What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
382
அத்தியாயம் 112

இறந்த காலம்


இல்லாதவனுக்கே இருப்பதின் அருமை புரியும்.

தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாரும் அப்படித்தான். அசைக்க முடியா சொத்தாக சுரஜேஷ்ட ஏகஷ்ருங்காவின் உறவை நினைத்தான் ஆணவன்.

கெய்டன் உண்மையை சொல்லாததற்கு நிச்சயம் வலுவான காரணம் ஒன்றிருக்கும் என்று நம்பினான் ஔகத்.

இடையில் ஸ்ரீலங்கா சென்று வந்தான் சின்னவன், தடுமாறி கிடக்கும் உள்ளத்தை சமன் செய்ய. மடத்தில் பலருக்கு போதனைகள் புரிந்தான். தலைமை குருவிடம் முறைப்படி தீட்ச்சை பெற்று அங்கிருந்து மீண்டும் ஜப்பான் திரும்பினான்.

கேடியோடு மகன் கொண்ட பேச்சு வார்த்தை முற்றிலும் தொடர்பற்று போனது. மீகன் மட்டுமே சின்னவனோடு உறவை வளர்த்தான். அப்பாவை பற்றி தெரிந்த ஔகத்திற்கு அவனை சுமந்தவள் எங்கே என்று தெரியவில்லை.

நிமலனிடம் முன்பொருமுறை கேட்க, அவனோ அது அவசியமற்றது என்று சொல்லி மகனின் வாயடைத்தான். மீகனிடம் கெஞ்சி கூத்தாடி சுஜியின் நிலையை தெரிந்துக் கொண்டான் ஔகத்.

தந்தையில்லா தாயின் கோலம் அலங்கோலமாய் இருக்க, காண விரும்பாதவனோ வந்த வழியே திரும்பினான் ஜப்பானுக்கு.

பதினேழு வயது பிள்ளைக்கு என்ன தெரியும், புத்தி பேதலித்து கிடப்பவள் அவனைப் போலவே இல்லாதவனின் அன்பிற்காய் ஏங்குகிறாள் என்று.

நாட்கள் கடகடவென ஓட, மூன்றாண்டுகளில் ஓரளவுக்கு தனியாகவே ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் திறனாளியாக உருவெடுத்திருந்தான் ஔகத்.

தம்பியைப் பற்றி அவன் கண்டறிந்த உண்மையை அவனுக்குள்ளேயே ரகசியமாய் வைத்துக் கொண்டான் பேரழகனவன், மாதங்கள் கடந்து வருடமே ஆகியிருந்தாலும்.

நிஜத்தில், பேரானந்தமே கொண்டான் ஔகத், கேடிக்கெல்லாம் கேடியாக, சுரஜேஷ் வளம் வர.

வருங்காலத்தில் மனிதர்களின் மூளையை குடைந்தெடுக்க வேண்டுமென்று, பதினெட்டு வயதில் முடிவெடுத்து, மருத்துவம் படித்திட ஆசைக் கொண்டான் சுஜியின் புத்திரன்.

ஜப்பானில் மருத்துவ படிப்பு ஆறு வருட கல்வியாகும். அதில் 1 வருட இன்டர்ன்ஷிப் பயிற்சியும் அடங்கும். ஆகவே, முதல் 5 ஆண்டுகள் மாணவர்கள் தியரி எனப்படும் பாடக்கல்வியையும் இறுதி ஆண்டு, பிராக்டிக்கல் என்றழைக்கப்டும் மருத்துவ பயிற்சிலும் அவர்களின் படிப்பை தொடர்வர்.

அவனுக்கு தேவையான அத்தனையையும் செய்துக் கொடுத்தான் கெய்டன். ஒரு பக்கம் படிப்பு, மறுப்பக்கம் தம்பி சுரஜேஷின் பிரச்சனைக்கான தீர்வென்று வாழ்க்கை ஓடம் படு திரிலிங்காவே ஓடியது ஔகத்திற்கு.

ஒரு நாள் இரவு ஆராய்ச்சி கூடத்தில் பிசியாக இருந்த அண்ணனை தேடி வந்தான் தம்பி சுரஜேஷ்.

''அண்ணா, நான் உனக்கொரு கிஃப்ட் எடுத்திட்டு வந்திருக்கேன்.''

என்றவனோ மூத்தவனை இழுத்து வந்து அமர்த்தினான் நாற்காலி ஒன்றில்.

''என்னே, ஒன்னத்தையும் காணோம்?''

என்ற மூத்தவனோ, காலி கையோடு இருந்தவனை ஆச்சரியமாய் பார்க்க,

''சர்ப்ரைஸ்!''

என்ற தம்பியோ, சொடக்கிட்டு எழுந்து நின்றான் இருவரும் அமர்ந்திருந்த இடத்திலிருந்து.

ஔகத்தோ ஆர்வமாய் தம்பியின் செயல்களை கவனிக்க, அவனோ இருவருக்கும் முன் காற்றில் விரல்களால் கோலம் போட்டான்.

''என்ன பண்றே சுரஜேஷ்?!''

என்றவனின் வினாவிற்கு, டிஜிட்டல் தொழில்நுட்ப திரை மூலம் பதிலளித்தான் ஏகஷ்ருங்கா.

ஔகத்தோ, கண் முன் கண்ட காட்சியில் எழுந்து நின்றான் கால்கள் தன்னிச்சையாய் காற்றிலான தொடுதிரையை நெருங்க.

ஆழமான அம்பகங்கள் ரெண்டும் அஸ்திரத்தின் கூர்முனை கொண்டிருக்க, வளைந்திருந்த புருவங்களோ பிநாகமாய் இறுமாப்பில் மிதந்திருக்க, செக்காய் ஆட்டிப்படைக்கும் கன்னங்கள் ரெண்டும் கும்மென்று இருக்க, இரவு பகலென்று இருநிலைகளை இதழ்களில் பதுக்கியிருந்த நேரிழையோ, மொத்தத்தில் எழிலான இயற்கை சீற்றமாகவே தெரிந்தாள் ஔகத்தின் பார்வைகளுக்கு.

''புடிச்சிருக்காண்ணா?!''

என்ற தம்பியோ, அண்ணனின் தோளில் முழங்கை பதித்து சிரித்த முகமாய் கேட்க,

''அந்தக்கரண கள்ளியே

சங்கல்ப சுந்தரியே

விகல்ப வல்வியே

மனம் கொய்ந்த மங்கையே

புத்திக் கண்ட புனையிழையே

சித்தம் சிதைக்கும் சீமாட்டியே

என் அகங்கார வள்ளியே!''

என்ற ஔகத்தோ, தொடுதிரையில் மார் தொட்டிருக்கும் குழலோடு சிரித்திருந்த பதுமையை விரல்களால் வருடி முறுவலித்தான்.

''என் அண்ணனுக்கு காதலி இருந்தா எப்படி இருக்குன்ற ஒரு சின்ன கற்பனை. எப்படி இருக்காங்க அண்ணா, நான் வரஞ்சே நம்ப அண்ணி?!''

என்ற சுரஜேஷோ, மலர்ந்தவனாய் பூரிப்பு கொண்டான், மூத்தவனின் பதிலை தெரிந்துக் கொள்ள.

''என் தம்பி கற்பனையிலே கைவண்ணமாகியிருக்கறே இந்த அகம்பாவ கள்ளிதான், தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாரோட மனைவி! போதுமா?!''

என்றவனோ சின்னவனின் தலை முடியை கலைத்து விளையாட,

''எனக்கு தெரியுண்ணா! கண்டிப்பா நீ இப்படித்தான் சொல்லுவேன்னு! ஆனா, நீ உண்மையே சொல்லு?! உனக்கு நிஜமாவே, நான் வரைஞ்சே இந்த பொண்ணே புடிச்சிருக்கா?! நான் மம்மியே மைண்ட்லே வெச்சுதான் அண்ணியே வரைஞ்சேன், தெரியுமா!''

என்றவனோ ஔகத்தைக் கட்டிக்கொள்ள, தொடுதிரையில் கன்னக்குழியோடு, தந்திரமான ராஜ பார்வை கொண்டு, கம்பீரத்தில் நெஞ்சம் நிமிர்ந்த மிடுக்கு தோளில் தெரிய, திமிரின் அதிரடி தரையிறக்கம் போலிருந்த முற்றிழை கிருத்திகா தீனரீசனை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் ஔகத்.

சுரஜேஷ் குறிப்பிட்ட அவன் மம்மியோ, ரூபிகா ரீவாதான். அடங்கா புயலான அவளை மனதில் கொண்டே, மகனவன் அண்ணனின் வருங்காலத்தை கற்பனை செய்து, வர்ணங்களில் உயிர் கொடுத்திருந்தான்.

தம்பியின் கிறுக்கலை கண்ட நொடியே கவி வழி உணர்த்தி விட்டான் ஔகத், தொடுதிரையில் பற்கள் தெரிய ஆனந்தமாய் சிரித்திருக்கும் பேரழகி, குணத்தில் வில்லியென்று.

படம் பார்த்து கதை சொல்வது போல், ஔகத் முன்கூட்டியே அறிந்திருந்தான் பெயர் தெரியா காதலியின் போக்கு எப்படியென்று.

ஆகவே, அண்ணியை சீக்கிரமாய் கூட்டி வா, என்ற சுரஜேஷை சமர்த்தியமாய் சமாளித்தான் ஔகத், தம்பியின் விருப்பத்தை பெரியவன் மருத்துவனான பிறகு, நிச்சயமாய் நிறைவேற்றுவதாய்.

இருப்பினும், அதுவெல்லாம் வெறும் கட்டுக்கதை என்பது ஔகத் மட்டுமே அறிந்த உண்மையாகும். ஆணவனுக்கு, அவன் தம்பியின் பிரச்சனைக்கான தீர்வை கண்டறிவதை விட வேறேதும் முக்கியமில்லை.

ஆகவே, பல ஆராய்ச்சிகள் செய்தவன் மருத்துவத்தில் பரவலாய் பயன்படுத்தப்படும் நானோ டைமண்ட்ஸ் (Nanodiamonds) பற்றி சில கூடுதல் தேடல்கள் கொண்டான்.

ஜப்பானில் எம்பிபிஎஸ் (MBBS) படிப்பு படித்த ஔகத்தோ, முதல் 2 ஆண்டுகள் உடற்கூறியல் (anatomy), உடலியல் (physiology), உயிர்வேதியியல் (biochemistry) மற்றும் மருந்தியல் (pharmacology) போன்ற அடிப்படை அறிவியலைக் கற்க, அதையே சொந்த தேவைக்கும் சரிவர பயன்படுத்திக் கொண்டான்.

கூடவே, பழங்காலத்து மக்களின் நோய் தடுப்பு முறைகளை பற்றி படித்தறிந்து சில ரத்தினக்கற்களின் கலவைகளை ஒன்றிணைக்க முற்பட்டான்.

ரூபி (Ruby) என்றழைக்கப்படும் சிவப்பு வர்ணத்திலான ரத்தினக்கல்லை , உயர் இரத்த அழுத்தம் மற்றும் அரித்மியா (arrhythmia) போன்ற இதய பிரச்சனைகளின் நிவாரணியாய் தேர்தெடுத்தான் ஔகத்.

ஹைபிரிட் தம்பியின் விலோசனங்கள் கலர் மாற, கூடவே, ஏகஷ்ருங்கா ஹைனாவாய் பிறப்பெடுக்கையில் அவன் பார்வையின் தாக்கமும் வேறு மாதிரியாய் மாறிப்போக, இப்படியான சிக்கல்கள் எல்லாவற்றையும் தடுத்திட, ஆராய்சியாளனுக்கு கைக்கொடுத்தது பச்சை வர்ண மரகதக்கல்லே (Emerald).

சுரஜேஷ், அஃறிணையாக உருமாறுகையில் அவனுக்குள் ஏற்படுகின்ற பதட்டம், மற்றும் மனச்சோர்வை போக்கும் வண்ணமாக, ரோஸ் குவார்ட்ஸ் (Rose quartz) என்றக் கல்லை தேர்வாக்கினான் அண்ணனவன்.

உடலில் ஏற்படும் ஊழலால், சரிவர தூங்க முடியாது, தலைவலி கொண்டு தவிக்கும் தம்பிக்கு ஏற்றாற்போல, அமேதிஸ்ட் (Amethyst) என்ற ரத்தினக்கல்லை மருந்தாக்கிட முடிவெடுத்தான் வருங்கால டாக்டரவன்.

தனித்தனியாய் சேகரித்த ரத்தினக்கற்களை தூளாக்கிக்கொண்ட ஔகத், அவைகளை ஒன்று சேர்த்து கலவையாக்கினான்.

அதோடு நானோ டைமண்ட்ஸ் சிறிதளவு கலந்து புதுவித மருந்தொன்றை கண்டுப்பிடித்தான்.

அது சரியாக வேலை செய்கிறதா, இல்லையா என்பதை கண்டறிய ஏகஷ்ருங்காவை மூத்தவன் அவன், மிருகமாய் மாற்றிட வேண்டும்.

அதற்கு ஔகத் ரொம்பவெல்லாம் மெனக்கெடவில்லை. தம்பியவன் நெருங்கி வர, அண்ணனோ விலகி போனான்.

அவ்வளவுதான். முதல் அரை மணி நேரத்தில் மனிதனாய் மூத்தவனோடு வாக்குவாதம் கொண்டவன் அடுத்த நிமிடமே உறும்பல் கொண்டு கோபத்தை வெளிக்காட்டினான்.

ஹைனாவாய் உருக்கொண்டிருந்த தம்பியோ, புது மருந்து கொண்ட ஊசி தேகத்தில் குத்தப்பட்டு உள்ளுக்குள் வேதியல் மாற்றம் ஏற்பட, அலறி துடித்தான் மேனி கொண்ட எரிச்சலில்.

பயந்துப் போன ஔகத்தோ, தம்பிக்கு என்னானதோ ஏதானதோ என்று தெரியாது பதறி ஓடினான் கெய்டனை நோக்கி.

பெத்தவனோ வந்த நொடி மகனின் உருவம் கொடூரமாய் எரிந்து போகும் நிலையில் கருகத் தொடங்குவதை கண்டு ஆடிப்போனான்.

வலியில் ஆவேசமாய் உறும்பல் கொண்டு அறையை தும்சம் செய்த சுரஜேஷை காண முடியா ஔகத்தோ, கட்டிலின் மீதேறி பின்னாலிருந்து தம்பியவனைக் கட்டிக்கொண்டான்.

''சோரிடா சுரஜேஷ்! சோரிடா! இப்படி ஆகும்னு நான் நினைக்கலடா! சோரிடா!''

என்ற மூத்தவனோ இறுக்கமான அணைப்போடு கதற, ரணத்தில் உழன்றவனோ முதுகிலிருக்கும் அண்ணனை உடலைக் குலுக்கி கீழே தள்ளினான்.

தரை விழுந்த ஔகத்தோ, கொத்து கொத்தாய் சதைகள் பீய்ந்து கீழே விழுந்த தம்பியைக் கண்டு கிலி பிடித்தவன் போல் அகண்ட விழிகள் இமைக்காது, அலமாரி ஓரமாய் போய் சொருகிக் கொண்டான்.

சுரஜேஷின் சரீரமோ, தீப்பிழம்பு கணக்காய் காட்சியளிக்க, கெய்டனோ வந்து சேர்ந்தான் கையில் மெர்குரி (mercury) கொண்ட தெர்மோமீட்டரோடு (thermometer).

மிடலில் அலைமோதிய அஃறிணையான மகனை நோக்கி எட்டி பாய்ந்த தகப்பனோ, ஒரு கையால் அவன் கழுத்தை அழுத்திக் கொண்டான். கால்கள் கொண்டு திமிறியவனின் உடலை கட்டுக்குள் கொண்டு வந்தான் கெய்டன்.

பிடியிலிருந்து தப்பிக்க பார்த்த ஹைனாவோ, உடலை அங்கும் இங்கும் அசைக்க, பிடியை கெட்டியாக்கிக் கொண்ட கெய்டனோ, ரெண்டாய் உடைத்தான் கையிலிருந்த தெர்மோமீட்டரை.

பாதி பொசுங்கி போயிருக்கும் ஹைனாவான சுரஜேஷின் தலையை வலுக்கொண்டு பின்னோக்கி சாய்ந்தான் கெய்டன். மகனவனோ மள்ளல் கொண்டவனாய் வாயை பிளந்தான் உறும்பலோடு, வாயோரம் எச்சில் கலந்த குருதி வழிந்திறங்க.

எமனிடமிருந்து போராடி மீட்டு வந்த பிள்ளையின் நிலையை நொந்தவனாய் சகித்த தந்தையவனோ, தெர்மோமீட்டரின் மெர்குரியை உதறினான் சுரஜேஷின் தொண்டைக்குள்.

சாம்பல் வர்ண உயிர்க்கொல்லியோ, மிருகமாய் மாறிப்போயிருந்த ஆணின் குருதியில் கலந்தது.

கெய்டனின் கண்ணெல்லாம் நீர் பூத்து வழிய, வலிப்பு வந்தவன் போல் வெட்டியிழுத்தது ஏகஷ்ருங்காவின் அஃறிணையான தேகம்.

மகனின் தலையை இறுகப்பற்றி கோதிக் கொடுத்தவன், ஈசனை மனதார பிராதித்துக் கொண்டான், மகனுக்கு எதுவும் நேர்ந்திடக்கூடாதென்று.

நடந்தது என்னவென்று கெய்டன் அறியாத பட்சத்தில், பகுத்தறிவாளனாக அவனால் ஒன்றை மட்டுமே அப்போதைக்கு யோசிக்க முடிந்தது.

அதுதான் அந்த மெர்குரி ஐடியா. ஏகஷ்ருங்காவின் உடலுக்குள் வேதியல் மாற்றங்கள் எல்லாம் விதியை மீறிய எதிர்மறையாய் இருக்க, கண்டிப்பாய் ஆளை சாகடிக்கும் மெர்குரி அவனை ஒன்றும் செய்திடாது என்று நம்பினான் அப்பனவன்.

ஆகவே, அவசரத்துக்கு வேறு வழியும் இல்லையென்பதால், கடவுளின் மீது பாரத்தை போட்டு மகனின் உயிரை காப்பாற்ற ஆளைப் போட்டுத்தள்ளும் மெர்குரியை கொண்டு சுரஜேஷின் உயிரை காப்பாற்றிட துணிந்தான் பெத்தவனவன்.

கருகிய வாடை குடலை குமட்ட, ஒன்னும் பாதியாய் உருமாறிக் கிடந்தான் ஏகஷ்ருங்கா. கடல் கன்னிப்போல் மேலே கீழே என்று மாறுதல்கள் கொண்டிருந்தாலும் பரவாயில்லை.

ஆனால், சுரஜேஷோ வலப்பக்கம் உயர்திணையாகவும், இடப்பக்கம் அஃறிணையாகவும் காட்சியளித்தான்.

கலவரத்துக்கு காரணமான ஔகத்தின் நேத்திரங்களுக்கு தம்பியவன் கோலம் அகோரமாய் தெரிந்தது.

பேயறைந்தவன் கணக்காய் பதுங்கியிருந்தவன் நோக்கி ஏகஷ்ருங்கா கையை நீட்ட, ஓடிப்போய் அவனின் விருகமான கைகளை பற்றிக்கொண்டு கண்ணீர் வடித்தான் மூத்தவன்.

கெய்டனோ மூடியிருந்த மிழிகளை மெதுவாய் திறக்க, பேச முடியா சுரஜேஷோ அழுகை கொண்ட அண்ணனின் கன்னத்தை வருடினான் ஹைனாவின் விரல் நகங்கள் கொண்டு.

''நான் இதை எதிர்பார்க்கலப்பா! சோரிப்பா! என்னே அனுப்பிடுங்க! நான் இனி இங்க இருக்கலப்பா!''

என்றவனோ குமுறி அழ அந்த இருபது வயதில், கெய்டனுக்கோ அவன் தம்பி நிமலனையே பார்த்தது போலிருந்தது.

எப்படி அவனோ கொளுத்திப் போட்டு, சாம்பலாக்கிய மருத்துவமனைக்கு திரும்பி வந்து, அண்ணா,நொண்ணா என்று கெய்டனுக்காய் கண்ணீர் வடித்தானோ அதேப்போலவேதான் காட்சியளித்தான் இப்போது ஔகத்.

பழசை நினைத்து விரக்தியாய் தோளை குலுக்கிய கெய்டனோ,

''எங்க போவே? உன் தம்பியே விட்டுட்டு?''

என்றுக் கேட்க, ஒப்பாரி கொண்டவனோ ஏறெடுத்து பார்த்தான் அப்பாவின் முகத்தை. அஃறிணை தம்பியோ ஓட்டை ஒடிசலான அவன் கையை தூக்கி அண்ணனின் மண்டையிலேயே ஒன்று போட்டான்.

மூக்கை உறுஞ்சிக் கொண்ட ஔகத்தோ, எலும்புகள் தெரிய ஓட்டையாகிப் போயிருந்த தம்பியின் உடம்பை அப்பாவின் நெஞ்சிலிருந்து பிரித்தெடுத்து கையில் ஏந்தினான்.

ஆடையற்று பிசுபிசுத்து ஒட்டிய உடம்பை, நேராய் தூக்கிக் கொண்டு போனான் அவனின் லேப்புக்கு. கெய்டனோ அதற்குள் வாழை இலையை கொண்டு வந்து அலுமினிய கட்டிலில் விரித்திருந்தான்.

சுரஜேஷுக்கு முதலில் மயக்க மருந்தை கொடுத்து அவனை உறங்க வைத்த அப்பன், பின், மூத்தவனிடம் அவன் செய்த சாதனையான ஆராய்ச்சியை பற்றி கேட்டறிந்தான்.

அதில் சில பல மாற்றங்கள் செய்தவன், மகனுக்கு சொல்லிக் கொடுத்தான் அவன் கற்றுக் கொண்டு கைதேர்ந்திட வேண்டிய மிக முக்கியமான வேதியல் ட்ரிக்ஸ்களை.

அதே வேளையில், அஃறிணையான உயர்திணையாய் சதையற்று கிடக்கின்ற மகனை மீண்டும் பழைய சுரஜேஷ்ட ஏகஷ்ருங்காவாய் திரும்ப கொண்டு வரும் பொறுப்பை ஔகத்தின் கையிலேயே ஒப்படைத்தான் கெய்டன்.

தவறுகள் நடப்பது இயல்பு. ஆனால், மூத்தவன் கண்டுப்பிடித்த மருந்தை முதலில் ஒரு விலங்கைக் கொண்டு பரிசோதித்திருக்க வேண்டும். அதை அவன் மறந்ததால் வந்த வினையே இது.

பழியை தூக்கி ஔகத்தின் மீது போட்டு, அவனை நிர்கதியாய் நிற்க வைத்திட கெய்டனுக்கு விருப்பமில்லை. தவறிழைத்தவனும் மகன்தான், காயங்கொண்டிருப்பவனும் அவன் ரத்தம்தான்.

ஆகவே, ஒருவனுக்காய் மற்றொருவனை தண்டிப்பதில் உடன்பாடில்லை பெத்தவனுக்கு. அதனால், குற்றமுள்ள நெஞ்சோடு குறுகுறுத்து நின்ற ஔகத்திற்கு வாய்ப்பொன்று கொடுத்தான் கெய்டன், தவறை சரிசெய்ய.

ஆகவே, அப்பாவின் நம்பிக்கையை இம்முறை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்பதை விட, தம்பியை குணப்படுத்தியே ஆக வேண்டுமென்ற எண்ணம் வெறியாய் வேரூன்றி போனது ஔகத்துக்குள்.

முதலில் சுரஜேஷின் எலும்புகளை மறைக்கும் சதைகளுக்கு ஒரு தீர்வை கண்டுப்பிடித்தான், டாக்டர் படிப்பு படித்துக் கொண்டிருந்த ஆணழகன்.

அதைப்பற்றி கெய்டனிடமும் மறைக்காது சொல்லி, டேடியின் அறிவுரைகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டான் ஔகத்.

நவீன வழிகளில் ஆணவனுக்கு கைகொடுத்தது திசு என்ஜினியரிங் (tissue engineering) எனப்படும் செயல்முறையாகும்.

இது புதிய திசுக்களை உருவாக்குவது, சேதமடைந்த திசுக்களை சரிசெய்வது அல்லது மாற்றியமைப்பது போன்ற விடயங்களை கொண்ட ஒரு செயல்பாடாகும்.

சுரஜேஷ் தொலைத்திருந்த தேகத்துக்கு புதியதொரு பொலிவை கொடுக்க, ரகசியத்தை உடைத்து கெய்டனிடம் போய் நின்றான் ஔகத்.

அடுத்தவர்களிடமிருந்து பெறப்படும் செல்லை அலோஜெனிக் செல் (allogeneic cell) என்பர்.

செல் கலாச்சாரம் என்றழைக்கப்படும் செல் கல்ச்சர் (cell culture) என்ற முறையை பின்பற்றி, இறந்துப் போனே இரட்டையனின் ஸ்டெம் செல்களை ஆராய்ச்சி கூடத்துக்குள் வைத்து வளர்ச்சி கொள்ள வைத்தான், ஔகத்.

போன தடவையைப் போல் இம்முறை சொதப்பிடக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருந்தான் வருங்கால டாக்டரவன்.

ஆகவே, அவன் செல்லாகினும் பல பரிசோதனைகளுக்கு பின்னரே, கெய்டனின் அனுமதியோடு அதை தம்பிக்கு பயன்படுத்திட முடிவெடுத்தான் விகடகவியவன்.

வடிவமைக்கப்பட்ட (scaffold) கட்டமைப்பில் செல்களை விதைத்தான் மூத்தவனவன். இது பெரும்பாலும் பாலிமர் (polymers), உலோகம் (metal) மற்றும் பீங்கான் (ceramics) போன்றவற்றால் தயாரிக்கப்பட்டிருக்கும்.

ஸ்காபோல்ட்டில் பாதுகாக்கப்பட்டிருக்கும் செல்களை பயோரியாக்டர்கள் (bioreactor) மூலம் அடைக்காத்தான் கேடி மகன். செல்களான உயிரணுக்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்சிஜன் கொண்டு முப்பரிமாண (3டி) அமைப்பில் வளர வழிவகுத்தான்.

அடைக்காக்கும் இம்முறை, உடம்புக்குள் திசுக்கள் வளரும் விதத்தை அப்படியே ஒத்தியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏறக்குறைய, ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு சுரஜேஷுக்கு தாயாகி போனான் ஔகத். தம்பியவனை துடைத்து விடுவது தொடங்கி அவனுக்கு சோறு ஊட்டி விடும் வரை எல்லாவற்றையும் அவன்தான் கவனித்துக் கொண்டான்.

வடிமைத்த செல்களை வேறு, அவ்வப்போது சரிப்பார்த்துக் கொண்டான் மூத்தவனவன், தேவைக்கான தன்மையில் அவை இருக்கிறதா இல்லையா என்று.

உருவாக்கி, அடைகாத்த செல்களை கொஞ்சங் கொஞ்சமாய், ஏகஷ்ருங்காவின் உடலுக்குள் அறுவை சிகிச்சையின் மூலம் இடமாற்றம் செய்தான் அண்ணனவன்.

ஹைனாவின் தேகத்தை பாதியாய் கொண்ட சுரஜேஷின் மேனியோ, புது செல்களின் தாக்கத்தில் முழு மனிதனாய் உருமாறியது முதல் சில வாரங்களிலே.

ஒருவழியாய் சோறு தண்ணி மறந்து வேலை பார்த்து தம்பியை நல்லப்படியாய் மீட்டு வந்தவன் அவன் அளவில் ரொம்பவே சோர்ந்திருந்தான்.

இருப்பினும், சுரஜேஷின் பிரச்சனை முற்றாக ஒரு முடிவுக்கு வரவில்லை. அதற்கான முயற்சியை ஔகத்தும் கைவிடவில்லை.

பகலெல்லாம் படிப்பு, ராவெல்லாம் தம்பிக்கான ஆராய்ச்சி என்று கழிந்தவனின் நாட்களை அழகாக்க விரும்பினான் கெய்டன். மகன் அவனை அனுப்பி வைத்தான் மலேசியாவிற்கு மருத்துவ படிப்பின் விடுமுறை காலத்தில்.

தம்பியை பிரிய மறுத்தவன் ஒருவழியாய் சுரஜேஷ் வற்புறுத்த கிளம்பி போனான் தாய்நாட்டிற்கு. மீகன் அவனை வரவேற்று மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

விரன் மற்றும் நிழலிகாவின் மகன் பிறந்தநாளின் போது முதல் முறையாக கிருத்திகாவை கண்ட ஔகத் ஒரு கணம் ஸ்தம்பித்து போனான்.

ஏகஷ்ருங்கா சில வருடங்களுக்கு முன் தீட்டியிருந்த ஓவியம் உயிரோடு பட்டாடை உடுத்தி தங்க சிலையாய் பவனி வர உடனே அழைத்தான் அண்ணனவன் சின்னவனுக்கு.

சங்கதி கேட்டவனோ, கிளம்பி வர பிடிவாதம் கொள்ள, மூத்தவனோ அவனே அவளை அழைத்து வருவதாய் சொல்லி வாக்குறுதி அளித்தான்.

கடவுளின் திருவிளையாடலை அறியா ஔகத்தோ, தெரியிழையின் அழகில் மயங்கி அவளிடம் பேச்சு கொடுக்க, அகம்பாவ கள்ளியோ, அவளுக்கே உரிய திமிர் குறையாது ஆணவ பார்வை வீசிப்போனாள் ஆணவனை நோஸ் கட் செய்து.

அதை ரசித்தவனோ, தம்பியின் விருப்பத்தை மூளைக்குள் ஆணி அடித்துக் கொண்டு ஒளியிழையின் பின்னாலேயே சுற்றி வர, எவனுமே நெருங்கக்கூட யோசிக்காத கிருத்திகாவின் இதழ்களில் விரல் பதித்து, பாவையின் பார்வைகள் தின்று, மாரிடிக்க முட்டி நின்ற காளையவனிடத்தில் தொலைந்துத்தான் போனால் ரீசன் மகள்.

தம்பி, தங்கக்கம்பி என்று தொடக்கத்தில் சுரஜேஷின் எண்ணத்தை ஈடேற்றுவதில் திண்ணங்கொண்ட அண்ணனோ, பாடல், கித்தார் என்று எல்லோரும் பார்க்க நேரடியாகவே நேரிழையே சைட்டடித்தான்.

ஆனால், பைந்தொடியவளோ அவனை கண்டுக்காது நட்பை வளர்த்தாள். அவனறியாது விழுந்தான் ஔகத், அந்திகையவள் தேடி வந்து இணைத்த இதழ் கோர்வையில்.

வாலிப வயதுக் கொண்டிருந்த மோகம் படுக்கையறை வந்த பெண்ணின் மீது போதையாகிப் போனது அழகனுக்கு. அரங்கேறிய ஒவ்வொரு சம்பவங்களும் இருவரின் ஆசையை பறைசாற்ற, உறவை மேலோட்டமாய் பார்க்காது, ஆழ்ந்து நோக்கிட ஆரம்பித்தான் ஔகத்.

இனம் புரியா பித்துக்கொண்டான் இளைஞனவன், கோற்றொடி அவளின்பால். அலரவள் அவளுமே அவன் இழுத்த இழுப்பிற்கு வளைந்து கொடுத்தாள், வெறும் வாய் வார்த்தையால் மட்டுமே வேண்டாம் எனக்கூறி.

இளமை வேகம் தாபங்கொள்ள, இருவரின் அலைபேசி உரையாடல்கள் அதை காதலென உணர்த்தியது ஔகத்திற்கு.

ஒருவேளை, சுரஜேஷ் கேட்காமலிருந்து, பேரழகனவன் காதல் வயப்பட்டிருந்தால் கூட பரவாயில்லை.

ஆனால், எப்போது தம்பியவன் இஷ்டப்பட்ட மங்கையின் மீது மூத்தவன் அவனுக்குமே காதல் தலைவிரித்தாட ஆரம்பித்ததோ, அப்போதே முடிவெடுத்து விட்டான் ஔகத், கட்டினால் கிருத்திகாவைத்தான் கட்டிட வேண்டுமென்று, அதுவும் அவள் ஒருத்தியே சுரஜேஷ் விரும்பிய அண்ணியென்ற உறுதியோடு.

படாஸ்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/படாஸ்.14/
 

Author: KD
Article Title: படாஸ்: 112
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top