What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் ஒன்பது

தவறுகள் தண்டிக்கப்படலாம். இல்லையேல் மன்னிக்கப்படலாம். பெருந்தன்மை என்பது அவரவரை பொறுத்தது. இருப்பினும், பாவ கணக்குகள் அவ்வளவு எளிதில் விடைப்பெற்றுக் கொள்வதில்லையே.

அரசனும் தெய்வமும் நின்று கொள்வான், உட்கார்ந்து கொள்வான் என்பதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லை.

இன்றைய காலக்கட்டத்தில் அடுத்த நொடியே கணக்கை தீர்த்துக் கொண்டு கடந்து போகும் நிலைதான் அனைவருக்கும். அப்படியான சக்கர உலகில்தான் மானிட பட்சிகள் நாமெல்லாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

காதல் தம்பதிகள் ரீசன் குஞ்சாய் குடும்பத்தில் புயலாய் வந்ததென்னவோ விசாகாதான். மறுப்பேதுமில்லை அதில்.

இருந்தும், அவள் வரவைத் தாண்டிய சுனாமியின் வீரியம் கொண்ட சம்பவமொன்றே இன்றைக்கு ஆணவன் இப்படியானதொரு முடிவை எடுத்திட வழிவகுத்துள்ளது.

இச்சூழலைக் காரணங்காட்டி ரீசனவன் தன்னால் கர்ப்பமாகி நிற்கும் விசாகாவோடு சேர்ந்து கூத்தடித்திடவும் இல்லை, கீத்து குட்டியின் தகப்பன் என்ற பொறுப்பிலிருந்து கழண்டிக் கொள்ளவும் இல்லை.

பல நிகழ்வுகள் நடந்தேறி முடிந்திருந்த இடைப்பட்ட மாதங்களில், நிறைமாத கர்ப்பிணியான விசாகா குட்டி முதல் முறை தனிமையின் இறுப்பைத் தாங்கிட முடியாது தினாவை அழைத்தாள்.

ஏதோ ஒரு வேகத்தில் அழைத்தவள், பின் பேசிடவே இல்லை; மறுமுனை ரிசீவரில் அவனிருந்தும். பெதும்பை அவளோடு எவ்வித பிணைப்பும் இல்லாத போதும், மனம் என்னவோ அக்குட்டியாகத்தான் இருக்கும் என்று நினைக்க; நங்கையவள் இல்லம் ஓடினான் ரீசன்.

பிள்ளைக் கொண்ட கன்னியவள் படுகின்ற வலியும் வேதனையும் அவனுக்கு புதிதல்ல. ஏற்கனவே, தேவகுஞ்சரி கர்ப்பம் தரித்திருக்க, பார்த்து பழகியவனே. அவளுக்காவது வீட்டை சுற்றி எந்நேரமும் ஆட்கள் இருந்தனர். கணவனவனும் உடனிருந்தான் அப்போதைக்கு.

ஆனால், கற்பை கண்மூடித்தனமாய் பறிகொடுத்த மங்கை விசாகாவோ இன்றைக்கு துணைக்கு கூட யாருமற்றே கிடக்கிறாள் தன்னந்தனி கொடியாய். பரிதாபத்தில் வந்த கரிசனம் தரிசனமாய் மாறிட, அங்கேயே கிடந்து சேவைகள் செய்திட முடிவெடுத்தான் கருவிற்கு காரணமானவன்.

செல்ல மகளாய் கேட்டதெல்லாம் உடனுக்குடன் கிடைத்த வேகத்தில் டாஃபி ரோஜாவாய் மலர்ந்து குலுங்கியவள் இன்றைக்கு யாருமற்ற அனாதையாய் நிற்கின்ற நிலைக்கு ரீசனும் ஒரு காரணம்தான், சொன்னாலும் சொல்லாவிட்டாலும்.

செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடுகின்ற வகையில், அருணியவளின் பாதுகாப்பிற்காக அவளோடு தினா அவனிருக்க; மீண்டுமொருமுறை ஏமாற்றம் கொள்ள விரும்பாத விறலியோ கையெடுத்து கும்பிடாத குறையாய் அவனின் உதவிக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

பார் ஓனர் உணர்ந்துக் கொண்டான் அவள் படுகின்ற வேதனையை. பெண்ணவளின் முடிவுக்கு மரியாதைக் கொடுத்து அவள் போக்கில் விட்டான். மகடு அவள் இல்லம் செல்வதையும் நிறுத்திக் கொண்டான்.

நாட்கள் படு வேகமாய் ஓட்டமெடுத்தன.

கீத்து குட்டி தாத்தா பாட்டி இல்லத்தில் செட்டலாகி விட்டாள். ரீசனோ அவ்வப்போது மகளை அங்குச் சென்று பார்த்து வந்தான். தேவகுஞ்சரியும் மாமனார் மாமியார் வீட்டுக்கே சென்று மகளைக் கண்டுக் கொண்டு வந்தாள்.

எங்கே அவளை வீட்டுக்கு கூட்டி வந்தால், ரீசனின் கோபம் இன்னும் அதிகமாயிடுமோ என்றெண்ணி அவன் சொல்லும் வரை அமைதிக் காத்தாள் தாயவள்.

குஞ்சாயியின் பாசமிகு அப்பா நம்பியோ வெளிநாட்டில் இருப்பதால், மகளின் குடும்ப பிரச்சனையின் விவரமேதும் அவர் அறிந்திடவில்லை. தெரிந்தால் அவ்வளவுதான்.

ஏற்கனவே, ரீசன் என்றால் அவருக்கு கசக்கும். இப்போது இப்படியென்றறிந்தால் புருஷனவன் எட்டடி பாய்வதற்குள் மாமனாரவர் பதினாறடி பாய்ந்திருப்பார். என்ன ஏதென்று எதையும் கேட்காது கண்டிப்பாய் மகளையும் பேத்தியையும் நாடு கடத்தியிருப்பார்.

ரீசனும் குஞ்சரியும் பேசியே ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆயந்தியவள் எவ்வளவு முயற்சித்தும் பலனில்லை. ஆளானவன் போன் நம்பரை மாற்றியதுதான் மிச்சம்.

அவள் மகளை காண வருகின்ற நேரத்தில் தாய் வீடு செல்வதைக் கூட தவிர்த்திருந்தான் ரீசன். நொடிக்கு நூறு முறை குஞ்சாய், குஞ்சாய் என்றுருகிய ரீசன் தேவகுஞ்சரியின் நிழலைக் காண்பதைக் கூட பாவமென்று நினைத்தான்.

அப்படி என்னதான் ஆயிற்று, ரீசனின் மனம் இப்படி வெறுப்பில் கல்லாய் போவதற்கு.

உண்மை ஒருநாள் வெளிவரும் அப்போதுதான் பலருக்கும் ஹார்ட் அட்டாக் வரும்.

*

தீனரீசன் தேவகுஞ்சரி இல்லம்
ரீசன் குஞ்சாய் படுக்கையறை


ரீசனின் காதல் மனைவியின் கையில் டிவோர்ஸ் பேப்பர்கான பெட்டிஷன் (petition). கோர்ட் (court) அனுப்பியிருந்தது.

கனவிலும் காரிகையவள் நினைத்திடவில்லை அவர்களுக்குள் நடந்த பிரளயம் இப்படியான பூகம்பத்தை கிளப்பிடும் என்று.

சண்டையின் சமாதானத்திற்கு இப்போதைக்கு வழி இல்லாவிட்டாலும், சட்ட ரீதியான பிரிவையெல்லாம் பாரியாள் குஞ்சரி யோசிக்கவும் இல்லை.

ஆனால், பெட்டிஷன் என்ற ஒன்று அவளின் மொத்த நம்பிக்கையையும் குலைத்து உணர்த்தியது இல்லாளுக்கு ரீசன் தூக்கியெறிந்து விட்டான் வீட்டாள் அவளை மனசிலிருந்து.

உருகி மருகிய காதலோ ஒரேடியாய் டாட்டா காட்டிடும் நிலைக்கு வந்து விட்டதை புரிந்துக் கொண்டவள் உள்ளமோ ஒரே ஒரு முறை ஆளனிடத்தில் களவு போன மனதிற்காக கையேந்திட கூட நிந்தித்தாள்.

ஆனால், கணவனின் பிடிவாதம் அவள் அறிந்த சங்கதியே. தீனரீசனிடத்தில் எதுவும் வேலைக்கு ஆகாது.

ஆயந்தியின் அம்பகங்களோ அவர்களின் முதல் முத்தத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

''தேவகுஞ்சரி..''

என்றவளின் நிஜப்பெயரை முதல் முறை தீனரீசன் உதிர்த்திட, ஆடித்தான் போனாள் பெண்ணவள்; மாரியில் தொப்பையாகிய தேகம் கிடுகிடுக்க.

''எங்க ஓட பாக்கறீங்க சீனியர்..''

என்றவனோ குளிரில் நனைந்த தடையமே இல்லாதவனை போல, மிக சாதாரணமாய் இருட்டிய அறைக்குள் விலகிட முற்பட்டவளை வார்த்தைகளால் தடுத்தான்.

''இந்த.. இந்த பேர்.. உனக்கெப்படி..''

விக்கித்து பின்னோக்கியவளின் இடையை லாவாய் அவன் கரங்களுக்குள் அடக்கினான் ஹீரோ.

கருவூலகத்தில் இருவரும் தனியே. அதுவும் இரவில், சிக்கியெல்லாம் கொள்ளவில்லை. ஹேட் அண்ட் சீக் (hide and seek) விளையாடிய வளர்ந்த மொக்கு குழந்தைகளின் அலப்பறையான அராஜகங்கள் சீனியர்ஸ் என்ற பெயரில்.

பழுப்பு வர்ண அலமாரி சிலாகித்து போனது பாவையவளின் ஈர முதுகு அதில் ஒட்டிட.

''தேவகுஞ்சரியாகிய.. மயூரி.. சரியா..''

என்றவனின் பிடியோ இறுக்கம் கொள்ள, ரீசனின் நெஞ்சோடு ஒட்டிக் கிடந்தவளோ நாணத்தால் விழிகளை தாமரையாய் கவிழ்த்துக் கொண்டாள்.

''மயூரியே விட.. தேவகுஞ்சரி இன்னும் அழகா இருக்கு..''

ஜூனியரின் ரகசிய தொனியோ, சீனியரின் காது மடலில் காற்றாய் வருடல் கொண்டது.

தேவகுஞ்சரி என்ற பெயரை சுத்தமாய் நங்கையவளுக்கு பிடிக்காது. மாடர்ன் காலத்தில் இப்படியொரு பெயரா என்று பெதும்பையவள் கறுவிடாத நாளே இல்லை வளர்ந்த பிறகு.

பெண்கள் மட்டுமே நிரம்பிய இடைநிலைப்பள்ளியில் அவளின் ஆதிக்கம் அதிகம், தேவா என்ற பெயரில்.

இருப்பினும், மயூரி என்று தேவகுஞ்சரி பெயர் மாற்றம் கொள்ள விரும்பினாள் பிடிவாதமாக கல்லூரியில் அடியெடுத்து வைத்திடும் முன்; தேவாவிற்கு முழுக்கு போட்டு.

மகளின் மனம் கோணாது அவளின் விருப்பத்திற்கு இசைந்துக் கொடுத்தார் ஒரு நிபந்தனையோடு, தீவிர முருக பக்தரான நம்பி. அதுதான் மயூரி என்ற பெயருக்கு முன் சஷ்டிக்கா என்ற வார்த்தையை இணைத்துக் கொள்வதாகும்.

என்னவோ என்று நாட்டமற்று கொண்டாள் மயூரி தன் காரியம் சுலபமாய் முடிய அப்பாவின் இஷ்டத்திற்கு.

இப்படித்தான் தேவகுஞ்சரி, சஷ்டிக்கா மயூரி என்ற பெயர் கொண்டாள்.

''மயூரி வேண்டாம்..''

என்று ரீசன் கிறங்கிய குரலில் சொல்லிட, மெதுவாய் மிழிகளை மட்டும் மேல் தூக்கினாள் தேவகுஞ்சரி.

''தேவா வேண்டாம்..''

என்றவனோ அவனின் கரங்களால் காரிகையின் கந்தரத்தை தென்றலாய் உரசினான்.

''குஞ்சரியும் வேணாம்..''

என்றவனின் உள்ளங்கை விரல்கள் தந்த சுகத்தில், மயங்கிடும் மேனி கொண்ட தகிப்பை ஒளித்து; திருநிறைசெல்வி குஞ்சரியோ விருப்பம் கொண்டவனின் முகத்தை தலைதூக்கி முற்றிலுமாய் எதிர்கொண்டாள்.

''சஷ்டிக்காவும் வேணாம்..''

என்றவனோ கொக்கி போடும் அவளின் பார்வைகளில் தொலைந்து விலோசனங்கள் மூடி நெருங்கினான், யுவதியவளின் ஊறுகாயான உதடுகளை சப்புக்கொட்டி ருசித்திட.

அது என்னவோ பார்த்த நாளிலிருந்தே சீனியர் குஞ்சரிக்கு ஜூனியர் ரீசன் மீது ஒரு கண்தான்.

அவனின் ஆடம்பரமில்லா லுக்கே அவளை பெரிதும் கவர்ந்தது. காதில் கடுக்கன். யாரும் பார்க்கா வண்ணம், கழுத்தில் துளசி மாலை.

தென்னை மர உயரம். கதம்ப மலர் தேகம். பிராண்ட்டில்லா (brand) ஸ்போர்ட் ஷு (sport shoe). நேர்த்தியான ஆடைகள். பளிச்சிடும் முகம். அலட்டிக் கொள்ளா குணம்.

அவன் வரையில் வைத்துக் கொண்டு, முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுதல். எல்லாவற்றையும் மெல்லிய சிரிப்போடு கடந்து போகுதல்.

அவ்வப்போது குஞ்சரியை மட்டும் எதார்த்த பார்வை என்ற போர்வையில் வாரி சுருட்டி கொள்வது. இப்படி அடிக்கிக் கொண்ட போகலாம் தீனரீசனை பேரிளம்பெண்ணவளுக்கு பிடித்த போனதின் காரணங்களை.

அரிவையின் காரக்குழம்பான இதழ்களிலிருந்து காதல் கொண்ட உமிழ்நீரை பூண்டை போல, மிச்சமின்றி உறிஞ்சியெடுத்தான் ரீசன்.

''ரீசன்..''

என்று துவண்டவள் அவன் பெயர் அனத்த, ஆயிழையின் முகத்தை இருக்கைக்குள் அடக்கியவனோ நாசிகள் முட்டிக் கொள்ள சொன்னான்.

''குஞ்சாய்..''

''ஐ லவ் யூடா ஜூனியர்.. ரொம்ப நாளாவே.. சொல்ல தெரியலே.. கல்யாணம் பண்ணிக்கலாமாடா..''

பட்டென போட்டுடைத்த பெண்டு அவள், கேட்டே விட்டாள் ஆணவனின் முடிவறிய. ரீசனோ விழிகள் திறந்து மோகனத்தில் கிடப்பவள் முகம் பார்த்து சொன்னான்.

''குஞ்சாயியை கட்டிக்கறேன்..''

சொன்னவன் மீண்டும் ஒருமுறை மிளகாளான அவளின் அதரங்களில் வெண்பொங்கலை தேடிட ஆரம்பித்தான்.

விழிகள் கொட கொடக்க, பெட்டிஷன் பேப்பரை மஞ்சத்தில் வைத்தவள் அவளின் கைப்பேசியை எடுத்தாள்.

மாமியாருக்கு போனை போட, மறுமுனையில் அழைப்பை எடுத்ததென்னவோ கீத்து குட்டியே.

''மம்மி..''

நம்பரை பார்த்து அம்மாவை அடையாளங் கண்டுக் கொண்டாள் மகளவள்.

''கீத்துமா.''

பாசமாய் அவளழைக்க, குட்டி பெண்ணோ கொஞ்சிக் சொன்னாள்.

''மம்மி.. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு!!''

பூரிப்பு குறையாது குட்டி பெண்ணவள் சொல்ல, தழுதழுத்த குரலில் பேச்சை தொடர்ந்தாள் அம்மாக்காரி.

''அம்மா சோரிடா கீத்து குட்டி..''

அழுகையைக் கட்டுப்படுத்திய தாயவள் மெதுவாய் சொல்ல, மழலை அவளோ புரியாது வினவினாள்.

''ஏன்மா..''

''அம்மா உன்னே நிறைய அடிச்சிருக்கேன்லே.. அதுக்குதான்..''

பொய்யாய் சமாளித்தாள் நிஜம் கூறிடாது தேவகுஞ்சரி.

''அதெல்லாம் நான் அப்பவே மறந்துட்டேன் மம்மி..''

பெருந்தன்மையாய் சிரித்து சொன்னாள் பெரிய மனுஷி.

''நீ மறந்துட்டே.. உங்கப்பா எதையும் மறக்கலே கீத்து.. மறக்கவும் மாட்டாரு.. மன்னிக்கவும் மாட்டாரு..''

விவகாரத்திற்கான உண்மை நிலவரம் கணவன் மனைவி இருவரை தாண்டி மூன்றாவதாக விசாகா மட்டுமே அறிந்த ரகசியமாகும்.

காரணம் என்னவோ விசாகா அறிந்திருந்தாலும், ரீசனின் இப்போதைய டிவோர்ஸ் மேட்டரை பற்றியெல்லாம் தெரிவையவளுக்கு ஏதும் தெரியாது.

''என்ன மம்மி சொல்லறீங்க..''

என்ற மகளோ காரின் பின் சீட்டியில் முட்டிக் கால்களால் நின்றுக் கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்தவாறே கேள்விஎழுப்பினாள்.

''ஒன்னும் இல்லடா கீத்து.. இங்கப்பாரு அம்மா கொஞ்ச நாளைக்கு வெளியூர் போக போறேன்.. எப்போ வருவேன்னு தெரியாது.. நீ இப்போ எப்படி தாத்தா பாட்டி வீட்டுலே சமத்து புள்ளையா இருக்கியோ அதே மாதிரி ராங்கி பண்ணாமே குட் கேர்ளா (good girl) இருக்கனும்.. சரியா..''

போகின்ற இடம் இனி திரும்பிட முடியா நரகமென்று எப்படி சொல்லிடுவாள் தாயவள் மகளிடத்தில். முடிவு எடுத்தாயிற்று. இனி பேசி புரோஜனம் இல்லை.

''சரிம்மா..''

என்றாள் மகளும் அம்மாவின் முடிவறியாது.

''கீத்து குட்டி.. அப்பா கூட சண்ட போடக்கூடாது.. அப்பா உன்னே பார்க்க வரலன்னா கோச்சிக்க கூடாது.. அப்பாக்கு புடிச்ச பொண்ணா இருக்கணும்.. சரியா.. நல்லா படிக்கணும்.. ராங்கி பண்ண கூடாது.. நம்பி தாத்தா கனடா போகலாம் சொன்னா.. போக கூடாது ஓகேவா..''

அப்பா நம்பியின் தகிடு தத்தங்களை நன்கறிந்தவள் குஞ்சரி. ஆகவேதான், மகளை முன்கூட்டியே எச்சரித்தாள் போகக் கூடாதென்று.

''ஏன்மா..''

கேள்வி கேட்ட பிஞ்சிடத்தில் இம்முறை உண்மையையே சொன்னாள் குஞ்சரி.

''நீ கனடா போயிட்டா அப்பா இங்க தனியா இருப்பாருலே.. பாவம்தானே கீத்துவோட டேடி..''

''ஆமா.. என் டேடி பாவம்.. நான் எங்கையும் போக மாட்டேன் மம்மி.. நீங்க சீக்கிரம் அவுட் ஸ்டேஷன் (out station) போயிட்டு வந்துடுங்க.. நாமெல்லாம் நம்ப வீட்டுக்கு போயிடலாம்.. அங்க என் டோய்ஸ்லாம் (toys) நிறைய இருக்கு.. விளையாண்டு ரொம்ப நாளாச்சு மம்மி..''

தோய்ந்த குரலில் மகள் சொல்ல, குஞ்சரியோ அவளை சமாதானம் செய்தாள் கன்னம் நனைத்த கண்ணீரை கைகளால் துடைத்துக் கொண்டு.

''ஆமாவா.. சரி அம்மா போறதுக்கு முன்னாடி கீத்து குட்டியோட ஃபேவரைட் (favorite) பொம்மையெல்லாத்தையும் எடுத்து தனியா வெச்சிடறேன் சரியா.. அப்பா எடுத்திட்டு வந்து கீத்துக்கிட்டே கொடுத்திடுவாராம்.. ஓகே..''

''ஓகே மம்மி.. லவ் யூ..''

''அம்மா டூ லவ் யூ கீத்து.. அம்மா உன்னே ரொம்ப மிஸ் பண்ணுவேண்டா..''

செய்யப் போகும் முட்டாள் தனத்திற்கு பாச உரை வேறு நிகழ்த்தினாள் தேவகுஞ்சரி.

''மம்மி.. போன் பாருங்க..''

மகள் குட்டி கீத்து சாதாரண வாட்ஸ் ஆப் ஆடியோ அழைப்பை, வீடியோவாக மாற்றியிருந்தாள்.

''மம்மி ஐ லவ் யூ!!!''

அலறினாள் குட்டி கீத்து.

அருவியாய் ஆர்ப்பரித்த கண்ணீரை ஓரம் ஒதுக்கி மகளுக்கு ஓராயிரம் முத்தங்கள் வைத்தாள் தேவகுஞ்சரி.

''கீத்து.. இதுலே பாதி அப்பாவோடது.. டேடிக்கிட்ட கொடுத்திடு.. மம்மி கொடுக்க சொன்னேன்னு.. சரியா..''

ஆளானவனுக்குத்தான் வெறுப்பு கடுப்பெல்லாம். பொஞ்சாதி இவளுக்கு குற்ற உணர்ச்சி மட்டுமே. அதனால் ஒன்றும் குஞ்சாயியின் காதல் குறைந்து போயிடாதே. அதே சமயம் இழைத்த பாவம் இல்லையென்றும் ஆகிடாதே.

காரில் குட்டி கீத்துவோடு பயணித்த அம்பாளும் தாண்டவனும் சங்கோஜப்பட்டே போயினர், மருமகளின் செயலால்.

தொடர்ந்து பத்து பதினைந்து நிமிடத்திற்கு மகளிடத்தில் ஆசைத் தீர பேசி முடித்து கைப்பேசியை காதிலிருந்து பிரித்தெடுத்தாள் தேவகுஞ்சரி.

லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்...


முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 9
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top