What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
323
அத்தியாயம் 122

நிரந்தரமற்ற வாழ்வில் எதுவும் நிலையில்லை.

அன்பை போன்றதொரு பித்தும் வேறில்லை.

தண்ணீர் சத்தம் மட்டுமே கேட்ட சூழலை இருள் மொத்தமாய் விழுங்கியிருந்தது.

''நான் வருவேன் கிருத்தி! வந்து நிற்பேன்! உனக்காக! என் கிருத்திக்காக!''

என்றக் குரலில்,

''ஔகத்!''

என்று நெஞ்சம் கொண்ட பதைப்பை குரல் வழி வெளிக்கொணர்ந்த வஞ்சியோ, திக்கி திணறி நீச்சலடித்தவளாய் மேலெழும்பினாள்.

எங்கிருக்கிறாள், எப்படி இருக்கிறாள் என்று எதுவுமே தெரியவில்லை கீத்துவிற்கு.

தண்ணீருக்குள் இருந்தப்படியே அங்கும் இங்கும் நகர்ந்து துழாவ தலை அங்கிருந்த பாறையில் இடித்ததுதான் மிச்சம். நச்சென்ற அடியில் இடித்த பொருளை கையால் தொட்டு தடவியவளுக்கு அது வழுக்கிய பாறை என்பது உறுதியானது.

ஆகவே, ஆயிழையவள் நீரோட்டம் கொண்ட ஒரு குகைக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை மட்டும் தெள்ளத் தெளிவாக உணர்ந்துக் கொண்டாள்.

தற்போதைய கும்மிருட்டை இதுவரை பேதையவள் ஒருமுறைக்கூட வாழ்நாளில் அனுபவித்ததே கிடையாது.

ஆனால், கண் கட்டு வித்தையில் படாஸோடு ஒன்றி போனவளுக்கு இந்நிலை சமாளிக்க கூடிய ஒன்றாகவே தோன்றியது.

பெண்ணவள் தேகம் வேறு கிடுகிடுக்க ஆரம்பித்தது, நீரின் குளிர்மையை காந்தாரியின் உடல் உணர்ந்திட ஆரம்பிக்க.

காரிகை அவளோ இதற்கு மேலும் நீரில் இருந்திட முடியாது, ஜன்னி வைத்தே செத்திடுவாள் என்றுணர்ந்து எப்படியாவது அங்கிருந்து வெளியேறிய ஆக வேண்டுமென்று முடிவெடுத்தாள்.

போலீஸ்காரிக்கு தைரியம் இருப்பது ஒன்றும் பெரிய விடயமில்லை. ஆனால், இம்மி வெளிச்சமும் இல்லா இடத்திலிருந்து கீத்து தப்பிக்க நினைப்பதுதான் அவள் வாழ்வில் பேடையவள் நிறைவேற்ற போகும் மிகப்பெரிய சவாலென்று கருதினாள் கீத்து.

தொட்டுத்தடவிய சுண்ணாம்பு பாறையை பற்றியப்படி கொஞ்சங் கொஞ்சமாய் நகர்ந்தாள் நங்கையவள் நீருக்குள் இருந்தப்படியே. ஆனால், அப்பெரிய சுண்ணாம்பு பாறைக்கு அடுத்ததாக அந்திகையவள் பிடிமானத்துக்காக பற்றிட அங்கு எதுவுமே இல்லை.

அடுத்த நிமிடமே புரிந்துக் கொண்டாள் கீத்து கண்டிப்பாய் கோதையவள் இருப்பது சுண்ணாம்பு குகைக்குள் தானென்று.

அவ்வகையான குகைகளின் பாறைகளே பெரும்பாலும் மழை நீரால் அரிக்கப்பட்டு பல் விதமான பாறைகளை உருவாக்கிடும்.

ஒருவழியாய் கையை அங்கும் இங்கும் தொட்டுத்தடவி துழாவி இறுதியில் தடிமனான ஏதோ ஒன்றை பற்றிப்பிடித்தாள் கீத்து. நன்றாக தெரிந்தது அது இரும்பு கம்பியென்று அவளுக்கு.

உடனடியாக இருக்கரங்களையும் கொண்டு அக்கம்பியினை இறுக்கியப்படியே நீருக்குள் நகர்ந்தாள் கீத்து. அந்தக் கம்பிக்கு மேலொரு கம்பியும், நீருக்குள் ஒரு கம்பியும் இருக்க, மொத்தம் மூன்று கம்பிகள் கொண்ட நீர் வளாகம் அதுவென்று புரிந்துக் கொண்டாள் கீத்து.

நீர் சத்தம் மட்டுமே கேட்ட இடத்தில் திடிரென்று, 'இஸ்' என்ற சத்தம் ஒலித்தது. அகல விரிந்தது கீத்துவின் விழிகள்.

பாம்பின் சத்தம் மிக அருகில் கேட்க, கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்ட அலரோ செவிகளை கூர்மையாக்கி ஓசை வரும் திசையைக் கண்டறிந்தாள்.

தலைக்கு பின்னாலிருந்து கேட்ட சாரையின் ஒலிக்கு டிமிக்கி கொடுத்தவளாய் பற்றியிருந்த இரும்புக் கம்பியைக் கட்டிக்கொண்டு மேலேறிட முயற்சித்தாள் கீத்து தண்ணீரிலிருந்த கம்பியினில் கால் பதித்து.

ஒரு வழியாய் கம்பியோடு போராடி, ஈர நிலத்தில் வெறுங்கால்கள் கொண்டு தடம் பதித்த கோமகளோ, புயங்கத்தின் சத்தம் கேளாதிருக்க ரொம்பவே கலவரம் கொண்டாள்.

காரணம், 'இஸ்' என்று சத்தம் கேட்டாலாவது விடதரம் அது எங்கே இருக்கிறதென்று தெரியும். ஆனால், இப்போதோ அது எவ்விடம் ஊர்ந்து தந்திரமாய் கீத்துவை போட பார்க்கிறதென்று தெரியாது விழித்தாள் பாவையவள்.

இருப்பினும், வியாளம் அதற்காக பயந்துக் கொண்டிருந்தால் நிச்சயம் இங்கிருந்து தப்பித்திட முடியாதென்று நிலையை சமன் செய்துக் கொண்ட மாயோளோ, மீண்டும் கண்களை மூடி கைகளை நீட்டி மெது மெதுவாய் அடிகளை முன்னோக்கி வைத்தாள்.

கை எட்டித்தொடும் முன்னே கால்கள் இடித்து பொத்தென விழுந்தாள் கிருத்தி, பெரும் பாறை ஒன்றின் மீது. பாசிக்கொண்ட அதன் மீதோ நீர் வழிந்திறங்க எதுவுமே புரியாதவளோ இறுக்கமாய் கட்டிக்கொண்டு தொட்டுணர முயற்சித்தாள் விழுந்து கிடக்கும் பாறை என்னவென்று கண்டறியும் பொருட்டு.

அப்படியான நிலையில் விரல்கள் உரச பாறையிலோ ஓம் என்ற எழுத்தை உணர்ந்தாள் கீத்து. அதுவும் ஒன்றல்ல ரெண்டல்ல ஏராளம். வரிசையாய் மேலிருந்து கீழ்நோக்கிய வண்ணம்.

மனசில் சட்டென அது பாறையல்ல சுயம்பு லிங்கம் என்றொரு எண்ணம் எழ, அதை ஆமோதிக்கும் வண்ணம் பாலின் பிசுபிசுப்பை உணர்ந்தாள் கீத்து அதன் மீது.

அதே வேளையில் கட்டியணைத்த கரங்களை கொஞ்சமாய் விடுவித்து மொத்த பாறையையும் தொட்டு மேலேற அம்மணியின் கையில் சிக்கியது சிறிய அளவிலான பட்டுத்துணி ஒன்று.

அதைத் தொடும் போதே தெரிந்தது தெரிவையவளுக்கு அது கடவுளுக்கு படைக்கும் துண்டென்று. ஆபத்துக்கு பாவமில்லை என்ற கள்ளியோ, வெடுக்கென்று அதை உருவினாள் பாறையின் மீதிருந்து கிடுகிடுத்த விரல்களால்.

துணியைக் கொஞ்சமாய் உருண்டை போல் கசக்கி வாயில் குவித்து காற்றூதிய பூமகளோ, அதை முகம் முழுதும் ஒத்தடம் போல் கொடுத்துக் கொண்டாள். அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் குத்த வைத்து உடலை சூடுப்படுத்திக் கொண்டாள் சுந்தரியவள்.

அவ்வளவு நேரம் சத்தம் போட்டிடாத காகோதரமோ, மீண்டும் 'இஸ்' என்றிட தூக்கி வாரிப்போட்டது சின்னவளுக்கு. மாமியாரை கண்ட மருமகள் போல் அசதியெல்லாம் அசால்ட்டாய் காணாமல் போனது கீத்துவிற்கு.

துண்டை வாயில் கவ்விக் கொண்டவள், அவசர அவசரமாய் கைகளால் பாறையின் கீழ் புற சுற்றத்தைத் தொட்டுத் தடவினாள். தளிரியலின் கையிலோ தட்டுப்பட்டது சின்னஞ்சிறு பாக்ஸ் ஒன்று. அதைக் கையிலெடுத்தவள் நுகர்ந்து பார்த்திட, அது ஒரு தீப்பெட்டியென்று அறிந்துக் கொண்டாள் கீத்து.

தாமதிக்காத நேரிழையோ, உடனடியாக அதற்குள்ளிருந்த தீக்குச்சியை எடுத்து, பாக்சின் ஓரத்தில் தேய்க்க, நெருப்போ குப்பென்று பற்றி சிறியதொரு வெளிச்சத்தை கொண்டு குகையைப் பொட்டு அளவிலான விட்டத்தில் பிரகாசமாக்கியது.

தீக்குச்சியின் நெருப்பில் கண் முன் கரும்பாறை ஒன்றை மிக நெருக்கத்தில் கண்ட அரிவையின் விழிகளை குகையைச் சுற்றி சூழல விட்டாள் விறலியவள்.

தீப்பெட்டியைக் குலுக்கையிலேயே தெரிந்தது பேடை அவளுக்கு, அதற்குள் எப்படியும் இருபதுக்கும் மேற்பட்ட குச்சிகள் இருக்குமென்று. ஆகவே, அடுத்த சில குச்சிகள் மூலம் சுயம்பு லிங்கத்திற்கு அருகில் விளக்கு ஏதேனும் இருக்கிறதா என்று தேடினாள் கீத்து.

அகப்பட்டது அகல் விளக்கொன்று. அதை ஏற்றியவள் பின்னர் அவ்விடத்தை சுற்றி அலசிட இன்னும் ஐந்து அகல் விளக்குகளைக் கண்டாள்.

மொத்தமாய் எல்லாவற்றையும் ஏற்றியவள் ஒரு வழியாய் அச்சுண்ணாம்பு குகையை ஓரளவுக்கு வெளிச்சமாக்கியிருந்தாள்.

ஆதலால், குகையோ இப்போது பார்க்கும் லட்சனத்திலேயே இருந்தது எனலாம். முதலில் தடுக்கி விழுந்த கரும்பாறையை ஆழமாய் நோக்கினாள் கீத்து.

நிஜமாகவே அது ஒரு சுயம்பு லிங்கம்தான். வஞ்சியவள் மனதில் நினைத்தது தவறாய் போகவில்லை. கம்பீரமாய் வீற்றிருந்த அதன் பக்கத்தில் அகர்பக்திகள், சூடம், சாம்பிராணி, தட்டு, மஞ்சள், குங்குமம், மற்றும் பூக்கள் போன்ற பூஜை பொருட்கள் ஒரு ஓரமாய் கிடந்தன.

உடல் அதிகமாய் வெடவெடக்க, கீத்துவோ ஒருபுறமாய் பாசி பிடித்திருந்த பஞ்சமுகியிலான சுயம்பு பாறையின் மீதே சாய்ந்துக் கொண்டாள் வசதியாக. அப்பாறை என்னவோ கதகதப்பாக இருப்பதை போலுணர்ந்தாள் பெண்டு அவள்.

ஆகவே, சாமியாகினும் மன்னிப்பொன்றை கோரி, தலை சாய்த்தப்படி கொஞ்ச நேரத்துக்கு அவளை அங்கேயே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் மடவரல் அவள்.

அரை மணி நேரம் அப்படியே கழிய மீண்டும் கேட்டது 'இஸ்' என்ற சத்தம். மறுபடியும் எழுந்துக் கொண்ட பகினியோ, உசுரை காப்பாற்றிக் கொள்ள முதலில் சத்தமிடும் உரகத்தைப் பிடித்த ஒரேடியாய் உறங்க வைத்திட வேண்டுமென்ற முடிவுக்கு வந்தாள்.

ஆகவே, சோர்வையெல்லாம் ஒன்று திரட்டி அதைப் பலமாக்கி எழுந்துக் கொண்டாள் வல்வியவள், பாறையிலிருந்து உடலை பிரித்துக் கொண்டு.

நாளா பக்கமும் தலையைத் திருப்பிப் பார்க்க, புரிந்துக் கொண்டாள் கீத்து, அது சமானியமான குகை இல்லையென்பதை. கையில் அகல் விளக்கொன்றை ஏந்தியவள் மெதுவாய் அடிகளை முன்னோக்கி வைத்தாள்.

பஞ்சமுகி சிவலிங்கத்திற்கு எதிரிலேயேதான் அக்குகையின் நுழைவாயில் இருந்தது. ஏறக்குறைய ஐந்தாறு படிக்கட்டுகள் இருந்தன செங்குத்தாய்.

கீத்துவோ அதன் மூலம் மேலேறி பார்க்க, படிக்கட்டுகளுக்கு முந்தைய பாதையோ ஊர்ந்து வரும் குறுகலான சந்து வழிபோல் காட்சியளித்தது.

நெற்றியை இறுக்கிய போலீஸ்காரியோ, மீண்டும் கீழிறங்கி அப்படிக்கட்டுகளிலேயே அமர்ந்தாள் சில வினாடிகளுக்கு சிந்தனைக் கொண்டு.

குகைக்குள் முன் வாசல் மூலம் வருவது சவாலான விடயமாகவே அவளுக்கு பட்டது. காரணம், நடுத்தரமான உடல் எடையைக் கொண்டவர்கள் மட்டுமே நுழையக்கூடிய அளவிலான வழிப்பாதையே அங்கு உருவாகி இருந்தது.

நிச்சயம் வெளியேறும் பொழுதினில் யாராவது ஒருத்தர் கையைப் பிடித்து முன்பக்கத்திலிருந்து வெளியில் இழுத்தே ஆக வேண்டும் அப்போதுதான் சுலபமாய் வெளியேறிட முடியும் குகையின் வாயிலிலிருந்து.

பாம்பை தேடிட நினைத்தவள் அதைச் சுத்தமாய் மறந்து போயிருந்தாள்.

அகல் விளக்கின் வெளிச்சத்தில் குகைகளின் மேற்புறத்தை நோக்கினாள் கீத்து. ஒரு மண்ணும் தெரியவில்லை.

ஆனால், குகைக்குள் இரண்டு மின்கம்பங்கள் இருக்க, கண்டிப்பாய் கூட்டம் வருகையில் அதை ஆன் (on) செய்தும், நடை சாத்துகையில் ஆப்பும் (off) செய்து போகிறார்கள் என்று புரிந்துக் கொண்டாள் அணங்கவள்.

பஞ்ச பூதங்களைக் குறித்த லிங்க பாறைக்கு அருகில் சின்னதாய் சிலை ஒன்றிருக்க, அதற்கும் பூஜைகள் எல்லாம் அரங்கேறியிருந்தது. அலங்காரங்கள் அதைத்தான் உணர்த்தின கீத்துவிற்கு.

சிவப்பு நிறத்திலான பட்டாடைகள் கொண்ட உருவத்தை உற்று நோக்கிய பின் தெரிந்துக் கொண்டாள் பனிமலரவள், காட்சி கொண்டிருப்பது துர்கா தேவியென்று.

குளிருக்கு தோதாய் பட்டாடை மூலம் வாய் கொண்டு மேனிக்கு ஒத்தடங்கள் கொடுத்த கீத்துவோ, மெதுவாய் நடையைக் கட்டினாள், முதலில் அவள் முங்கியிருந்த தாடகத்தின் பக்கமாய்.

உள்ளங்கைக் கொண்ட அகல் விளக்கை மேலேத்தி கண்டாள் கிருத்திகா, கண் முன் அனுமானின் கதாயுதம் போலான சுண்ணாம்பு பாறையின் உருவத்தை. இதுதான் முதலில் ஆரணங்கின் சிரசில் முட்டி மோதிய பாறை என்பதை மண்டையைத் தேய்த்து உணர்ந்துக் கொண்டாள் கீத்து.

அம்பகங்கள் ரெண்டும் அகல விரிய அதற்கு பக்கத்திலோ, பற்பல உருவங்களைக் கண்டு பிரமித்து போனாள் பேதையவள்.

இயற்கையாய் உருவாகிய கணபதியின் உருவம் தொடங்கி, நந்தி, முதலை, திரிசூலம், அரிமாவின் நகம், கமலம், சரஸ்வதி, பிரம்மா, விஷ்ணு மற்றும் பாம்பு போன்ற உருவங்கள் அத்தனையும் பாறைகளில் ஆங்காங்கே தெரிந்தன.

சில உருவங்களைப் பார்த்தவுடன் புரிந்துக் கொண்ட கீத்து, சிலவற்றை நெடுநேரம் தீவிரமாய் உற்று நோக்கிய பின்னரே உணர்ந்துக் கொண்டாள்.

அதிலும் அவள் இவ்வளவு நேரம் தத்தளித்து சிக்கி தவித்தது குப்தா கங்கை (Gupta ganga) என்றழைக்கப்படும் சிறிய அளவிலான தாடகமே.

கங்கை பாய்ந்தோடும் அக்குகைத்தான், ஷிவ் குஃபா (Shiva Gufa) என்றழைக்கப்படும் பிரகதேஷ்வர் பஞ்சானன் மஹாதேவ் குகைக்கோவிலாகும்.

இக்குகைத்தலம் சுண்ணாம்பு வகையைச் சேர்ந்த ஒரு கர்ஸ்டிக் குகையாகும். சுண்ணாம்புக் கல் வழியாக நீர் கசியும் போது, அது மெதுவாக பாறையைக் கரைத்து, வெற்று இடங்களை உருவாக்கி, இறுதியில் குகைகளை உருவாக்குகின்றன.

இது என்ன குகையென்ற தீவிரமான யோசனையின் முடிவில், விடுதியின் சிற்றேடுகளில் கண்ட ஷிவ் குஃபாவின் படங்கள் ஞாபகத்திற்கு வர, இதுதான் ஏந்திழையவள் வர நினைத்த குகை என்றுணர்ந்து சிலாகித்தாள் சுந்தரியவள்.

தண்ணீரைத் தேடி அலைந்த கிராம மக்களால், 1998 ஆம் ஆண்டு இக்குகைக் கண்டுபிடிக்கப்பட்டது என்று அங்கிருக்கும் மக்கள் மற்றும் அக்கோவிலின் பூசாரி சொல்வது வழக்கமாகும்.

தேவைக்கு நீர் வேண்டிய கிராமவாசிகள் பலர் தண்ணீருக்காய் பல இடங்களைத் தோண்ட, கனரசத்தின் சத்தம் கேட்டதே ஒழிய, நீரூற்றுக்கான தடயமோ யார் கண்ணிலும் பட்டிடவேயில்லை.

ஏழு நாட்கள் இப்படியே கழிய, அக்கூட்டத்தில் ஒருவரான பானு பிரகாஷ் என்றவரின் கனவில் சித்தனை போல் காட்சியளித்த சிவனோ, நாளை நான் தோன்றிடுவேன் என்றுக் கூறி மறைந்துள்ளார்.

அதுப்போலவே, மறுநாள் குகையைக் கண்டுப்பிடித்த கிராமத்து மக்கள் அதன் வாயில் திறக்க, தேடிய நீர் கிடைக்க, அகமகிழ்ந்தனர்.

குகைக்குள் ஐந்து முகங்கொண்ட சுயம்பு லிங்கத்தையும் கூடவே, பல தெய்வ உருவங்களையும் பாறையில் கண்ட மக்கள் இதுவெல்லாம் பரமேஸ்வரனின் கருணையே என்று நம்பினர்.

ஆகவே, வேண்டியதைக் கொடுத்த ஈஸ்வரனுக்கு குகையோடு சேர்ந்தாற்போன்ற கோவிலொன்றை கட்டி வழிப்பட தொடங்கினர் அக்கிராமத்து மக்கள்.

இப்படித்தான் இக்குகை தலத்திற்கு பிரகதேஷ்வர் பஞ்சானன் மகாதேவ் ஷிவ் குஃபா (குகை) என்ற பெயர் ஏற்பட்டது.

சரீரம் அதீத நேரம் நீரில் ஊறி காய்ச்சலை ஏற்படுத்தியிருந்தது கீத்துவிற்கு. நல்லவேளை தும்பலைக் கொடுத்திடவில்லை.

ஆதலால், தப்பித்தாள் மெல்லியாள் அவள். இல்லையேல், கதையே வேறு மாதிரி மாறி போயிருக்கும் அந்த நேரத்தில் குகைக்குள் சத்தம் கேட்க.

அகல் விளக்குகளை பக்கமாய் வைத்துக் கொண்ட முற்றிழையோ, மீண்டும் போய் சரிந்துக் கொண்டாள் நடுங்கிய யாக்கையோடு சுயம்பு லிங்கத்தின் விளிம்பில்.

பாம்பை தேடிய சனிகையோ, அது கண்ணில் சிக்காது போக, ஒருவேளை தண்ணீரில் மிதந்து வேறெங்காவது போயிருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.

சரியாக மணி ஆறு. பேச்சு சத்தம் கேட்க, விழித்துக் கொண்டாள் கீத்து. ஆட்கள் வரப்போவதை உணர்ந்துக் கொண்டவளோ வேகமாய் அகல் விளக்குகளை ஊதி அமைத்து ஒளிந்துக் கொண்டாள் பஞ்ச லிங்கத்தின் பின்னால்.

மின்கம்ப விளக்குகள் ஒளிர, அப்போதுதான் மொத்தமாய் அக்குகையை முழுவதுமாய் பார்த்தாள் கீத்து. இருக்கண்கள் போதாது எனும் அளவுக்கு இருந்தது குகையின் உற்புற இயற்கை உருவங்களும் காட்சிகளும்.

க்ரில் கேட் திறக்கும் சத்தம் கேட்க, ஆட்களின் ஆரவாரமும் சேர்ந்து கேட்டது. எப்படியும் ஐந்து பேருக்கு மேற்பட்ட குழுவே வந்திருக்கிறது என்று அவர்களின் குரல் கொண்ட வித்தியாசத்தில் அறிந்துக் கொண்டாள் கீத்து.

ஆகவே, வருபவர்களோடு கலந்து குகையை விட்டு வெளியேறிட வேண்டுமென்று முடிவெடுத்தாள் போலீஸ்காரியவள்.

அதேப்போல், இளைஞன் ஒருவன் கையில் மைக்கோடு முதலில் இறங்கி, பஞ்சமுகிக்கு பூ மாலை ஒன்றை அணிவித்து, அதன் ஓரத்திலிருந்த பூஜை பொருட்களை எல்லாம் சரி செய்ய, கீத்துவோ மெது மெதுவாய் அவன் கண்ணில் சிக்கிடாது தவழ்ந்து பாறையை சுற்றி வந்தாள்.

ஆணவனோ மேலிருக்கும் கூட்டத்தை கீழிறங்க சொல்லி அழைத்தான் ஹிந்தியில். கீத்துவோ வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு காத்திருந்தாள் அவன் நகரும் வரைக்கும்.

மைக் கொண்ட வடக்கனோ, குப்தா கங்காவின் பக்கமாய் போய், அங்கிருந்த மற்ற உருவங்களுக்கும் சிறு மாலைகளை அணிவித்தான்.

இதுதான் சமயமென்று கருதிய கீத்துவோ, பாறைக்கு பின்னாலிருந்து ஒரே பாய்ச்சலில் படிக்கட்டின் பக்கமாய் போய் நின்றாள்.

ஆனால், எதிர்பாரா விதமாய் ஒளியிழையின் நாசியோ லைட்டாய் அரித்து, அவளைத் தும்பிட வைத்தது.

திரும்பி அவளை பார்த்த இளைஞனோ ஆங்கிலத்தில் ஒரு ஆள்தான் இறங்கி இருக்கிறீர்களா என்றுக் கேட்க, காவல்காரியோ மண்டையை மட்டும் ஆட்டினாள் மென்புன்னகை ஒன்றோடு.

அவனோ, சத்தமாய் ஹிந்தியில் பேச, மேலிருந்த கூட்டமோ கீழிறங்கி வந்தது. அவர்களோடு சேர்ந்து கீத்துவும் கோவிலின் வரலாறு மற்றும் சிறப்பம்சங்கள் பற்றியும் தெரிந்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.

அவள் அதிக முறை தும்பிக்கொண்டே இருக்க கண்ட இளைஞனோ, அவளுக்கு குப்தா கங்காவின் நீரை ஒரு போத்தல் நிறைய நிரப்பிக் கொடுத்தான் குடித்திட மற்றும் குளித்திட.

ஆங்கிலத்தில் நன்றி சொல்லிய பைந்தொடியோ கிளம்பினாள் அங்கிருந்து. மீண்டும் விடுதிக்கே திரும்பிய நேரிழையவள், ரிஷப்ஷன் பையன் சொல்ல தெரிந்துக் கொண்டாள் அவளாகவே விடியற்காலை பொழுதில் காலார நடந்து போன கூத்தை.

குப்தா கங்கா நீரை கொஞ்சமாய் வெந்நீரில் கலந்து குடித்த வாசுரையோ, குளிக்கையிலும் அதை நீரோடு சேர்த்துக் கொண்டாள்.

பெரும் பாரமொன்று குறைந்தாற்போல தோன்றியது கீத்துவிற்கு. அதுவும் உத்ரகாஷி போவென்று நேற்றுவரை அவளை பாடாய் படுத்தி வந்த அசரீரியோ இப்போதோ காணாமல் போயிருந்தது.

புரிந்துக் கொண்டாள் கீத்து நடந்த சம்பவங்களை கூட்டி கழித்து பார்த்து, கடவுள் நடக்கவிருக்கும் ஏதோ ஒரு அசம்பாவிதத்தை பொற்றொடி அவளுக்கு முன்கூட்டியே காட்சிகளாய் காண்பித்திருக்கிறார் என்று.

அதற்கான தீர்வையும் அவரே அவளுக்கு கொடுத்திடத்தான், பேடையவளை இவ்வளவு தூரம் வர வைத்திருக்கிறார் என்பதையும் உணர்ந்துக் கொண்டாள் கீத்து.

வந்த காரியம் முடிந்ததா இல்லையா என்றுக் கூட தெரியாதவளோ, கேதார்நாத் வந்த நோக்கத்தையே மறந்திருந்தாள். ஆதாரங்கள் ஏதும் கிடைத்திடாத போதும் சர்வ நிச்சயமாய் அவளுக்குத் தெரியும் கொலைகாரன் படாஸ்தான் என்று.

அதுவும் ஓவியா தொடங்கி ஆர்செனியோ வரை எல்லோருக்கும் இருந்த ஒரே தொடர்பு வைரக்கல் பிஸ்னஸ் என்பதால், நிச்சயம் வியாபார நிமித்தமாகத்தான் இக்கொலைகள் எல்லாம் நடந்திருக்கக்கூடும் என்பதையும் ஓரளவு சரியாகவே கணித்திருந்தாள் கீத்து.

ஆனால், அது டைமண்ட் வியாபாரம் அல்ல. மாறாக, துர்லபதுக்கான போராட்டம் என்பதை மட்டும் மதங்கியவள் அறியவில்லை.

கீத்து கண்டம் தாண்டி கண்டம் வந்திருக்க, மலேசியாவிலோ சீரியல் கில்லர் ஒருவனை கையுங் களவுமாய் போலீஸ் பிடித்திருந்தனர். அவனோ, அவன்தான் படாஸ் என்றுச் சொல்லி மக்களிடம் பெருமை பீத்தி கொள்ள, போலீசோ அவனின் பெண்டை கழட்டியிருந்தது.

மனப்பிறழ்வு கொண்டவனோ அடித்த அடிகள் தாளாது கூப்பாடு போட, நீதிபதியோ அவனைத் தூக்கி மனநில காப்பகத்துக்குள் போட்டார் வாழ்நாள் முழுதும் அவனுக்கு விடுதலையே இல்லையென்று தீர்ப்பு சொல்லி.

இது எதுவும் தெரியா கீத்துவோ, குழப்பமான மனநிலையில் சரியில்லாத உடம்போடு விலாவிற்கு டாட்டா காட்டி மலேசியா கிளம்ப தயாராகினாள்.

உடனடி டிக்கெட்டை இரண்டு மடங்கு அதிகமாய் பணம் செலுத்தி வாங்கியவள், ரிஷப்ஷன் பையன் மூலமாய் பிஜிலியையே மீண்டும் சவாரிக்கு வரச்சொல்லி கேட்டிருந்தாள்.

ட்ரவலிங் பேக்கை ரெடி செய்த கீத்து, காயப்போட்டிருந்த சாம்பல் வர்ண ஜாக்கெட்டை எடுத்து அணிய, அதன் பாக்கெட்டுக்குள் கரம் நுழைத்தவளின் விரல்களிலோ ஏதோ தட்டுப்பட்டது.

உள்ளங்கை மடக்கி அதை வெளியில் எடுத்தவள் பொற்கரத்திலோ மின்னியது வட்ட வடிவத்திலான வைரக்கல் ஒன்று. அதிர்ச்சிக் கொண்டவளோ அப்படியே மெத்தையில் அமர, கீத்துவால் யூகிக்க கூட முடியவில்லை அக்கல் எப்படி அவளின் ஜாக்கெட்டுக்குள் வந்தது என்று.

புரியாது விழித்தவளோ ரிஷப்ஷன் பையன் கதவை தட்டிட, குழப்பத்தோடே அதைத் கேபினெட்டின் மீது வைத்து, ஓடிச்சென்று கதவைத் திறந்தாள்.

ட்ரவலிங் பேக்கை முன்னோக்கி தள்ளிக்கொண்டு அவன் போக, கீத்துவோ அலமாரியின் மேலிருந்த பனி லிங்கத்தையும் வைரக்கல்லையும் தூக்கி கைப்பைக்குள் போட்டவாறு அவ்வறையிலிருந்து வெளியேறினாள்.

எப்படி, ஏன், எங்கிருந்து என்று இப்படி பல கேள்விகளுக்கு விடை தெரியாதே பிஜிலியின் காரிலேறி அமர்ந்தாள் கீத்து.

ஏர்போட் செக்கிங்கில் இவ்வைரக்கல்லை போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தினால் என்ன சொல்வதென்று யோசித்தவள் தலையை இறுக்கிப் பிடித்தவளாய் தீவிர சிந்தனைக் கொண்டாள்.

பிஜிலியோ அவளுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் சோகமாய் சொன்னாள், ஷிவ் குஃபாவின் பிரதான நாகம் மரித்து விட்டதென்று.

இறுகிய முகம் அதிர்ந்து போக, போலீஸ்காரியோ விசாரணை கொண்டாள் டாக்சிகாரியிடம் ராஜ நாகத்தின் இறப்பிற்கான காரணத்தை.

ஹிந்திக்காரி பிஜிலியோ, அவள் கேள்வி பட்டதை ஒப்புவிக்க ஆரம்பித்தாள் கீத்துவிடம்.

அதாவது, கோவில் குகையில் ராஜநாகம் ஒன்று இருப்பதாகவும், வைரக்கல் கொண்ட அது, யார் கண்ணுக்கும் புலப்படாமலும் வெறும் ஓசையை மட்டும் எழுப்பிடுமென்றும் ஊர் மக்கள் சொல்ல கேட்டிருப்பதாய் சொன்னாள் பிஜிலி.

அப்படியான நாகம், வைரக்கல்லை சரியானவர்களிடம் சேர்ப்பித்த அடுத்த ஒரு சில மணி நேரங்களிலேயே, தோலை உரித்து ஓரம் போட்டு, வனத்துக்குள் நுழைந்து உயிரை மாய்த்துக் கொள்ளுமாம்.

இதையும் முன்னாளில் வாழ்ந்த மக்கள் சொல்ல, அதை அப்படியே அச்சு பிசுக்காது சொன்னாள் பிஜிலி காவல்காரியிடம்.

ஆகவே, இப்போது அப்படியானதொரு சம்பவத்தின் சாட்சியாகத்தான் கோவில் தரப்பினர் சிலர் மராளத்தின் தோலை குகைக்கு ஒதுக்கு புறமாய் கண்டதாகவும், அதை முன்னிறுத்தியே ராஜ நாகம் செத்து விட்டதாகவும் நம்பி துக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று சொல்லி முடித்தாள் பிஜிலி.

கதையைக் கேட்ட கீத்துவிற்கோ கட்டுக்கதைகளை நம்பிடவும் முடியவில்லை, நம்பிடாமல் இருக்கவும் முடியவில்லை.

காரணம், அவளே கூட இப்போது புரியா பல புதிர்களில் சிக்குண்டுத்தான் கிடக்கிறாள் விடைத் தெரியாது.

அப்படியிருக்க நீதிபதியாய் நின்று எதை எப்படி அளந்திடுவாள் அந்திகையவள், மெய்யெது பொய்யெது என்று.

அதுவும் அவளிடம் வைரக்கல் இருக்க, இப்போது அதை யார் அவளின் ஜாக்கெட் பாக்கெட்டுக்குள் போட்டது என்ற கேள்விக்கு பாம்பு என்று பதிலளிக்க சத்தியமாய் கீத்துவிற்கு விருப்பமில்லை.

ஆனால், நிதர்சனம் அதுதானே. இருந்தும், மூட நம்பிக்கைகளை துளியும் வரவேற்றிடா வஞ்சியோ, வேறு வழியே இல்லாது அதைத்தானே நம்பிட வேண்டியதாய் இருந்தது.

சில சமயங்களில் உள்ளதை உள்ளப்படி ஏற்றுக்கொள்ளவதில்தான் எவ்வளவு பிரச்சனை.

குழப்பத்தோடு குழப்பமாய் ஏன் கனவில் படாஸ் மற்றும் டாக்டர் வர வேண்டும். அதுவும் ஏன் கேதார்நாத் கோவிலின் கற்பகிரகத்துக்குள் புருஷன் நுழைய வேண்டும்.

கூடவே, ஏன் அவனைத் துரத்த முயன்ற கீத்துவை காதலன் படாஸ் தடுத்திட வேண்டும்.

அப்படியானால் காதலன் வேறு, கணவன் வேறா? ஒருவன் இல்லையா, இருவரா.

இறுதியாய், ஏன் காதல் மணாளன் மங்கையின் மடியில் மரித்து போக வேண்டுமென்று யோசித்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.

பிஜிலியும் நித்திரைக் கொண்டவளை தொந்தரவு செய்திடவில்லை. ஐந்து மணி நேர பயணங்களுக்கு பிறகு, டேராடூன் விமான நிலையத்தை வந்தடைந்தாள் கீத்து.

வடநாட்டுக்காரியைக் கட்டியணைத்து கைநிறைய பணமும் கொடுத்து டாட்டா காட்டி ஏர்போட்டுக்குள் நுழைந்தாள் கீத்து.

வைரக்கல்லை என்ன செய்வதென்று தெரியாது விழித்தவள், ஆழமான யோசனை ஒன்றைக் கொண்டாள்.

அங்கிருந்த போஸ்ட் ஆபிசோ அவளின் கவனத்தை ஈர்த்தது. பேசாமல் வைரத்தைக் கொண்டு போய் கூரியர் சர்வீஸில் பார்சல் செய்திடலாம் என்று முடிவெடுத்தாள் கீத்து.

மீண்டும் ஒருமுறை நன்றாக சிந்தித்து பின் ஹேண்ட் பேக்குக்குள் கையை விட, அங்கோ டைமண்ட்டை காணவில்லை. பதறி விட்டாள் கீத்து. பேக்கை கவிழ்த்தே அலசி விட்டாள். ஆனால், நறுதுதலவள் கைப்பைக்குள் வைத்த வைரத்தை மட்டும் தொலைத்திருந்தாள்.

ஒரு வேளை அறையின் கேபினட்டின் மீதிருந்த டைமண்ட்டை எடுத்திட மறந்து விட்டாளா என்று அவள் மேலேயே சந்தேகம் துளிர்தாலும், அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல் பனி சிவ லிங்கமோ கோதையின் கைப்பைக்குள் நிலைத்திருந்தது. ஆகவே, விடுதியில் வைரத்தை மிஸ் செய்திருக்க வழியே இல்லை என்ற முடிவுக்கு வந்தாள் கீத்து.

பிஜிலியின் மீதோ சிறு துளியும் சந்தேகம் கொள்ளாதவள் வழியில் தவறியிருக்கவும் வாய்ப்பில்லை என்று நகத்தைக் கடித்த வண்ணம் வருத்தங்கொண்டாள். ஒருவேளை பிஜிலிக்கு பணம் கொடுத்த வேளை ரோட்டில் ஏதும் விழுந்திருக்குமோ என்றெண்ணி ஓடினாள் மடந்தையவள், ஏர்போட்டின் ட்ரோப் ஆப் (drop off) இடத்தை நோக்கி.

ஆனால், எங்கு தேடியும் அது அவளுக்கு கிடைக்கவே இல்லை. அவளின் அலைமோதலை கண்ட விமான காவலாளிகள் கூட துடியிடை அவளுக்கு உதவிக்கரம் நீட்டினர்.

ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை. கைக்கு எட்டியது வாயிக்கு எட்டவில்லை என்று மனசை திடப்படுத்திக்கொண்ட தெரியிழையோ, வெறும் குப்தா கங்காவின் நீர் கொண்ட போத்தலை மட்டும் பத்திரமாய் ட்ரவலிங் பேக்குக்குள் வைத்து டெல்லிக்கு பறந்தாள்.

ஆனால், வல்வியவள் அவளோ அறியவில்லை, ஆட்சீஸ்வரரின் (சிவன்) திருவிளையாடலை.

எப்போது கீத்து மேஜை மீது பனி லிங்கத்தின் பக்கத்தில் அவ்வைரக்கல்லை வைத்தாளோ, அப்போதே அது உருகி கரைந்து பனி லிங்கத்தோடு ஒன்றி விட்டது.

இதை உணரா கிருத்தியோ, அவசரமாய் கிளம்புகையில் மேஜையின் மீதிருந்த பனி லிங்கத்தையும் அதன் பக்கத்தில், உருகிய தடயமே இல்லாது காணாமல் போயிருந்த டைமண்டையும் ஒருசேர கையால் பற்றி கைப்பைக்குள் போட்டதாய் நினைத்துக் கொண்டாள்.

ஆனால், நிஜத்தில் தெரிவையவள் ஹேண்ட் பேக்குக்குள் போட்டது கரையா, பனி லிங்கம் மட்டுமே.

டெல்லி போனவள் அங்கிருந்து நேராய் மலேசியா வந்துச் சேர்ந்தாள்.

படாஸின் வழக்கோ அவளில்லாது முடிந்து போயிருக்க, வாழ்க்கையே ஊசலாடிக் கொண்டிருந்த வேளையில் எதையும் பெரிசாய் அலட்டிக் கொள்ளாது, கொடுத்த பணியை மட்டும் செய்து அமைதியாக இருந்தாள் கீத்து.

படாஸ் என்றவனை ஜட்டியோடு நடு ரோட்டில் இழுத்து போகையில் மட்டுமே அவன் முகம் பார்த்திட வேண்டுமென கொள்கை கொண்டவளோ, அதைக் கடைசி வரைக்கும் மெயிண்டன் செய்தாள்.

தோற்று விட்டாள் அகம்பாவ கள்ளியவள் வித்தகன் அவனிடத்தில். அதை மனதார ஒப்புக்கொண்டு அவளையே அவனிடத்தில் சரணடைய வைத்தவள், பின்னாளில் எப்போதுமே படாஸ் என்றவனின் முகத்தை பார்த்திட எண்ணங்கொண்டிடவில்லை.

அவளைப் பொறுத்த மட்டில் டாக்டர்தான் முற்றிழையின் மனம் கொய்ந்த கள்வன் படாஸ். அதை அப்படியே மனதில் பதித்து இனி வரும் காலங்களில் படாஸ் இல்லா ஔகத்தை மட்டும் காதல் செய்ய உள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டாள் நாயகியவள்.

இதுவெல்லாம் ஒரு பக்கமிருக்க, கனவிலும் நினைக்கவில்லை கீத்து காதல் கணவன் அவள் மடியில் ரத்த வெள்ளத்தில் மிதந்திடுவானென்று. எங்கே கண்ட கனவு பலித்திடுமோ என்று பயந்தவளோ உள்ளுக்குள் செத்து பிழைத்தாள்.

ஆனால், இறுதியில் சுரஜேஷ் வந்தான், ராமனான அண்ணனுக்கு உதவிடும் தம்பி இலக்குமணனாய்.

படாஸ்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/
 

Author: KD
Article Title: படாஸ்: 122
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top