What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

யுவனுக்கான சமர்ப்பணம் 💙🖤❤

Admin 1

Member
Joined
Sep 22, 2024
Messages
170
music-1-1-150x150.jpg




அநேகமாக எனக்கு 16 வயது முடிந்து 17 வயது தொடங்கிய காலகட்டம். விடுமுறையில் இருந்த போது, ரொம்பவும் மோசமான படம்பா இது.

பசங்களை பார்க்கவே விடக்கூடாது என்று பெரியவர்களிடம் பெயர் வாங்கி இருந்தது ''துள்ளுவதோ இளமை''.

ஆங்கிலப்படங்களில் A என்று எழுதி வட்டம் போட்டிருந்தாலே வீட்ல காசு திருடிச் சென்று படம் பார்க்கும் கலைத்தேடல் கொண்டிருந்ததால் துள்ளுவதோ இளமை படத்தையும் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம்.

ஒரு பிட்டுப்படத்தை பார்க்கப்போகிறோம் என்ற மனக்குறுகுறுப்பு மட்டும்தான் இருந்தது.

ரமேஷ்கண்ணா தலைவாசல் விஜய் தவிர படத்தில் எல்லாருமே புதுமுகம் அதனால் தனுஷ் பற்றியெல்லாம் பெரிதான அக்கறையில்லை.

கவனம் முழுக்க ஷெரினின் மீதுதான் இருந்தது. வனப்பின் துவக்கத்தில் இருந்த பிராயப்பெண்.

கருவிழி இரண்டையும் மேலே தூக்கியவாறு அவள் பார்க்கும் பார்வை ஒவ்வொன்றும் ஆளைக் கொள்ளை கொள்ளும் நூதனம்.

மனம் முழுக்க ஷெரினின் அரைநிர்வாணம் காணும் ஆவல் மண்டிக்கிடக்க, வருகிறது முதல் பாடல்.

''கண் முன்னே எத்தனை நிலவு காலையிலே'' அட பாட்டு நல்லா இருக்குதே.

சரி பிட்டு எங்கடா? இன்னும் சிறிது நேரம் கழித்து மழையோடு ஒரு பாடல் தனுஷ் ஷெரினின் உடல்கள் ஒட்டி உரசிக்கொண்டு பருவம் தீப்பிடிக்க ''வயது வா வா சொல்கிறது'' யுவனுக்கும் செல்வாவுக்கும் அலைவரிசை ஒன்றிணைந்தது இந்தப்பாடலில் இருந்துதான் என்று நினைக்கிறேன்.

செல்வாவின் காட்சியும் யுவனின் இசையும் காதலர்கள் போன்று கொஞ்சிக் குலாவியது.

அடுத்த பாடல் வரும் சூழலில் மாணவர்கள் நாங்கள் திக்கித்திணறித்தான் போனோம். பள்ளியில் காலை பிரேயர் துவங்குகிறது . தனுஷுக்கு பனிஷ்மென்ட் கொடுத்து தரையை துடைக்க விட்டிருப்பார்கள்.

தனுஷ் துடைத்துக் கொண்டிருக்கும் இடத்தில் பிரேயர் பாடல் பாடுவதற்கு ஷெரினும் இன்னும் இரண்டு பெண்களும் வருவார்கள்.

தனுஷ் கீழே அமர்ந்து தரைதுடைப்பதால் அவர் கண்களுக்கு எதிராக ஷெரினின் கால்கள் தெரியும். ஆர்வமிகுதியில் ஷெரினின் முட்டுக்கால்களை பற்றி கையை மேலே உயர்த்தி தொடையை பிடிப்பார்.

ஷெரின் அதிர்ச்சியில் கண்களை விரித்து ஏற்கவா மறுக்கவா என்று குழம்பி முகத்தில் ஒரு பாவனை சமைப்பார் பாருங்கள்.

பார்த்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு காது சூடேறி உள்ளங்கால் குளிர்ந்து ரத்தமெல்லாம் தாறுமாறாக கொதிக்க ஆரம்பித்துவிட்டது.

இதுக்கு மேல எதுக்குடா பிட்டு. தறிகெட்ட மனதை சமநிலைப்படுத்தவென்றே அவ்விடத்தில் பாடல் வரும் ''இது காதலா முதல் காதலா'' அப்பாடலில் நெஞ்செல்லாம் பஞ்சா மாறி பறந்து போச்சு.

''நெருப்பு கூத்தடிக்குது'' பாடலுக்கெல்லாம் திரைக்கு முன் போய் நின்று ஆடத்துவங்கி விட்டோம்.

இப்படி இளமையின் வீச்சோடு யுவன் எங்களுள் இறங்கியதால் பசுமரத்தாணி போல அவரின் இசை மனதினுள் பதிந்து பல ஞாபகங்களின் கோப்பாகவும் அமைந்துவிட்டது.

காதல் சொல்லத் தயங்கி நிற்கும்போது ''பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை'' பாடலையெல்லாம் ஒருவன் பதின்மத்தில் கேட்டால் என்ன ஆவான்.

யுவனை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடத்துவங்குவான்.

தேவதையைக்கண்டேன் பாடலில் இடையில் ''தேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை தேவதை தேவதை தேவதை'' ஒவ்வொரு முறை தேவதை என்று வரும்போதும் மனசுக்குள் கண்மணி ஒவ்வொரு ஆடையிலாக வந்து வந்து நிற்பாள்.

காதல் பிணக்குகளின் போது ''நினைத்து நினைத்து பார்த்தேன்''
''ஓவியா உன் ஓரப்பார்வை என்னை தீண்டுமா''
காதலிக்கும் காலத்தில் இந்தப் பாடல் வருவதற்கெல்லாம் நிஜமாய் என்ன தவம் செய்தேனோ.

புதுப்பேட்டை. ஏ இவன் சும்மா காதல் பாட்டு போட்டு பீலிங்ஸ் கிளப்புற ஆளு மட்டும் இல்லப்பா இவன் வேற ஏதோ என்று உணர்த்திய படம்.

யுவன் தன் ருத்ரதாண்டவத்தை வெறியோடு ஆடி அரங்கேற்றிய படம்.
படம் முடிந்து பேயறைந்தது வெளியில் வந்தேன். காதில் முழுக்க இசை இசை இசை இசை. ''அத்தனை கண்ட பின்னும் பூமி இன்னும் பூ பூக்கும்''

யுவனின் பாடல் கேட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்வதற்கும் யுவனின் பாடல்களோடு வளர்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

முதலாவது இசையின் ரசனை சார்ந்தது

இரண்டாவது வாழ்வோடு பிணைந்தது.

90's கிட்ஸாக இருப்பதின் பேரற்புதங்கள் இது கூடவே வந்து துணையிருந்ததற்கு நன்றி யுவன். 😍

பின் குறிப்பு : இது அட்லசின் யுவனுக்கான சமர்ப்பணமாகும். சுஜியும் அட்லசும் யுவனின் ரசிகர்கள் 💙🖤

 

Author: Admin 1
Article Title: யுவனுக்கான சமர்ப்பணம் 💙🖤❤
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top