What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
484
WhatsApp Image 2025-01-21 at 8.55.34 PM.jpeg

தாழ் திறவாய் ததுளனே! : 15

உச்சி வெயில் மண்டையை பிளந்தது வெளியில்.

ஏசி காரில் அமர்ந்திருந்த சுவாவோ அழைத்தாள் ஆரோனை.

''சார், நான் வந்துட்டேன்! மேலே வரவா?!''

''இல்லே வேண்டாம்! நீங்க கார்லையே இருங்க! நான் வறேன்!''

சொன்னவன் ரிசீவரை துண்டித்து, அலுவலக வாசல் நோக்கி மின்தூக்கியில் கீழிறங்கினான்.

ஆரோன்தான் அனுப்பி வைத்திருந்தான் கார் ஒன்றை அவளை கூட்டி வரச்சொல்லி.

கார் கதவைத் திறந்து பின் சீட்டியினில் அமர்ந்த ஆரோனோ, அவன் பக்கத்தில் இடைவெளி விட்டு அமர்ந்தாற்படி அவனை பார்த்து முறுவலித்த நாயகியைக் கண்ட மாத்திரத்திலேயே சிறு அதிர்ச்சி கொண்டான்.

இருப்பினும், அதை மறைத்து,

''நீங்க சித்த டாக்டர் சுவாகைதானே?!''

''ஆமா சார்! என்னே உங்களுக்கு தெரியுமா?!''

பிரபலமற்றவள் வேள்விக்கொள்ள, பதில் சொல்லா ஆரோனோ தலையை மட்டும் ஆட்டி வைத்தான், ஆமாம் என்று.

''எங்க போறோம் சார்?!''

''வெயிட் பண்ணுங்க! இருபது நிமிஷத்துலே உங்களுக்கே தெரிஞ்சிடும்!''

ஆணவனின் சூட்சமமான பதிலில் பனிமொழி அவளுக்கோ உள்ளுக்குள் அல்லு விட்டது.

''அவர் வரலையா சார்?!''

சூசகமாய் சுந்தரி வினவ, அவள் பக்கம் தலை திருப்பிய ஆரோனோ,

''யாரு?!''

''விராகன்!''

''தெரியுமா அவனே?!''

வேண்டுமென்றே மங்கையின் மனதை பழைய சம்பவங்களை அசைப்போட்டிட வைத்தான் ஆரோன்.

அவைகளை நினைத்து பார்த்திட விரும்பா வல்வியோ, கபாலத்தை கண்ணாடிக்கு வெளியில் தெரிந்த சாலையில் பதித்து, சிந்தையைக் கட்டுக்குள் கொண்டு வர பாடாய் பட,

''உங்களைத்தான்?! தெரியுமா என் தம்பி ராகனை இதுக்கு முன்னாடியே உங்களுக்கு?!''

என்னதான் சொல்ல போகிறாள் என்ற ஆரோனோ ஆர்வமாய் அந்திகையின் வாயை துருவ, ஆணவன் பக்கம் கூட கழுத்தை திருப்பா நேரிழையோ, இல்லையென்று தலையாட்டினாள் வார்த்தைகளுக்கு விடுப்பு விட்டு.

மென்புன்னகை கொண்ட ஆரோனோ, ரகசியம் காத்திட சுவா சரியான ஆள்தான் என்று, அவளுக்கான தகுதி தேர்வில் பத்து புள்ளிகளை சேர்த்துக் கொண்டான்.

ஏற்கனவே, பேதை அவளை பார்த்த முதலே அழகு, படிப்பென்று இருபது புள்ளிகளை கணக்கில் எடுத்துக் கொண்டான். மீதம் இருப்பது மருத்துவமும், குணம் சார்ந்த விடயங்களை முன்னிறுத்தி எடுக்கப்படும் புள்ளிகள் மட்டுமே.

ஆகவே, சுவாகை தம்பிக்கு மணவாட்டியாக சரியானவளா இல்லையா என்று, ஒட்டு மொத்தமாய் கணக்கிட்டு ஒரு முடிவிற்கு வந்திடலாம், என்றெண்ணினான் ஆணவன்.

ஆரவாரமற்ற இடமொன்றிலோ கார் நின்றது. வெறும் நான்கைந்து கடைகள் மட்டுமே அங்கிருந்தன.

''வாங்க!''

சொன்னவன் காரிலிருந்து இறங்கியவனாய் முன்னோக்கி போய் நுழைந்தான் பெயர் பலகை ஏதுமில்லா கடை ஒன்றுக்குள்.

அவனை பின்னோக்கி போன நங்கைக்கோ தூக்கி வாரிப்போட்டது, இருவரும் ஆஜராகி நிற்பது கிளினிக் என்றறிந்த நொடி.

''சார், நாமே ஏன் இங்க?!''

வதுகை அவள் அதிர்ந்து கேட்க,

''வாங்க!''

என்றவனோ அவளோடு உள் நுழைந்தான் டாக்டர் அறைக்குள்.

''ஹாய்! சுவா! வாங்க! முதல்லே டெஸ்ட் பண்ணிடுவோம்! அப்பறமா உங்க பிரச்சனையே பத்தி விலாவாரியா பேசலாம்!''

பெண் மகப்பேறு மருத்துவர் சொன்ன வாக்கியத்தில் ஈரக்குலை நடுங்கிப்போனது வஞ்சினி அவளுக்கு.

வசமாக மாட்டிக்கொண்டவளோ இதற்கு மேலும் நாடகமாடி அசிங்கப்பட விரும்பாது,

''டாக்டர், நான் இவர்கிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் தனியா பேசணும்!''

சொன்னவள் தரையை வெறிக்க, நாற்காலியில் அமர்ந்திருந்த ஆரோனோ ஒற்றை விரலால் சைகை கொண்டான் மருத்துவ அம்மணியை அறையிலிருந்து வெளியேற.

''மன்னிச்சிடுங்க! மெடிக்கல் ரிப்போர்ட்லே இருக்கற எதுவும் உண்மையில்லே! அது நானே ரெடி பண்ண போலி ரிப்போர்ட்!''

குனிந்த தலை நிமிராது சேயிழை அவள் ஒப்புவிக்க,

''கிளம்புங்க!''

என்றவனோ விருட்டென வெளியேறினான் அங்கிருந்து.

குளமாகிய கண்ணீர் கன்னம் தட்ட, வழிந்த அதை விரல்களால் துடைத்த சுவாகையோ ஓடினாள் அவன் பின்னாலேயே,

''சார், பிளீஸ் சார்! இதை பெரிய விஷயமாக்கி என் வாழ்க்கையை கெடுத்துடாதீங்க சார்! வெளிய தெரிஞ்சா, என் லைசன்ஸையே ரத்து பண்ணிடுவாங்க சார்!''

பதறி, கதறி வாசல் வந்தவளை நோக்கி, அமைதி என்று உதடுகளில் விரல் பதித்து கண்ணசைத்தான் ஆரோன் காரில் ஏறிட சொல்லி.

பொட்டி பாம்பாய் அடங்கிப் போன தளிரியளோ, மறு வார்த்தை பேசாது அவன் பக்கம் வந்தமர்ந்தாள் கார் கிளம்ப.

சித்தப்பா பரந்தாமன் அடித்த கூத்தில் வேறு வழியில்லா நாயகியோ, அவரின் தொடர் முட்டாள்தனங்களுக்கு உடன்படுவதாய் சம்மதம் தெரிவித்தாள்.

போலியான மருத்துவ அறிக்கை ஒன்றை தயாரித்து அதை சித்தப்பாவிடம் கொடுத்தனுப்பினாள் வதுகை அவள்.

களவாணித்தனம் செய்த சித்தப்பாவோ வளர்ப்பு மகள் கொடுத்த அறிக்கையோடு ராகனை சென்று சந்தித்தார்.

கோப்பை வாங்கிய சின்னவனோ, பெருசை அங்கிருந்து அனுப்பி வைத்தான், வேறேதும் பேசிடாதவனாய்.

பணத்தை பற்றி ராகன் எதுவும் கேட்டிடாது, அவரை அங்கிருந்து போக சொன்னது சித்தப்பாவிற்கோ வயிற்றில் பாலை வார்த்தது போலிருந்தது.

தற்போதைக்கு எவ்வித பிரச்சனையும் இன்றி நாட்களை ஓட்டிடலாம் என்ற நிம்மதியோடு வீடு திரும்பினார்.

ஆனால், வேறொரு திட்டங்கொண்ட சின்னவனோ, கோப்பு கைக்கு வந்த நொடி மூத்தவனுக்கு போனை போட்டு சங்கதி சொன்னான்.

தம்பியின் அறை விரைந்த பெரியவனோ மெடிக்கல் பக்கங்களை புரட்டியவனாய்,

''அந்த பொண்ணே வரச்சொல்லு! நான் பார்க்கணும்!''

என்றான் சந்தேகம் எட்டிப்பார்க்க,

''ஏன் கல்யாண இண்டர்வியூ ஏதாவது பண்ண போறியா?!''

நக்கலாய் சிரித்தான் ராகன்.

''ஆமா! இண்டர்வியூதான்!''

சொன்னவன் மடியிலிருந்து ஃபயிலை தூக்கி மேஜையின் மீது வைத்தான்.

''அப்போ, இப்பவே கோல் பண்ணி வரச்சொல்லவா?! உடனே பார்த்து பேசி முடிச்சிடலாம்!''

ஆர்வங்கொண்டான் விராகன்.

அவனுக்கு சீக்கிரமாகவே எல்லாவற்றையும் நடத்தி முடித்து இந்த யூடியூப் வாயன்களுக்கு சமாதி கட்டிட வேண்டும். அதனால், காலில் சுடுநீர் ஊற்றியவனாய் பரபரத்தான்.

''இல்லே! நீ வேண்டாம்! நான் மட்டும் முதல்லே தனியா பார்த்து பேசறேன்!''

கண்ணாடி மேஜையின் மூலை விளிம்பில் அமர்ந்திருந்த ஆரோன் சொல்ல,

''ஏன்?! ஏன்?! ஏன்?! ஏன்?!''

பதறினான் ராகன்.

''எதுக்குடா இத்தனை ஏன்?!''

சிரித்தே விட்டான் சி.இ.ஓ. அவன்.

''இல்லே, அந்த பொண்ணே கட்டிக்க போறது நான்! ஆனா, இண்டர்வியூ நீ மட்டும் பண்ண போறேன்னு சொல்றியே, அதான் ஏன்னு புரியலே?!''

சோபாவில் சரிந்துக் கிடந்தவன் புருவங்கள் குறுக்க,

''இது உண்மையா பொய்யான்னு பார்க்க வேணா?!''

மேஜை மீதிருந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை கண்ணசைத்து காட்டி புன்னகைத்தான் ஆரோன்.

தாழ் திறந்திடுவான் ததுளன்...
 

Author: KD
Article Title: தாழ் திறவாய் ததுளனே! : 15
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top