- Joined
- Jul 10, 2024
- Messages
- 459
தாழ் திறவாய் ததுளனே! : 5
''சார்! பிளீஸ், சார்! பிளீஸ், சார்! ஒரே ஒரு தடவை சார்! உங்க பாஸை பார்த்திட்டு போயிடுறேன் சார்! பிளீஸ் சார்!''
காலில் விழாத குறையாய் கெஞ்சிக் கொண்டிருந்தாள் மூக்கு கண்ணாடி கொண்ட கறுப்பழகி.
''ஏன்மா, எத்தனை தடவை சொல்றது அப்பாயிண்ட்மென்ட் இல்லாமே சாரே பார்க்க முடியாதுன்னு!''
பி.ஏ. வோ கூச்சல் கொண்டவளை சமாளிக்க,
''அட! நீ இங்க இருக்கியா?! உன்னே நான் அப்பவே கிளம்ப சொன்னேன் தானே?! ஏன்மா இப்படி காலையிலேயே வந்து உயிரெடுக்கறே?!''
முன்னாடி அவளை வாசலில் துரத்தியிருந்த கார்ட், ரிசப்ஷனிஸ்ட் போனை போட்டு நடக்கும் கூத்தை விளக்க, ஓடோடி வந்திருந்தார் மேல் மாடிக்கு.
''சீக்கிரம் இழுத்திட்டு போங்கண்ணா! உள்ளே வேறே மீட்டிங் நடக்குது!''
வரவேற்பாளினி அத்துமீறி அலுவலகத்துக்குள் நுழைந்திருந்த காரிகையை துரத்திட துரிதமாகினாள்.
''ஐயோ! ஏன்தான், நீங்க யாருமே புரிஞ்சிக்க மாட்டறீங்களோ?! நான்தான் சொல்றேன்லே! வெறும் ஐஞ்சே நிமிசம்தான்! பிளீஸ்! கொஞ்சம் பர்மிஷன் கொடுங்க!''
விடாது முரண்டு பிடித்தாள் ஒற்றை கொண்டைக்காரி அவள்.
''நீங்க புரிஞ்சிக்கோங்க மேடம்! எங்க சார் யாரையும் சும்மாலாம் பார்க்க மாட்டாரு! அவரே நினைச்சாலும் அது முடியாது! ஏன்னா, அவர் அவ்ளோ பிஸி!''
ஆண் பி.ஏ.வோ மீண்டும் தன்மையாய் எடுத்துரைத்தான் கைப்பையோடு சேர்ந்து இன்னும் நான்கைந்து பேக்குகளை சுமந்து நின்றவளிடம்.
''என்ன சார் நீங்க இவக்கிட்டலாம் போய் அழகா பேசிக்கிட்டு! ஆளே பார்த்தாலே தெரியலே! இதெல்லாம் சுத்த ஃபிராடு கேஸுன்னு!''
கார்ட் நிஜம் அறியாது வார்த்தையை விட,
''ஆமா, சுரேஷ்! எதுக்கு இவளுக்கு இப்போ இந்த விளக்கமெல்லாம்! கழுத்தை புடிச்சு வெளிய தள்ளுங்க கார்ட் அண்ணா!''
கம்பெனியின் அலங்கார அம்மணியோ ஆர்டர் போட, அதற்கேற்ப செக்கியூரிட்டியும் ஜீன்ஸ் டாப்ஸ் போட்டிருந்த பேதையின் முழங்கையை பற்றி பிடித்தார் அங்கிருந்து விரட்ட தோதாய்.
மிகச்சரியாய் அந்நேரம் பார்த்து அலறியது பி.ஏ. சுரேஷின் கைப்பேசி.
''ஹலோ, சார்!''
''என்ன சத்தம் சுரேஷ் அங்க?! யார் அந்த பொண்ணு?!''
''பேர் ஏதும் சொல்லலே சார்! சித்த வைத்திய டாக்டராம்! உங்களே பார்த்தே ஆகணும்னு ஒரே ஆர்ப்பாட்டம் சார்!''
''சித்த வைத்திய டாக்டரா?! என்னே ஏன் பார்க்கணும்?!''
''கேட்டேன் சார்! உங்களே நேரா பார்த்துதான் சொல்லுவாங்கலாம்!''
''அதெல்லாம் முடியாது, சொல்லித்தான் ஆகணும்னு சொல்ல வேண்டியதுதானே?!''
''எவ்வளவோ சொல்லிட்டேன் சார்! பர்சனல் அப்படின்னு சொல்லிட்டாங்க சார்!''
''என்னையா பர்சனல்?! அந்த மூஞ்சே இதுவரைக்கும் நான் பார்த்தது கூட இல்லே!''
''இப்போ என்ன பண்றது சார்?!''
''என்ன கேளு! யாரு, யாருக்கு வேலை செய்யறான்னே தெரியலே! அவுங்க டைம் வந்த உடனே அனுப்பு!''
''அப்பாயிண்ட்மென்ட் இல்லே சார்!''
''என்னது, அப்பாயிண்ட்மென்ட் இல்லையா?! அப்பறம் எப்படி அவளே உள்ளே விட்டிங்க?! என்ன லட்சணத்துலே எல்லாம் வேலை பார்க்கறீங்க?!''
டென்ஷன் பார்ட்டி ராகன் காட்டு கத்து கத்திட, சுரேஷின் தலையோ தொங்கிப்போனது.
வெளிநாட்டு ஆட்களோடு ஆன்லைன் மீட்டிங்கில் மூழ்கியிருந்தான் ராகன். மிக முக்கியமான கலந்துரையாடல் என்று கூட சொல்லிடலாம்.
ஆரோன்தான் இதில் கலந்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், தம்பியின் குணம் அறிந்த மூத்தவனோ, நேரடி சந்திப்பு ஒன்றுக்கு அவன் ப்ரஸன்ஸை தாரம் வார்த்து, சின்னவனை ஆபிஸிலேயே கழட்டி விட்டிருந்தான்.
ஆகவே, ஏற்கனவே கடுப்பில் இருந்த ராகன் மீட்டிங்கில் வேறு இண்டர்நேஷனல் கிளைண்ட்ஸ் என்ற பெயரில் சிலர் அவனை காண்டாக்கியதில் கதங்கொண்டிருக்க, வெளியிலோ சித்த சிங்காரி களேபரம் நடத்தி மேலும் அவனை உக்ரமாக்கினாள்.
''சார், அவுங்க யார் பேச்சையும் கேட்காமே, மத்த ஸ்டாப்ஸ் கூட சேர்ந்து கார்ட், ரிசப்னு எல்லார் கண்ணுலையும் மண்ணே தூவிட்டு லிஃப்ட் ஏறி மேலே வந்துட்டாங்க!''
''ஒரு பொம்பளையே உருப்படியா கண்காணிச்சு வெளிய துரத்த வக்கில்லே! ஆயிரம் காரணம் வேறே இதுலே! அனுப்பி விடு அவளே!''
''இதோ இப்பவே அனுப்பிடறேன் சார்! சோரி சார்! சோரி!''
''வெளியே இல்லே! உள்ளே!''
அழுத்தமாய் சொன்னான் மேக் புக்கை படாரென்று அடித்து சாத்தியவன்.
''ஓகே சார்! அனுப்பிடறேன் சார்!''
ரிசீவரை கட் செய்த பி.ஏ. ஓடினான் மின்தூக்கி நோக்கி, கார்ட் பின்னால் போக முன்னாடி தலையை தொங்கப்போட்ட வண்ணம் அடிகள் வைத்த வஞ்சியை அழைத்தவனாய்,
''மிஸ்! மிஸ்! நில்லுங்க! மிஸ்! நில்லுங்க மிஸ்! யோவ் கார்ட் நில்லுயா!''
மூச்சு வாங்க அவர்களை விரட்டி வந்த சுரேஷ்,
''மேடம்! வாங்க! வாங்க, மேடம்! சார் உங்களே பார்க்கணும்னு சொல்றாரு!''
என்றுக் கூறி, அவளின் யூ டர்ன்காக காத்திருக்க, மாதங்கி அவளோ பி.ஏ. அவனை ஏற இறங்க பார்த்தாள் முகத்தில் ஈயாடாது.
சுரேஷ் போன் பேச ஒதுங்கிய கேப்பில், கார்ட்டும் வரவேற்பாளினியும் சேர்ந்து மெல்லியாளின் பைகளை இழுத்து, பொருட்களையெல்லாம் கீழே கொட்டி, அங்கோர் சிறிய கலவரத்தையே ஏற்படுத்தி இருந்தனர்.
அவ்வளவு நேரம் ராகனை பார்க்க துடித்த பேடையோ, நிகழ்ந்த அவமானத்தை ஜீரணிக்க இயலாது, இனியும் அவனை சந்திக்க போராடுவது தேவையற்றது என்ற எண்ணத்தில் அங்கிருந்து நகர்ந்திட முடிவெடுத்தாள்.
ஆகவே, அவளை கரித்து கொட்டிய நல்லுள்ளங்கள் இருவரிடமும் கைகள் கூப்பி நன்றி வணக்கம் வைத்த வாசுரை, சிதறிய போத்தல்களை எல்லாவற்றையும் தூக்கி பைகளில் போட்டுக் கொண்டு நடையைக் கட்டினாள்.
''பிளீஸ், மேடம் வாங்க! சார் உங்களே பார்க்க ஓகே சொல்லிட்டாரு! இந்த மாதிரி ஒரு தடவை கூட நடந்ததில்லே! நீங்க நிஜமாவே ரொம்ப லக்கிதான்! பிளீஸ் மேடம்! யோசிக்காதீங்க! நாங்க பேசினது, இங்க நடந்ததுன்னு எதையுமே மனசுலே வெச்சுக்காதீங்க! ஃபிரீ மைண்டோட சாரே வந்து மீட் பண்ணுங்க!''
என்றவன் பாஸின் அறைக் கதவை தட்டி திறந்து விட, கண்கள் மூடி பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவளாய், வாசலை கடுகடுவென்று பார்த்திருந்த ராகனை சிரித்த முகமாய் எதிர்கொண்டு அறைக்குள் நுழைந்தாள் நங்கையவள்.
தாழ் திறந்திடுவான் ததுளன்...
Author: KD
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 5
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 5
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.