- Joined
- Jul 10, 2024
- Messages
- 416
அத்தியாயம் 10
கடந்தகாலம்
இந்தர் மற்றும் நிலா இருவருக்கும் பெரியவர்களின் ஆசியோடு கோலாகலமாக திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
சூட்டோடு சூடாக அவர்களின் கல்யாணம் முடிந்த இரு வாரத்திலேயே, வேதாவிற்கும் அட்சராவிற்கும் ஊர் மெச்சும் படி விவாகம் அரங்கேறியது.
சம்பிரதாயங்களின் படி எல்லாம் நடக்க, காதல் தம்பதிகளோ சுகபோகமாய் அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்திட ஆரம்பித்தனர்.
ஆனால், வேதாவின் வாழ்க்கையோ தலைகீழாகி போனது அட்சராவின் வெறுப்பால்.
**********************************
கடந்தகாலம்
வேதாவின் படுக்கையறை
''இங்கப்பாரு, என்னாலே இந்த குடிசைலலாம் வாழ முடியாது! ஒழுங்கா ஒரு லக்ஸரி அப்பார்ட்மெண்ட் (luxury apartment) பார்க்கறே வழிய பாரு!''
சில்க் துணியிலான நைட்டியோடு இடையில் கரங்கள் இறுக்கி நின்ற கோமகளோ கட்டளை பிறப்பிக்க,
''இப்போதைக்கு என்கிட்ட அந்தளவுக்கு பணம் இல்லிங்க! கொஞ்ச நாள் வெயிட் (wait) பண்ணுங்க, ஏற்பாடு பண்றேன்!''
போனில் ரீல்ஸ் பார்த்தப்படி சொன்னான் வேதா.
''எப்போ?! நான் கிழவியானதுக்கு அப்பறமா?! நீ வாங்கற சம்பளம், நான் என் ஆபிஸ் கிளீனருக்கு (cleaner) கொடுக்கறதை விட குறைவு! இதுலே நீ எனக்கு வீடு வாங்கி தரப்போறியா?! மூஞ்சியே பாரு! உன்னே நம்பினா நான் நடுத்தெருவிலதான் நிக்கணும்!''
என்றவளோ வார்த்தைகளால் வேதாவை காயப்படுத்திய ஐந்தாவது நிமிடத்தில் உறங்கிப் போனாள்.
ஆனால், அவனோ உள்ளம் கொண்ட வலியை ராவெல்லாம் தூங்காது கழித்தான்.
இது ஒன்றும் புதிதல்ல.
திருமணம் நடந்தேறிய முதல் நாளே பற்றிக் கொண்டது எனலாம்.
தாலிக்கட்டிய மனைவியோடு விளக்கேற்ற அவன் வீடு நோக்கிய வேதாவின் முகத்தில் கரியை பூசிடா குறையாய், எரிய மறுத்த லைட்டரை விசிறியடித்து எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாள் அங்கணை அவள்.
பால் பழம் உண்ண கொடுத்த சொந்தங்கள் முன்னிலையிலோ,
''பல்லு வலி! ஒன்னும் வேண்டாம்!''
என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லி அசிங்கப்படுத்தினாள்.
பெண் வீட்டில் முதலிரவு நடத்த நல்ல நாள் பார்க்க,
''அதெல்லாம் வெயிட் பண்ண முடியாது! இப்பவே கிளம்பணும்! யாராவது கேட்டா, ஏதாவது சொல்லி சமாளிங்க!''
என்று யாரையும் பொருட்படுத்தாது காரிலேறி அமர்ந்தாள்.
இப்படியாக ஆரம்பித்து நாட்களெல்லாம் நரகமாகவே கழிந்தது வேதாவிற்கு.
**********************************
கடந்தகாலம்
வேதாவின் இல்லம்
வீடே சாம்பிராணி புகையில் குளிக்க, புது மருமகளோ லேப்டாப் பேக்கோடு கீழ் மாடி இறங்கி வந்தாள்.
வேதாவோ டைனிங் டேபிளில் அமர்ந்து காலை சிற்றுண்டியை உண்டுக் கொண்டிருந்தான்.
''அட்சரா, வா மா! வந்து உட்காரு! தோசை சுட்டிருக்கேன்! வந்து சாப்பிடு வா!''
மாமியார் பரிவாய் அழைக்க,
''இல்லே வேண்டாம்! நான் வெளியே சாப்பிட்டுக்கறேன்!''
என்றவளோ அவரிடம் முகங்கொடுத்து கூட பேசாது வாசல் நோக்க,
''என்னமா ஆபிஸ் போறியா?! இப்போதானே கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம்! அதுக்குள்ளாரையே வேலைக்கு போறே?!''
அம்பிகா மகள் நிலாவும் மாப்பிள்ளை இந்தரும் ஹனிமூன் போயிருப்பதை அறிந்து மருமகளும் மகனும் கூட அப்படியான திட்டங்கொண்டிருப்பர் என்றே எண்ணினார்.
''கம்பெனி என்னது! அடுத்தவனோட இல்லே! நான் லீவ் போட்டு இங்க உட்கார்ந்துக்கிட்டா, அடுத்தவன் எனக்கு வரவேண்டிய அத்தனையையும் லவட்டிட்டு போயிடுவான்! அப்பறம், நான் நாக்கு வலிச்சுக்கிட்டுதான் உட்கார்ந்துக்கிட்டு இருக்கனும், உங்களே மாதிரி தோசை தின்னுக்கிட்டு!''
என்ற மங்கையின் மங்களகரமற்ற வார்த்தைகளில் மாமியாரின் முகமோ வாடிப்போனது நெஞ்சம் சுருக்கென்றிட.
மனைவியின் பேச்சில் கதங்கொண்ட வேதாவோ,
''அட்சரா!''
என்ற சத்தமான அழைப்போடு உண்ட கையை உதறி எழ,
''சரிமா! நீ கிளம்பு! போய் வேலையே பாரு போ!''
என்ற அம்பிகாவோ அங்கொரு சண்டை வராமல் தடுத்திட மருமகளை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
வேதாவோ அதற்கு மேலும் அங்கு நில்லாது எழுந்து வாஷ் பேஷன் நோக்கினான்.
முதல் முறை மகன் பிடித்தமான உணவை பாதியிலேயே வைத்து போவதை கண்ட தாயின் உள்ளமோ பாரமாகி போனது.
**********************************
கடந்தகாலம்
அட்சராவின் அலுவலகம்
ஒரு வாரம் இரு வாரமாய் ஆனது.
வேலை ஏதும் ஒழுங்காய் ஓடவே இல்லை மங்கை அவளுக்கு.
கட்டிக்கொண்ட புருஷனை நினைத்து அழுகைதான் வந்தது அட்சராவிற்கு.
என்னதான் கல்யாணம் புடிக்கவில்லை என்றாலும், ஆனது ஆயிற்று இனி வாழ்க்கையை வாழலாம் என்ற முடிவிற்கு வந்திருந்தாள் வஞ்சியவள்.
இதை திருமணம் நடந்த அன்றை இரவே முடிவும் செய்திருந்தாள் பகினி அவள்.
என்னதான் காலை மாமியார் வீட்டில் பஜாரித்தனம் செய்திருந்தாலும், ராத்திரி முதல் இரவுக்காக அவள் இல்லம் திரும்பியிருந்தாள் நாயகியவள் வேதாவோடு.
குளியல் ஒன்றை போட்டு, வாசமான திரவியங்கள் சிலது மேனியில் கொண்டு, கவர்ச்சியான நைட் ட்ரஸ் (night dress) ஒன்றோடு ஆணவன் முன் வந்து நின்றாள் ஆயிழையவள்.
சுண்டினாலே ரத்தம் வரும் சிவப்பிலிருந்த பொஞ்சாதியை எதார்த்தமாய் பார்த்த வேதாவிற்கோ ஒரு நொடி குப்பென்று வியர்த்தே விட்டது.
ஈரக்கூந்தலை காய வைத்த அம்மணியை இமைக்காது அவன் வெறிக்க,
''என்ன பார்க்கறே?! நீ நினைக்கறதெல்லாம் நடக்காது! ஒழுங்கா, மூடிக்கிட்டு ஒரு ஓரமா படுத்து தூங்கறே வழியே பாரு! அதுக்காக தரையிலே படுத்து என்னே அசிங்கப்படுத்திடாதே! இவ்ளோ பெரிய கட்டில்லையே வந்து ஒண்டிக்கோ! ஆனா, இதான் சாக்கின்னு, கைகாலே மேலே போட்டு ஏதாவது பண்ண பார்த்தே, ரேப் பண்ண பார்த்தன்னு உள்ளே தள்ளி கம்பி எண்ண வெச்சிடுவேன்! ஜாக்கிரதை!''
என்றவளோ நமட்டு சிரிப்பை ஒளித்து திரும்பி கொள்ள, பொண்டாட்டியின் குறும்பிலான சீரியஸ் வார்த்தைகள் அத்தனையும் வேதாவை ரொம்பவே காயப்படுத்தின.
இப்படியெல்லாம் பேசினால் எந்த ஆணுக்கும் கோபம் வரும். அதுவும் முதலிரவில் எப்பேர்ப்பட்டவனும் பதுமையை போலான பெதும்பையை சொந்தமாக்கிக் கொள்ள எவ்வழியாகினும் முயற்சிப்பான் என்றெண்ணினாள் அட்சரா.
ஆனால், மிகமிக நல்லவனாக வளர்க்கப்பட்ட வேதாவோ, காலை தொடங்கி இப்போது வரை சுந்தரி பேசிய மற்றும் நடந்துக் கொண்ட விதத்தை வைத்தே புரிந்துக் கொண்டான், அரங்கேறிய திருமணத்தில் அவளுக்கு இம்மியும் விருப்பமில்லை என்று.
ஆகவே, பேடு அவள் பக்கம் திரும்பாது, உள்ளுக்குள்ளேயே ரணத்தை பதுக்கியவனாய் வெறுமனே கண்களை மூடி படுத்துக் கொண்டான் நெஞ்சுக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு.
விளக்கை அணைத்து பல மணி நேரங்கள் கடக்க, காளையவன் நெருங்குவான், இதழ்களை உறிஞ்சுவான், கட்டி புரள்வான், காமம் கற்பித்திடுவான் என்று நம்பிய கோற்றொடியோ அது எதுவும் நடக்காது போக, ஏக்கத்தில் கண்ணீர் கொண்டு ஏமாந்து போன வலியில் விரக்தி அடைந்தாள்.
யார் நெருங்க யார் நொறுங்க...
Author: KD
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 10
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நீ நெருங்க நான் நொறுங்க! : 10
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.