- Joined
- Jul 10, 2024
- Messages
- 498
![WhatsApp Image 2025-02-15 at 11.12.41 AM.jpeg WhatsApp Image 2025-02-15 at 11.12.41 AM.jpeg](https://amydeepz.com/data/attachments/0/116-5f62f3721246c9af57b8fcda05ae9fba.jpg)
தாழ் திறவாய் ததுளனே! : 18
''சத்தியமா அது பீரியட்ஸ் இல்லே! பிளீஸ், ராகன்! நான் சொல்றதை நம்புங்க!''
மஞ்சத்தில் மல்லாக்க கிடந்தவள் கண்ணோரம் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்க,
''நீ பெரிய அறிவாளி கணக்கா பேசும் போதே சுதாரிச்சிருக்கணும்டி! நான்தான் நொடி பொழுதுலே கண் மூடித்தனமா உன்னே நம்பிட்டேன்!''
சுவாகையின் தோள்களை இறுக பற்றி அவளை உலுக்கினான் ராகன்.
''வலிக்குது ராகன்! விடுங்க! பிளீஸ்!''
கட்டி அணைக்க வேண்டியவன் காட்டான் போல் நகங்கள் கொண்டு சுந்தரியின் மேனியை ஆடையைக் கடந்து பதம் பார்க்க,
''ஐயோ! நான் சொல்றதை கொஞ்சம் காது கொடுத்துதான் கேளுங்களேன்!''
''ஏன், பொய் சொன்னே சொல்லு ?! ஏன் பொய் சொன்னே?! இத்தனை மாசமா என்னே ஏன் இப்படி ஏமாத்திக்கிட்டு இருக்கே?! என்னதான் உன் பிளான்?! யாருக்காக இப்படியெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கே?! என் மொத்த பணத்தையும் ஒரேடியா கொள்ளை அடிச்சிட்டு போகத்தான் இவ்ளோ நாள் நல்லவே வேஷம் போட்டியா?!''
காந்தாரியின் தாலி கொண்ட கழுத்தை நெறித்திட ஆரம்பித்தான் ராகன். திணறியவளோ நயனங்கள் பிதுங்க, அவன் பிடியிலிருந்து தப்பித்திட போராடினாள்.
''நம்ப வெச்சு ஏமாத்திட்டல்லே?! துரோகி!''
சுணங்கியவன் குரல், ஆணவன் அம்பகங்களை குளமாக்க, அதுவரை அவன் கரங்களை பற்றி பிடித்து விலக்கிட தவித்த தாரமோ, அவன் கொண்ட வார்த்தையில் மரித்தவளாய் முயற்சியை கைவிட்டாள்.
''நம்பினேன்டி உன்னே! தெரியலடி ஏன்னு?!''
என்றவன் நேத்திரங்களை ஆழமாய் நோக்கிய நங்கையோ, ஆளானவன் முகத்தை இறுக பற்றி விலோசனங்களால் உரைத்தாள், அவன் கூற்று உண்மையில்லை என்று.
வஞ்சிக்கப்பட்டவனோ கதத்தில் அரக்கனாய் மாறி இருந்தான் அவன் நிலை மறந்து.
ஆனால், கொண்ட பிணியோ ஈவு இரக்கம் கொள்ளாது வேலையை காட்டிட ஆரம்பித்தது.
விராகனின் பார்வைகள் மங்கலாக, இதயத்துடிப்பு எகிறி நிற்க, வியர்த்துக் கொட்டிய தேகத்தோடு, தலைசுற்றல் கொண்டவனாய் விழிகள் இருண்டிட பொத்தென விழுந்தான் ஆணவன் பொஞ்சாதியின் மீதே.
இப்படித்தான் நடக்கும் என்று முன்கூட்டியே அறிந்திருந்த ஆரணங்கோ, கரங்கள் கொண்டு அவனை அணைத்துக் கொண்டாள் தலையெழுத்தை எண்ணி வெம்பியவளாய்.
சுவா என்னதான் பெரிய வீட்டு மருமகள் ஆகிய பின்னும், அவளுக்கான சித்த மருத்துவ ஆராய்ச்சிகளை கைவிடாது தொடர்ந்தாள்.
ஆகவே, பெரும்பான்மையான நேரங்களில் அவளுக்கான தனியறையில் குந்தி இருப்பதே அவளின் வழக்கமாய் இருந்தது.
ஆனால், வீடு வரைக்கும் யாரும் மருத்துவம் பார்த்திட வரக்கூடாதென்று முன்னரே ராகன் கறாராய் சொல்லியிருக்க, அதை மட்டும் கடுப்போடு ஒப்புக்கொண்டாள் ஆயிலை அவள், மூத்தவன் ஆரோனுக்கு கட்டுப்பட்டவளாய்.
சிகிச்சைக்கு ஆளில்லாத போதும் நாயகியின் எட்டு மணி நேர பணிக்கு குறுக்கே வராதிருந்தார் மாமியார் கனலி.
மாலையில் பூஜை புனஸ்காரங்களில் கூடுதல் பக்தி கொண்டவளை இல்லத்தில் புடிக்காதோர் என்று யாருமில்லை.
அப்படியான ஒரு நாளில், மதியம் ஏழுக்கு வீட்டு பணிப்பெண் ஒருத்தி விளக்கேற்றுவதைக் கண்ட ராகன், வேலைக்காரியை விசாரிக்க, சின்னமாவிற்கும் சரி பெரியம்மாவிற்கும் சரி உடம்பு சரியில்லை என்றுக் கூறி நகர்ந்தாள் கூலி வாங்குபவள்.
அவள் சொல்லிப் போனதன் காரணம் உணர்ந்த போதிலும், சுவா ஏன் அப்படியான பொய்யை சொல்லிட வேண்டுமென்று அதிருப்தி கொண்டான் கட்டியவன்.
ஆதலால், வழக்கம் போல் நேராய் சென்று பொஞ்சாதியையே கடித்திட ஆரம்பித்தான்.
''என்னை நேரடியா மோதி ஜெயிக்க முடியலன்னு, என் அம்மாக்கிட்டருந்து சண்டையை ஆரம்பிக்க பார்க்கிறியா?!''
புருஷன் தலையின்றி வாலின்றி பேசினாலும்,
''ஹான், ஆமா! எனக்கு வேறே வேலை இல்லே பாருங்க!''
என்றவளோ அவன் முகம் பாராது பதில் சொல்ல,
''என்னடி கொழுப்பா?! அக்ரிமெண்ட்டும் வேணா, ஒரு மண்ணும் வேணாம்னு கழுத்தை புடிச்சு வெளியே தள்ளி விட்ருவேன் பார்த்துக்கோ!''
என்ற வேள்வியோடு போத்தல்கள் கொண்ட பெண்டுவின் முழங்கையை பற்றி திருப்பி முறைத்தவனிடம்,
''இந்த வெட்டி பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லே! ஒரு மாசம் ஆகப்போகுது நமக்கு கல்யாணமாகி! வந்த நாளிலிருந்து நான்தான் விளக்கேத்திக்கிட்டு இருக்கேன்! இப்படியே போனா வீட்டுலே இருக்கறவங்க நம்பளை பத்தி என்ன நினைப்பாங்க?!''
பட்டும் படாமலும் பாவையவள் சொல்ல,
''என்ன நினைப்பாங்க?!''
பொடி வைத்தவளின் உள்ளர்த்தம் விளங்காதவனோ எதிர் வேள்வி கொண்டு நின்றான்.
''ஆஹான்! நீங்க அப்பாவாகிட்டிங்கன்னு நினைப்பாங்க!''
அழுத்தமாய் சொன்னவளை ஆழமாய் சில நொடிகள் இமைக்காது நோக்கினான் ராகன்.
முன்னாடி நடந்த சம்பவம் ஒன்று பளிச்சிட்டு மறைந்தது அவன் கருவிழிகளுக்குள். ஆணவன் கொண்ட வலியிலான பிடி மென்மையாய் மாறி மெதுவாய் உரசி தளர்ந்தது தாரகையின் முழங்கையிலிருந்து.
உதடுகளை ஈரமாக்கி கொண்டவன், நெற்றியோரத்தை விரல்களால் நீவி விட்டு வேறு பக்கம் திரும்பி நின்றவனாய்,
''அதுக்குத்தான் வாய்ப்பில்லையே!''
சாந்தமாய் சொல்ல,
''அது நமக்கு மட்டும்தானே தெரியும்!''
மெதுவாய் சொன்னவளுக்கும் மேனி திடுமென மயிர்க்கூச்சம் கொண்டது.
கொண்ட தடுமாற்றத்தை சமாளிக்க இருக்கையிலிருந்து கீழிறங்கினாள் பனிமொழி அவள்.
ராகனோ ஏதும் பேசாது அவள் செயல்களை கவனித்திட ஆரம்பித்தான்.
''என்ன?!''
தண்ணீர் போத்தலை ஓரம் வைத்தவள் கேட்க, மேவாயை உள்ளங்கையால் வழித்து கீழிறக்கியவன் ஒன்றுமில்லை என்று தலையாட்டினான்.
''அன்..''
அவன் எதையோ பேச தொடங்க, அதை உணரா நேரிழையோ,
''பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்! கூடவே, யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி நடந்துக்கணும்!''
என்றுக்கூறி அவன் பேசாது நிறுத்த காரணமாகினாள்.
ராகனும் இம்முறை சினங்கொண்டு அவளை குதறாது, உதிர்க்க வந்த வார்த்தைகளை விழுங்கி, மௌனியாய் அவள் சொல்வதை கேட்டிட தொடங்கினான்.
அவன் கண் முன் ஒரு மாதவிடாய் பட்டை கொண்ட பாக்கெட்டை காட்டிய பகினியோ,
''இனி இது நம்ப பெட்ரூம் குப்பைத்தொட்டியிலே மாசத்துக்கு நாலஞ்சு நாளைக்கு, ஐஞ்சாறு கிடக்கும்! ஏன், எதுக்குன்னு கேள்வி கேட்டு, என்னை டார்ச்சர் பண்ற வேலை வெச்சுக்காதீங்க!''
''அவ்ளோ தத்தி இல்லே நான்!''
''அதான், பார்த்தேனே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி!''
நக்கலாய் சிரித்தவளோ,
''பேட்ஸ்சை சும்மாலாம் அப்படியே தூக்கி போட முடியாது! என்னதான் பேப்பர்லே சுத்தி போட்டாலும், நமக்கு நேரம் சரி இல்லாட்டி, நாய், பூனை ஏதாவது குப்பையை கிளறினா அவ்ளோதான்! காலியான பேட்ஸ் மத்தவங்க கண்ணுலே பட்டிடும்! அது நமக்கு இன்னும் பெரிய தலைவலி!''
''அதுக்குன்னு உனக்கென்னே பீரியட்ஸையா வர வைக்க முடியும்?!''
சலிப்போடு கேட்டான் மேஜையின் விளிம்போரம் நின்றவன்.
'அதை ஏன்டா நான் வர வைக்கணும்! அதுதான் மாசத்துலே அஞ்சு நாள் டாங்கின்னு வந்திடுமே!'
மனசுக்குள் முனகிய பத்தினியோ,
''அதுக்கு ஒன்னும் நீங்க பெருசா மெனெக்கெட வேண்டாம்! இந்த லிக்விட்டே ஒரு துளி இப்படி பேட்லே ஊத்தின போதும்! இது ரத்தம் மாதிரியேதான்! பார்க்கவும், ஸ்மெல் பண்ணவும் அப்படியே அடுத்தவங்களே நம்ப வெச்சிடும்!''
சொன்னதை பேடையவள் செய்து காண்பிக்க,
''ஏய்! சீ! சீ! என்ன கன்றாவி இது! எடுத்திட்டு போ அங்கிட்டு! சொன்னா பத்தாதா?! செஞ்சுதான் காமிக்கணுமா?!''
விராகனோ முகத்தை சுளித்தான்.
''இல்லன்னா நீங்கதான் அதுக்கொரு குதி குதிப்பீங்களே! என்னவோ நான் உங்களே நம்ப வெச்சு ஏமாத்திட்டேன்னு! அதான், உங்க கண்ணு முன்னுக்கே என்ன பண்ண போறேன், எப்படி பண்ண போறேன்னு முன் கூட்டியே காமிச்சிட்டேன்!''
மிடுக்காய் சொன்னவள் கையிலிருந்த மாதவிடாய் பட்டையை தூக்கி குப்பைத் தொட்டியில் போட,
''தேவையில்லாமே பேசாதே! வாயே கிழிச்சிட போறேன்!''
''முதல்லே இப்படி பேசறதை நிறுத்தறீங்களா?! கட்டபஞ்சாயத்து பண்றவன் மாதிரி!வெட்டிடுவேன்! குத்திடுவேன்னு! நல்ல வார்த்தையே வராத உங்க வாயிலே?! எப்போ பாரு அடுத்தவங்களே காயப்படுத்தற மாதிரியே பேசிக்கிட்டு!''
கையுறைகளை கழட்டி குப்பையில் வீசி, கொப்பளித்தாள் கோதையவள்.
''நான் வேற யாரையும் இப்படி நடத்தலே! உன்னை தவிர!''
சொன்னவன் வேடிக்கை சிரிப்போடு கைகளை சிறு துண்டால் துடைத்தவளை நெருங்க,
''ஆமா! நான்தானே உங்களுக்கு இளிச்ச வாய்! கேட்பார் மேப்பார் இல்லே! என்ன வேணும்னாலும் பேசலாம்! செய்யலாம்! ஏன், கொன்னா கூட கேட்க நாதி இல்லையே!''
ஆணவன் முகத்திற்கு நேராய் வெடித்து தள்ளியவள் ஆதங்கத்தை காதில் வாங்கிக் கொள்ளாத நாயகனோ,
''அன்னைக்கு ஏன் என்னே அப்படியே விட்டுட்டு போகலே?!''
என்ற வேள்வியைத் தொடுக்க,
''அது என் கடமை! நான் ஒரு டாக்டர்!''
அழுத்தமாய் சொன்ன தளிரியளின் விலோசனங்களை ஆளான் அவன் ஆழமாய் ஊடுருவ,
''நிஜ.. நி..''
தொடங்கிய வார்த்தையும் முடியவில்லை, வாக்கியமும் முழுமை அடையவில்லை. பொத்தென முன்னோக்கி விழுந்தான் விராகன் காதலற்ற மனைவியின் தோளிலேயே.
தாழ் திறந்திடுவான் ததுளன்...
Author: KD
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 18
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 18
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.