What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
503
WhatsApp Image 2024-12-29 at 7.32.52 PM.jpeg

தாழ் திறவாய் ததுளனே!: 9

சுவாகை மும்முரமாய் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுப்பட்டிருந்தாள்.

குடுவை கொண்ட கரும்பு சாறை, தட்டிலிருந்த இளநீரில் கொஞ்சங்கொஞ்சமாய் ஊற்றி கலக்க விட்டாள்.

அந்நேரம் பார்த்து அறை கதவை படாரென்று திறந்து உள் நுழைந்தார் பரந்தாமன்.

திடுக்கிட்ட நாயகியோ, மொத்த சாறையும் இளநீரில் கொட்டி, பரிசோதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

''சுவா, கிளம்பு! நாமே இங்கிருந்து போகணும்!''

சித்தப்பா அவர் மூச்சிரைக்க சொல்லி, பெட்டி படுக்கையை கட்டினார் அவசர அவசரமாய்.

புரியாதவளோ அதிர்ந்து கேள்வி எழுப்பினாள்.

''என்னாச்சு சித்தப்பா?! ஏன், நாமே இங்கிருந்து போகணும்?!''

''கேள்வி கேட்காதே சுவா! நமக்கு டைம் இல்லே! சீக்கிரம்! சீக்கிரம்! உன் மூலிகை, கீலிகை எல்லாத்தையும் சட்டுபுட்டுன்னு ஒரு பேக்லே தூக்கி போட்டு கிளம்பு!''

''ஏன், சித்தப்பா இந்த மாசமும் நான் கொடுத்த பணத்தை ஓனருக்கு கொடுக்காமே செலவு பண்ணிட்டிங்களா?!''

''இப்போதான் சொன்னேன்! கேள்வி கேட்கற நிறுத்திட்டு, கிளம்புன்னு!''

ஆத்திரம் கொண்டவர் முறைத்தார், பேருக்கு அவ்வீட்டில் இருந்த சில பல பாத்திரங்களை குப்பை பை ஒன்றில் கட்டியவராய் தலை தூக்கி சுவாகையை பார்த்து.

''நீங்க காரணம் சொல்லாமே, நான் இங்கிருந்து ஓரடி கூட எடுத்து வைக்க மாட்டேன்!''

சித்த டாக்டர் அம்மணியும் விடாப்பிடியாய் வாதம் கொண்டாள்.

''அண்ணன், அண்ணி போய் சேர்ந்தப்பவே உன்னை கொண்டு போய் ஏதாவதொரு ஆசிரமத்திலே சேர்த்திருந்தா, இந்நேரத்துக்கு என் பொண்டாட்டியாவது உயிரோட இருந்திருப்பா! உன்னே ஆளாக்கி படிக்க வெச்சதுக்கு நீ எனக்கு கொடுத்ததெல்லாம் வெறும் நம்பிக்கை துரோகமும் ஏமாத்தமும் தான்!''

ஒரே போடாய், சித்தப்பா அவர் வார்த்தையால் வஞ்சியவள் நெஞ்சை குத்தி கிழிக்க,

''ஆமா! இவ்ளோ பண்ண நான்தான் இப்போ உங்களுக்கு குடிக்கவும், கூத்தடிக்கவும் காசு கொடுத்து உபத்திரம் பண்ணிக்கிட்டு இருக்கேன் பாருங்க!''

என்றாள் விதண்டாவாதமாய் வல்வியவள்.

இது இன்றைக்கு நேற்று நடக்கும் வாக்குவாதம் அல்ல, சித்தி நோய் வாய் பட்ட நாளிலிருந்தே நடக்கின்ற கூத்துதான்.

ஒருகாலத்தில் நன்றாய் இருந்த குடும்பம்தான் ஓரளவு வசதியோடு. எப்போது சித்தி சுசிலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டாரோ, அப்போதே பணமெல்லாம் நீராய் கரைந்திட ஆரம்பித்தது அவரின் சிகிச்சைக்காய்.

நன்றாய் படித்துக் கொண்டிருந்த சுவாகையின் படிப்பை பாதியிலேயே நிறுத்திட சுசிலாவிற்கு விருப்பமில்லை. ஆனால், சித்தப்பாவிற்கோ மனைவியை எப்படியும் காப்பாற்றிட வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே சிந்தையில் ஓங்கி இருந்தது.

பெரியளவு படிப்பறிவு இல்லா பரந்தாமனால் சாதாரண பணியில் இருந்தப்படி, இரு பெரிய பணச்சுமைகளை சுமந்திட இயலவில்லை.

சுவாகை கூட என்னதான் சித்தப்பா வாய் திறந்து மொழிந்திடாத போதும், அவர் அவலம் உணர்ந்து படிப்பை பாதியில் விட முடிவெடுத்தாள்.

ஆனால், சித்தியோ உயிரே போனாலும் அது மட்டும் நடந்திடவே கூடாதென்று சத்தியம் வாங்கிக் கொண்டார், வாஞ்சினி அவளிடம்.

குடும்ப சூழல் அறிந்தும் சுவாகையோ சுயநலம் மிக்கவளாய் நடந்துக் கொள்கிறாள் என்று அவள்பால் பரந்தாமனோ நிஜம் அறியாது கடுங்கோபம் கொண்டார், அப்போதே.

பணப்பற்றாக்குறையை சமாளிக்க திணறியவர் வேறு வழியில்லாது ஆங்காங்கே கடன் வாங்கிட ஆரம்பித்தார்.

அதையெல்லாம் சரிகட்டிடவோ தூக்கமின்றி உழைத்திட ஆரம்பித்தார். உடல் நிலை குன்றிய போதிலும், சித்தி சுசிலாவோ இது எதையுமே வெளிமாநிலத்தில் தங்கி படித்த சுவாகை அறியாது பார்த்துக் கொண்டார்.

காலமோ நல்லுள்ளம் கொண்ட சித்தியின் யாக்கையை மொத்தமாய் சரித்திட ஆரம்பித்தது.

வீட்டிலிருந்து அவ்வபோது சிகிச்சைக்கு மருத்துவமனை சென்று வந்தவரையோ, புற்று ஒரேடியாய் படுத்த படுக்கையாக்கியது.

இதை அறியா சுவாகையோ, நல்லப்படியாய் படித்து பட்டம் வாங்கினாள். ஆனால், அதை காண சுசிலாவிற்கோ கொடுத்து வைத்திடவில்லை.

சங்கதி அறிந்தவளோ உடைந்து நொறுங்கினாள். போய் சேர்ந்த புண்ணியவதியோ புருஷனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார், எக்காரணத்தை கொண்டும் வளர்த்த மகளை கைவிட்டிட கூடாதென்று.

கூடவே, அவளை நல்லதொரு இடத்தில் கரை சேர்த்திட வேறு வேண்டுமென்று கூடுதல் கோரிக்கை கொண்டார்.

ஏற்கனவே, துணைவி இறைவனடி சேர்ந்திட அண்ணன் மகளோ அதற்கு காரணமென்று நினைத்திருந்த பரந்தாமனுக்கோ, பொண்டாட்டிக்கு செய்து கொடுத்த வாக்கை காப்பாற்றிட துளியும் இஷ்டமில்லை.

இருந்தும், என்செய்ய ஆசை பொஞ்சாதியின் கடைசி ஆசையை நிறைவேற்றிடும் பொருட்டு காரியங்கள் முடிய சுவாகையை கூட்டிக்கொண்டு புதியதோர் மாநிலத்தில் குடிப்பெயர்ந்தார்.

மாற்றலாகி வந்த பிறகுதான் அவர் தலையில் இடியாய் இறங்கியது, சுவாகை படித்து முடித்திருப்பது எல்லோரை போலவும் எம்.பி.பி.எஸ். டாக்டருக்கான படிப்பல்ல, சித்த மருத்துவருக்கான கல்வியென்று.

இதை முன்னரே பெண்ணவள் சித்தியிடம் தெரிவித்திருந்தாள். ஆனால், அவள் வளர்ப்பையே பாரமாய் நினைத்திருந்த கணவரிடம், மெய் சொல்லி சுவாகையின் எதிர்காலத்தை கெடுத்திட சுசிலா எண்ணங்கொள்ளவில்லை.

ஆகவே, குழந்தைப்பேறு கொள்ளாதவரோ இறுதி வரை ரகசியம் காத்து தாய்மைக்கு பெருமை சேர்த்து எமனடி சேர்ந்தார்.

தாழ் திறந்திடுவான் ததுளன்!
 

Author: KD
Article Title: தாழ் திறவாய் ததுளனே!: 9
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top