What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
412
அத்தியாயம் 113

கஷ்டப்படாமல் இஷ்டப்பட்ட எதுவும் கிடைக்காது.

இது சாம்பசிவனின் தரிசனத்துக்கும் பொருந்தும்.

விரல்களில் பனி படர்ந்து உறைவதை கண்களால் கண்டு, காய்ந்து போன உதடுகளுக்கு எச்சிலை கூட ஆறுதலாய் ஒரு துளி கொடுக்க முடியா நிலையில், கிடுகிடுத்து போயிருந்தாள் கிருத்திகா.

போலீஸ்காரியாக, பெண்டு அவளை மலையிலான சகதீசுவரனை காண, கேதார்நாத்துக்கு செல்ல நிர்ப்பந்தித்தது, படாஸின் புரியா கொலைகளே.

'வியாழம்' என்ற கோப்போ அதற்கு பேருதவியாக அமைய, அஃறிணையிலான உயர்திணை சுரஜேஷ்ட ஏகஷ்ருங்காவின் கதையைத் தெரிந்துக் கொண்ட கோதையாள், அதற்கு பின்னரான வரலாறை அறிந்திட முடியவில்லை.

முயற்சித்த அதர்வாவும் நூலிழையில் தப்பிக்க, சங்கதி அறிந்த வேதனோ சிவனடி சேர்ந்திருந்தான். இருப்பினும், காவல்காரி உணர வேண்டியதை மட்டும் மறக்காமல் தெரியப்படுத்தியிருந்தான்.

விதி சதி செய்ய, கடமைக்காரியோ கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு கடைசியாய் நிகழ்ந்த இறப்பை முடிச்சு போட்டு பார்க்க, ஒரு கணம் ஆடித்தான் போனாள் நாயகியவள், நடப்பதெல்லாம் எக்காலத்து நிஜமென புரியாது.

குழப்பமான தெளிவு கொண்ட பேதையோ, பாடஸின் அகோரங்களுக்கான காரணமும், வஞ்சியின் வாழ்க்கைக்கான தேடலும், தான்தோன்றி (சிவன்) சுயம்புவாய் அவதரித்திருக்கும் கேதார்நாத்தில்தான் இருக்கிறதென்பதை மனதார நம்பினாள்.

தென்முகநம்பியோ (சிவன்) அழகாய் இழுத்து வந்திருந்தான் வாசுரை அவளை இமயமலைக்கு, நிகழ்த்த வேண்டிய நாடகத்தை செவ்வென நடத்தி.

மார்க்க சகாயனின் (சிவன்) ஐம்முகங்களில், வாமதேவம் என்ற இரண்டாவது முகம், நீரின் தன்மையையும், வடக்கு நோக்கியும் அமைந்திருக்க, இதைவிட வேறென்ன வேண்டும் அத்தாட்சியாய், போய் சேர்ந்தவன் கேதார்நாத்தையே சுட்டிக் காட்டுகிறான் என்பதைத் தாண்டி.

அதை கணக்கில் எடுத்துக்கொண்ட ஆயிழையோ, தூரமிருக்கும் கணவன் கொடுத்த ஹிண்ட்டில் (hint), கேதர்நாத்தில் காலடி வைத்தே ஆகவேண்டுமென்று தீர்க்கமாய் முடிவெடுத்தாள்.

டாக்டரின் மேக் (Mac) கணினியின் தொடுதிரையிலோ, சுரஜேஷின் கைவண்ணத்தில் கற்பனையாக ஆணவன் உயிர் கொடுத்திருந்த கீத்துவின் படம் சிரித்திருக்க, அதிலோ எழுதியிருந்தது, கடந்த காலத்தில் பெண்ணவளை மடியில் கிடத்தி, கித்தார் விரல் இறுக்க, இதழ் கடத்திய பொழுதில் ஔகத் சொன்ன கவியின் வரிகள்.

பஞ்ச பிரயாகைகளான, கங்கையாற்றின், ஐந்து துணை நதிகளின் பெயர் கொண்டு அன்றைக்கு ஔகத் சொன்ன கவிதைக்கும், இன்றைய படாஸின் கொலைகளுக்கும் சர்வ நிச்சயமாய் சம்பந்தம் இருப்பதை மாயோள் அவளால் உணர முடிந்தது.

ஆகவே, காதலனான படாஸ் கண்டிப்பாய் கணவன் ஔகத்தான் என்ற உண்மையை கேதார்நாத் போய்தான் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்பது ஏழுலகாளயனின் (சிவன்) சித்தமெனில், அதற்கும் தயார் என்ற எண்ணத்தோடே வெகேஷன் கிளம்புவதை போல் தயாராகி அடைந்து விட்டாள் கிருத்தி, கேதார்நாத்தை.

யாரிடமும் எதுவும் சொல்லாது, தடபுடலாய் கிளம்பி வந்த அம்மணிக்கு அமுதீவள்ளலோ (சிவன்) அடித்தான் விபூதி, ஹெலிகாப்டர் சேவை அவளுக்கு கிடைக்காத வண்ணம்.

ஓரளவு கேதர்நாத்தை பற்றி தகவலறிந்தவள், அவ்வப்போது பலரின் எழுத்துகளையும் வீடியோக்களையும் பார்த்துத் தெரிந்துக் கொண்டாள் போகும் இடம் எப்படியான நிலையில் இருக்குமென்பதை.

மலேசியாவிலிருந்து நேரடியாய் டேராடூன் (Dehradun) விமான நிலையத்தில் தரையிறங்கினாள் தளிரியளவள். இடை நிறுத்தம் ஏதும் கொள்ளாது, கேதார்நாத் செல்வதுதான் மேடமின் பிளான். அதற்காகவே, பெருந்தொகை ஒன்றை செலுத்தி ஹெலிகாப்டர் பதிவு செய்திருந்தாள் கீத்து.

ஆனால், டேராடூன் ஏர்போர்ட் வந்த நொடியிலிருந்து ஹெலிகாப்டர் சேவை மையத்துக்கு அழைத்து சலித்து போனாள் பெண்டு அவள்.

எவனும் போனை எடுக்கவில்லை. எடுத்தவனும் ஹிந்தியில் பேச, அடிப்படை ஆங்கிலமே தெரியாதவர்களிடம் என்ன சொல்லி எதை கேட்பதென்றே தெரியவில்லை தெரிவை அவளுக்கு.

விமான மையத்திலிருந்த ஆட்களிடம் பேசி, ஒரு வழியாய் வந்திறங்கிய ஏர்போட்டுக்கு டாட்டா காண்பித்து, சிர்சி (Sirsi) விமான நிலையம் செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்தாள் கீத்து.

ஆறரை மணி நேரங்கள் பயணித்தாள் மங்கையவள் ஹெலிகாப்டர் சேவை மையம் இருக்கும் இடம் நோக்கி.

சேர வேண்டிய இடம் போய் பத்திரமாய் சேர்ந்த மலரவளோ, இரவாகி போக, நாளை காலை பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று நினைத்து, அருகிலிருந்த ஹோட்டல் நோக்கி பயணித்தாள்.

அங்கு ஓட்டை ஒடிசலான ஆங்கிலம் பேசிய ஒருவனை பிடித்து கேதார்நாத் பற்றிய மற்ற விபரங்களைக் கேட்டறிந்துக் கொண்டாள்.

முன்பதிவற்ற யாரையும் மலைக்கு மேல் செல்ல அனுமதிப்பதில்லை அங்கிருக்கும் அரசாங்க பணியாளர்கள். ஆகவே, கீத்து பயணத்தை மேற்கொள்ளும் முன்னரே எல்லாவற்றையும் சரிவர தயார் படுத்தியிருந்தாள்.

ஹெலிகாப்டர் சேவைக்கான, அப்ரூவல் மெசேஜ் இப்போது வரும், அப்போது வரும் என்று காத்திருந்ததுதான் மிச்சம். நேரடியாய் போய் கேட்டும் அதே பதில் கிடைக்க, ஆத்திரப்பட்டுதான் போனாள் பேடையவள்.

எப்படியும் வந்திடும், என்ற நப்பாசையோடு தனியொருத்தியாய் ஹோட்டலில் குடித்தனம் நடத்தினாள் நாயகியவள்.

வந்த உடனே உச்சிநாதரை (சிவன்) பார்த்திட போயிடலாம் என்று நினைத்திருந்த புனைக்குழலவளுக்கு நாடு விட்டு நாடு வந்த கணத்திலிருந்தே ஏமாற்றம்தான்.

ஐயமேற்பானுக்கு (சிவன்) தெரியும், யார் அவரை எப்போது பார்த்திட வேண்டுமென்று. அதுவரை பொறுத்தாள்வது மனிதகுலத்தின் கடமையாகும்.

அசைவம் கிடைக்காது ஏங்கி, சைவத்தோடு போராடி, அதுவும் ஒத்துக்கொள்ளாது, வயிற்றுப்போக்காகி அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் ஆட்டியவள்.

ஹோட்டல் சுமார் ரகம் என்பதே அறைக்குள் நுழைந்த பின்தான் தெரிந்தது தெரியிழை அவளுக்கு. ஹிட்டர் வசதிக்கூட இல்லை. அவசர நேரத்தில் தேடிப்பிடித்த இடம் என்பதால் அட்ஜர்ஸ்ட் செய்து கொண்டாள் காரிகையவள்.

மொத்தமாய் ஒரு வாரம் அங்கேயே கழிந்தது கீத்துவிற்கு. உடல் கொஞ்சம் தேறி வர, விடுதியை காலி செய்தாள் அரிவையவள். அடுத்து வரும் நாட்களில் பயணிக்க போகும் கேதர்நாத்திலேயே நல்லதொரு ஹோட்டலாய் பார்த்து, தங்கிக்கொள்ளலாம் என்றெண்ணியிருந்தாள் விறலியவள்.

அவள் காவல்காரி என்பதை யாரிடமும் பொதுப்படுத்திக் கொள்ளவில்லை. மாறாய், ஊர் சுற்றும் ட்ரவலர் (traveler) போலவே அவளை காண்பித்துக் கொண்டாள்.

ஹெலிகாப்டருக்கான மெசேஜ் இன்னும் வராதிருக்க, இதற்கு மேல் காத்திருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த மெல்லியாளோ, காலை பசியாரை முடித்து, விடுதியிலிருந்து ஹெலிகாப்டரின் சேவை மையம் போக ஆயத்தமானாள்.

மதியத்துக்கு மேலாக, பசி வேறு வயிற்றை கிள்ள, கடுப்பான காரிகையோ, ஹெலிகாப்டரின் நிலவரம் கேட்க, ஏதேதோ விளக்கம் கொடுத்தவர்களோ அவளை மேலும் காத்திருக்கவே வைத்தனர் நிலையத்தில்.

பாஷை தெரியா இடத்தில் வந்து மாட்டிக்கொண்டதை நினைத்து ஒரு பக்கம் அவளின் மீதே குஞ்சரி மகளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

மணியோ மூன்றாகி போனதுதான் மிச்சம்.

வந்து போனவர்கள் சிலர் பேச கேட்டாள் காந்தாரியவள், மூன்று மாதங்களுக்கு முன்னர் முன்பதிவு செய்தவர்களுக்கே தலையில் துண்டு போட்டிடும் நிலைதான் என்று.

ஆகவே, வழக்கம் போல் ஆவேசங்கொண்டு காச் மூச்சென்று பெண்ணவள் எகிற, யாரும் அவளை அங்கு பெரிதாய் பொருட்படுத்தவில்லை. காரணம், ரீசன் மகள் ஆங்கிலத்தில் பீட்டர் விட, லோக்கல் மக்களோ ஹிந்தியே பேசினர்.

இறுதியாய் ஊர் விட்டு ஊர் போனவளை சேவை மையத்தின் பாதுகாவலர்கள் கழுத்தை பிடித்து வெளியில் தள்ளாத குறையாய் விரட்டியடித்தனர்.

ரோட்டில் கூச்சல் கொண்டவளை, போலீஸ் ஆசுவாசப்படுத்தி கேள்வி கேட்க, பதவியை தெரியப்படுத்தி, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அகம்பாவ கள்ளியோ, நடந்ததை சொல்லி நியாயம் கோரினாள்.

விசாரிப்பதாய் சொல்லி, கம்பளைண்ட் கொடுக்க சொன்னாலும், எதுவும் தேறாது என்று நாசூக்காய் சொல்லி நகர்ந்தனர் போலீஸ்கார்கள். அதுவும் இப்படியான சம்பவங்கள் வழக்கமென கூறி, நேரடியாக பணத்தை செலுத்தி டிக்கெட் வாங்குவதே சிறப்பென்றனர்.

சினத்தில் உள்ளுக்குள் குமுறியவளோ, ஹெலிகாப்டரே வேண்டாமென்று கும்பிடு போட்டு கிளம்பினாள் அங்கிருந்து.

இறுதியில், வேறு வழியே இல்லாது, ஏமாந்த வெறியோடு தாமாகவே பயணத்தை தொடங்க முற்பட்டாள் மெல்லியல் அவள்.

ஆகவே, அங்கிருந்த போலீஸ் உதவியுடன் தனியார் வாகனமொன்றை ஏற்பாடு செய்து பயணம் போனாள் கீத்து, நாற்பது மணி நேரங்களுக்கும் மேற்பட்டு நேரடியாக கேதார்நாத்துக்கே.

அவ்வவ்போது பெட்ரோல் ஸ்டேஷன் இறங்கி பிரெஷ் ஆப் ஆகிக்கொண்டவள், கிடைத்த நொறுக்குத் தீனிகளை வாங்கி வைத்துக் கொண்டாள் வழியில் வயிற்றை நிரப்ப.

கழிவறைகளை கண்ட நொடி, வெட் திசுவில் (wet tissue) முகம் துடைத்துக் கொள்வதே மேலென்று தோன்றியது கீத்துவற்கு. மினரல் வாட்டர் போத்தல் நீரை வாங்கித்தான் அவ்வப்போது இயற்கை அழைப்புக்கு பயன்படுத்திக் கொண்டாள்.

சுத்தமின்மை அவளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதனால், ரொம்பவே கவனமாக சுகாதாரத்தைக் காத்துக் கொண்டாள் சனிகையவள்.

ஏறக்குறைய, ரெண்டு நாள் பயணத்தின் முடிவில், ஒருவழியாய் கேதார்நாத் வந்து சேர்ந்திருந்தாள் கீத்து. அடுத்த நிமிடமே ஆரம்பித்து விட்டது, வல்வியவளுக்கான ஏழரை.

ஒவ்வொரு விடுதியாய் ஏறி இறங்கினாள் இளம்பிடியாளவள், தங்க இடம் தேடி. மணி மாலை ஐந்தாகி விட்டதால், மலைக்கு மேல் செல்ல இயலாது. ஆகவே, ராத்திரி ஏதாவது ஒரு ஹோட்டலில் தங்கித்தான் ஆக வேண்டும் வஞ்சியவள்.

ஐந்தாறு விடுதிகளுக்கு பயணித்த வாகனமோட்டிக்கோ அடுத்த பயணித்துக்கான அழைப்பு வேறு தொடர்ந்து வந்துக் கொண்டே இருந்தது. அவனுமே, மண்டையை சொரிந்தான், எப்படி கீத்துவை நடு ரோட்டில் விட்டு போவதென விழித்து.

இருப்பினும், அவன் பிழைப்பை அவன் பார்த்திட வேண்டுமென்பதால், ஆணவன் நிலையை புரிந்துக் கொண்ட காந்தாரியோ, முற்றிழையை பத்திரமாய் கொண்டு வந்து சேர்த்த வாகனமோட்டிக்கு கூடுதல் பணங்கொடுத்து நன்றியும் சொல்லி அனுப்பி வைத்தாள் அங்கிருந்து.

ஐந்து மணிக்கு மேல் கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் நடைப்பாதை மூடப்படும். மீண்டும் மாலையே திறக்கப்படும்.

ஆகவே, காத்திருந்தாள் கீத்து நடு ரோட்டில், கேட் (gate) திறந்தப்பின் கிரிஜாபதியை (சிவன்) தர்சிக்க மலை நோக்கி பயணித்திடலாம் என்று யோசித்து.

ரோட்டு ஓரமாய் ட்ராவலிங் பேக்கோடு அமர்ந்திருந்தவள் கீழிருந்து மேல் நோக்கி மலையை பார்த்தாள்.

மனதில் ஒன்றுதான் நினைத்தாள்.

என்ன நடந்தாலும் சரி, கண்டறிய வந்த ரகசியத்தை அறிந்திடாமல் ஒரு காலும் இங்கிருந்து நகர மாட்டேன் என்று.

அண்ணாந்து பார்த்த பாவையின் பார்வைகளோ லேசாய் மங்கின. தலையோ கிர்ரென்றது. தும்பல் வேறு வந்து படுத்தி எடுக்க, வயிறோ திடிரென்று கடமுடா என்றது செய்யிழை அவளுக்கு.

குமட்டிக் கொண்டு வந்த வாந்தியை ட்ராவலிங் பேக்கின் பிடியை இறுகப்பற்றியப்படி தரை அமர்ந்து கக்கியவளோ, குடிக்க தண்ணீர் கூட இல்லாது கிடந்து தவித்தாள்.

எண்மலர்சூடியைக் (சிவனை) காண வருகின்ற பலரும் இப்படித்தான், பழக்கமில்லாத புது இடத்தில் வாந்தி, மயக்கம், தலை சுற்றல் எல்லாம் கொள்வர்.

இதையெல்லாம் பார்த்து பழகிப்போன மக்களோ, அரை மயக்கங்கொண்டவளை கைத்தாங்கலாய் அழைத்து வந்து அருகிலிருந்த கூடாரத்தில் விட்டனர்.

குடிக்க நீர் கொடுத்தவர்கள் கையிலேயே தண்ணீரை திரும்பவும் துப்பினாள் துடியிடையவள், அது ஜில்லென்று இருக்க.

டாக்டர்தான் இப்படி குடிப்பான், ஐஸ் கட்டி கணக்காய். அவனுக்கு சூடே ஆகாது. மயூர கண்ணணுக்கு பிடித்த ஒரே உஷ்ணம், மஞ்சம் கொள்ளும் இஸ்க்கு, இஸ்குத்தான்.

கண்ணெல்லாம் கலங்கி போனது கீத்துவிற்கு மனம் சட்டென கணவனை நினைக்க, துப்பியதுக்கு மன்னிப்பு கேட்டவளின் கரத்தில் சுட சுட தேநீர் கொடுக்கப்பட்டது.

பெரிய கிளாசில் டீ குடித்து பழக்கப்பட்டவளுக்கு, சின்ன கப் ரெண்டு முடக்கில் காலியாகி போனதென்னவோ வருத்தமே.

தலை சுற்றல் போய், மீண்டும் குமட்டல் கொண்டாள் அலரவள். வாந்தியெடுத்த வாயை கொப்பளித்து திரும்பியவளின் பக்கம் முட்டி நின்றது அவளின் ட்ரவலிங் பேக்.

அதன் மீது அவளின் கைப்பை. அதற்கு மேலோ ருத்ராட்ச மாலை ஒன்று. அது கீத்துவுடையது அல்ல. ஆனால், அங்கு எப்படி வந்தது, யார் வைத்தது என்று தெரியவில்லை.

அதை தூக்கி ஓரம் போடவும் மனசு வரவில்லை பேடை அவளுக்கு. பக்கமிருக்கும் யாராவது தவறுதலாக அங்கு வைத்து விட்டார்களா என்று சுற்றி முற்றி பார்க்க, அப்படி யாரும் எதையும் தொலைத்து தேடுவதாய் தெரியவில்லை.

சரி, இருந்துவிட்டு போகட்டும். ருத்ராட்ச மாலைதானே, என்று அதை கைப்பைக்குள் தூக்கி போட்டாள் பெதும்பையவள்.

உண்மையில் அதைக் கண்ட நொடி, காந்தாரியின் உள்ளம் படாஸை ஏங்கி, பிரேட்சனங்களோ அவனையே தேடின.

காதலர்கள் இருவரும் கூடிடா வேலைதனில் வித்தகனின் கந்தரத்தில் அழகாய் வீற்றிருக்கும் ருத்ராட்ச மாலையது.

கீத்துவிற்கு உருண்டு பிரண்டு சாமி கும்பிடும் பழக்கமெல்லாம் இல்லை. ஆனால், படாஸின் தெய்வ நம்பிக்கையை ரொம்பவே மதித்து ரசித்திடுவாள்.

அவனின் அங்கங்கள் கொண்ட திருநீறு முகம் உரசி விளையாட்டுக் கொண்டிடுவாள். அவன் மாலையை விரலால் சுழட்டி ஆணவனை நெருக்கத்தில் இழுத்துடுவாள்.

அப்படியான நேரங்களில் விகடகவியவன் அதீத கவர்ச்சிக் கொண்டவனாய் இருக்கிறான் என்று மோக கீதம் வாசித்திடுவாள். ஆனால், ஒருபோதும் அம்மாலையை கழட்டவோ, அணியக் கூடாது என்றோ சொல்லியதில்லை.

நடு ரோட்டில் பகினியவள் விட்டு வந்திருந்த அவளின் உடமைகளைக் கூட யார் கொண்டு வந்து அவள் இடம் பத்திரமாய் சேர்த்தது என்றும் தெரியவில்லை படாஸின் காதலிக்கு. அவனாக இருந்திடக்கூடாதா என்று கிடந்து தவித்தது மனம்.

யோசனையோடு அடுத்த ரவுண்ட் டீ தொண்டைக்குள் இறங்க, கூடாரத்தின் வெளியே எட்டிப் பார்த்திருந்தவளின் மிழிகள் திடுக்கிட, தடதடவென ஐஸ்கட்டி மாரியோ கொட்டிடத் தொடங்கியது.

என்னடா இது வம்பா போச்சு என்றவளோ, இப்போதைக்கு எங்கும் நகர முடியாது என்றெண்ணி ட்ரவலிங் பேக் பக்கத்தில் போய் அமர, அதற்கான வாடகையை வாங்க வந்து நின்றிருந்தான் டெண்ட்டின் ஓனர்.

அவனுக்கு பணத்தை கொடுத்த பனிமொழியோ, கைகுட்டைக் கொண்டு மூக்கை மூடிக்கொண்டாள் அங்கிருந்தவர்களின் உடல் வாடை மேலும் வதூ அவளின் குடலை பிரட்டிட.

குளிர் வேறு கீத்துவை ஆட்டிப்படைக்க, தந்தியடித்த பற்களோடு தேகத்தை கைகளால் கட்டிக்கொண்டவளோ, மருள் வந்த சிலை கணக்காய் ஆடினாள் முன்னும் பின்னும் மெதுவாய்.

ஔகத்தை எண்ணிய மங்கையின் விழிகளிலோ, நீர் பூத்து வழிந்திறங்கியது சத்தமில்லாது.

மணவாட்டியவளுக்கு உடம்பு சுகவீனம் கொள்ளா நேரங்களில் அவளை இறுக அணைத்து அவளின் பிணிகளை அவனெடுத்துக் கொள்வான்.

வல்லபியவளை நெஞ்சில் சாய்த்து, டோடோ செய்திடுவான் டாக்டரவன். சில வேளைகளில் உணவை கூட அவன் கையாலேயே ஊட்டி விட்டு அவளை ரொம்பவே அக்கறையாக கவனித்துக் கொள்வான், வெறுமனே வம்பிழுத்தாலும்.

குளிரிய தேகத்தை கம்பளி போர்வையொன்று மூட, அதன் கதகதப்பில் மூடிய இமைகளோடு முகத்தை முட்டி கால்களில் ஒளித்து கொண்டவளோ, லயித்திட ஆரம்பித்தாள் நிம்மதியான அந்நிலையில்.

யார் கம்பளி, எவர் போர்த்தியதென்ற கேள்விகள் எல்லாம் அப்போதைக்கு தடாதான் அவளிடம்.

இருப்பினும், மீண்டும் குமட்டல் கொண்டு வாந்தியெடுக்க ஓடினாள் ஒண்டொடியவள் டெண்ட்க்கு வெளியில். அங்கு பொது கழிப்பறையே.

சிர்சி ஹெலிபேட் (Sirsi helipad) அருகிலேயே முகாம்கள் இருந்தன. ஆனால், கீத்துதான் ஒரு மண்ணும் வேண்டாமென்று தனியாகவே இவ்வளவு தூரம் பயணித்து விட்டாள்.

தலைவலி தைலத்தை நெற்றியில் தடவிக் கொண்ட பெய்வளையின் பக்கத்தில் அமர்ந்திருந்த வயதான அம்மாவோ, புளிப்பு மிட்டாய் ஒன்றை எடுத்து அவளை நோக்கி நீட்டினார், சின்ன புன்னகையோடு.

வேண்டாமென்று தலையை ஆட்டிய பொற்றொடியோ, வெற்றிலையை வாயில் குதப்பிய சிவப்பு சேலைக்கார அம்மாவிடமிருந்து கொஞ்சம் தள்ளியமர்ந்தாள், ஒவ்வாமைக் கொண்டு, மரியாதைக்கு கூட பொய்யாய் பல்லை காட்டாது.

பத்து பேர் படுத்துறங்கும் தரையிலான மெல்லிய மெத்தையே இன்றைக்கு கீத்துக்கு வாய்த்த படுக்கை. போனை சார்ஜ் போட்டவள், குஞ்சரிக்கு அழைக்க முயன்று கவரேஜ் கிடைக்காது அதை ஆப் செய்து போட்டாள்.

டின்னர் டைமுக்கு வயிறு வேறு தாளம் போட, சும்மாவே சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் அதற்கு எதை கொடுத்து அடைப்பதென்று தெரியாது விழித்தாள் சேயிழையவள்.

பால்கோவா கலர் ஆண்ட்டியோ மீண்டும் நீட்டினார் கையிலிருந்த பிரித்த பிஸ்கட் பாக்கெட்டை பெதும்பை அவளிடத்தில். ரப்புக்காரியோ முகம் சுளித்தாள் வேண்டாமென்று தலையை ஆடு போல் ஆட்டி.

நுதலில் பாதியை பெரிய சைஸ் சிவப்பு நிறப்பொட்டில் காணாமல் ஆக்கியிருந்த ஆண்ட்டியோ, புன்னகைத்து அதை மடித்து வைத்தார் அவரின் பேக் பேக்குக்குள் (back bag).

பசியோடே, அசதியில் மெதுவாய் இமைகளை மூடினாள் படாஸின் கிருத்தி லோ பட்ஜெட் பஞ்சணையில். நல்லதொரு ஆழ்ந்த துயில் கொண்டாள் தெரியிழையவள்.

நேரம் போனதே தெரியவில்லை நுண்ணிடையாள் அவளுக்கு. அம்மணியின் செவிகள் ரெண்டும் இதமான குரலில் தாலாட்டு கொள்ள, மென்மையான கரமொன்று தோளை மெதுவாய் தட்டியது.

டாக்டரே மடியில் போட்டு, காஜியான பெட் டைம் ஸ்டோரி சொல்லி தட்டுவது போலிருந்தது கீத்துவிற்கு. தூக்கம் கண்ணை நெருங்கா நேரங்களில் அவனை நம்பி, அப்படித்தான் மோசம் போயிடுவாள் அபலையவள்.

நனவும் கனவும் கலந்தாற்போன்ற நிலையில் கணவனின் முகம் சிந்தைக்குள் உலா வர, கண்ணோரம் கண்ணீர் வழிந்திறங்க, உறக்கமே கொண்டிருந்தாள் கோமகளவள்.

செவியில் கேட்ட இன்னிசையோ திடிரென்று தூரம் போனது. சங்கு சத்தமொன்று தொலைவில் கேட்க ஆரம்பித்து கொஞ்சங்கொஞ்சமாய் மிக தெளிவாய் அருகில் கேட்டிட ஆரம்பித்தது.

கூடவே, இரண்டு முனைகளைக் கொண்டு, மரத்தால் செய்யப்பட்டிருந்த டோலக் (dholak drum) மற்றும் டஸ்ஸா (tassa drum) என்றழைப்படும் பேரிகையும் (drum) கைகளால் அடிக்கப்பட்டு, சுந்தரியின் சிந்தையை சூழ்ந்துக் கொண்டன.

ஆட்டின் தோலால் மூடப்பட்டிருக்கும் சிறிய முனை குறைந்த பிட்ச் (pitch) ஒலியையும், எருமைத் தோல் கொண்ட பெரிய முனை அதிக பிட்ச் சத்தத்தாலும், அருணியின் காதை குளிர வைத்தன.

இனம் புரியா பரவசம் கொண்டது கீத்துவின் தேகம். மெது மெதுவாய் சிலிர்த்திட ஆரம்பித்தது அந்திகையின் சரீரம்.

அதிர்ந்தன சுரிகுழலின் இரு கால்களிலிருந்த மிஞ்சின் மணிகளும், மடந்தையின் காதுக்குள் ஒலித்த இசைக்கேட்டு. ஸ்போர்ட்ஸ் ஷுவை கழட்டி வைத்து, காலுறை கால்களோடு போர்வைக் கொண்டிருந்தாள் கீத்து.

மெய்மறந்த நிலையில் கொலு கொண்டவள், உள்ளம் நிறைந்த ஏகாந்தத்தில் ஆனந்தம் கொண்டாள்.

''ஹர ஹர, ஹர ஹர! மகாதேவ்! ஹர ஹர, ஹர ஹர!''

என்றொலித்த குரல்களுக்கு பின்னாலோ, ட்ரம்களின் ஏறி இறங்கிய சுருதியும், உடுக்கை சத்தமும், ஜ்யம்தாவின் (Jhyamta @ Jhurma) கரகோஷமும், மூடியிருந்த ஒளியிழையின் கருவிழிகளுக்குள் காட்சியாய் விரிந்தன.

எங்கு போக வேண்டும், யாரை பார்த்திட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு வந்தாளோ வதனியவள், அங்கேதான் சுற்றி திரிந்தாள் கனவாய் தோன்றிய காட்சியில்.

கோவிலோ வண்ண விளக்குகள் கொண்டு கம்பீரமாய் வீற்றிருந்தது. அந்தி சாயும் மாலை வேளையிலான நேரமது. சுயம்பிலான ஆரண்யேஸ்வரரோ (சிவன்) புத்தாடைக் கொண்டு அமோகமாக காணப்பட்டார்.

ஆனால், கீத்துவோ விலோசனங்களை மூடிக்கொண்டு பக்தர்களுக்கு குறுக்க மறுக்க எதையோ தொலைத்து தேடுபவளாய் தேடல் கொண்டாள்.

சிறிதளவு மட்டுமே கூட்டங்கொண்ட சன்னிதியில் கண்களை மூடிக்கொண்டு அலைமோதியவளின் காதிலோ கேட்டது குரலொன்று.

''புறக்கண்ணால் பார்க்காதடி கிருத்தி! அகக்கண் கொண்டு பார்!''

அதே குரல். கிருத்தியின் படாஸ் குரல்.

ஹர ஹர மகாதேவ் என்ற மந்திரம் இடமெங்கும் ஜீவிக்க, பம்பையின் அதிர்வுகளை தரை உணர, சங்கின் சத்தத்தில் சிவனடியார்களோ கோஷம் கொள்ள, ஐஸ் கட்டி மழையே சொல்லாமல் கொள்ளாமல் கொட்ட, காதுகளில் தேனாய் பாய்ந்த குரலுக்கு உரிமையான படாஸின் முகம் பார்க்க திரும்பிய தெரியிழையின் வதனத்தையோ திருநீறு கொண்டு அலங்கரித்தது கையொன்று.

ஏந்திழையின் நயனங்கள் திறக்கும் முன்னரே அவள் முகத்தில் உள்ளங்கைக் கொண்டு ஒரே அப்பலில், ஆயிழையின் மொத்த முகத்தையும் திருநீறால் மறைத்தான் வந்தவன், முகங்காட்டிடாது.

''ஹர ஹர! மகாதேவ்!''

என்றவனின் குரலோ மிக அருகில் கேட்டு பின் தொலைவாகி போனது.

''படாஸ்!''

என்றலறிய கீத்துவோ, திருநீறு கொண்ட வதனம் துடைக்காதே, விழிகள் மட்டும் விரித்து ஓடினாள் கூட்டத்துக்குள் நுழைந்து முன்னோக்கி போனவனை பின்னோக்கி துரத்தி.

சுற்றம் முழுதும், ஹர ஹர மகாதேவ் என்ற கூப்பாடில் நிரம்ப, கோவிலின் மணியோசையோ நிறுத்தாது ஒலிக்க,

''படாஸ்!''

என்றவளோ மீண்டும் கையை நீட்டியப்படி அலறி கதற,

''beti!''

(மகளே!)

என்ற குரலோடு மடியிலிருந்து தரைக்கு உருண்டு போக எத்தனித்தவளை, விழாது பிடித்து தடுத்தார் பெரிய பொட்டு ஆத்தா.

திடுக்கிட்டு எழுந்த அரிவையோ, பேந்த விழிக்க மூச்சு வாங்கி,

''paanee ko peena beti.''

(தண்ணி குடிமா!)

என்ற குண்டு ஆண்ட்டியோ, நீட்டினார் அவளிடத்தில் மினரல் வாட்டர் போத்தலை. ஏதும் பேசா கீத்துவோ, பரிதவித்த ஏக்கத்தை அவளுக்குள் புதைத்துக் கொண்டு இமைக்காது பஞ்சாபி ஆன்ட்டியையே பார்த்தாள்.

''paanee ko peena beti.''

(தண்ணி குடிமா!)

என்றவர் கொடுத்த வாட்டர் போத்தலை வாங்கி ஒரே முடக்கில் காலி செய்தாள் சின்னவள் அவள். இன்னும் படபடப்பு அடங்கவில்லை மானினியவளுக்கு.

பசியில் வயிறு வேறு வலித்திட ஆரம்பிக்க, துவண்டவளாய் தரை பார்த்திருந்தவளின் முன் நீட்டினார் முதலில் மடித்து வைத்த பிஸ்கட் பாக்கெட்டை அதே ஆண்ட்டி.

நன்றியை வாயால் சொல்லக்கூட தெம்பற்றவளாய் குஞ்சரி வயது ஒத்த அவரை பார்த்து மென்புன்னகை ஒன்றோடு வாங்கிக் கொண்டாள் கீத்து அப்பிஸ்கட் பாக்கெட்டை.

அவசர அவசரமாய் உண்டதால் விக்கல் எடுத்துக் கொண்டது ரீசன் மகளுக்கு. பிளாஸ்க்கிலிருந்த டீயை கப்பில் ஊற்றிக் கொடுத்தார் ஆன்ட்டி. அந்த குட்டி கிளாசில் ஏறக்குறைய ஐந்தாறு முறை வாங்கி குடித்திருப்பாள் கீத்து, டீயை.

சேலை கொண்ட ஆன்ட்டியும் முகம் சுளிக்காது அவளுக்கு மேலும் சில ரொட்டி பாக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார் சாப்பிட. நல்ல பசியில் இருந்த கீத்துவோ, அத்தனையையும் அலைந்துக் கொண்டு உண்டாள்.

நினைத்து பார்த்தாள் டாக்டரின் மனைவி, எங்கு எப்படியான உணவுகளை உண்டு வளர்ந்தவள் அவளென்று.

சுருக்கென்றது இதயம். எத்தனையோ முறை கோபத்தை சோற்றில் காண்பித்து, பாதியோடு கைகழுவி இருக்கிறாள். வேண்டாமென்று சொல்லிக்கூட குப்பைத் தொட்டியில் கொட்டியிருக்கிறாள்.

ஆர்டர் செய்ததைக் கூட முழுதாய் உண்டு முடிக்காது வீணாக்கியிருக்கிறாள். பல நேரங்களில் அன்னலக்ஷ்மி தட்டிலிருக்க காக்க வைத்திருக்கிறாள்.

ஆனால், இப்போதோ, கையேந்தி கேட்டு புசிக்கும் நிலை தந்த படிப்பினையில் சிறு தெளிவு கொண்டாள் மெல்லியல் அவள்.

இனி ஒருபோதும் உணவை உதாசீனப்படுத்திடக் கூடாதென்றும், அதற்கான மரியாதையை கட்டாயம் தந்திடவேண்டுமென்றும் மனதில் நிலை நிறுத்திக் கொண்டாள்.

கூடவே, ஆட்களை அளந்து பார்க்கும் குணத்தையும் முடிந்தளவுக்கு மாற்றிக்கொள்ள வேண்டுமென்று மூளையிடம் சொல்லி வைத்தாள்.

மொழிக்கு வழியில்லை என்றானபோதும் பசித்த வயிறுக்கு தேவையறிந்து உணவளித்த மனிதத்தை காட்டிலும் புத்தி ஒன்றும் பெரிதல்ல என்றே தோன்றியது நேரிழை அவளுக்கு.

வயிறு முட்ட தின்றவளுக்கு மீண்டும் குமட்டிக் கொண்டு வந்தது. ஒண்ணுதல் அவள் எழுந்திருக்கும் முன்னரே வாய் வேலையைக் காட்டி விட்டது. ரொட்டியெல்லாம் வாந்தியாக அவளின் அசிங்கத்தை பஞ்சாபி ஆண்ட்டித்தான் சுத்தம் செய்தார்.

சுடுநீர் கொஞ்சம் குடித்து நிலையை சமன் செய்துக் கொண்டவளுக்கு, காய்ச்சல் அடித்தது. இனம் புரியா பயம் வேறு தொற்றிக் கொள்ள, அழைத்தாள் புருஷனுக்கு கீத்து. அவன் எடுக்கவில்லை. குஞ்சரிக்கோ கவரேஜ் கிடைக்கவில்லை.

உடல் ரொம்பவே பலவீனமாய் இருப்பதை உணர்ந்தாள் வஞ்சியவள். போனை தூக்கி கைப்பைக்குள் வைத்தவளின் கைகளில் தட்டுப்பட்டது, சில மணி நேரங்களுக்கு முன் அவள் எடுத்து பத்திரப்படுத்திய மீடியம் அளவிலான ருத்ராட்ச மாலை.

இறுக்கமாய் அதை கைகளில் பற்றிக்கொண்டாள் பாவையவள். படாஸின் கந்தரத்தில் உணரும் அதே வகை ருத்ராட்சம்தான் இதுவும் என்பதை அதை தொட்ட கணமே உணர்ந்தாள் தெரிவையவள்.

மெத்தையில் மல்லாக்க சரிந்தாள் கீத்து. மூடிய விழிகளுக்குள்லோ சற்று முன் கண்ட கனவு மீண்டும் உயிர்தெழுந்தது.

ஓங்கி ஒலித்தது சங்கின் ஒலி, பனி மழையின் நர்த்தனம், ஹர ஹர மகாதேவ் என்ற கரகோஷம் என்று வாச்சஸ்பதியின் (சிவன்) தலம் பக்தி மயம் சூழ, செய்தி சொல்லிப்போன ரேவ்வை விரட்டி போனாள் கீத்து, பக்கதர்களுக்கு இடையில் புகுந்து.

ஆனால், எட்டித் தொடும் தூரத்திலிருந்தவனை நெருங்கியவள் முன்னோ, கட்வங்கம் கொண்ட அகோரி ஒருவர் வந்து குறுக்கிட்டார்.

தலையை அங்கும் இங்கும் அசைத்தவளாய், கண்ட கனவிலிருந்து மீண்டும் பயந்துப் போன போலீஸ்காரியோ, பட்டென விழி விரித்து எழுந்தமர்ந்தாள்.

''beti chinta mat karo! bhagwan shiv yahaan hai! vah aapakee raksha karega!''

(கவலப்படாதம்மா! சிவன் இருக்காரு! அவர் உன்னே பார்த்துப்பாரு!)

என்ற பெண்மணியோ கிருத்திகாவின் நுதலில் திருநீறு கொண்டு பட்டையடித்து விட்டார். வீங்கிய விழிப்படலங்களோடு கீத்து அவரை ஏறெடுத்தாள் நடப்பதேதும் புரியாது.

சின்னவளின் தலையை நீவி விட்டவரோ, அவள் கையிலிருந்த ருத்ராட்ச மாலையை வாங்கி, சுந்தரியின் கழுத்தில் அணிவித்து விட்டார்.

''Bholnaath hai naa, daro mat beti!''

(போல்நாத் இருக்காருள்ளே, பயப்படாதம்மா!''

என்ற ஆண்ட்டியோ மெதுவாய் சரித்தார் வாசூரை அவளை மஞ்சத்தில்.

''so jao beti, so jao.''

(தூங்குமா, தூங்கு!)

என்றவரின் கரிசனத்தில், குஞ்சரியை உணர்ந்தாள் மகளவள்.

காரணமில்லா அச்சத்தில் உழன்றாள் கீத்து. அவரின் கையை இறுக்கமாய் பிடித்துக் கொண்டே மீண்டும் துயில் கொண்டாள்.

விட்ட இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பமானது கனவு படாஸின் காதலிக்கு.

பம்பை, உடுக்கை என்று சங்குடன் கூடிய மணியோசை எல்லாம் ஒரு சேர, விபூதியால் கோற்றொடியின் சித்திக்கு செய்தியொன்று சொல்லிப் போன படாஸோ, அக்குளிரில் வெற்றுடல் வேஷ்டியோடு, நெற்றி, புஜங்கள் என்று அங்கங்களில் திருநீறு பட்டைக் கொண்டு, கந்தரத்தில் ருத்ராட்ச மாலை தொங்க, கம்பீர நடை கொண்டான்.

அந்த ஒரு காட்சியிலேயே நின்றுப் போனது நாயகியின் கனவு. லூப்பில் (loop) போட்ட சீன் போல, அதேதான் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டே இருந்தது இளம்பிடியாளின் சிந்தைக்குள்.

கண் கட்டு கொள்ளாமலேயே அம்பகங்களை மூடியப்படி, ஏன் கோவிலில் படாஸை தேடி அலைவது போலானதொரு கனவென்று, சேயிழையவள் யோசிக்கையில் விடிந்து பல மணி நேரங்கள் ஆகியிருந்தன.

அம்பகங்கள் விரித்தவளின் பக்கத்தில் ஆன்ட்டி இல்லை. ஆனால், கீத்துவின் விரலிலோ, தங்க வளையல் ஒன்று மட்டும் இருந்தது.

நேற்று அவரின் கையை பற்றியப்படி உறங்கிய வதூவின் நித்திரைக் கலையக்கூடாதென்று, ஆன்ட்டி வளையலையே கழட்டிக்கொடுத்து போயிருக்கிறார்.

ஆனால், தங்க வளையலை யாராவது இப்படி வெறுமனே விட்டு சென்றிடுவார்களா, என்ற யோசனையோடு காலைக் கடன்களை முடித்துக் கொண்டவளோ கீத்துவோ, டீ குடிக்க டெண்டுக்கு வெளியிலிருந்த கடை நோக்கி பயணித்தாள்.

குளிர்தான், இல்லையென்றிட முடியாது. ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது பொற்றொடி அவளால். குளிர் ஜாக்கெட் அணிந்தப்படிதான் கடையின் பக்கம் வந்திருந்தாள்.

பலகாரங்கள் ஏதும் சாப்பிடும் படியாக இல்லை. ஏற்கனவே, வயிறு கோளாறு, இந்த நேரத்தில் எதையாவது உண்டு ஏன் வம்பை வாலண்டியராக விலைக்கொடுத்து வாங்கிட வேண்டுமென்று, அடக்கி வாசித்தாள் மாயோள் அவள்.

ஆகவே, தேநீர் மட்டும் ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொண்டாள் குடிக்க காய்ச்சல்காரியவள். சூடான கப்பை கையுறை கொண்ட உள்ளங்கையால் தேய்த்துக் கொண்டே சில அடிகள் வைத்து முன்னோக்கி நடந்தாள் மண் சாலையில் பெண்ணவள்.

மதியம் பதினொன்று நாற்பது. வெயிலுக்கான அறிகுறியே இல்லை எனலாம்.

மூன்றாவது கிளாஸ் டீ குடிக்கையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கீத்து தூரத்தில் தெரிந்த மலைக்கோவிலையும் அலைமோதிக் கொண்டு பயணித்த பக்தர்களையும்.

காய்ச்சலாக இருந்தாலும் கூடாரத்துக்குள் அமர்ந்திருக்க அவளுக்கு விருப்பமில்லை. அதே வேளையில், உடம்பு சுகவீனமாய் இருக்கின்ற நேரத்தில் பூடபாலனை (சிவன்) மலையேறி போய் பார்ப்பதெல்லாம் வேலைக்கே ஆகாதென்று அவளுக்குத் தெரியும்.

ஆகவே, கூடாரத்திலேயே இன்னும் ரெண்டு மூன்று நாட்கள் தங்கிவிட்டு, பிறகு, தியான தீப்பனை (சிவன்) காண மலைக்கோவிலுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தாள் நன்னுதல் அவள்.

நடந்தவாறு, மலையிலிருந்து கோவிலுக்கு பின்னால் தெரிந்த இமயமலையை இமைக்காது பார்த்தாள் கிருத்தி.

படாஸ் அவளைத் தூக்கி போய் காதல் செய்த தருணங்களில் சில முறை சொல்லியிருக்கிறான், நாசுக்கான விடயமொன்றை.

அதாவது, படாஸ் அவன் முகம் பார்க்கச் சொல்லி காதலியிடம் கெஞ்சிய காலம் போய், ஏந்திழையவள் ரேவ்வின் வதனம் காண துடிக்கையில்,

''படாஸ் முகத்தே பார்க்க விரும்பறதும், கைலாய ரகசியத்தை தெரிஞ்சிக்க நினைக்கறதும், நடக்காத ஒன்னு கிருத்தி!''

என்றவன் சொன்ன சொல்லை நினைத்துப் பார்த்து பெருமூச்சு கொண்டவளின் விலோசனங்களோ எதையோ கண்டு முன்னோக்கி ஓடியது.

அலுமினிய கட்டிலில் நான்கு பேர் தூக்கி வார, யாரையோ பையை போட்டு உச்சி முதல் பாதம் வரை மூடியிருந்தனர்.

மனம் படபடக்க, அவ்விடம் நோக்கி பரபரத்த கால்களோடு, ஏன் அங்கு போய் நிற்கிறாள் என்றுக்கூட புரியாத நிலையில், நால்வரில் ஒருவரிடம் கேள்வி கேட்டு அவர்களின் பின்னாலேயே நடையிலான ஓட்டம் கொண்டாள் கீத்து,

இறப்பு என்றவர்களின் பதிலில் பக்கென்றது இதயம் காவல்காரிக்கு. குளிர்க்காற்று வீசிய வீரியத்தில் பூதவுடலை மூடியிருந்த பையோ பறந்து போக, ஆடிப்போனாள் போலீஸ்காரியவள், பிணமாய் பஞ்சாபி ஆண்ட்டியைக் கண்ட நொடி.

அவ்வளவுதான், ஆன்ட்டி என்றலறி மயங்கிய அம்மணிக்கு ஒரு ஸ்ட்ரெச்சரை ரெடி செய்யாததுதான் மிச்சம். நடு ரோட்டில், டீ கிளாஸ் பறக்க, பதுமையை போல் அழகாய் சரிந்தவளுக்கு நடைப்பாதையில் பயணித்தவர்கள் உதவிக்கரம் நீட்டினர்.

முகத்தில் தண்ணீர் அடித்து ஆயிழையை தெளிய வைத்த நல்லவர்களோ, அவளைக் கொண்டு வந்து பத்திரமாய் சேர்த்தனர் மீண்டும் கூடாரத்திற்கே.

கிலி பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் தெரியிழையவள் மெத்தையில்.

நேற்று வரை அவளுக்கு உணவளித்து, சுகமற்றவளை தாயாய் கவனித்து, மடியில் போட்டு கணவனாய் தாலாட்டிய ஆன்ட்டி, இப்போது இல்லையென்பதை கீத்துவால் ஜீரணிக்கவே முடியவில்லை.

காலை எழுந்தவுடன் முதலில் பஞ்சாபி ஆண்ட்டியைத்தான் தேடினாள் அகம்பாவ கள்ளியவள். மன்னிப்பு கேட்க நினைத்திருந்தாள் கீத்து.

நேற்று அவரை கண்ட பொழுதில் முகம் சுளித்து ஓரம் ஒதுங்கி போன அவளின் செயலை கொஞ்சமும் சட்டை செய்யாது,aஅவளுக்கு உதவிய அவரின் குணத்துக்கு முன்னாள் தோற்றுப் போனது காவல்காரியின் அதுப்பு.

நடுங்கியது கைகால்களெல்லாம் பேடை அவளுக்கு. காய்ச்சல் வேறு வானிலையை போல் மாற்றங்கொண்டது ஒருநிலை கொள்ளாது காரிகை அவளுக்கு. அழுகையோடு வீங்கிய வதனத்தை போர்வையைப் போர்த்தி மூடிக்கொண்டாள் கீத்து.

அதீத பயம் அவளை ஆட்டிப்படைத்தது. காரணம்தான் புரியவில்லை. தலையணைக்கு பக்கமிருந்த ஆன்ட்டியின் தங்க வளையிலோ சருவரியைப் பார்த்து முறுவலித்தது.

அவரின் பாந்தமான முகம் கண் முன் வந்துப் போனது பூவை அவளுக்கு. காட்டாறாய் கண்ணீர் கன்னம் நனைத்தது.

ஊர் பேர் தெரிய இடத்தில், நாதியற்று கிடந்தவளை மகளாக கவனித்துக் கொண்ட தாயை இழந்த சோகம் கீத்துவின் ஓலத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

அவரின் தங்க வளையலை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டவளோ, திட்டிகளை மூடியப்படி கால்களை குறுக்கிக் கொண்டாள்.

''அடுத்த நிமிஷம் நிலையில்லாத வாழ்க்கை கிருத்தி!''

என்ற வாக்கியமோ படாஸின் குரலில் கேட்டது அலரவள் செவியில்,

''படாஸ்..''

என்ற அபலையோ, வாயால் அவன் பெயரை ஒப்புவித்தாள் சத்தமில்லா மொழியில்.

நிலையற்ற மனித வாழ்வை, வெறுமனே வக்கிரம், குரோதம், வன்மம் கொண்டு கடத்திடும் அற்பர்களாக வாழும் வாழ்க்கை அர்த்தமற்றது என்பதைப் புரிந்துக் கொண்டாள் டாக்டரின் மனைவி.

காற்றுள்ளே போதே தூற்றிக்கொள்ள வேண்டுமென்பது, வாய்ப்புகளுக்கு மட்டுமல்ல, மனித உணர்வுகளுக்கும் பொருந்தும், என்ற உண்மையை இன்றைக்கு மனதார ஏற்றுக் கொண்டாள் வல்வியவள்.

மன்னிப்பை கேட்க நினைத்தவள் உடனே அதைக் கேட்டிருந்தாலோ, இல்லை அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது, மனிதர்களை பாகுபாடற்று பார்க்கும் எண்ணத்தை ஒருமனதாக கொண்டிருந்தாலோ, இனி வாழ்நாள் முழுக்க அவள் சுமக்க வேண்டிய குற்ற உணர்ச்சியிலான பழியையும் வலியையும் வதனியவள் சுமக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

ஆனால், நடந்தது நடந்தாயிற்று. இனி எதையும் மாற்ற இயலாது. கால பைரவன் அவ்வளவு கருணைக்காரனெல்லாம் இல்லை.

ஆகவே, இனியாவது சூதனமாய் காய்களை நகர்த்துவது நல்லது நம் வாழ்க்கைக்கு.

ஒவ்வொரு செயலுக்கு பின்னாடியும் அதற்கான பின்விளைவுகள் வரிசைக் கட்டி காத்திருக்கின்றன. அது வரமா, சாபமா என்பதை நம் செயல்களே முடிவு செய்கின்றன.

புனித யாத்திரை வந்த அம்மாவோ, மலையேறும் முன்னரே சிவனடி சேர்ந்திருந்தார் பாவத்துக்கான சம்பளமாய் கீத்துவிற்கு உதவி, தர்ம கணக்கை கொஞ்சம் அதிகரித்து.

ஆனால், கீத்துவோ வந்த இடம் எப்படியான தலம் என்பதை மறந்து அவள் காரியத்திலேயே குறியாய் இருக்க, கேதார்நாத் வாழ்வா சாவா என்பதன் உள்ளர்தத்தை அவளுக்கு இழப்பொன்றை நேரடியாய் காண்பித்து உணர்த்தியிருந்தது.

விஷாலாக்க்ஷான் (சிவன்) ஒன்றும் மோசக்காரன் இல்லை. அவனுக்குத் தெரியும் யார் உயிர் எங்கு, எப்படி போக வேண்டுமென்று. தெய்வ சன்னிதியில் உயிர் பிரிந்த அம்மாது நிச்சயம் புண்ணியமான ஆத்மாவே.

இது புரிய கீத்துவிற்கு இன்னும் சில காலங்கள் ஆகலாம். அதுவரைக்கும் இப்போது பைந்தொடியவள் உணர்ந்திருக்கும் தெளிவே போதும் படாஸின் பின்னனியை பேதையவள் கண்டறிய, என்பதே சுகடாவின் (சிவன்) திருவிளையாடலாகும்.

போர்வைக்குள் ஒளிந்துக் கொண்ட தணலோ, சுட்டெரித்தது துடியிடையின், தானென்ற அகங்காரத்தை.

''கீத்து..''

என்ற ரீசனின் குரலில் மொத்தமாய் உடைந்து கதறினாள் டேடியின் லிட்டில் பிரின்சஸ்.

இல்லாது போனவனின் அரவணைப்பை உணர்ந்தாள் மகளவள். அப்பனின் மார்புச்சூட்டில் புதைந்துக் கொண்டாள் மழலையாய்.

''நான் இதை எதிர்ப்பார்களே டேடி! ஏத்துக்கவே முடியலே! ரொம்ப கஷ்டமா இருக்கு டேடி! அவுங்க ஒரு குட் சோல் (good soul) டேடி!''

என்றவள் குலுங்கி குமுறிய தருணங்களில், பொசுங்கிப்போனது நேற்று வரை கிருத்திகா தீனரீசன் கொண்டிருந்த திமிரிலான ஆங்காரம்.

இனி தெரியாமல் கூட யார் மனதையும் புண்படுத்தும் படியான வார்த்தைகளை வெளிப்படுத்திட இயலாது வதூ அவளால்.

மற்றவர்கள் மனம் நோகும்படியான காரியங்களையும் இனி வரும் காலங்களில் மேற்கொண்டிட மாட்டாள் அகம்பாவத்துக்கு பேர் போன ஆரணங்கவள்.

வேற்றுமைகள் காணாது ஒருவரை சுயத்தோடு ஏற்றுக்கொள்வதே ஓர் உறவின் உன்னதமாகும் என்பதை மானசீகமா உணர்ந்துக் கொண்டாள் கீத்து.

பிம்பமான ரீசனின் கரம் மகளின் தலையை வருடிக் கொடுக்க, காணாமல் போனது அனிச்சம் அவள் கொண்டிருந்த அச்சம். முக்குறுஞ்சிக் கொண்டவளோ அழுகையை நிறுத்த,

''புறக்கண் மூடி

அகக்கண் திறடி என் கிருத்தி!

தேடி ஓடடி

துர்ஜநீயா (சிவன்) நோக்கி!''

என்ற படாஸின் கவியோ, உடுக்கை மற்றும் சங்கொலி சேர்ந்த ஹர ஹர மகாதேவ் என்ற மந்திரங்கொண்டு, செவி விழுந்து சித்தியில் அடைக்கலமாக, கனவில்லா உறக்கமொன்றைக் கொண்டாள் கிருத்திகா, கேதார்நாத் மலையடிவார கூடார பஞ்சணையில்.

படாஸ்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/
 

Author: KD
Article Title: படாஸ்: 113
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top