What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் பத்தொன்பது

தனியார் மருத்துவமனை


மருத்துவமனை நடைபாதை இருக்கையில் குத்த வைத்திருந்த ரீசனோ, மிதமான கண்ணீர் கொண்டிருந்தான் விழிகளில்.

உள்ளங்கையால் இருமிழிகளையும் துடைத்துக் கொண்டவன், தலையை கைகளில் இறுக்கி பிடித்து; யோசனையில் மூழ்கினான்.

குஞ்சரி கெஞ்சியப் போதும் மசியவில்லை. வீர் சொல்லிய போதும் கேட்கவில்லை. வருந்தினான் ரீசன் தன் அவசரத்தை எண்ணி. அவனின் பிடிவாதமே குஞ்சரியின் ஊனத்திற்கு மூலகாரணம் என்பதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.

துளியளவு பொறுமை கொண்டிருந்தாலும் இன்றைக்கு மலையளவு வேதனை கொண்டிருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது என்று ஆணவனின் மனமோ வசைபாடியது வளர்ந்து கெட்டவனை.

கோபத்தில் காளியாக உருவெடுத்திருக்கும் குஞ்சரியின் ஆழ்மனதில் வலியே நிரம்பிக் கிடக்கிறது என்பதை ரீசனால் ஒருகாலும் இல்லை என்றிட முடியாது.

அதீத ஆத்திரம் எப்போது குறைகிறதோ அப்போதுதான் ரீசனால் காதல் மனைவியை நெருங்கிட முடியும் என்பதையும் நன்குணர்ந்திருந்தான் பார் ஓனரவன்.

மருத்துவர் ஏற்கனவே சொல்லியிருந்தார் ரீசனிடத்தில் கசப்பான திடீர் சம்பவங்களுக்கு தயாராய் இருக்க வேண்டி.

சில பேஷண்ட்ஸ் செய்தி அறிந்து முற்றிலும் உடைந்து போயிடுவார்கள். இன்னும் சிலரோ முரட்டுத்தனமாக நடந்துக் கொள்வர், அவர்களுக்கு நேர்ந்திருக்கும் அநியாயத்தை மனதளவில் ஏற்றுக் கொள்ள முடியாது.

குஞ்சாய் இதில் ரெண்டாவது வகை என்பதை அவளின் நடத்தையே சொல்லியது. ஆகவே, புரிந்துக் கொண்ட கணவனவன் மேலும் அங்கிருந்து நாச்சியின் சினத்தை அதிகப்படுத்திட விரும்பவில்லை.

காரணம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் சில நோயாளிகள் சுயமாக அவர்களையே தாக்கி கொள்ளவும் சரி மற்றவர்களை தாக்கிடவும் சரி தயங்குவதில்லையாம். டாக்டர் சொல்லியிருந்தார்.

ஒத்தடை குச்சியவன் தலை மறைய, கிறுக்குத்தனத்தின் உச்ச கட்டத்தை எட்டியிருந்தாள் தலைகால் புரியாது தனியறையில் இருந்த குஞ்சரி.

பணிவிடை செய்ய வந்த தாதிக்கும் அடி, மருத்துவம் பார்த்திட வந்த டாக்டருக்கும் கடி; மூளை குழம்பிய குழவியாய் ஆகிபோனாள் ரீசனின் குஞ்சாய்.

கால் தடுக்கி விழுந்ததால் வந்த பக்கவாதமே இதுவென்று மருத்துவர்கள் ரிப்போர்ட் எழுதியிருந்தனர்.

சூசைட் (suicide) என்றெல்லாம் ரீசன் மருத்துவர்களிடத்தில் சொல்லிடவில்லை சீமாட்டியவளை அன்றைய சம்பவத்தின் போது ரத்தஞ் சொட்ட சொட்ட அவசர பிரிவுக்கு தூக்கி வந்து சேர்க்கையில்.

மகள் கீத்து குட்டி மம்மி குஞ்சரிக்கு சர்ப்ரைஸ் தரப்போவதாய் சொல்லி அவர்களின் வீட்டுக்கு தாத்தா பாட்டியோடு படையெடுத்திருந்தாள். கூடவே, ரகசியமாய் செல்ல டேடி ரீசனுக்கும் போனை போட்டு மம்மி வீட்டிலில்லை என்றுரைத்து அவனையும் அங்கு வர வைத்தாள்.

மவரசியவள் செய்த குறும்புத்தனம் அன்றைக்கு நல்லதிலேயே போய் முடிந்தது. மம்மியை தேடி படுக்கையறை பக்கம் போன மகளோ, தாயின் நிலைக் கண்டு அலறினாள்.

கீத்துவின் தொண்டை கிழியும் சத்தம், வரவேற்பறையில் தாய் அம்பாளோடு தர்க்கம் செய்துக் கொண்டிருந்த தகப்பனின் காதில் விழ; ஓடினான் பின்னங்கால் பிடரியில் பட மேல் மாடி நோக்கி காராசேவா ஹீரோ.

குருதி வெள்ளத்தில் கிடந்த பொஞ்சாதி குஞ்சரியோ, இமைகள் விரித்தாற்படி கிடந்தாள் அசைவற்று. பயந்தலறிய மகளோ கிலி பிடித்தாற்போல வெறித்திருந்தாள் மம்மியின் நிலையை.

பள்ளி பருவத்திலிருந்தே மலேசியன் ரெட் கிரசண்ட் சொசைட்டி (MRCS) மெம்பர் ரீசன். ஆதலால், குஞ்சரிக்கு தேவையான முதலுதவிகளை செய்து, தூக்கிக் கொண்டு ஓடினான் பொண்டாட்டியை மருத்துவமனைக்கு ரீசன்.

பத்தினியை அவசர பிரிவில் சேர்த்த நொடியிலிருந்தே, அவசர பிரிவே கதியென்று கிடந்தான் பச்சை தண்ணீர் கூட வாயில் வைத்திடாமல் ரீசன். சர்ஜரிக்கான பாரத்தில் கையெழுத்து போடுகையில் கூட எதையும் படித்திடவில்லை ரீசன்.

நர்ஸ் காட்டிய இடத்திலெல்லாம் ஒரு வார்த்தை ஏனென்று கேட்காது ஆட்டோகிராப் போல போட்டுத் தள்ளினான் சைனை மெலிந்தவன். அம்பாள் வேறு போனுக்கு மேல் போனை போட்டு மகளாகிய மருமகள் நிலையை விசாரித்து, கூடவே மகனுக்கு ஆறுதலாய் நாலு நல்ல வார்த்தைகளையும் சொன்னார்.

நொந்து கிடந்த ஹீரோவோ, வெறும் 'உம்' மட்டும் கொட்டிக் கொண்டிருக்க; அலைப்பேசியின் மறுமுனையில் குரலொன்று கனீரென்றது.

''டாக்டர் என்ன சொன்னாங்க..''

தெளிந்து விட்டான் சோர்ந்திருந்தவன்.

''சர்ஜரி போயிக்கிட்டுருக்குப்பா..''

கச்சிதமாய் பதில் சொன்னான் வாத்தியார் மகன்.

''ஏதாவது சாப்பிட்டியா..''

''இல்லப்பா..''

ஒற்றை வார்த்தையில் டக்கென்று வந்தது பதில் ரீசனிடத்திலிருந்து.

''குஞ்சரி நல்லப்படியா வந்திடுவா.. நீ வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு போ..''

''பரவாலப்பா..''

இழுத்தான் மகன்.

''வாடா..''

உரிமையாய் அழைத்தார் அப்பா.

வெறும் அரை மணி நேரமே வீட்டிற்கும் மருத்துவமனைக்கும். பேசாத அப்பா, அவராகவே அழைத்திட; மறுக்க முடியாது கிளம்பி போனான் ஒத்தடை குச்சியவன் இல்லத்திற்கு தாதியிடம் ஒரு வார்த்தை சொல்லி.

சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாய், அலண்டு கிடந்த பேத்தியை பாட்டி அம்பாள் மாரோடு சேர்த்தணைத்துக் கொண்டார்; அறை நுழைந்த நொடியே.

காய்ச்சல் கொண்ட மகளுக்கு பாட்டியாகிய அம்மா நாட்டு வைத்தியம் பார்த்திருக்க, உணவை அப்பாவிற்காக ரெண்டு வாய் எடுத்து வைத்தவன்; மகளோடு கொஞ்ச நேரம் செலவழித்து மீண்டும் ஓடினான் மருத்துவமனைக்கு.

குஞ்சரியின் டேடி வந்தார். மகளை வெளியூர் கூட்டி போக முடிவெடுத்தார். அங்கு வைத்து வைத்தியம் பார்த்திட போவதாய் சொன்னார். மருத்துவரிடம் பேசிய ரீசன் கனத்த இதயத்தோடு முதல் முறை மாமனாரின் பேச்சுக்கு தலையாட்டினான்.

குஞ்சரி மறைத்திருந்தாள் நடந்தவைகளை அவள் டேடியிடமிருந்து. புரிந்துக் கொண்டான் ரீசன், மாமனார் அவனை நடத்திய விதத்தில்.

மெய்யறிந்திருந்தால் நிச்சயம் அவ்விடத்தில் ஒரு பெரிய பிரளயமே அரங்கேறியிருக்கும், ரீசனுக்கும் அவன் துணைவியின் டேடிக்கும். குஞ்சாயியின் மனக்காயம் ஆறிடும் வரை காத்திருக்க முடிவு செய்தான் மணாளன்.

பேத்தியை தர முடியாதென்று ரீசனின் மம்மி அம்பாள் முரண்டு பிடித்திட, உடம்போடு சேர்ந்த மனமும் சரியில்லா மகளை முதலில் சரி செய்திட வேண்டும் என்ற நோக்கில்; பேத்தியை சம்பந்தி வீட்டில் கழட்டி விட்டு கிளம்பினார் டென்மார்க்கிற்கு (Denmark) குஞ்சரியோடு அவள் அப்பா.

*

கல்யாணம் என்னவோ ஒன்றுதான். ஆனால், அது சீரழிவதோ இருவரால்தான். கண்ணியத்தை இழந்துதான் விதியை கொண்டிட வேண்டுமென்பது ரீசனுக்கு வேண்டுமென்றால் பொருந்தும், குஞ்சரிக்கு அல்ல.

கற்பாள் குஞ்சாய் கிளம்பிய நாளிலிருந்தே ரீசனின் வாழ்க்கை குடி முழுகி போனதை போலானது. முன்பிருந்த கலகலப்பு அவனிடத்தில் இல்லை. எதையோ பறிகொடுத்தவன் போலவே காணப்பட்டான்.

நண்பர்களை கூட சந்திப்பதை தவிர்த்தான். டிவோர்ஸ் கேஸை ட்ரோப் செய்திருந்தான். ஷேவிங் செய்திடாமலே சுற்றி திரிந்தான்.

பொழுதை அதிகபட்சமாய் மது கூடத்திலேயே கழித்தான். வார இறுதிகளில் அவனும் குஞ்சரியும் வாழ்ந்த வீட்டில் தனியொரு ஆளாய் தஞ்சம் கொண்டான்.

முடங்கிய படுக்கையறைக்குள் குஞ்சாயின் நினைவுகளோடு அவ்வப்போது கண்ணீர் சிந்தினான். ஷேவிங் செய்யாது மாடர்ன் தேவதாஸாய் உருமாறிக் கிடந்தான்.

அவனை வாழ வைத்து கொண்டிருந்தது என்னவோ கீத்து குட்டி ஒருத்தியே. மகளிடத்தில் மட்டும் நாள் தவறாது பேசினாள் தாயவள் அலைப்பேசியில்.

மாமனார் மாமியார் கூட மருமகளின் குசல விசாரிப்பில் பங்கெடுத்துக் கொள்வர். மறந்தும் கூட ரீசனின் பெயர் குஞ்சரியின் வாயிலிருந்து வரவில்லை.

குடும்பம் நடத்தியவளின் வலி சாதாரணமானதல்ல என்பதை அறிந்தவன் நங்கையின் நலனை மம்மி அம்பாளின் மூலமாக அறிந்துக் கொண்டான். அன்பு முத்தங்களை மகள் கீத்துவின் கன்னத்தில் பதித்து, அதைக் கோபித்து கொண்டிருக்கும் வல்லபிக்கு நேரடி பரிமாற்றம் செய்தான், ரகசியமாய் வதூ அவள் அறியாது; மகளோடு சீக்ரட் டீலிங் கொண்டு.

மாதங்கள் கடந்த பிரிவென்னவோ குஞ்சாயியின் மீது ரீசன் கொண்ட காதலை இன்னும் அதிகப்படுத்தியதென்றே சொல்லிட வேண்டும்.

மம்மி தலை குப்புற கவிழ்ந்திருந்த சீனை பார்த்து காய்ச்சல் படுத்த குட்டி வாண்டோ, ஒரு வாரத்தில் பழையப்படி உடல் தேறினாள். இருந்தும், ராவெல்லாம் பயத்தில் உளறினாள் சிறியவள்.

பாட்டியோ பள்ளிவாசல் கூட்டி போய் மந்திரித்த தாயத்தை சிறுமியின் மணிக்கட்டில் கட்டி கூட்டி வந்தார். அந்நேரம் பார்த்துதான் நம்பிராஜா டென்மார்க் பயணம் மேற்கொள்ள துடியாய் துடித்தார்.

மகளுக்கு சிறப்பான மருத்துவ சேவையை வழங்கிடவே அப்பயணம் என்றார் வஞ்சக எண்ணம் கொண்டு. சந்தேகப்படுவதற்கெல்லாம் ரீசனுக்கு நேரமில்லை, விருப்பமும் இல்லை.

இனி அவ்வளவுதான், எல்லாம் முடிந்தாயிற்று என்ற விரக்தியிலிருக்கும் பெதும்பைக்கு மனமாற்றம் அவசியமென்பதால் வாயை மூடிக்கொண்டான் ரீசன்.

ஆனால், மாமனாரின் திட்டமே வேறு. மகளோடு பேத்தியையும் ஒரேடியாக டென்மார்க்கிற்கே நாடு கடத்திட நினைத்தார் நம்பி மருமகனுக்கு டாட்டா காட்டி.

என்னதான் குஞ்சரியை விருப்பப்பட்டவனுக்கே கட்டி கொடுத்து வருடங்கள் பலதாகியிருந்தாலும், ஏன் அரிவையவள் ஒரு குட்டியே போட்டிருந்தாலும் கூட; நம்பியை பொறுத்த வரையில் தற்போதைய மாப்பிளை தீனரீசன் மகளுக்கு தகுதியற்றவனே.

இங்கிருந்து மகளையும் பேத்தியையும் நைசாய் வெளியூர் கூட்டி போன பிறகு, டிவோர்ஸ் வேலைகளை காதும் காதும் வைத்தாற்போல நிறைவேற்றி; ரீசனை ஒற்றை மகள் தேவகுஞ்சரியின் வாழ்விலிருந்து வெட்டி விடவே துரிதமாய் செயல்பட்டார் பார் ஓனரின் மாமனார்.

ஆனால், நம்பியின் பிளானில் முட்டு கட்டையாகிப் போனதென்னவோ, பேத்தி கீத்து குட்டியின் பயணிக்க முடியா நிலையே. படிப்பின் காரணமாய் அம்பாள் பாட்டியோடே சின்ன குட்டியவள் இருக்க வேண்டிய சூழ்நிலையாகி போனது.

அதீதமாய் எதையும் அலட்டிக் கொள்ள வேண்டாம் என்றெண்ணிய நம்பியோ பேத்தி தற்போதைக்கு வராததும் நல்லதுதான் என்றெண்ணிக் கொண்டார். மகளை மட்டும் முதலில் மலேசியாவிற்கு பாய்பாய் காட்டிட வைத்தார்.

மருத்துவத்திற்கு பேர் போன ஊரில் ஏறக்குறைய சில மாதங்கள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டாள் வேட்டாள். பட்டு போன கால்களை சரிசெய்திட முடியாது. மனநல சிகிச்சைகள் என்னவோ ரணப்பட்டு போன நெஞ்சத்திற்கே.

ரீசனின் மீது கொண்ட கோபம் தணிந்ததா என்ற கேள்விக்கு விடையாய், நம்பியின் சதி திட்டத்தின் பூடகமான பேச்சுகளுக்கு பெரிதாய் ரெஸ்பாண்ட் செய்திடாமல் டிமிக்கி கொடுத்து தப்பித்தாள் மடந்தையவள்.

பிளான் சொதப்பியதில் அப்சட் ஆகிய நம்பியோ, வேறொரு புது திட்டத்தில் இறங்கினார். வேறென்னே, டேடியானவர் மாமாவாகி போனார்.

வெளிநாட்டு இளம் தொழிலதிபர் ஒருவனை குஞ்சரிக்கு அறிமுகப்படுத்தினார். வெள்ளைக்கார துரையின் பெயரோ கிறிஸ்டியன். நட்பாய் பழக விட்டு; பின்னாளில் இருவரையும் ஒன்றாய் கோர்த்து விடும் எண்ணம் கொண்டார் குஞ்சரியை பெத்தவர்.

மனசு தெளிவாகிட, குஞ்சரி நேரத்தை வீணடிக்காது அப்பாவின் பிஸினஸை ஆன்லைன் மூலம் வழிநடத்திட ஆரம்பித்தாள். இடைக்கு கீழே செயலற்று போயிருந்த பேரிளம்பெண்ணிடத்தில் நெருங்கிய நட்பை பாராட்டினான் கிறிஸ்டியன்.

பொது அறிவு பேசிட ஆரம்பித்தவர்கள் பின்னாளில் பல கதைகள் பேசிட ஆரம்பித்தனர். கீத்து குட்டியிடத்திலும் அறிமுகமாகிப் போனான் கிறிஸ்டியன்.

பிஸ்னஸ் விடயமாய் இரண்டு நாட்களுக்கு வெளியூர் பயணம் போக வேண்டிய சூழ்நிலையில் குஞ்சரியை சந்திக்க வந்திருந்தான் கிறிஸ்டியன் கிளம்பிடும் முன். விடை பெறுகையில் வழக்கமான கட்டிப்பிடி.

அணைப்பிலிருந்து விலகியவளை இமைக்காது பார்த்தான் கிறிஸ்டியன். இன்முக இடையாளவள் நல்வார்த்தை கூறி அவனை வழியனுப்பிட, வெள்ளைக்கார செகண்ட் ஹீரோவோ மெயின் ரோலுக்கு ஆசைக் கொண்டான்.

ரீசனின் குஞ்சாயியை முத்தமிட நெருங்கினான், கெஸ்ட் ரோல் சிப்பாய்.

லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 19
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top