What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
503
அத்தியாயம் 13

அமேசான் காடு

ஆயிரஞ்சோதியுள்ளோன் சுட்டெறித்தான். மணி பிற்பகல் பனிரெண்டு. இன்னும் விடியவில்லை வர்மாவிற்கு.

பொதுவாகவே வயமா அதிக நேரம் உறங்கிடும் வகையாகும். ஏறக்குறைய நாள் ஒன்றுக்கு 18-20 மணிநேரம் வரை தூங்குமாம். வர்மா ஒன்னும் விதிவிலக்கல்ல.

அவனும் முரட்டுத்தனமாய் நித்திரா தேவியோடு துயில் கொண்டுத்தான் இருந்தான். அவன் காரணம் இல்லாமல் நீண்ட நேரம் உறங்கவில்லை. இருக்கிறது முக்கியமான விடயம் இதில்தான்.

அதாவது, இதன் மூலமாகவே வர்மா ஆற்றலைச் சேமித்து புத்துயிர் பெற முடியும். தூங்கி பொழுதை கழிப்பதில் வேங்கையவன் கொஞ்சம் வித்தியாசமே.

ஒருவழியாய் இமைகளை பிரித்தான் வர்மா. உருண்டான் குகையின் நிலத்தில். ஜிலுஜிலுவென்றிருக்கும் இவ்விடம் அவனுக்கு சொர்கமே. அவனுக்கு இப்படியான இடங்கள்தான் வசதிப்படும் கைகால்களை பரப்பிக்கொண்டு படுத்துருண்ட.

மனிதர்களைப் போலவே, அதீத உறக்கத்தின் மூலம் புலிகளும் தங்கள் மூளையை எச்சரிக்கை செய்துக் கொள்கின்றன. அளவில்லா துயில் மூலம் அதிக ஆக்சிஜன் சமிக்ஞையாக வயமாவின் மூளைக்கு அனுப்பப்படுகிறது. இது அவைகள் விழிப்போடு இருக்க உதவுகிறது.

காற்றில் கோலம் போடும் வித்தையெல்லாம் நடத்திய வர்மாவோ மறந்திடாமல் வாயை பிளந்தான். அது கொட்டாவியா அல்லது உறும்பலுக்கான அறிகுறியா என்று தெரியவில்லை. ஏதோ ஒன்று. ஆனால், சத்தம் மட்டும் வந்தது.

தலையை பின்னோக்கி பார்த்தான் வர்மா. எதிரே தெரிந்தாள் மிரு. அவள் பாடையில் ஏற்றிய பிணமாட்டம் நேராய் கிடந்தாள். நேற்றைய இரவு காதல் ஜோடி போல ஒட்டி உறவாடியவர்கள் இப்போது திருமணமா ஜோடிகளை போல ஆளுக்கு ஒரு மூலையில் கிடந்தனர்.

மங்கை அவள் என்னவோ அதே பொசிஷனில்தான் இருந்தாள். இந்த வர்மா பையன்தான் குகையின் நிலத்தினை குத்தகைக்கு எடுத்திருந்தான். வஞ்சி அவள் மீது அவனுக்கு நம்பிக்கை. அதனாலேயே, இப்படியான உறக்கம் அவனுக்கு.

உறும்பிக் கொண்டே படக்கென்று திரும்பினான் வர்மா. சுந்தரியவளை எழுப்பாமல் எழுப்பினான் வர்மா. அவனின் தொடர் உறும்பலில் நேத்திரங்கள் திறந்தாள் காய்ச்சல் கொண்ட பேதையவள்.

பாரமான தலையோடு மெதுவாய் திரும்பினாள் சேயிழை அவள், புலியவன் பக்கம். ஹீரோயின் பார்த்திட ஹீரோவோ டக்கென்று மீண்டும் உடலை நிலத்தில் ஒட்டும்படி படுத்துக் கொண்டான்.

கைகால்களை ஆட்டி பகினி அவளை லுக்கு விட்டான் வர்மா அவனின் பச்சை விழிகள் கொண்டு தலையை பின்னோக்கி.

சுகவீனம் கொண்டவளோ முனகினாள்.

''பெரிய சிக்ஸ் பேக் மன்னன்! மூஞ்சியே பாரு! இம்ப்ரஸ் பண்றாராம், இம்ப்ரஸ்! அங்க என்ன இருக்கு?! தொந்தியும் தொப்பையும்தான்! எல்லாம் என் நேரம்! யாரெல்லாம் என்ன கரைட் பண்ண பார்க்கறா பாரு! கடவுளே!''

குளிரிய தேகத்தோடு எழுந்தமர்ந்தாள் முற்றிழை அவள். குமட்டியது. ஏதாவது வயிற்றில் இருந்தால் தானே வெளிவருவதற்கு. பழங்கள் புசித்தாலும் அதெல்லாம் ஒரு கக்கிற்கு சரியாய் போச்சு என்ற கணக்கே.

வர்மாவோ விழிகள் இமைக்காது ஒரே பொசிஷனில் காத்திருந்தான் நாயகியின் வருடலுக்காய். அவளோ நடுக்கத்தோடு நடுக்கமாய் பேக்பேக்கை அலசினாள்.

உறும்பினான் வர்மா பாவையின் கவனத்தை ஈர்த்திட. பாவம் ஒளியிழை அவளுக்கு எப்படி தெரியும் நம்பிக்கையும் அன்பும் இருக்கின்றவர்களிடம் மட்டும்தான் வர்மா இப்படி நடந்துக் கொள்வான் என்று. இது அவன் இனத்தின் வழக்கம்.

நங்கையின் பார்வை வர்மாவின் பக்கம் திரும்பிடாத கடுப்பில் தொடர்ந்து கதத்தோடு உறும்ப, கன்னியவளுக்கோ தூக்கி வாரி போட்டது.

அவளுக்கு தெரியும் சிங்கத்தை கூட நம்பிடலாம். ஆனால், இந்த புலிப்பையனை நம்பிடவே முடியாது என்று.

எமப்பாதகன் எந்நேரத்தில் என்ன செய்து தொலைப்பான் என்றே தெரியாது.

திடிரென்று பாய்ந்து குரல் வளையை கவ்வினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற நிலையே. அதோடு, அமேசான் காட்டுக்கு டாட்டாத்தான்.

காண்டான வர்மாவோ உருண்டு பிரண்டினான் நிலத்தில்.

நன்றாய் வயிறு முட்ட தின்னுபுட்டோ அல்லது ராவெல்லாம் இரை தேடி அலைந்து விட்டோ அசதியாக வந்த உடனே கவுந்திட தோதுவான இடமே இதுவாகும். நிழலும் குளுகுளுவும் வர்மாவின் இனத்திற்கே முதல் தேர்வு.

குகை இல்லையென்றால் குளிர்ச்சியான இடங்களையே தேடி போவான் வர்மா. அடர்ந்த பகுதிகள், பாறைகள், உயரமான புற்கள், அடர்ந்த மரங்கள், ஆழமற்ற நீர்நிலைகள் மற்றும் சில நேரங்களில் வசதியான சேற்று மணல் போன்ற இடங்களில் யாருக்கும் தொல்லை கொடுக்காமல் அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருப்பான் நல்ல பையன் வர்மா அவன்.

மூச்சு அதிகமாய் வாங்கியது வாசுரை அவளுக்கு. பேக்கை அலசியவள் தோற்று போனாள். அவள் தேடிய ஆஸ்துமா நெபுலைசர் அங்கில்லை. நெஞ்சில் கரம் பதித்தவள் கண்ணேல்லாம் மேலேற தவித்தாள் காதெல்லாம் அடைத்துக் கொள்ள.

அமர்ந்திருந்தவள் அவளறியாது பின்னோக்கி சரிந்தாள். வர்மாவோ பாய்ந்து வந்தான் பாறையின் மீதிருந்து கீழே அவளருகே அணங்கவளோ இழுத்து கொண்டு கிடக்க.

உடல் வேறு உலையாய் கொதிக்க நாசியோ அடைத்துக் கிடந்தது சளியோடு காரிகைக்கு. இழுத்த மூச்சு கீழிறங்கவும் முடியாமல் மேலேறவும் முடியாமல் பெண்ணவளை படுத்தியது.

அந்திகை அவளின் இருக்கரங்களையும் ஒன்றாய் சேர்த்து வாயோரம் கொண்டு சென்று விட முடியா மூச்சோடு போராடினாள். முடியவில்லை அவளால்.

வர்மா சரிந்தவளின் உடலை முன்னங்கால்கள் கொண்டு தள்ளினான். கோதை அவளோ உதடுகள் துடிக்க அவன் விழிகளை பார்த்தாள் விழிகளை தழுவிய மயக்கத்தோடு.

வர்மாவோ உறும்பினான். நேரிழை அவளையே சுற்றி வந்தான். கால்களால் உதைத்து அவளை நிதானத்தில் வைத்தான். மாயோள் அவளோ நயனங்கள் உருட்டி அவனையே பார்த்தாள்.

வர்மாவிற்கு புரியவில்லை பெதும்பை அவளுக்கு என்னானதென்று. வலதும் இடதும் தாண்டி போனான் வர்மா உறும்பிக் கொண்டே, குறுக்கே கிடந்த அவளின் உடலை கடந்து.

குப்பென்று வியர்த்த தெரிவையின் தேகம் கையில் இறுக்கியிருந்த போனை தரையில் தவற விட்டது. கண்கள் சொருக மயங்கினாள் மாதங்கியவள் மூச்சு அதிகமாய் வாங்க.

ஆயிழையின் தலையை மெதுவாய் அடித்தான் வர்மா. கண்மணி அவளிடம் அசைவே இல்லை. அரிவையின் முகம் அருகே சென்றவன் மிழிகளில் தவித்து கோர பற்கள் எச்சிலை தெறிக்க விட அலறினான்.

அப்போதும் பைந்தொடி அவளிடம் மாற்றமில்லை. உறும்பினான் வர்மா நடையாய் நடந்து குகைக்குள். கையும் நிற்கவில்லை காலும் நிற்கவில்லை அவனுக்கு.

பாறை மீதேறினான், பாய்ந்து குதித்தான். குகை அதிரும்படி உறும்பினான். மயங்கிய ஒண்டொடியையே சுற்றி வந்தான். அவனின் கால்பட்டு மிருடானியின் அலைப்பேசி மீடியா கேலரிக்குள் நுழைந்தது.

வர்மா வலுக்கிய அதை காலால் ஓரந்தள்ளிட வீடியோ ஒன்று பிளெய் ஆனது. மனித குரல்களின் சத்தம் கேட்ட வர்மா அச்சங்கொண்டு சுற்றி முற்றி பார்த்தான். அது காணொளி என்றவன் அறியவில்லை.

தீவியின் ஆரணியம்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.38/
 

Author: KD
Article Title: தீவியின் ஆரணியம்: 13
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top