக்க வேண்டும்.
திருமணத்துக்கு முந்தைய நாட்களில் ஒருநாள் படாஸ் அவன் டாவு கிருத்தியை காணத் தங்கும் விடுதி வரை வந்து, காதல் பேசி, கவிதை வடித்து, கண்ணீர் சிந்திப் போனதெல்லாம் தடயமே இல்லாச் சம்பவமே.
அன்றைக்கென்று, துயில் கொள்ளா சக்குகளோடு காலார நடைபோட்ட சிஜனோ, திடீரென்று செவியைக் கிழித்து நெஞ்சை உலுக்கிய, வெறித்தனமான சிரிப்பொலி ஒன்றைக் கேட்டு திடுக்கிட்டுப் போனான்.
போலீஸ் புத்தி சும்மா இருக்குமா என்ன, அங்கு இங்கென்று அலைந்தவன் கடைசியாய் விடுதியின் கார் பார்க்கிங்கின் பின்பக்க லோட்டில் மூச்சு வாங்கப் போய் நின்றிருந்தான்.
உயிரோட்டமான சிரிப்பிற்கு யார் காரணமென்று அறியும் பொருட்டு தேடல் கொண்டவனின் சிந்தையோ படாஸை சுத்துப்போட, கடல் காற்றோ புளிச்ச செந்நீர் வாடையை ஏந்தி வந்து, சிஜனைக் குமட்டிட வைத்தது.
புறங்கையால் நாசியை மூடிக் கொண்டவனோ, மனதை ஒருநிலைப்படுத்த கண்களை மெதுவாய் மூடினான் ஜூனியரவன்.
சுற்றுப்புறத்தின் அனாவசியமான ஒலிகளைச் செவித் துவாரங்களிலிருந்து ஓரங்கட்டிய ஆணவனோ, துல்லிதமாய்க் கேட்ட மற்ற ஓசைகளையும் வடிகட்டினான் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வேறேதேனும் சத்தம் புதிதாய்க் காதில் விழுகிறதா என்றறிய.
களைத்தவனின் துளிர் விட்ட நெற்றி வியர்வை மொட்டுடைந்து வழியப் பார்க்க, மயான அமைதியைச் சீர்குலைத்த வன்மச் சிரிப்போ மீண்டும் கேட்டது. இம்முறையோ முதல் தடவையை விட, மிகக் கொடூரமாக ஒலித்தது அக்குரல்.
ஓடி நுழைந்தான் சிஜன் விடுதியின் பின்பக்கமாய் அமைந்திருந்த தடைசெய்யப்பட்ட ஆரணியத்துக்குள். வக்கிரம் நிறைந்த கரகோஷச் சிரிப்பு அங்கிருந்துதான் வருகிறது என்பதை மானசீகமாய் உணர்ந்த நொடி, அது யாரென்று இன்று, பார்த்தே ஆக வேண்டிய வேட்கை கொண்டான் போலீஸ்காரனவன்.
ஸ்மார்ட் வாட்சின் டார்ச் லைட் கொண்டு பேரிரைச்சலான சிரிப்பொலி வந்த இடம் நோக்கி மின்னலாய்ப் பயணித்தது போலீஸ்காரனின் கால்கள்.
இருட்டிய கானகத்துக்குள் மூச்சிறைக்க ஓடி வந்து செக் போஸ்ட் போட்டு நின்ற சிஜனோ மோவாய் வியர்வையைப் புறங்கையால் துடைக்க, பட்டென ஆணவனின் மூக்கோ உணர்ந்தது குருதி வாடையை உள்ளங்கைகளில்.
குழப்பமான பார்வையோடு திட்டிகளை உருட்டியவனோ, சிந்திக்க எடுத்துக்கொண்ட வினாடிகளில் ஜூனியரின் முகத்தில் சொட்டு விட்டன துளிகள் ஒன்று ரெண்டு.
அதை விரல்களால் தொட்டுரசியவனோ, கைக்கடிகார வெளிச்சத்தில் கண்டு கொண்டான், மேலிருந்து ஊற்றிய திரவம் மாரித்துளியல்ல, அது ரத்தத்துளியென்று.
தலையைச் சடீரென்று மேல் தூக்கிப் பார்த்தவனின் திருசிகளோ ஜாமாகி நின்றுப் போனது கண்ட காட்சியில் உறைந்து.
மனிதக் காலொன்று கொந்திய நிலையில் மரக்கிளையில் நிலம் பார்த்துத் தொங்கிக்கொண்டிருக்க, கைகள் ரெண்டோ எப்போதோ இரையாகிப் போயிருக்க, முகமோ இரத்தக் களரியாய் கிடந்தது, சொத்தொழிந்த பிணத்துக்கு.
செத்தவன் மீது அமர்ந்திருந்த உருவமோ, பிணத்தின் நெஞ்சைக் கிழித்து அதற்குள் தலையோடு உலா போய் சோணத்தில் (ரத்தம்) குளித்து வெளி வந்தது.
கோரமான பற்களோடு உதிரம் கொட்ட வாயில் கவ்வியிருந்த இதயத்தோடு நிலவு நோக்கி அது ஓசையெழுப்ப, அலண்டு போனான் மனசிஜன், அக்கோரக் காட்சிக்குச் சாட்சியாகி.
படாஸ்...