What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

நீ நெருங்க நான் நொறுங்க! : 12

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
413
WhatsApp Image 2024-10-16 at 4.30.53 PM.jpeg

அத்தியாயம் 12

கடந்தகாலம்

அட்சராவின் படுக்கையறை


நிலா கர்ப்பமாக இருக்கும் சந்தோஷத்தை கொண்டாடிட அனைவரும் அட்சராவின் வீட்டிற்கு படையெடுத்திருந்தனர்.

அமலா மற்றும் மாதவி இதில் விதிவிலக்கே. வேதாவின் திருமணம் முடிந்த பிறகு அவனோடு பேசுவதையே முழுவதுமாய் நிறுத்தி இருந்தாள் அத்தை மகள் அவள்.

ஏன், அவன் முகத்தை பார்ப்பதைக் கூட தவிர்த்திருந்தாள். அமலாவும் அண்ணியோடு பட்டும் படாமலும் மட்டுமே உறவை வளர்த்தார். வேண்டியதை அண்ணன் கந்தனிடம் அவ்வப்போது கேட்டு பெற்றுக் கொண்டார்.

தாய் வீட்டுக்கு வந்த அட்சராவோ அடக்கத்தின் மறுப்பெயராய் ஊமை நாயகி வேடங்கொண்டாள்.

காரணம் அறிந்த மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் எதையும் பெரிதுப்படுத்திடாது வந்த வேலையை மட்டும் பார்த்தனர்.

மாலை போய் இரவு வர, அம்பிகா மற்றும் கந்தன் இல்லம் திரும்பிட ஆயத்தமாயினர்.

வேதாவும் அவர்களுடனே கிளம்ப பார்க்க,

''இருங்களேன்!''

என்று முதல் முறை தயங்கி அவனுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் மரியாதையோடு வதுகை அவள் கோரிக்கை வைக்க, ஏறெடுத்து நேரிழையின் முகம் பார்த்தவனோ அவளை அமைதியாய் வெறித்தான் சிறு அதிர்ச்சி கொண்டவனாய்.

காரணம், அவர்களின் பக்கம் மாமியார் ராதாவும் இல்லை மாமனார் மோகனும் இல்லை. ஆனால். பொஞ்சாதி திடிரென்று மரியாதை கொள்ள ஆடித்தான் போனான் கணவன் அவன்.

''கிளம்பினா அம்மா என்னதான் திட்டுவாங்க! இல்லே, என்னையும் உங்ககூடவே அனுப்பி வெச்சிடுவாங்க!''

என்ற மங்கையோ தரையை பார்த்தப்படி வார்த்தைகளை உதிர்க்க,

''நான் போகலே! அப்பம்மாவே மட்டும் வழியனுப்பிட்டு வந்துடறேன்!''

என்றவனோ சொன்னப்படி செய்து துணைவியோடு அவள் படுக்கையறை நோக்கினாள்.

''குழந்தை பத்தி எல்லா கேட்க ஆரம்பிச்சிட்டாங்க! என்ன பதில் சொல்லணும், எப்படி சொல்லணும்?!''

என்ற வேதாவோ மல்லாக்க படுத்தப்படி பக்கமிருந்த வாசுரையிடம் கேள்வி கேட்க,

''ஆஹ்ஹ்!''

என்ற சத்தத்தோடு எழுந்தமர்ந்து கண்ணை தேய்த்தாள் தெரிவை அவள்.

''என்னாச்சு?!''

''கண்ணுலே என்னவோ விழுந்திடுச்சு!''

''நான் பார்க்கவா?!''

என்ற வேதாவோ தயங்கி கேட்க,

''ஆஹ்ஹ்! எரியுது!''

என்ற பனிமொழியோ சிவந்த கண்ணை மேலும் போட்டு தேய்க்க, அவள் கரங்களை ஓரந்தள்ளிய ஆணவனோ பொற்றொடியின் இமையை விரல்களால் விரித்து பற்றி, வேகமாய் காற்றூதினான்.

மெத்தை விரிப்பை பற்றியிருந்த வாஞ்சினியின் கரங்களோ, புருஷனின் மார் கொண்ட ஆடையை பிடித்து கசக்கிட ஆரம்பித்தது, மறுமுறை வேதா அவள் நயனம் ஊதிட.

''ஓகே வா?!''

என்றவன் அவள் விலோசனத்தை விடுவிக்க, அழுகை கொண்ட திட்டிகளால் அவனை வெறிக்க பார்த்தவளை அவனுமே கண் சிமிட்டாது பார்த்தான்.

உடல் கூசியது அங்கணை அவளுக்கு முதல் முறை வேதாவின் பார்வைகளால். நேத்திரங்களை தாழ்த்திக் கொண்டாள் காரிகை அவள்.

ஆளான் அவனோ தயக்கம் கொண்டவனாய் முன்னோக்கிய விரல்களை இருமுறைக்கு மூன்று முறை பின்னோக்கி இழுத்து, பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவனாய் அட்சராவின் கன்னத்து ஈரங்களை பெருவிரல் கொண்டு துடைக்க, மின்சார பாய்ச்சல் கொண்டது கோமகளின் யாக்கை.

படக்கென அம்பகங்கள் மூடிக்கொண்ட மாதங்கியோ, அவன் சட்டையை மேலும் இறுக்க, முதல் முறை வேதாவிற்குமே விவரிக்க முடியா உணர்வொன்று அவனை ஆட்கொள்வது போல் தோன்றியது.

''கண்ணு வீங்கிருக்கு! ஒத்தடம் கொடுக்கவா?!''

என்றவனின் கிறங்கடித்த குரலில், வேண்டாமென்று தலையாட்டிய தலைமகளோ விருட்டென திருப்பி பொத்தென மஞ்சத்தில் விழுந்தாள்.

கால்களை குழந்தையை போல் சுருட்டிக்கொண்டும், முகத்தை கைகளால் மூடிக்கொண்டும் உள்ளுக்குள் பற்றி எறிந்த கனலை அணைத்திட போராடினாள் பேதை அவள்.

வேதாவும் முதுகுத்தண்டு நனைய, நெற்றி கேசத்தை கையால் கோதி ஏசியை அதிகப்படுத்தி மல்லாக்க சரிந்தான் முறுக்கேறியிருந்த தேகம் முற்றிழையை வேண்ட.

என்னதான் போர்த்திக்கொண்டு படுத்தாலும், வேதா இழுத்தவளை அணைத்து கொள்ள மாட்டானா என்றே ஏங்கியது கன்னி மனது.

ஆணவன் எண்ணமோ எங்கே நெருங்கினால் ஏதாவது ஏடாகூடமாய் ஆகிடுமோ என்ற யோசனையில் மூழ்கி கிடந்தது.

இரவோ ஏகாந்தமாய் நகர்ந்தது.

நள்ளிரவில் துயில் கலைந்த கோமகளோ, வாஷ் ரூம் போய் திரும்பி வர, உள்ளமோ அலமாரியிலிருந்த கல்யாண பத்திரிகையை எடுத்து பார்க்க சொல்லி கேட்டது.

அதை எடுத்து மணமகனின் பெயரை விரல்களால் தொட்டுரசி புன்னகைத்த மணவாளியோ, தலை திருப்பி உறங்கும் கணவனை பார்த்தாள் இதழோரம் குறையா நாணத்தோடு.

நொடிகள் கடக்க, அழைப்பிதழை பழைய இடத்திலேயே வைத்து விட்டு மஞ்சம் நோக்கி வேதாவின் முகம் பார்க்கும் படி படுத்துக் கொண்டாள்.

அவனோ நெற்றியில் கரம் பதித்து நித்திரையில் லயித்திருந்தான்.

கொஞ்சங்கொஞ்சமாய் அவன் பக்கம் நகர்ந்து போனாள் பெதும்பை அவள்.

நூலளவு இடைவெளியில் அவன் உறங்குவதை ரசித்தவள், மெத்தை மீதிருந்த புருஷனின் மற்றொரு கரத்தின் உள்ளங்கையில் அவள் விரல்களை மென்மையாய் பதித்தாள்.

வேதாவோ தூக்க கலக்கத்தில் கூசிய கையையோ சட்டென திருப்பி மொத்தமாய் கோர்த்துக் கொண்டான் பத்தினியின் விரல்களோடு சேர்த்து.

*************************

கடந்தகாலம்

வேதாவின் இல்லம்


ஞாயிற்றுக்கிழமை குடும்பம் மொத்தமும் ஒன்றாய் அமர்ந்து டிவி பார்ப்பது வழக்கமாகும்.

அன்றைக்கும் மதிய உணவு முடிய, மாதவி புதுப்படம் ஒன்றை தொலைக்காட்சியில் ஓடவிட்டாள்.

வேதாவோ யார் வீட்டிலோ லைட்ஸ் மாற்றிட வேண்டி கிளம்பி விட்டான்.

அம்பிகா தன்னந்தனி ஆளாய் அடுக்களையில் பாத்திரங்களோடு போராடிக் கொண்டிருந்தார்.

மருமகளோ வெளியே போக தாயாராகி கீழ் தளம் இறங்கி வந்தாள்.

அந்நேரம் அவளை பார்த்த கந்தனோ,

''மா, அத்தை தனியா கிட்சன்லே வேலை பார்த்துக்கிட்டு இருக்கா. கொஞ்சம் போய் அவளுக்கு உதவி பண்ணிடுமா!''

என்றார் கோற்றொடியின் சுயரூபம் அறியாது.

''நான் வெளியே போறேன் மாமா! இதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லே! இதோ, தின்னுட்டு தண்டமா இருக்காளே இந்த தடிமாடு, இவளே போய் கழுவ சொல்லுங்க!''

என்ற அட்சராவோ நொறுக்குத் தீனியை கொறித்துக் கொண்டிருந்த மாதவியை சுட்டிக்காட்ட,

''அடியே பணக்காரி என்ன வாய் ரொம்ப நீளுது?! இதையெல்லாம் உன் புருஷனோட வெச்சிக்கோ!''

என்ற அமலாவோ சிக்கியவளை கொஞ்சமாய் தாளிக்க,

''வெட்கமா இல்லே?! ஒரு வேலையும் பண்ணாமே, ஓசி சோறு தின்னு உடம்பே வளர்த்துக்கிட்டு இருக்கறதெல்லாம் ஒரு பொழைப்பா?! நீங்க சொகுசா உட்கார்ந்து தின்ன அடுத்தவன் உழைக்கணுமோ?!''

என்ற பகினியோ விடாது முட்டுக்கொடுக்க, ஓடிவந்த அம்பிகா வாய் திறக்கும் முன் அவன் அப்பா கந்தன் முந்திக்கொண்டார்.

''அட்சரா! போதும் நிறுத்து! என் பொண்டாட்டியே இதுவரைக்கும் இப்படியெல்லாம் பேசினது இல்லே! நீ நேத்து வந்த பொண்ணு, எப்படி இப்படி பேசலாம்?! இதெல்லாம் ரொம்ப தப்புமா! முதல்லே அமலாகிட்ட மன்னிப்பு கேளு!''

என்றவரோ அவரின் அதிருப்தியை வெளிப்படுத்த,

''பத்து பைசா சம்பாரிக்க வக்கில்லாத ஜென்மத்துக்கெல்லாம் மன்னிப்புதான் ஒரு கேடு!''

என்ற பெதும்பையோ வேதாவின் அத்தையை கொச்சைப்படுத்தி கார் சாவியோடு வெளிய கிளம்பினாள்.

யார் நெருங்க யார் நொறுங்க...
 

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 12
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top