What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் 6

விசாகாவின் இல்லம்
வரவேற்பறை

மணி விடியற்காலை மூன்று நாற்பது.

பட்ட பகலைப் போல வீடு கார்த்திகை வெளிச்சம் கொண்டிருந்தது. வரவேற்பறை தொடங்கி அடுக்களை வரை எல்லா லைட்டுகளும் பல்லிளித்து கிடந்தன.

இது கடந்த சில மாதங்களாகவே நடக்கின்ற கூத்துதான். அதற்கான காரணத்தையும் ரீசன் நன்கறிவான். இந்த வீட்டிற்கான சாவியும் அவனிடத்தில் இருக்கிறது. தொந்தரவு செய்திட விரும்பவில்லை பாரிலிருந்து தாமதமாக வந்தவன், துயில் கொண்ட பாவையை.

மிதமான குறட்டை சத்தம் அவன் செவியில் விழாமல் இல்லை. ஆணவன் அதை பொருட்படுத்திடவும் இல்லை. முன்பு எரிச்சலாக இருந்தது. இப்போது பழகி விட்டது.

ஈரக்கால்களை முன் வாசல் மிதியடியில் நன்றாய் துடைத்துக் கொண்டவன் மடக்கி விட்டிருந்த பேண்ட் மடிப்புகளை கீழிறக்கி விட்டான். வெளி பைப்பில் கால்களை அலம்பிக் கொண்டுத்தான் மனைக்குள் அடியெடுத்து வைத்திருத்தான் ரீசன், நெடு நேரம் கழித்து வீடு திரும்புவதால்.

பேய் பிசாசு பயமெல்லாம் இல்லை, தொன்று கிருமிகள் பலவீனமான பூவையவளை தாக்கிட கூடாது என்பதில் கொஞ்சம் கூடுதல் கவனமே.

மெல்லிய சிணுங்கல் நெட்டிடையனின் காது கடிக்க, ஏறெடுத்தவன் கொஞ்சம் பதறித்தான் போனான் எங்கே திரும்பி படுத்த உருவத்துக்கு விபரீதம் ஏதேனும் நடந்திடுமோ என்று.

தவித்து கையை நீட்டி, ஆணவன் வாய் திறக்கும் முன்; பாதங்கள் முந்திக் கொண்டன. இருந்தும், அவனின் அவசரத்துக்கு அவசியமில்லாமல் போனது.

பதுங்கியோ ஆரவாரமின்றியோ அடிகளை வைத்திட ரீசனுக்கு சொல்லி தந்திடவே வேண்டாம். அவன் இதில் பி.எச்.டி. முடித்த வல்லுனன். மிக சாதாரணமாகவே தடங்கலின்றி பாதங்களை வரவேற்பறை சோபாவை நோக்கி வைத்தான் ரீசன்.

மரகத பச்சையில் பார்த்திடவே தனித்துவமான லுக்கை கொடுத்திடும் ஆடம்பர சோபாவில் வளர்ந்த மழலை ஒன்று பிஞ்சை சுமந்த வயிரோடு உறக்கம் கொண்டிருந்தது.

போர்வை நெஞ்சு வரை போர்த்தியிருக்க, வலப்பக்கமாய் ஒருக்களித்து படுத்திருந்தாள் விசாகா. தோதாய் மயில் பொம்மை ஒன்றை மாரோடு கட்டியணைத்து கிடந்தாள்.

பெண்ணவள் தலையோ கர்ப்ப தலையணை எனப்படும் பிரக்னன்சி பில்லோவின் (pregnancy pillow) ஓரத்து இடுக்கில் புதைந்துக் கிடந்தது. 'சி' வடிவத்தில் இருக்கும் அத்தலையணையை சோபாவின் மீது படுக்க போட்டு அம்மணி அதின் மீதுதான் படுத்துக் கிடந்தார்.

தாயாக போகின்றவளை நினைத்து தலையை ஐயோ என்ற தோரணையில் ஆட்டிய ரீசனோ, மெதுவாய் விசாகாவின் தலையை இடுக்கிலிருந்து மேல் தூக்கிட; கண் விழித்துக் கொண்டாள் அலரவள்.

''எப்போ வந்தீங்க தினா..''

என்றப்படி அவள் எழ முயல, உதவிய ரீசனோ அவள் கேள்விக்கு பதில் சொல்லாது யுவதியவளை கையிலேந்தினான்.

''வேணா தினா.. பரவாலே.. இறக்கி விடுங்க.. நான் நடந்தே வறேன்..''

சங்கடத்தில் குரல் ததும்ப, தாரமாகதவள் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தும் காதில் நன்றாய் விழுந்தும்; ரீசனிடத்தில் எவ்வித சலனமும் இல்லை.

தீனரீசனின் குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும் ஆயிழையை பத்திரமாய் மேல் மாடிக்கு தூக்கி வந்து சேர்ந்திருந்தான் ரீசன்.

''இனி போன் பண்ணா பேசு.. நான் கடிச்சு தின்னுடலாம் மாட்டேன்.. விளங்குதா..''

என்றவன் விறலியவளை பதமாய் இறக்கினான் அவளின் படுக்கையறை கட்டிலில்.

''நான் ரிங்கா ரிங்கா ரோஸஸ் விளையாண்டேன்..''

வாய்க்கு வந்ததை சொல்லி விசாகா சமாளிக்க, ரீசனின் இதழோரமோ சின்ன முறுவல் இழைந்தோடியது.

இளையாள் அவளோ ஒருக்களித்து படுக்க; தெரிவையவளுக்கு போர்வையை போர்த்தி விட்டவன் அக்கறையோடு சொன்னான்.

''நைட்லே உன்ன பார்த்துக்க ஆள் கேட்டுருக்கேன்.. இன்னும் ரெண்டு நாள்லே வேலைக்கு வந்திடுவாங்க..''

சொன்னவன் மஞ்சத்தில் வசதியாய் அமர்ந்துக் கொண்டான், விசாகாவின் பக்கத்தில்.

''எதுக்கு தினா.. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நான் பார்த்துப்பேன்..''

இடக்கை உள்ளங்கை காரிகையின் கன்னத்தை தாங்கியிருக்க, அவனை இமைக்காது பார்த்த மங்கையவள் ஒப்புக்கு சொன்னாள்.

நிஜத்தில் அவளால் முடியாவில்லைதான். அதுவும் ராத்திரி வேளைகளில் சொல்லவே வேண்டாம். தனியே இருப்பவளுக்கு இரவில் துணையாய் அப்பெரிய பங்களாவில் யாருமில்லை. அதான், வீடு முழுக்க வெளிச்சம்.

தனிமை அவள் விரும்பி ஏற்றுக் கொண்டதும் இல்லை. மதியம் ஆறு மணி வரைக்கும் வீட்டு வேலைப் பார்த்திடும் வேலைக்காரர்கள் இருவர். அவ்வளவே.

முன்பு இருந்தார்கள் பத்து பதினைந்ததென்று. ஆனால், இப்போதோ எவரும் இலவச சேவையை வழங்கிட தயாராயில்லை. அவர்களின் ஐந்து மாத சம்பள பாக்கியைக் கூட ரீசன்தான் செட்டல் செய்து கொடுத்தான் காரிகைக்காய்.

கடவுளின் திருவிளையாடலை நம்மால் கணித்திட இயலுமா என்ன. விசாகாவின் வாழ்வில் அடித்த தொடர் சுனாமிக்கும் இதுவே காரணம்.

''என்ன பார்த்துப்பே!! அதான் பார்த்துக்கிட்ட லட்சணம் தெரியுதே!! தமிழ் எனக்கு தனியா கிளாஸ் எடுக்காதே குறைதான்!!''

அழுத்தம் கொண்ட ரீசனின் குரலில், பெண்டு அவளோ கண்களை படக்கென்று மூடிக் கொண்டாள். தூக்கமேதும் இல்லை, மாறாக கலங்கிய கருவிழிகளை மறைத்துக் கொண்டாள்.

வலித்தது பெதும்பையவள் மறக்க நினைக்கின்றதை மீண்டும் ரீசன் ஞாபகப்படுத்திட. கண்ணீர் அருவி தலையணையை சத்தமின்றி நனைத்தது. சிறு விசும்பல் கூட கொண்டிடவில்லை விறலியவள். எங்கே அவன் அறிந்தால் திட்டிடுவானோ என்று பயந்து.

ரீசனுக்கு அழுவது பிடிக்காது. அதுவும் விசாகா அழுதாள் சுத்தமாய் பிடிக்காது. காரணம், அவள் அழுகும் போதுதான் மனதில் உள்ள அத்தனையையும் பாரபட்சம் பார்க்காது கொட்டிடுவாள்.

அதுவும் அதில் பாதி வார்த்தைகளை விழுங்கித்தான் மீதியை ஒப்புவித்திடுவாள் மகராசி. மாயோள் அவளின் பிஞ்சி போன வார்த்தைகளை கோர்வையாக்கி, அவைகளை புரிந்துக் கொள்வதற்குள்; ரீசனுக்கு பொழுதே விடிந்திடும்.

''என்கிட்டே ஏன் சொல்லலே..''

இறுகிய முகத்தை பழையப்படி மாற்றிக் கொண்டவன் மென்மையாய் கேட்டான். கணவனாகதவனின் முகம் பார்க்காத அருணியோ போர்வையை இழுத்து முழு தலையையும் மறைத்துக் கொண்டாள்.

''கேட்கறந்தானே.. ஏன் என்கிட்டே சொல்லலே..''

என்றப்படி போர்வையை இழுத்தான் ரீசன்.

''என்னன்னு சொல்றது தினா.. குட்டி பையன் இல்லாமே போயிடுவான்னா..''

விடுக்கென்று அவள் சொல்ல, சுள்ளென்றது ரீசனுக்கு. முறைத்த மிழிகளால் அவளைக் கூறுப்போட்டவனிடத்தில் பொறுமையில்லை.

''ஓங்கி அறைஞ்சேன்.. செத்திடுவே விசா!!''

ரீசனின் கடுஞ்சொல்லுக்கு பதிலில்லை வஞ்சியிடத்திலிருந்து. ஆனால், விருட்டென்று விழிகள் விரித்தவள் ரணப்பார்வைகள் கொண்டு முன்னிருப்பவனை நோக்கினாள்.

உணர முடிந்தது ரீசனால் அவள் வேதனையை. இல்லாது போகின்ற வலியை அனுபவித்தவனுக்கு தெரியாதா அது கொடுமையிலும் கொடுமையானதென்று.

ரோதனையெல்லாம் கண்ணீராய் வழிந்திறங்க, இமைக்காது தினாவையே வெறித்திருந்த பூமகளோ வாய் மலர்ந்தாள்.

''வேண்டா வெறுப்பா இருக்கறே உங்களாலையே தாங்கிக்க முடியலையே தினா.. இவன் ஒருத்தன்தான் இனி என் உலகம்னு இருக்கறே எனக்கு எப்படி இருந்திருக்கும் டாக்டர் தமிழ் அப்படி சொல்லும் போது..''

பிள்ளைக் கொண்ட வயிற்றில் கரம் பதித்து அவள் சொல்லிட, தந்தையவனின் அம்பகங்கள் கலங்கியதோ இல்லையோ அடிமனசில் நறுக்கென்ற ஒரு குத்தல், குலியற்றவள் சொன்ன வார்த்தைகளில்.

ரீசனுக்கு துணைவியாகாதவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை அவன் எவ்வளவு ஆவல் கொண்டிருக்கிறான் பிறக்க போகும் குட்டி ரீசனை காணவென்று. ஆனால், நொடியில் உடைத்து விட்டாள் மானினியவள், ஆணவனின் மனதை; வேண்டா வெறுப்பான குழந்தை என்று சொல்லி.

''எனக்கு பயமா இருக்கு தினா.. எங்கே இவனும் என்ன விட்டு போயிடுவானோன்னு..''

கதறியவள் ரீசன் பக்கமிருந்தும் அவனிடத்தில் ஆறுதல் தேடாது தலையணையிலேயே முகத்தை புதைத்துக் கொண்டாள்.

உரிமையற்றவனிடத்தில் பேச்சுக்கு கூட தாய்மையை காரணங்காட்டி அனுதாபம் சம்பாரித்திட விரும்பவில்லை விசாகா குட்டி.

ரீசனோ ஏதும் பேசாது படுத்துக் கிடந்தவளை மேல் தூக்கி வாரியணைத்துக் கொண்டான்.

''ஏன் தினா எனக்கு மட்டும் இப்படி!! ஏன்!! நான் என்ன பாவம் பண்ணே தினா!!''

குலுங்கி அழுத ஏழு மாத கர்பிணியோ, அவன் அணைப்பிலிருந்து விலகிக் கொண்டாள்.

பிடிக்காமல் இல்லை, தேவையற்ற ஆசைகளை வளர்த்துக் கொள்ள அவள் விரும்பவில்லை.

ஒருமுறை ஏமாந்த தாக்கமே இன்னும் தீரவில்லை தாரகைக்கு.

*

ஐ.யு.ஜி.ஆர், (IUGR @ Intrauterine growth restriction) கருப்பையக வளர்ச்சி மந்த நிலை. இந்நோயால்தான் பாதிக்கப்பட்டிருந்தது விசாகா சுமந்திருக்கும் குழந்தை.

கர்ப்ப காலத்தில் குழந்தை எதிர்பார்த்த விகிதத்தில் வளர்ச்சி அடையாமல் போவதைத்தான் இப்படி குறிப்பிடுவார்கள் மருத்துவர்கள்.

கருவின் உடல் விகிதாச்சாரமாக சிறியதாக இருக்கும் போது, இது சமச்சீரான ஐ.யு.ஜி.ஆர் (symmetrical IUGR) என்று அழைக்கப்படுகிறது.

அதுவே, கருவின் உடல் சிறிய அளவிலும் தலை மற்றும் மூளை சாதாரண அளவில் இருக்கையில்; அது சமச்சீரற்ற ஐ.யு.ஜி.ஆர் (asymmetrical IUGR) என்று வரையறுக்கப்படுகிறது.

குழந்தையின் இந்நிலைக்கு மூலகாரணம் என்று பொதுவாக சொல்லப்படுவது என்னவோ உயர் இரத்த அழுத்தமே.

இருப்பினும், கருவுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போவதும் ஒருவகையில் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கிறது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதாவது, வளரும் குழந்தைக்கு உணவின் சத்துகளையும் ஆக்ஸிஜனையும் நஞ்சுக்கொடியில் கொண்டு வந்து சேர்த்திடும் திசுவோ அல்லது தொப்புள்கொடியின் மூலம் குழந்தையையும் நஞ்சுக்கொடியையும் இணைத்திடும் ரத்த ஓட்டத்தில் ஏற்படுகின்ற பிரச்சனையோ கூட பிள்ளையின் மந்தமான குறுகிய வளர்ச்சிக்கு காரணங்களாகிடும்.

அதே வேளையில், ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையக வளர்ச்சி தடைப்பட்டுப் போவதற்கு புகைபிடித்தல், மது அருந்துதல் போதைப்பொருள் பயன்பாடு, ரூபெல்லா (rubella), இரத்த சோகை (anemia), ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை கருத்தரிப்பது போன்ற விடயங்களும் லிஸ்ட்டில் இடம் பிடிக்கின்றன.

தனியார் கிளினிக் ஒன்றில் ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கான பரிசோதனையை மேற்கொண்டிருந்த விசா குட்டி மகனின் அவல நிலையை அறிந்திருக்கவில்லை.

கடவுள் புண்ணியமாக அன்றொருநாள் தாய்மைக் கொண்டவளை மருத்துவன் தமிழ் செல்வன் எதர்ச்சையாக உணவு கடையொன்றில் சந்தித்தான். தமிழின் குடும்பம் விசாகாவின் அப்பா தேவேந்திரனுக்கு நல்ல பழக்கம்.

தமிழ் கட்டாயமாக அழைக்க, மறுக்காமல் சென்றாள் மகப்பேறு மருத்துவன் அவனின் மருத்துவமனைக்கு விசாகா குட்டி. நிறைமாத கர்ப்பிணிக்கு அல்ட்ராசவுண்ட் சோதனையை மேற்கொண்டான் தமிழ்.

அங்குதான் கண்டறிந்தான் தமிழ், தங்கை வயதில் இருக்கின்ற விசாகா தரித்திருக்கும் கரு மந்தமான வளர்ச்சியை கொண்டிருக்கிறதென்று.

முடிந்தவரை அவளிடத்தில் பதமாகவே குழந்தையின் நிலையை எடுத்துரைத்தான் தமிழ். இருந்தும் குட்டி பெண்ணால் எவ்வளவுதான் தாங்கிட முடியும்.

அதுவும் இப்போதுதான் கொஞ்சங் கொஞ்சமாய் வெளி வந்து கொண்டிருந்தாள் விசா குட்டி அவள் டேடி மறைந்த துக்கத்திலிருந்து.

தமிழ் சொன்னதைத் தாண்டி, படித்த பெண்ணவள் குழந்தை கொண்டிருக்கும் குறைப்பாட்டினை பற்றி கூகள் மற்றும் புத்தங்கள் வழி அறிந்துக் கொள்ள; அவளறியாது ஒரு வித பயம் அவளைத் தொற்றிக் கொண்டது.

அழுது சோர்ந்தவள் கண்டதையும் நினைத்தப்படி படுக்க, கனவுகளோ அபசகுனமாக வந்தன. பதறி தூக்கம் கலைந்தவள், ஏதோ ஒரு வேகத்தில் ரீசனுக்கு போனை போட, மறுமுனையில் அவன் அழைப்பிலிருந்தும் ஏதும் பேசாது ரிசீவரை துண்டித்தாள் விசா.

அவள் இன்றைக்கு அழைக்காது இருந்திருந்தாலும் மறுநாள் காலை எப்படியும் ரீசன் வந்திருப்பான் அவளை சந்தித்திட.

தமிழ் பக்குவமாய் எடுத்துரைத்திருந்தான், மடந்தையவள் எதிர்கொண்டிருக்கும் கஷ்டத்தை; அவள் குழந்தைக்கு சட்டப்படி தந்தையான தீனரீசனிடத்தில்.

லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/லேடி-பீஸ்ட்டின்-பிக்-பாஸ்-நான்.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 6
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top