- Joined
- Jul 10, 2024
- Messages
- 483
தாழ் திறவாய் ததுளனே! : 14
''உங்களுக்கு புடிச்சிருக்கா?!''
சங்க்யாதான் கேட்டாள்.
''ஏன், திடிர்னு இவ்ளோ கோஸ்டலியான வாட்ச்?!''
கார் ஓட்டிக்கொண்டே கேட்டான் ஆரோன்.
''காரணம் ஏதுமில்லே! ஷோப்பிங் பண்ணும் போது எதர்ச்சையா பார்த்தேன்! உங்களுக்கு நல்லாருக்கும்னு தோணுச்சு! அவ்ளோதான்!''
ஆசையாய் வாங்கிக் கொடுத்த கைக்கடிகாரத்திற்கான காரணத்தை பூசி முழுகினாள் மாடல் அழகியவள்.
''தேங்கியூ!''
என்றவன் காரை நிறுத்தினான்.
''புடிச்சிருக்கான்னு நீங்க இன்னும் சொல்லவே இல்லையே?!''
தேவைக்கான விடை வேண்டி நின்றவளை வார்த்தைகளற்ற முறுவலோடு பார்த்தவனோ காரிலிருந்து கீழிறங்கினான்.
''எங்க வந்திருக்கோம்?!''
''ஒரு முக்கியமான ஆளை பார்க்க!''
''யாரே?!''
''வாங்க சொல்றேன்!''
ஆரோன் முன்னே போக, ஜீன்ஸ் போட்ட அன்னக்கிளியோ அவன் பின்னே போனாள்.
ஆனால், அவர்கள் வந்த வீட்டின் முன் வாசல் க்ரில் கதவோ பெரிய பூட்டோடு அவர்களை வரவேற்றது.
உள்பக்கமாய் எக்கி எட்டி பார்த்த ஆரோனோ, இல்ல உரிமையாளரை தேட,
''யார் இருக்கா ஆரோன் இங்க?! உங்க பிரண்டா?!''
''ஹுஹும்! உங்க ரசிகை!''
சொன்னவன் சிரிக்க போனை நோண்டியப்படி, பக்கென்றது பேதை அவளுக்கு.
ரசிகன் என்றிருந்தால் அதிர்ச்சி கொண்டிருக்க மாட்டாளோ என்னவோ. பெண் என்பதால் ஜெர்க்காகி விட்டாள் பெதும்பை.
ஆதலால், மனமோ ஆணவன் வாயை பிடிங்க சொல்லியது. எவள் அவளென்று அறிந்திடும் பதைப்பில்.
''ரசிகையா?!''
''ஹான்! ஆனா, ஆளே காணோம்! ஒரு வேளை வெளிய எங்கையாவது போயிருக்காங்களான்னு தெரியலே! பரவாலே, விடுங்க! இன்னொரு நாளைக்கு பார்ப்போம்! இப்போ, கிளம்பலாம்!''
சொல்லிய ஆரோன் கார் கதவை திறக்க, தன் விசிறி என்பவள், ஆரோனுக்கு என்ன மாதிரியான உறவென்ற யோசனையில் தீவிரமாய் மூழ்கியிருந்த நாயகியையோ,
''சங்க்யா!''
என்றழைத்தவன் கையால் சைகை செய்து என்னவென்று வினவ, சிந்தைக் கலைந்து அவன் வதனம் பார்த்து ஒன்றுமில்லை என்று தலையாட்டிய அம்மணியோ, காரை நோக்கி அடிகள் வைத்தாள்.
''அங்கெல்லாம் விண்டர் சீசன்லே?!''
ஆரோன்தான் ஆரம்பித்தான்.
''ஹ்ம்ம்!''
பேசாது உம் கொட்டி தலையை மட்டும் ஒப்புக்கு ஆட்டினாள் அந்திகையவள். புதிய ப்ரொஜெக் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறாள் மாடல் அவள். மூன்று மாதங்களுக்கு வெளிநாட்டில்தான் இறுப்பு காரிகைக்கு.
''ஏதாவது சாப்பிட போறீங்களா இல்லே, நேரா வீட்டுலையே கொண்டு போய் விட்டுடவா?!''
''இன்னும் கொஞ்ச நேரம் சும்மா எங்கையாவது அப்படியே லோங் ட்ரைவ் போகலாமா?!''
''விடியற்காலை நாலு மணிக்கு உங்களுக்கு ஃபிலைட்!''
ஆரோன் அழுத்தமாய் சொன்னான், சிறு முகிழ்நகையோடு.
''ரெண்டு மணிக்கு ஏர்போட்லே இருக்கணும்! அதுவும் தெரியும்!''
''ஆனா, நாளைக்கு எனக்கு வேலை இருக்கே!''
''வீட்டுக்கு போங்க!''
சுரமற்று சொன்னவள் அதற்கு பின்னர் ஏதும் பேசிடவில்லை. ஆரோனும் பேச்சை வளர்க்கவில்லை மூளையோ வேறொன்றில் உழல.
மடந்தை அவளாகவேத்தான் போன் போட்டு பயண சங்கதி சொல்லி, ஆரோனை சந்தித்திட வாய் விட்டு கேட்டாள்.
இதுவரை இப்படி மாதக்கணக்கில் ஷூட்டிங் போனதில்லை என்ற வாக்கியத்தோடு கொஞ்சம் ஸ்ட்ரெஸ், பயம் என்று அடுக்கடுக்காய் காரணங்களை சேர்த்தவள், ஆணவனோடான டைம் ஸ்பெண்டிங் நிச்சயம் அவளுக்கொரு நிவாரணி கிடைக்கும் என்றாள்.
புரிந்தவன், சரியென்று ஒப்புக்கொண்டு அவளை வீடு வரை வந்து பிக் ஆப் செய்து வெளியில் உணவருந்த கூட்டி சென்றான்.
அடுத்ததாய் நேரடி சந்திப்பின் மூலம், அவளை மிகப்பிடித்த சவிதா அம்மாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்து அவர் வீடு நோக்கியவன், ஏமாந்து போனான் மாதவரோ வீட்டில் இல்லாது அவனுக்கு டிமிக்கி கொடுக்க.
பழகியே சில வாரங்கள் மட்டுமே ஆகியிருந்த போதும், ஆரோனை விட்டு இப்படி சடீரென்று தூரப்பயணம் போவதை சங்கடமாகவே உணர்ந்தாள் தெரியிழை அவள்.
அதனால்தான், அவனோடு இன்னும் சில மணி நேரங்களை கழித்திட விரும்பினாள். ஆனால், நாயகனோ என்ன நினைத்தானோ, கடமை இருக்கிறதென்று கூறி நாசூக்காய் தவிர்த்து விட்டான் அவனோடு உலா போக எத்தனித்த அரிவையை.
அரை மணி நேரத்தில் சங்க்யாவின் வீட்டை அடைந்தனர் இருவரும்.
''தேங்க்ஸ்!''
காரிலிருந்து கீழிறங்கினாள் கோதையவள்.
''நல்லப்படியா போயிட்டு வாங்க! ப்ரொஜெக் சக்ஸஸ் ஆக வாழ்த்துகள்!''
முகிழ்த்தவனாய் ஆரோன் சொல்ல,
''யாருன்னே தெரியாத சமயத்துலே, கோடிகள் செலவழிச்சு போக்கே வாங்கிட்டு வந்தீங்க! இப்போ, நல்லா தெரிஞ்ச பின்னாடி, என்ன கொடுக்க போறீங்க?!''
சூசகமாய் கேட்டாள் ஏந்திழையவள் அயல் நாடு போகும் முன் ஆரோனிடமிருந்து அவளுக்கு ஏதும் இல்லையா என்று.
ஸ்டேரிங்கை இரு கரங்களாலும் இறுக பற்றி, சிரந்தாழ்த்தி, உதடுகள் மூடி மென் புன்னகை கொண்டவனோ,
''முன்னாடியே சொல்லிருந்தா கண்டிப்பா ஏதாவது ரெடி பண்ணிருப்பேன்! நீங்களே இன்னைக்கு ஈவனீங்தானே திடிர்னு சொன்னீங்க, போக போறேன்னு! அதான், உடனே எதுவும் பண்ண முடியலே!''
வருத்தம் தொனியில் தெரியாவிட்டாலும், அவன் திட்டிகளில் தெரிந்தது.
''ஹேய்! இட்ஸ் ஓகே! நான் சும்மா உங்களே டீஸ் பண்ணதான் கேட்டேன்! நீங்க கிளம்புங்க! குட் நைட்!''
சூழ்நிலையை கடினமாக்காது அவள் டாட்டா காண்பிக்க,
''குட் நைட்!''
என்றவனும் நகர்ந்தான் அங்கிருந்து.
சாலையில் காரை செலுத்தியவன் எண்ணம் முழுக்க சங்க்யாவே நிறைந்திருந்தாள்.
இருவரும் பூடகமாய் பேசி கொண்ட வாக்கியங்களின், உள்ளர்த்தங்கள் புரியா மாக்கான் அல்ல ஆரோன்.
அதுவும் கடந்த மூன்று மணி நேரங்களில் ஒருவர் மாற்றி மற்றொருவர் ஏறெடுக்கையில், இதழ்களை தாண்டி இமைகளே அதிகமாய் பேசி கொள்ள உணர்ந்தவன், அது போய் முடிய போகும் இலக்கை ஊகிக்க முடியாது திணறினான்.
அதுவும் இப்போது அவனை வழியனுப்பிய சமயம் வஞ்சியின் விலோசனங்கள் கொண்ட விவரிக்க முடியா உணர்வுகள், நெஞ்சுக்குள் நுழைந்து ஆணவனை ஏதோ செய்ய, காரை சடன் பிரேக் போட்டு வளைத்தான் ஆரோன்.
ப்ளூடூத்தில் கனெக் ஆகியிருந்த போனில் தாரகை அவளின் பெயரை அழுத்தினான் ஆடவன் அவன்.
மஞ்சத்தில் சோகமே உருவாய் குப்பிறக்கிடந்த வதனியின் முகமோ சிவந்த கிடந்தது. அழுகையெல்லாம் ஏதும் கொண்டிடவில்லை கோமகள் அவள்.
இருந்தும், உள்ளம் கொண்ட உளைச்சலோ முகத்தில் அப்பட்டமாய் காட்சியாகி கிடக்க, வெறுமனே உருண்டை தலையணையில் கபாலம் கவிழ்த்திருந்தவள் வதனமோ, பிரகாசித்தது அலைபேசியின் தொடுதிரையில் ஆரோனின் பெயர் மிளிர.
''ஹாய்! என்ன கோல்?!''
உற்சாகம் பொங்க நேரிழையவள் வேள்விக் கொள்ள,
''கீழ இறங்கி வாங்க! கேட்டிங்கள்ளே, கொடுக்க போறேன்!''
மௌன புன்னகை கொண்டவனாய் சொல்லிய ஆரோன் அழைப்பை துண்டிக்க, புரியாது எழுந்தமர்ந்தவளோ அவன் துண்டுப்போட்டு சொன்ன வார்த்தைகளுக்கான முழு அர்த்தம் என்னவாக இருக்குமென்ற ஆர்ப்பரிப்பு கொண்டவளாய் குழப்பம் கொண்டாள்.
காரின் ஹார்ன் சத்தம் கேட்க, நகத்தை பற்களுக்கு இரையாக்கியிருந்த இளம்பிடியாளின் கால்களோ விரைந்தன, சத்தம் வந்த திசை நோக்கி.
மூச்சு வாங்க ஓடோடி வந்தவள், வாசல் வர, நிலையை சமன் செய்துக் கொண்டவளாய் போய் நின்றாள் ஆரோனின் முன்.
பேடையின் அம்பகங்களே சொல்லின அவள் கொண்டிருக்கும் அவாவை.
''பொருளா கொடுக்க எதுவுமில்லே! ஆனா, உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா..''
என்றவளை நெருங்கிய ஆரோனோ, மை தீட்டிய விழிகளால் அவனை ஆழமாய் நோக்கிய மெல்லியாளை மென்மையாய் கட்டியணைத்தான்.
அதை சற்றும் எதிர்பார்த்திடா தளிரியளோ ஆடிப்போக, அணங்கின் அடிப்பாதம் கொண்ட சூடோ விருட்டென மேலேறி மங்கையின் மனதை ஆக்கிரமித்து அவளை சிவக்க வைத்தது.
''கோடியிலான பூவே விட..''
என்றவன் தொடங்க, உறைந்திருந்த துடியிடையின் அகல விரிந்த கரங்களோ, ஆணவன் முதுகை தழுவ கோரி கெஞ்சின.
''இது விலை மதிக்க முடியாததுன்னு தோணுச்சு!''
என்றவன் முடிக்க, முற்றிழையின் மயக்கம் கொண்ட நயனங்களோ கொஞ்சங்கொஞ்சமாய் சொருக ஆரம்பித்தன, கைகளோ ஆரோனின் டி- ஷேர்ட் முதுகை இறுக்கமாய் கட்டிக்கொள்ள.
மூச்சு முட்ட அணைத்து நின்ற சனிகையோ, அவன் தோள் ஒட்டிக்கிடந்த முகத்தை மெதுமெதுவாய் கீழிறக்கி, அவன் நெஞ்சில் புதைத்தாள்.
மானினியின் உச்சுக்குழல் கொண்ட வாசத்தில் கண்கள் மூடிக்கிடந்த நாயகனின் பாலிகைகளோ தன்னிச்சையாய் கலர் கூந்தலில் இதழொட்டி சுகித்தன.
ஆகாயம் பிளந்து, மின்னல் பளிச்சிட, மெதுவாய் அவன் பிடியை தளர்த்தினான் ஆரோன்.
விலகப்போகும் நாயகனின் முகத்தை ஏறெடுத்து பார்த்த வல்வியின் மேனியோ மயிர்கூச்சங்கொண்டது அவன் பார்வை அவளில் ஊடுருவி தொலைய.
நெஞ்சு ஏகத்துக்கு ஏறி இறங்க, நாசி உஷ்ணம் கக்க, விறலியின் விரல்களோ ஆணவன் கரங்களோடு பின்னிக்கொள்ள மாமா வேலை பார்த்தன.
மறுவார்த்தை கொள்ளா ஆரோனோ இதழோரம் இழைந்தோடிய முகிழ்நகையோடு அடிகளை பின்னோக்கி வைத்தான், பேண்ட் பாக்கெட்டில் கரங்கள் கொண்டவனாய்.
பொங்கிய உணர்ச்சிகள் வெடிக்கா சிலையாய் ஸ்தம்பித்திருந்த சங்க்யாவோ, எட்டி போகின்றவனையே ஏக்கத்தோடு பார்த்து நின்றாள்.
தாழ் திறந்திடுவான் ததுளன்!
Author: KD
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 14
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 14
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.