What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் பத்து

யாரும் இங்கு உத்தமர்கள் கிடையாது.

செய்த தவறுக்கு மனம் வந்து மன்னிப்பு கேட்பது ஒரு ரகம்.

தவறை உணராது தான்தான் சரி, தனக்கு மட்டுமே வலி என்று மற்றவர்களின் மீது மொத்த பழியையும் போடுவது இன்னொரு ரகம்.

இதில் தெரிந்து செய்த தவறு, தெரியாமல் செய்த தவறென்று வேறு ஒரு தனி பிரிவுண்டு.

மற்றவர்களின் குற்றங்களை குத்தி காட்டிட முந்திக் கொள்ளும் மானிட குணம் என்னவோ தனக்கென்று வருகையில் மட்டும் பின்னடைவு கொள்கிறது இப்படியான விடயங்களில்.

சிறிய முட்டாள்தனம் எல்லாவற்றையும் சிதறடித்திடும் சில்லாய் செகண்ட்களில்.
*
தீனரீசன் தேவகுஞ்சரி இல்லம்
ரீசன் குஞ்சாய் படுக்கையறை


தவமின்றி வரமாய் பெற்றெடுத்த கீத்து குட்டியோடு கதைத்தாயிற்று குஞ்சரி. காதல் கணவன் மட்டும் வம்படியாக இருக்க என்தான் செய்வாள் சீமாட்டியவள் போராடி தோற்பதை தவிர.

போனை பஞ்சணையில் வைத்தவள், இருக்கரங்களையும் ஒருசேர கால் தொடையினில் அழுத்தமாய் உரசி நீண்டதொரு பெருமூச்சுக் கொண்டாள்.

மூடிய இருவிழிகள் ரெண்டும் தூவல் கொண்டன கோதையின் உள்ளம் கனக்க.

தம்பதிகள் இருவரும் முட்டி மோதி நாட்களை கடத்தி, மீண்டும் சேர்ந்துக் கொள்ள; அன்யோன்யம் கலைக்கட்டும். பிரிந்து சேர்ந்த இருவரில், குஞ்சாய் விடாப்பிடாரியாகவும் ரீசன் செல்லங்கொஞ்சனாகவும் தான் இருப்பர்.

சண்டை போட்டு திரும்பிய மனைவியை மடியின் மீது கிடத்திக் கொண்டு உச்சி தொடங்கி கழுத்து வரைக்கும் உதட்டால் ஒத்தடம் கொடுப்பான் புருஷனவன்.

சாம்பாரில் மிதக்கும் கத்திரிக்காயாய் தேவகுஞ்சரியவள் ஆட்டம் கொள்ள, மோராய் கலந்திடுவான் தீனரீசனவன்; பெருங்காயம் அவளில்.

மௌனியின் மிழிகளில் விசும்பலற்ற கண்ணீர் பெருக்கெடுக்க, மனம் முழுக்க ரீசன் குஞ்சாய் இருவரும் கொண்டாடித் தீர்த்த கல்லூரி தொடங்கிய திருமண பந்த காதலெல்லாம்; நெஞ்சை நெகிழ வைத்த நொடியிலேயே நெகிழியாய் கொழுந்து விட்டெரிந்தது விருந்தனையின் நெஞ்சுக்குள்.

''எல்லா தப்புக்கும் மன்னிப்பு கிடையாதுன்னு நான் ரொம்ப நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன் ரீசன்!!''

என்றவளைப் பார்த்து மஞ்சம் சிரித்தது. ரீசனும் குஞ்சாய் அவளும் பார்த்திருந்த ஓராயிரம் ரெயின்போ எல்லாம் வண்ண வண்ணமாய் கானல் காட்சியாட்டம் கற்பாளின் திட்டிகளின் முன் உலா வந்து போயின.

ரீசனின் ஒவ்வொரு தீண்டல்களும் தலைவியின் தேகத்தில் மயிலிறகின் வருடலாகவே இருக்கும். கணவனின் முத்தங்கள் அத்தனையும் இலக்கியமே இயமானியின்பால். உரிமைக் கொண்டவனின் முரடற்ற முயங்களெல்லாம் சொர்க பொதிகையே வல்லபியோடு கூடுகையில்.

நயாகராவை அம்பகங்களில் கொண்டவள் ஒரு முறை, இல்லை கடைசி முறை ஆசையாய் தொட்டுரசினாள் அவர்களின் காதல் படுக்கையை.

''எதை வேணும்னாலும் என்னாலே தாங்கிக்க முடியும்டா.. ஆனா நீ என்ன மத்தவங்க முன்னுக்கு வேணான்னு சொல்றதை மட்டும் என்னால ஏத்துக்கவே முடியாதுடா ஜூனியர்!! அதுக்கு நான் செத்தே போயிடுவேன்டா ரீசன்!! செத்தே போயிடுவேன்!!''

என்றவளின் கதறல் ஒருபுறம் ஒலிக்க, மறுபுறமோ அறை முழுதும் அவர்களின் காதல் பரிபாஷைகளின் சிரிப்பொலி அசரீரியாய் கேட்டது.

உயிர் பிரியும் வரை பிரிய மாட்டேன் என்ற வாக்குறுதிகளெல்லாம் பொய்த்து போக, நெஞ்சம் வெம்பி போனாள் அரிவையவள்; கல்லூரி கால காதல் வசனங்களெல்லாம் செவிக்குள் சவுக்கடி கொடுக்க.

காலத்தின் மாயத்தை யாராலும் புரிந்துக் கொள்ள முடியாது என்பதற்கான நிதர்சனத்தை கண் கூடாய் பார்த்து உணர்ந்து விட்டாள் உல்லியவள்.

கண்ணீரோடு அலமாரியை நோக்கியவள் உள்ளிருந்து வெளியெடுத்தாள் ஆரஞ்சு வர்ணத்தில் பளிச்சிடும் டி- ஷர்ட் ஒன்றை. ரீசனுக்காக வாங்கி வந்திருந்தாள் பொண்டாட்டியவள், கனடா விஜயத்தின் போது; அவர்களின் வரப்போகின்ற திருமண ஆண்டு விழாவை முன்னிட்டு.

''ரீசன்.. இந்த தேவகுஞ்சரி பொறந்தது.. வளர்ந்தது.. காதலிச்சது.. வாழ்ந்தது.. எல்லாமே உனக்காகத்தான்!! உன்கூடத்தான்!! நீ மட்டும்தான்டா எனக்கு!!''

தேம்பிய மணவாட்டியவள் விழிகளை மூடிக்கொண்டப்படி நெஞ்சில் இறுக்கிக் கொண்டாள் ரீசனுக்காக வாங்கி வந்த ஆடையை. கணக்கு வழக்கில்லாமல் ஆரஞ்சு டி- ஷர்டில் முத்தங்கள் வைத்தாள் பிரிவை தேர்தெடுத்த ஊடையவள்.

''என்ன நீ எவ்ளோ வெறுத்தாலும்.. என்னாலே உன்னே வெறுக்க முடியாதுடா!! இல்லாட்டி விசாகா விஷயத்தை பொறுத்து போயிருப்பேனா!! உன் மேலே லவ் இல்லாமையா சும்மா இருந்தேன்!! அவ்ளோ காதலிக்கறேன்டா ரீசன் உன்னே நான்!! அவ்ளோ காதலிக்கறேன்!! நீ புரிஞ்சிக்கலையே!!!''

நிமிடங்கள் கடந்தாலும் ஆட்டியவள் விழியோர அருவிக்கு விடைகொடுக்க மனமின்றி, நேராய் அவளின் அலமாரி பக்கம் போனாள்.

''புரிஞ்சிக்கலன்னு இல்லே.. நீ சரி.. நான்தான் தப்பு.. யாரா இருந்தாலும்.. நான் பண்ணாதே எப்படி..''

முடிக்காதவளின் விரல்கள் கேபினெட்டின் கதவைத் திறந்து வெளியெடுத்தது வதனியவளின் கல்யாண சேலையை, பிளாஸ்ட்டிக் ஹேங்கரிலிருந்து.

கூடவே, ஹேங்கரில் தொங்கிய வெள்ளை வர்ண சுடிதாரின் டுப்பத்தா ஒன்றையும் உருவி இழுத்தாள் அருணியவள். மஞ்சம் சென்றமர்ந்தவள் உடலை ஆரஞ்சு சட்டையின் மீது சரித்தாள்.

கைப்பேசியில் காதல் கணவன் ரீசனுக்காக வீடியோ ஒன்றை தயார் செய்தாள்.

''ஒரு பேப்பர் என்னே உன்கிட்டருந்து பிரிக்க முடியாது ரீசன்!! அதுக்கு நான் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன்!! நீ கட்டுன தாலி என் கழுத்திலிருந்து இறங்கணும்னா அது என் உயிர் போனா மட்டும்தான் நடக்கும் ரீசன்!! உனக்கு அதுதானே வேணும்!! அப்படியே பண்ணிடலாம்!!''

குலுங்கி கதறி ஆவேசம் கொண்டாள் தவறிழைத்தவள். இல்லை, கத்தியின்றி சத்தமின்றி கொலை செய்தவள், வெறும் வாய் வார்த்தையால்.

''தெரியாமே மூனு உயிரும்.. தெரிஞ்சே ஒரு உயிரும் போக.. முழுக்க.. முழுக்க நான் காரணமாயிட்டேன்!! என்னோட பிடிவாதம்.. கோபம்.. அவசரம்.. பொறாமை.. இதெல்லாம் ஒன்னு சேர்ந்து ஒரு பாவமும் பண்ணாதே நாலு உயிரே அநியாயமா காவு வாங்கிடுச்சே!!''

முகத்தை கரங்களால் மூடிக்கொண்டாள் குற்ற உணர்ச்சி தாளாதவள். ஆரஞ்சு சட்டை குடும்பினியின் கண்ணீரில் அபிஷேகம் கொண்டது.

''உண்மையே சொல்லி மிச்சம் இருக்கறே யாரையும் நான் சாகடிக்க விரும்பலே ரீசன்!! நீ சொன்ன மாதிரியே!!''

போனை திருப்பி வைத்தவள், அவள் மீதே அவள் கொண்ட வெறுப்பில் சொன்னாள்.

''போய் சேர்ந்த நாலு உயிருக்கு பதில்.. என் உயிர்தான்!! என் உயிர் மட்டும்தான்!!''

ஓலமிட்டாள் நிரந்தரமாக தீனரீசனை விட்டு பிரிய போகின்ற வதுகையவள் பொங்கி.

''யாருக்காக!! எதுக்காக!! எல்லாம் நடந்துச்சோ!! அதுக்காகத்தான் இதுவும்!! உனக்காகத்தாண்டா ஜூனியர்!! உனக்காக மட்டும்தான்!!''

துர் சம்பவங்களின் ஆணிவேருக்கான காரணமென்னவோ அவள் மனதைக் கொள்ளைக் கொண்ட ஒருவன்தான். அன்றைய காதலன் இன்றைய கணவன், தீனரீசன்.

''செத்துப்போன்னு நீ சொன்ன அன்னைக்கே நான் செத்துருக்கணும் ரீசன்!! எப்படியும் என்கிட்டே வந்திடுவேன்னு நினைச்சேன் பாரு!! அதுதான் நான் பண்ணே மிகப்பெரிய முட்டாள்தனம்!!''

நெற்றியில் அடித்துக் கொண்டாள் மிழிகளில் பெருமழை கொண்ட காந்தையவள்.

''காதலுக்காக என்னவேனும்னாலும் செய்றவதான் இந்த தேவகுஞ்சரி!! ஆனா.. அந்த காதலையே தன்மானத்துக்காக தூக்கி போடறவன்தான் என் தீனரீசன்!! தப்பானே ஆள் மேலே பொய்யான அன்பு வெச்சு நடிக்க முடியாதுன்னு என் மனசே உடைச்சே என் ரீசன்!!''

ஆணவனின் மீது கொண்ட பைத்தியக்காரத்தனமான காதலால்தான் அத்தனையும் நடந்தேறியிருந்தது, அன்றைக்கு மட்டுமல்ல; இன்றைக்கு இப்போதும்.

''இப்பதான் புரியுது.. கடவுளோட விளையாட்டு..''

என்றவள் எழுந்தாள் கையில் டுப்பத்தா கொண்டு.

''விசாகா ஏன் நம்ப வாழ்க்கையிலே வந்தான்னு!! இதைத்தான் சொல்லுவாங்க போலே.. நடக்கறதெல்லாம் நல்லதுக்கேன்னு..''

என்றவளோ ட்ரஸிங் டேபிள் நாற்காலியை இழுத்து அதன் மீதேறினாள்.

''நான் போக..''

என்றவளோ கையிலிருந்த சால்வையை, சுவற்றிலிருந்த இரும்பு கம்பியினில் தொங்க விட்டாள்.

''விசாகாவோடதான்.. இனி என்.. ரீசன் நீ!!''

அலறி கதறினாள், கீத்து குட்டியின் முன்னாள் தொங்கும் தொட்டிலிருந்த இரும்பு கம்பியினில் தொங்கிய சால்வையை இறுக்கமாய் பற்றி; முகத்தை அதில் மூடிய அகமுடையாள்.

''விசாகா.. என்ன விட கீத்துக்கு நல்ல அம்மாவா இருப்பா ரீசன்!! உனக்குமே எல்லாமாவும்!!''

மொத்த உடலும் அனலாய் கொதிக்க, உயிர் போகும் ரணத்தில் கணவனவனை நினைத்து வெம்பினாள் வதூ அவள்.

''மன்னிப்பு கேட்க கூட தகுதியில்லாத ஜென்மம் நான்!! என்னே நீ மன்னிக்கவே வேண்டாம் ரீசன்!! என் மேலே உன் கோபம்.. வெறுப்பு.. எதுவுமே குறைய வேண்டாம்!!''

காலனிடத்தில் உயிரை தாரம் வார்த்திட துணிந்து விட்டாள் ரீசனில்லாத வாழ்வை வாழ விரும்பாத விருந்தனையவள்.

''அந்த காதல் குறைஞ்சிட கூடாதுன்னுதான் நான் இப்போ இப்படி ஒரு முடிவையே எடுக்கறேன் ரீசன்!!''

என்றவள் வீங்கிய அம்பகங்களை மூடி, தலையை சால்வைக்கு அர்பணித்தாள்.

வதுகையின் மரண ஓலத்தை எதிர்பார்த்து காத்திருந்தான் அந்நியன் கடமையை நிறைவேற்றிட.

*

தீனரீசன் தேவகுஞ்சரி இல்லம்
வரவேற்பறை


''குஞ்சரி.. குஞ்சரி..''

மாமியார் அம்பாளின் குரல் வரவேற்பறையில் கணீரென்றிட, வேலைக்காரியோ ஓடோடி வந்தாள் அடுக்களையிலிருந்து.

''இவ்ளோ நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருக்கே கிட்சன்லே!! வீட்டுக்கு ஆள் வந்தது கூட தெரியாமே!!''

அம்பாள் கறாராய் கேள்வியெழுப்ப, புதிய பணிப்பெண்ணோ பேந்த பேந்த விழித்தாள்.

''ஸ்ரீலங்காவாமா..''

டிவியை ஆன் செய்தப்படி கேட்டார் ரீசனின் அப்பா தாண்டவன்.

''ஓமம்..''

என்ற ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னவளோ சும்மாவே நிற்க, புரிந்து போனது அம்பாளுக்கு அவள் புதுசென்று.

''சரி.. சரி.. குஞ்சரி எங்கே..''

''மேடம்.. மேலே..''

என்றவள் கையை மேல் மாடி நோக்கி காட்டிட, தலையை ஆட்டிக் கொண்ட அம்பாளோ முனகலோடு டைனிங் டேபிள் ஒதுங்கினார்.

''நல்ல வேளை இதாவது புரிஞ்சதே..''

பெரியவர்கள் கீழ் தளத்தில் அக்கப்போர் புரிய, சின்ன வாண்டு கீத்து குட்டியோ பொறுமைக் கொள்ளாது மாடிப்படியேறி ஓடினாள் அவள் மம்மியை பார்த்திட.

''மம்மி!!''

என்றவள் ஆனந்த அலறலோடு பெற்றவளின் அறை நெருங்க, ட்ரஸிங் டேபிள் நாற்காலி நுனியில் பெருவிரலால் அழுத்தி நின்றவள் விலோசனங்கள் விரித்தாள்.

''மம்மி.. கீத்து நான் வந்துட்டேன்!! இதான் நான் சொன்னே சர்ப்ரைஸ்..''

மகள் அறையின் பிடியை கரங்களால் அழுத்த, சுமந்தவளோ முடிவில் மாற்றம் செய்ய விரும்பினாள் கீத்துவின் மீது கொண்ட பாசத்தால்; மகளின் குரல் கேட்டு.

''கீத்..''

என்ற தத்தளிப்போடு, நாயகியோ கந்தரத்தை இறுக்கியிருந்த பாசக்கயிறிலிருந்து விடுப்பட போராடினாள்.

இறுதியில் இயமானியின் பாதங்களோ நாற்காலியை பின்னோக்கி தள்ளி விட்டது.

கதவை திறந்த கீத்துவின் பார்வை முழுதாய் அறைக்குள் விழும் முன், கீழ் தளத்தில் பாட்டியின் குரல் பேத்தியை இழுத்து பிடித்து நிறுத்தியது.

''கீத்து!! கீத்து!! எங்க இருக்கே!!''

''பாட்டி நான் மம்மி ரூம்க்கு வந்தேன்..''

அவர்களின் பேச்சு வார்த்தை அப்படி போக, அறைக்குள்ளோ சால்வையோடு ஊஞ்சலாட்டம் ஆடினாள் ஊழ்துணையவள் முன்னும் பின்னும், கோமகளின் கழுத்து சால்வையில் சரமாரியாக சுத்திக் கொள்ள.

திட்டிகள் பிதுங்கி, தொண்டை வறட்சி கொள்ள; தேகமோ ஒருவித சூட்டை கிளப்பியது கிழத்திக்குள்.

காதெல்லாம் அடைத்துக் கொள்ள, இறுதி முயற்சியாய் பத்தினியவள் சுழன்றிய சுற்றில்; இரும்பு கம்பியினில் போடப்பட்டிருந்த டுப்பத்தாவின் முடிச்சு கழண்டிக் கொண்டது.

ஒருவழியாய் எமனிடமிருந்து தப்பித்த தம்பிராட்டியவளால், சனியிடமிருந்து தப்பிக்க முடியவில்லை.

கர்மா இஸ் பூமராங் (karma is boomerang).

சுழன்றிய வாக்கில் கழண்டிய சால்வை முடிச்சு, தேவகுஞ்சரியை கட்டிலின் விளிம்பில் பொத்தென விழ வைத்தது.

தலை இடித்து, கால் பரப்பி, தரையில் விழுந்தாள் ரத்தம் பீறிட்டு வெளிவர பின் கபாலத்திலிருந்து; ரீசனின் குஞ்சாய்.

''மம்மி!!''

என்றலறினாள் மகள் கீத்து குட்டி கதவை திறந்த நொடி தாயின் நிலையைக் கண்டு.

லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 10
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top