What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
323
WhatsApp Image 2024-10-15 at 7.22.01 PM.jpeg

அத்தியாயம் 6


கடந்தகாலம்

வேதாவின் இல்லம்

அண்ணன் கந்தன் மற்றும் அண்ணி அம்பிகாவின் வாரிசுகளுக்கு கல்யாண விஷயம் பேசி முடித்த அன்றைய இரவே அமலா முருங்கை மரம் ஏறியாயிற்று.

அதை பறைசாற்றும் விதமாய், கடந்த சில நாட்களாகவே அம்மாவும் மகளும் ஹோட்டல் உணவையே ஆர்டர் போட்டு உண்டனர்.

அடுக்களையிலோ பாத்திரங்கள் எல்லாம் தடார் புடாரென்று ஆங்காங்கே பறந்தன.

புரிந்து விட்டது அம்பிகாவிற்கு புதியதோர் பூகம்பத்தை கூடிய சீக்கிரத்திலேயே அமலா கிளப்பிட போகிறார் என்று.

இருப்பினும், அமைதி காத்தார் அதுவாகவே வெளிவரட்டும் என்று.

இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேற்பட்டு நாத்தனார் அமலாவோடு குப்பைக் கொட்டிய அண்ணி அவர், ஓரளவிற்கு கணித்தே இருந்தார் நடக்கின்ற நாடகமெல்லாம் எதற்காக என்று.

அதேப்போல் பொறுமை காத்திருந்த அமலாவும் குமுறலுக்கு ஒரு முடிவு கட்டிட வேண்டி இரவென்றும் பாராது சண்டையை ஆரம்பித்தார்.

''நீங்க பண்ணது கொஞ்சங்கூட சரி இல்லே அண்ணி! யாரே கேட்டு வேதாவுக்கு அந்த வீட்டு பொண்ணே பேசி முடிச்சீங்க?!''

''யாரே கேட்கணும் அமலா?! நல்ல சம்பந்தம் தானே?! அதை எதுக்கு வேணா சொல்லணும்?!

''ரொம்ப நல்லா நடிக்கறீங்க அண்ணி! ஏன், உங்களுக்கு தெரியாதா என் பொண்ணு மாதவி சின்ன வயசுலருந்தே வேதாவைத்தான் கட்டிக்க ஆசைப்படறான்னு?!''

''இங்கப்பாரு அமலா, நான் உன்கிட்டையும் சரி, மாதவிகிட்டையும் சரி, ஏற்கனவே பலமுறை தெளிவா சொல்லிட்டேன்! இப்போ இருக்கற காலத்துலே, நம்ப கையிலே எதுவுமே இல்லே! யார் மனசுலே யாரு வேணும்னாலும் இருக்கலாம்! எது எப்போ வேணும்னாலும் மாறலாம்! அதனாலையே, மனசுலே தேவையில்லாத ஆசைகளை வளர்த்துக்க வேணாம்னு கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி பல தடவை எச்சரிச்சிட்டேன்!''

''சும்மா நிறுத்துங்க அண்ணி! நீங்க சொல்ற மாதிரி பார்த்தாலும், வேதா ஒன்னும் அந்த பொண்ணே விரும்பலையே! அப்போ, மாதவியே கட்டிக்கறதுலே என்ன பிரச்சனை?! நீங்க கைகாட்டறே பொண்ணைத்தானே இப்பவும் அவன் கட்டிக்க சரி சொன்னான்! அவனாவே ஒன்னும் அந்த பொண்ணே கட்டிக்க போறேன்னு வந்து நிக்கலையே?!''

''நீ சொல்றதெல்லாம் வாஸ்துவம்தான் அமலா! ஆனா, அந்த அம்மா ராதா என்ன சொன்னாங்கன்னு கேட்டியா இல்லையா?! அவுங்க அவ்ளோ அழுத்தமாவும் காரியமாவும் சொல்லும் போது, எப்படி அவுங்க பொண்ணே வேணான்னு சொல்ல சொல்றே?! அப்படி சொன்னா, நிலாவோட வாழ்க்கை என்னாகறது?! சொல்லு அமலா?!''

''எப்படி அண்ணி உங்களாலே இவ்ளோ சுயநலமா இருக்க முடியுது?! உங்க பொண்ணே பத்தி மட்டுமே கவலைப்படறீங்களே, இங்க ஒருத்தி கட்டினா மாமனத்தான் கட்டுவேன், இல்லே, தூக்கு கயிறுலே தொங்கிடுவேன்னு சொல்றாளே, அவளுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?!''

''பைத்தியமா அமலா உனக்கு?! மாதவிதான் ஏதோ சின்னப் பொண்ணு குழப்பத்துலே கண்டதையும் பேசறான்னா, நீயும் அவளோட சேர்ந்து கிறுக்குத்தனமா உளறிக்கிட்டு இருக்கே! எடுத்து சொல்லி அவளுக்கு புரிய வைக்க வேணாவா?!''

''ஆமா! நானும் என் பொண்ணும் பைத்தியக்காரிங்கதான்! புருஷனை இழந்து அண்ணன் பார்த்துப்பாருன்னு நம்பி வந்ததுக்கு ரொம்ப நல்ல மரியாதை பண்ணிட்டிங்க!''

''அமலா நீ தேவையில்லாமே பேசறே!''

''நீங்கதான் அண்ணி என்னே பேச வைக்கறீங்க! இத்தனை வருஷமா, இந்த வீட்டுலே நீங்க போட்ட சோத்துக்குக்கான அர்த்தம் இப்போதானே புரியுது! என் வயித்தெரிச்சலையும், என் பொண்ணு மன வேதனையையும் நல்லா கொட்டிக்கிட்டு, நீங்களும் உங்க புள்ளைகளும் நல்லா இருங்க!''

என்ற அமலாவோ நாக்கில் நரம்பற்று பேசி அங்கிருந்து நகர்ந்தார்.

**********************************


கடந்தகாலம்

வேதாவின் இல்லம்

நடந்தது என்ன?!

இந்தர் மற்றும் நிலாவிற்கு நல்லப்படியாய் கல்யாணம் பேசி முடித்த மணமகன் வீட்டாரோ, அவர்களின் மற்றொரு ஆசையை வெளிக்கொணர்ந்து சபையினரை அதிர்ச்சியாக்கினர்.

''என்ன சம்பந்தி நீங்க, இப்படி டக்குன்னு உங்க பொண்ணை எங்க வீட்டுக்கு மருமகளாக்கிட சொல்றீங்க?!''

பதற்றம் கொண்டே பேசினார் கந்தன்.

''இதுலே என்ன இருக்கு சம்பந்தி?! நாங்க நிலாவே பத்தி விசாரிக்கும் போது, கூடவே உங்க பையன் வேதா பத்தியும் சேர்த்துதான் விசாரிச்சோம்! எல்லாரும் நல்ல விதமாத்தான் சொன்னாங்க! அதான், நானும் இவரும் பேசி எங்க பொண்ணு அட்சராவுக்கு உங்க பையனையே கேட்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்!''

என்று இந்தரின் அம்மா சொல்ல,

''இதுலே என்ன வேடிக்கைன்னா, நிலா இந்தர் கல்யாணம் முடிஞ்சு இவுங்க கல்யாணத்தை பத்தி பேசலாம்னு நாங்க இருந்தோம்! ஆனா, பாருங்க, கடவுள் நல்லதை தள்ளி போடக்கூடாதுன்னு இப்பவே எல்லாத்தையும் பேசி முடிக்க வெச்சிட்டாரு!''

என்ற மோகனோ பூரிப்பு கொண்டார்.

''அதான் பாருங்க, நாங்க ஒன்னு நினைக்க, நீங்க ஒன்னு சொல்ல, கடைசியிலே எல்லாம் நல்ல விஷயமாத்தான் அமைஞ்சிருக்கு!''

அம்பிகாவும் அகமகிழ்வோடு ஒப்புவித்தார்.

''அப்பறம் என்ன, ஒரு நல்ல நாள் பார்த்து நீங்க பையனோடு எங்க வீட்டுக்கு வந்து பொண்ணே பார்த்திடுங்க! முடிஞ்சா ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னாவே நடத்திடுவோம்!''

மீண்டும் பக்கத்து வீட்டு பெருசு வாய் திறந்தார்.

''என்னப்பா வேதா, உனக்கு இந்த கல்யாணத்துலே சம்மதம் தானே?!''

எவனுக்கு திருமணம் பேசினார்களோ அவனும் அங்குதான் இருந்தான் இவ்வளவு நேரமும் நடப்பதையெல்லாம் வெறுமனே பார்த்து.

ஆனால், எல்லாம் பேசி முடித்த பின்னரே, கடமைக்காய் ஒரு வார்த்தை கேட்டு வைத்தனர் எனலாம், அவனிடம்.

அண்ணனின் பதிலை மற்றவர்களை விட நிலாவோ அதிக பதற்றத்தோடு எதிர்பார்த்திருந்தாள்.

எங்கே பெரியவன் முடியாது என்றால் இவள் திருமணம் தடைப்பட்டிடுமோ என்றொரு கலக்கம் தங்கையின் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

அதை கண்டுக்கொண்ட வேதாவோ, அவனுக்கான பெண்ணை நேரடியாய் பார்த்திடாமலே தலையை மட்டும் ஆட்டி சம்மதம் தெரிவித்தான் சிறு முறுவலோடு.

''நல்லவேளை, வேதா ஓகே சொல்லிட்டாரு! இல்லே, நான் நிலாவுக்கு நோ (no) சொல்லிருப்பேன்!''

மாமியார் ஆகிடும் முன்னரே, அனைவரையும் ஒரு நொடி பதைத்திட வைத்தார் ராதா.

என்னதான் அவர் கூற்றை காமெடி என்று நினைத்து சபையே சிரித்தாலும், அவ்வாக்கியம் கொண்ட தொனியும் அழுத்தமும் சம்பந்தப்பட்டவர்களை எச்சரிக்கவே செய்தது.

''அட்சராவும் இங்க இருந்திருந்தா இந்நேரத்துக்கு இப்படியே இன்னொரு தட்டும் மாத்தியிருக்கலாம்!''

பெண்ணை பெற்றவர் வெளிநாட்டு மீட்டிங் ஒன்றுக்கு சென்றிருந்த மகளை நினைவுக் கூர்ந்தார்.

அரங்கேறிய பேச்சு வார்த்தைகளை எல்லாம் ஒரு ஓரமாய் நின்று கேட்ட மாதவியோ, தேம்பியப்படி ஓடோடி போனாள் மேல்மாடிக்கு மாமன் அவளுக்கு இல்லை என்ற நிஜத்தை ஜீரணிக்க முடியாது.

யார் நெருங்க யார் நொறுங்க...
 

Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 6
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top